என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரோன் தாக்குதல்"

    • கப்பல் போஸ்பரஸ் ஜலசந்திக்குள் நுழையும் தருவாயில் டிரானால் தாக்கப்பட்டு தீப்பிடித்தது.
    • தீப்பிடித்து எரிந்த அந்த கப்பலில் இருந்தும் 20 மாலுமிகள் மீட்கப்பட்டனர்.

    துருக்கி அருகே கருங்கடலில் ரஷிய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது, நீரில் செல்லக் கூடிய டிரோன் மூலம் உக்ரைன் தாக்ககுதல் நடத்தியுள்ளது.

    துருக்கியின் கோசேலி மாகாணத்தில் உள்ள கருங்கடல் பகுதியில் ரஷியாவை சேர்ந்த 'கைரோஸ்' என்ற எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. காலி டேங்கர்களுடன் ரஷியாவை நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பல் போஸ்பரஸ் ஜலசந்திக்குள் நுழையும் தருவாயில் டிரானால் தாக்கப்பட்டு தீப்பிடித்தது.

    தகவல் அறிந்து விரைந்த மீட்புப்படையினர் கப்பலில் இருந்த 25 மாலுமிகளை மீட்டனர்.

    இந்த சம்பவம் நடந்த அடுத்த ஒரு மணி நேரத்தில், அவ்வழியாக சென்ற மற்றொரு ரஷிய எண்ணெய் டேங்கர் கப்பலான 'விராட்' மீதும் டிரோன் தாக்குதல் நடந்தது. தீப்பிடித்து எரிந்த அந்த கப்பலில் இருந்தும் 20 மாலுமிகள் மீட்கப்பட்டனர்.

    இந்த தாக்குதல்களுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது. மேற்கு நாடுகளால் பொருளாதார தடை விதிக்கப்பட்டபோதும் ரஷிய இந்த கப்பல்கள் மூலம் எண்ணெய் விற்று, உக்ரைன் மீதான போருக்கு நிதி திரட்டி வருவதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    எனவே நீரில் செல்லக் கூடிய டிரோன்கள் மூலம் அவற்றை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 

    • ஆப்கானிஸ்தான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜீஸ் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
    • இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.

    ஆப்கனிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் பாகிஸ்தான் நேற்று இரவு டிரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், இந்த தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜீஸ் தற்போது இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் போது இந்தத் தாக்குதல் நடந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    நேற்று முன் தினம் பாகிஸ்தானின் பெஷாவரில் துணை ராணுவ தலைமையகத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பொறுப்பேற்றது. இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.

    இந்த சூழலில் தற்கொலை தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளது.

    முன்னதாக கடந்த மாதம் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் மோதல் வெடித்த நிலையில் கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த சூழலில் போர் நிறுத்தத்தை மீறி தற்போதைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தாலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில், தாங்கள் எந்த தாக்குதலும் நடத்தவில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது. 

    • ரஷியாவின் முக்கிய துறைமுகம் மற்றும் எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது.
    • எண்ணெய் கப்பல் மற்றும் துறைமுகம் தீப்பிடித்து எரிந்தது.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷியாவின் முக்கிய துறைமுகம் மற்றும் எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது.

    ரஷியாவின் கருங்கடல் துறைமுகமான துவாப்சை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்த எண்ணை கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எண்ணை கப்பல் மற்றும் துறைமுகம் தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    இந்த தாக்குதலில் துறைமுகம் மற்றும் எண்ணை கப்பல் கடும் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. துறைமுகத்தின் கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துவாப்ஸ் துறைமுகம் ரஷியாவின் கச்சா எண்ணை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கான முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். இந்த தாக்குதலால் ரஷியாவின் கச்சா எண்ணை விநியோகம் பாதிக்கப்படும்.

    துவாப்ஸ் துறைமுகத்தில் உள்ள எண்ணை முனையம், ரஷியாவின் மிகப்பெரிய எண்ணை நிறுவனமான ரோஸ்நெப்ட்டுக்கு சொந்தமானது. சமீபத்தில் இந்த நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே துவாப்ஸ் அருகே உள்ள சோஸ்னோவி கிராமத்திலும் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அடுக்குமாடி கட்டிடம் சேதமடைந்தது. மேலும் துவாப்சில் உள்ள ரெயில் நிலையத்திலும் சிறிது சேதங்கள் ஏற்பட்டது.

    • கருங்கடலில் ரஷியாவில் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த உக்ரைன் டிரோன்களை பயன்படுத்தி வருகிறது.
    • உக்ரைன் தாக்குதலுக்கு பயந்து ரஷியா முக்கிய தளத்தை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது.

    ரஷியா- உக்ரைன் இடையே 3 வருடங்களுக்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால், ரஷிய அதிபர் புதின் அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் உள்ளார். இதனால் சண்டை நீடித்து வருகிறது.

    தற்போது இரு நாடுகளும் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. கருங்கடலில் ரஷிய கப்பல்களை தாக்க, உக்ரைன் கடல் டிரோன்களை (ஆளில்லா விமானம்) பயன்படுத்தி வருகிறது.

    Sea Baby என அழைக்கப்படும் இந்த டிரோன்கள், ஆயிரம் கி.மீ. தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. தற்போது 1500 கி.மீ. தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது 2 ஆயிரம் கிலோ எடை வெடிப்பொருட்களை சுமந்து கொண்டு தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.

    இந்த டிரோனை வெளி உலகத்திற்கு உக்ரைன் காட்டியுள்ளது. இலக்கை துல்லியமாக அளிக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

    செங்கடலில் உள்ள 11 கப்பல்களை உக்ரைன் டிரோன் மூலம் வெற்றிகரமாக தாக்கியுள்ளது. இதில் போர்க்கப்பல் மற்றும் ஏவுகணை தாங்கிகளும் அடங்கும்.

    உக்ரைன் தாக்குதலால் ரஷியா கிரீமியாவின் செவாஸ்டோபோலிருந்து நோவோரோசிய்ஸ்க் பகுதிக்கு முக்கிய தளத்தை ரஷியா மாற்றியுள்ளது.

    • கிரீமியா உள்பட 14 மாகாணத்தில் உக்ரைன் டிரோன் மூலம் சரமாரி தாக்குதல்.
    • 251 டிரோன்களை வீழ்த்தியதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பலமுறை போர் நிறுத்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்தார். ரஷியா பேச்சுவார்த்தைக்கு இணங்காததால், சண்டை நீடித்து வருகிறது.

    தற்போது டிரோன்கள் மூலம் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்று ரஷியாவின் முக்கியமான எண்ணெய் நிலையம் மற்றும் வெடிபொருள் தொழிற்சாலையை டிரோன் மூலம் தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    மேற்கு ரஷியாவில் உளள் நிஸ்னி நோவ்கோரோடு மாகாணத்தில் உளள் ஸ்வெர்ட்லோவ் வெடிபொருள் தொழிற்சாலை தாக்கப்பட்டதாக உக்ரைன் ஜெனரல் ஸ்டாஃப் தெரிவித்துள்ளார். அங்கு வெடிச்சத்தம் கேட்டதாகவும், தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    ரஷியப் படைகளுக்கு வெடிபொருட்கள் வழங்கும் முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாக இந்த தொழிற்சாலை திகழ்ந்து வருகிறது. கிரீமியாவில் உள்ள எண்ணெய் நிலையத்தையும் டிரோன் தாக்கியதாவும், இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார். கிரீமியா உள்பட 14 மாகாணத்தில் உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதை ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது.

    251 டிரோன்கள் வான்பாதுகாப்பு சிஸ்டம் மூலம் தடுத்து அழிக்கப்பட்டதாக தெரிவித்த ரஷியா, போர் தொடங்கிய பிறகு உக்ரைனின் மிகப்பெரிய டிரோன் தாக்குதல் இதுவாகும் எனவும் தெரிவித்துள்ளது.

    • மால் ஹயாம் ஷாப்பிங் சென்டர் அருகே ஏராளமான உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் கூடியிருந்தனர்.
    • இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய பதில் தாக்குதல்களில் மக்கள் படுகாயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது ஏமனில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் நடத்திய தாக்குதல்களில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

    இஸ்ரேலின் அயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பை கடந்து நேற்று பின்னேரத்தில் டிரோன்கள் நகரத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டது.

    சுற்றுலா நகரமாக அறியப்படும் ஏலாட்டில் உள்ள மால் ஹயாம் ஷாப்பிங் சென்டர் அருகே ஏராளமான உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் கூடியிருந்த பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடையாதோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    ஏமனில் இருந்து இஸ்ரேலின் மீது தொடர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று யூகிக்கப்படுகிறது.

    டிரோன்களை தகர்க்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய பதில் தாக்குதல்களில் மக்கள் படுகாயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு படை விசாரணை நடத்தி வருகிறது. 

    • உக்ரைன் மீது ரஷியா கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
    • ரஷியாவின் சரடோவ் மற்றும் சமாரா மாகாணங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியிருந்தது.

    உக்ரைன் மீது ரஷியா கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

     உக்ரைனின் விமானப்படை தகவலின்படி, மொத்தம் 619 டிரோன்கள், 8 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 32 குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டன.

    உக்ரைனின் வான் பாதுகாப்புப் படைகள் இதில் 583 இலக்குகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தன. இதன் மூலம் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

    உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகையில், இந்த தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    அதேவேளை, ரஷியாவின் சமாரா பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இரவில் 149 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில், சமாரா பிராந்தியத்தின் வான்வெளியில் 15 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக நேற்று மதியம், ரஷியாவின் சரடோவ் மற்றும் சமாரா மாகாணங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியிருந்தது. 

    இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.   

    • மக்கள் கூடியிருந்த சமயத்தில் இந்த டிரோன் தாக்குதலானது நடந்துள்ளது,
    • இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயந்துள்ளனர்.

    சூடானில் துணை ராணுவப் படை (RSF) மசூதி மீது நடத்திய டிரோன் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர்.

    வடக்கு டார்பூரில் உள்ள எல் ஃபாஷர் நகரில் அமைந்துள்ள மசூதியில் நேற்று மக்கள் கூடியிருந்த சமயத்தில் இந்த டிரோன் தாக்குதலானது நடந்துள்ளது,

    தாக்குதலுக்குப் பிறகு, மசூதி இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டன.

    சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே ஏப்ரல் 2023 முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

    இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயந்துள்ளனர்.

    குறிப்பாக எல் ஃபாஷர் நகரில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. 

    • ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
    • டிரோன்களை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு நடு வானில் சுட்டு வீழ்த்தின.

    இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஏமனில் செயல்படும் ஹவுதி பயங்கரவாதிகள் குறிவைத்து டிரோன்கள் வீசி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் விமான நிலையம் சேதம் அடைந்துள்ளது.

    இந்த டிரோன்களை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு நடு வானில் சுட்டு வீழ்த்தின. இருப்பினும், ஒரு டிரோன் விமான நிலையம் மீது விழுந்து வெடித்தது.

    இந்த சம்பவத்தில் 63 வயதான நபர் காயமடைந்தார். இதையடுத்து, விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. இதனால், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • கீவ்வில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
    • ஒடேசா, கார்கிவ், டினிப்ரோசபோரி ஷியா உள்ளிட்ட நகரங்களிலும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், மறுபுறம் இரு தரப்பும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்தநிலையில் நள்ளிரவில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களை குறிவைத்து ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் கீவ்வின் பெச்செர்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசாங்க கட்டிடத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. உடனே தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த கட்டிடம் உக்ரைனின் அமைச்சரவை கூடும் கட்டிடம் ஆகும்.

    மேலும், கீவ்வில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். 18 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ கூறும்போது,"எதிரி தாக்குதலால் அரசு கட்டிடத்தின் கூரை மற்றும் மேல் தளங்கள் சேதமடைந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்" என்றார்.

    அதேபோல் ஒடேசா, கார்கிவ், டினிப்ரோசபோரி ஷியா உள்ளிட்ட நகரங்களிலும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    இதற்கு பதிலடியாக ரஷியாவின் எண்ணை குழாய் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • உக்ரைனின் 34வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
    • ஏற்கனவே தெற்கு ரஷியாவில் எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் உக்ரைன் டிரோன் தாக்குதலில் கடந்த 3 நாட்களாக தீபற்றி எரிகிறது.

    3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் முயற்சிகள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

    இதற்கிடையே இன்று உக்ரைனின் 34வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ரஷிய அணு மின் நிலையம் மீது தாக்குதல் நடந்துள்ளது.

    ரஷியாவின் குர்ஷ்க் பகுதியில் உள்ள அணு மின் நிலையம் மீது இன்று உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் அணு மின் நிலையத்தின் ஒரு பகுதி எரிந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர்.

    இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என ரஷியா தெரிவித்துள்ளது. ஏற்கனவே தெற்கு ரஷியாவில் எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் உக்ரைன் டிரோன் தாக்குதலில் கடந்த 3 நாட்களாக தீபற்றி எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.  

    • இது தெற்கு ரஷியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும்.
    • இந்த சுத்திகரிப்பு நிலையம் முக்கியமாக எண்ணெய் ஏற்றுமதிக்காகவே செயல்படுகிறது.

    ரஷியாவின் ரோஸ்டோவ் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 3 நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது.

    நோவோஷாக்தின்ஸ்க் நகரில் அமைந்துள்ள இந்த சுத்திகரிப்பு நிலையம் உக்ரைனால் டிரோன் மூலம் தாக்கப்பட்டது. இது தெற்கு ரஷியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும். தீ விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

    ரோஸ்டோவ் மாகாணத்தின் பொறுப்பு ஆளுநர் யூரி ஸ்லியுசர், சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

    இந்த சுத்திகரிப்பு நிலையம் முக்கியமாக எண்ணெய் ஏற்றுமதிக்காகவே செயல்படுகிறது.

    ரஷியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளது.

    ஆகஸ்ட் மாதத்திலிருந்து நோவோகுய்பிஷெவ்ஸ்க், சிஸ்ரான், ரியாசான் மற்றும் வோல்கோகிராட் உள்ளிட்ட பல ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.   

    ×