என் மலர்
உலகம்

புதின் வீட்டின் மீது தாக்குதல் - சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் டிரோனின் வீடியோவை வெளியிட்ட ரஷியா
- இதுதொடர்பாக புதின் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
- 6 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய Chaklun-V ரக டிரோன் பாகங்கள் காணப்பட்டன.
தலைநகர் மாஸ்கோவின் அருகே உள்ள நோவ்கோரோட் பகுதியில் அதிபர் புதினின் அரசு இல்லத்தை குறிவைத்து கடந்த டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் உக்ரைன் 91 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம்சாட்டி இருந்தது.
ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் அந்த டிரோன்கள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் இந்த குற்றச்சாட்டை மறுத்தது. இதுதொடர்பாக புதின் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் நோவ்கோரோட் பகுதியில் உள்ள புதினின் இல்லத்தைத் தாக்க உக்ரைன் அனுப்பியதாகக் கூறப்படும் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோவை ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
அந்த வீடியோவில், 6 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய Chaklun-V ரக டிரோன் பாகங்களுக்கு அருகில் ரஷிய வீரர் ஒருவர் நிற்பது போன்ற காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோ நகைப்புக்குரியது என உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது. இத்தகைய போலியான ஆதாரத்தை உருவாக்க ரஷியா இரண்டு நாட்கள் ஆகியுள்ளதாக உக்ரைன் செய்தித் தொடர்பாளர் கிண்டலாக தெரிவித்தார்.
இதற்கிடையில், அமெரிக்கவின் சி.ஐ.ஏ புலனாய்வு அமைப்புநடத்திய ஆய்வில், உக்ரைன் புதினின் இல்லத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று முடிவுக்கு வந்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.






