என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia"

    • 2011இல் ஜப்பானின் ஃபுகுஷிமாவில் நடந்த அணுசக்தி விபத்தை குறிப்பிட்டார்.
    • இஸ்ரேலிய தாக்குதல் செர்னோபில் பாணி பேரழிவிற்கு வழிவகுக்கும்.

    ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதட்டங்களைத் தொடர்ந்து, மோதலில் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

    ஈரான் மீதான தாக்குதல்களில் இஸ்ரேலுடன் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமை அறிவித்தது பதட்டங்களை அதிகரித்தது.

    இந்நிலையில் மாஸ்கோவில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, "இந்த கடினமான சூழ்நிலைகளில் அமெரிக்க இராணுவத் தலையீட்டைத் தவிர்க்குமாறு வாஷிங்டனை நாங்கள் வலுவாக எச்சரிக்கிறோம்.

    இது உண்மையிலேயே எதிர்பாராத எதிர்மறை விளைவுகளைக் கொண்ட மிகவும் ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும்" என்று கூறினார்.

    முன்னதாக, ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடி இராணுவ உதவி வழங்குவதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார்.

    ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களால் உலகம் ஒரு பெரிய பேரழிவின் விளிம்பில் உள்ளது என்று ஜகரோவா கவலை தெரிவித்தார்.

     2011இல் ஜப்பானின் ஃபுகுஷிமாவில் நடந்த அணுசக்தி விபத்தை குறிப்பிட்ட ஜகரோவா, ஈரானில் உள்ள புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல் செர்னோபில் பாணி பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று ரஷிய அணுசக்தி தலைவர் எச்சரித்துள்ளார். புஷேர் அணுமின் நிலையத்தை ரஷியாவே கட்டித் தந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் ஈரான் பிரச்சனை தொடர்பாக தொலைபேசியில் பேசினார்.

    மேலும் இஸ்ரேல் - ஈரான் தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி மூலம் மத்தியஸ்தம் செய்ய புதின் முன்வந்தார். ஆனால் டிரம்ப் அந்த வாய்ப்பை நிராகரித்தார். "முதலில் ரஷியாவில் உங்கள் பிரச்சினைகளை தீர்க்கவும்" என்று டிரம்ப் புதினிடம் கூறியதாக கூறப்படுகிறது. 

    • உக்ரைன்- ரஷியா இடையே இரண்டு முறை நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
    • பேச்சுவார்த்தையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்படவில்லை.

    உக்ரைன்- ரஷியா இடையில் 3 வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு பக்கமும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் அதிபர் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால் ரஷியா போர் நிறுத்தத்தை விரும்பவில்லை.

    அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் கொடுக்க உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ரஷியா சம்மதம் தெரிவித்தது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் ஏற்படவில்லை.

    பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும், மறுபக்கம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 28 பேர் உயிரிழந்த நிலையில், 142 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட ரஷியாவுக்கு உலக நாடுகள் இன்னும் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.

    "இந்த தாக்குதல் ரஷியா போர் நிறுத்தத்தை நிராகரித்து, கொலையை தேர்வு செய்கிறது என்பதை உலகிற்கு ஞாபகப்படுத்துகிறது" என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், போரின் உண்மையான இழப்பை உணர ரஷியாவு்ககு நெருக்கடி கொடுக்க தயாராக இருப்பதாக கூறிய ஆதரவு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    • 440 டிரோன்கள் மற்றும் 32 ஏவுகணைகள் மூலம் தாக்குதல்.
    • கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் மிகவும் மோசமானதாக பார்க்கப்படுகிறது.

    உக்ரைன் தலைநகர் கீவ் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷியா சரமாரி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 116 பேர் காயம் அடைந்துள்ளனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷியா மீது உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

    கீவ் நகர் மீது இரவு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 மாடி கட்டிடம், 25-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் சேதம் அடைந்ததாக கீவ் நகர ராணுவ நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்து்ளளார். கீவ் மீது கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

    ரஷியா- உக்ரைன் இடையிலான போர் 3 வருடங்களை தாண்டி நடைபெற்று வருகிறது. இரண்டு முறை ரஷியாவும் உக்ரைனும் நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

    கீவ் நகரை தவிர்த்து தெற்கு துறைமுக நகரான ஒடேசா மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழக்க, 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    கீவ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், மிகவும் மோசமான தாக்குதலில் ஒன்று என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    ரஷியா 440 டிரோன்கள் மற்றும் 32 ஏவுகணைகள் மூலம் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

    • அணுசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களின் ஆபத்தான விளைவுகள் அனைவருக்கும் தெரியும்.
    • ஈரான் அதிபர் மசூத் பெஸ்கோவ் உடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

    இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷியா ஈரானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது.

    ஈரானுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும், இஸ்ரேல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் வலியுறுத்தியுள்ளார்.

    "இஸ்ரேல் நிதானத்தையும் பொது அறிவையும் காட்ட வேண்டும். அணுசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களின் ஆபத்தான விளைவுகள் அனைவருக்கும் தெரியும்" என்றும் அவர் எச்சரித்தார்.

    இதற்கிடையே ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஈரான் அதிபர் மசூத் பெஸ்கோவ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

    மோதலைத் தணிக்க உதவுவதாகவும், அமைதிப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும் புதின் உறுதியளித்துள்ளார்.

    • உக்ரைன் தரப்பிலிருந்து 78 ரஷிய வீரர்களின் உடல்கள் கிடைத்துள்ளதாக மெடின்ஸ்கி கூறினார்.
    • ரஷியாவுடனான மற்றொரு பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக திரும்பப் பெற்றது.

    போரில் உயிரிழந்த 6,060உக்ரைனிய வீரர்களின் உடல்களை உக்ரைனிடம் ஒப்படைத்துள்ளதாக ரஷிய அதிபர் புதினின் உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இந்த உடல்கள் ஒப்படைக்கப்பட்டதற்கு ஈடாக, ரஷியாவுக்கு, உக்ரைன் தரப்பிலிருந்து 78 ரஷிய வீரர்களின் உடல்கள் கிடைத்துள்ளதாக மெடின்ஸ்கி கூறினார்.

    போர் கைதிகள் பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கடுமையான காயமடைந்த வீரர்களைப் பரிமாறிக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருவதாகவும், மெடின்ஸ்கி தனது டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த ஜூன் 13 அன்று, உக்ரைன் ஏற்கனவே 1,200 உயிரிழந்த வீரர்களின் உடல்களை ரஷியாவுடனான மற்றொரு பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக திரும்பப் பெற்றது.

    இந்த மாத தொடக்கத்தில் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற ரஷியா-உக்ரைன் பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட்ட முடிவின் படி உடல்கள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.  

    • நேற்றி இரவு முதல் இன்று காலை வரை இடைவிடாமல் தாக்குதல்.
    • பல்வேறு வகையான 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலமாகவும் தாக்குதல்.

    ரஷியா நேற்றிரவு முதல் இன்று காலை வரை இடைவிடாமல் டிரோன்கள் மூலம் கடும் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

    479 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், 20-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ஏவுகணைகள் மூலம் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

    இரவு நேரங்களில் டிரோன்களை கண்டுபிடித்து அழிப்பது சிரமம் என்பதால், மாலை நேரத்தில் இருந்து காலை வரை டிரோன் தாக்குதலை நடத்துவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

    ஷாஹேத் வகை டிரோன்கள் மூலம் மக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல் நடத்திய வருகிறது. கடந்த 3 வருடத்திற்கு மேலாக ரஷியா நடத்திய தாக்குதலில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம் ரஷியா விமானப்படை தளத்தை குறிவைத்து உக்ரைன் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்ட ரஷிய விமானங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் இருந்து ரஷியா தாக்குதலை அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே ரஷியா- உக்ரைன் இடையே நேரடி அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் ஆயிரக்கணக்கான கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.

    • கீவ், லிவிவ் மற்றும் சுமி போன்ற முக்கிய நகரங்கள் இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டன.
    • உக்ரைனின் 'ஆபரேஷன் ஸ்பைடர்வெப்'-க்கு பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

    ரஷியா, 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

    இது கடந்த மூன்று ஆண்டுக்கால போரில் மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) ரஷிய படைகள் உக்ரைனின் ஒன்பது பிராந்தியங்களில் இந்த தாக்குதலை நடத்தியது. கீவ், லிவிவ் மற்றும் சுமி போன்ற முக்கிய நகரங்கள் இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டன.

    இந்த தாக்குதல்களில் கியேவில் மூன்று தீயணைப்பு வீரர்கள், லுட்ஸ்கில் இரண்டு பொதுமக்கள் மற்றும் செர்னிஹிவில் ஒருவர் இறந்ததை உக்ரைனின் அவசர சேவைகள் உறுதிப்படுத்தின. இதன் மூலம் பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

    இந்தத் தாக்குதல் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி "இன்று, நாட்டின் பல பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ரஷியா ஏவிய 400 ட்ரோன்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் 80 பேர் காயமடைந்தனர். இன்னும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம்" என்று கூறினார்.

    மேலும், "துரதிர்ஷ்டவசமாக, உலகில் உள்ள அனைவரும் இந்தத் தாக்குதல்களைக் கண்டிக்கவில்லை. புதின் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறார். போரைத் தொடர அவர் நேரத்தை வாங்குகிறார்" என்று ஜெலன்ஸ்கி கூறினார்.

    மறுபுறம், உக்ரைனின் 'ஆபரேஷன் ஸ்பைடர்வெப்'-க்கு பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

    • ரஷியா- உக்ரைன் இடையே 3 வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.
    • இரு நாடுகளும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    உக்ரைனின் வடக்குப் பகுதியில் உள்ள பிரைலுகி நகர் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்ததாக வியாசெஸ்லாவ் சாஸ் கவர்னர் தெரிவித்துள்ளார். 5 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    6 டிரோன்கள் பிரைலுகி பகுதியில் இன்று அதிகாலை தாக்கியது. இதில் பல குடியிறுப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன.

    இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்தில் கிழக்கு உக்ரைன் நகரான கார்கீவிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் கர்ப்பிணி பெண், குழந்தைகள் உள்பட 17 பேர் காயம் அடைந்துள்ளனர். இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை டிரோன் தாக்கியது. இதில் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின.

    சில தினங்களுக்கு முன் உக்ரைன் ரஷியாவின் விமானத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பல விமானங்கள் சேதடைந்தன.

    • சுமார் இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் நேற்று இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
    • படுகாயமடைந்தவர்கள் மற்றும் இளைஞர்களை விடுவிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் உமெரோவ் கூறினார்.

    மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவும் உக்ரைனும் துருக்கியில் மீண்டும் நேற்று நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன.

    சுமார் இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் நேற்று இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

    ரஷியாவின் போர் விமானத் தளங்கள் மீது உக்ரைன் ஒரு பெரிய டிரோன் தாக்குதலை நடத்திய மறுநாளே இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதில் போரில் கொல்லப்பட்ட சுமார் 6,000 வீரர்களின் உடல்களை ரஷியாவும் உக்ரைனும் பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹிரோனிமி டைக்வி வெளியிட்ட தகவலின்படி, கூட்டத்திற்குப் பிறகு, போர்க் கைதிகள் (POW) பரிமாற்றம் குறித்து ஒரு புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக படுகாயமடைந்தவர்கள் மற்றும் இளைஞர்களை விடுவிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் உமெரோவ் கூறினார்.

    உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, " போர்க் கைதிகளை விடுவிப்பதற்கு நாங்கள் மீண்டும் தயாராகி வருகிறோம்" என்றார்.

    கடந்த பேச்சுவார்த்தையிலும் போர் கைதிகளை இரு நாடுகளும் பரிமாறிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

    • அழிக்கப்பட்டவற்றில் அதிநவீன Tu-95 மற்றும் Tu-22M3 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஒரு A-50 உளவு விமானம் ஆகியவை அடங்கும்.
    • சரக்கு லாரிகளில் பொருத்தப்பட்ட கொட்டகைகளில் டிரோன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

    உக்ரைன் ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டிரோன் தாக்குதலை இன்று நடத்தியிருக்கிறது.

    இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் நாளை (ஜூன் 2) இஸ்தான்புல்லில் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த தாக்குதல் பதட்டங்களை அதிகரித்துள்ளது.

    'ஆபரேஷன் ஸ்பைடர் வெப் ' (பாவுடின்) என்ற பெயரில், உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) இந்த மெகா நடவடிக்கையை மிகவும் ரகசியமாக திட்டமிட்டு செயல்படுத்தியதாக நம்பப்படுகிறது.

    இந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாக பெலாயா (கிழக்கு சைபீரியா), பின்லாந்துக்கு அருகிலுள்ள ஆர்க்டிக்கில் உள்ள ஒலென்யா மற்றும் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள இவானோவோ மற்றும் டியாகிலெவ் உள்ளிட்ட பல முக்கிய ரஷிய விமான தளங்கள் குறிவைக்கப்பட்டதாக உக்ரேனிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த தாக்குதல்களில் 40க்கும் மேற்பட்ட ரஷிய போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரேனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அழிக்கப்பட்டவற்றில் அதிநவீன Tu-95 மற்றும் Tu-22M3 அணுகுண்டு குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஒரு A-50 உளவு விமானம் ஆகியவை அடங்கும்.

    சைபீரியாவின் இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள ஸ்ரிட்னி கிராமத்தில் உள்ள தங்கள் ராணுவ தளத்தின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதை அந்தப் பிராந்தியத்தின் ரஷிய ஆளுநரே உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சரக்கு லாரிகளில் பொருத்தப்பட்ட கொட்டகைகளில் டிரோன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், டிரோன்கள் ஏவுவதற்காக குறிப்பிட்ட நேரங்களில் லாரிகளின் கூரைகள் தொலைவிலிருந்து திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    ரஷியாவைப் போல விரிவான ஏவுகணை இருப்புக்கள் இல்லாத உக்ரைன், முக்கிய ஆயுதமாக டிரோன்களையே அதிகம் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ரஷிய அரசு ஊடகமான RT இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
    • 'டு கில் எ டைரண்ட்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எடுத்தார்.

    ரஷியா- உக்ரைன் போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சுவர் போல பாதுகாக்கும் மெய்க்காப்பாளர்கள் வைரலாகி வருகின்றனர்.  

    ரஷிய அரசு ஊடகமான RT இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

    உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஒரு புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டபோது, மெய்க்காப்பாளர்கள் அவரைப் பாதுகாப்பதைக் காட்டும் படத்தைப் RT பகிர்ந்து கேலி செய்துள்ளது.

    கண்காட்சியில் ஜெலென்ஸ்கி 'டு கில் எ டைரண்ட்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை படிக்க எடுத்ததாகக் கூறப்படுகிறது.  

    • தண்டவாளத்தில் வேகமாக வந்த ரெயில் இடிபாடுகள், கான்கிரீட் கற்கள் மீது மோதியது.
    • இந்த விபத்தில் 70 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ரஷியாவின் பெல்கொரோட் பிராந்தியத்தில் உள்ள கிளி மோவ் நகரத்தில் இருந்து தலைநகர் மாஸ்கோவிற்கு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அந்த ரெயில், பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பில்ஷினோ, வைகோனிச்சி ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது அங்கிருந்த ஒரு பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. மேம்பாலத்தின் இடிபாடுகள், கான்கிரீட் கற்கள் தண்டவாளத்தில் விழுந்தன.

    அப்போது தண்டவாளத்தில் வேகமாக வந்த ரெயில் இடிபாடுகள், கான்கிரீட் கற்கள் மீது மோதியது. இதனால் ரெயில் தடம் புரண்டு கவிழ்ந்தது. ரெயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி கவிழ்ந்தது. உடனே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கவிழ்ந்த ரெயில் பெட்டி யில் இருந்த பயணிகளை மீட்டனர். ரெயில் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 7 பேர் பலியானார்கள். 70 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் இந்த ரெயில் கவிழ்ந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு சதி செயல் காரணம் என்று ரஷியா தெரிவித்துள்ளது. மேம்பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இச்சம்பவம் நடந்த பகுதி உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் உக்ரைன் சதிச் செயல் இருக்கலாம் என்று ரஷிய அதிகாரிகள் சந்தே கத்தை எழுப்பியுள்ளனர்.

    ×