search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drone attack"

    • இஸ்ரேலின் உட்புற பகுதிகள் மீது ஹிஸ்புல்லா டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது
    • பிரதமர் நேதன்யாகு குடியிருப்பு அமைந்த செசாரியா நகர் மீது தாக்குதல் நடத்தின.

    டெல் அவிவ்:

    பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரு நாடுகளில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர்.

    இஸ்ரேல் படைகளுடன் லெபனான் எல்லையில் சண்டை இட்டு வரும் ஹிஸ்புல்லா, இஸ்ரேலின் உட்புற பகுதிகள் மீதும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது

    லெபனானில் இருந்து நேற்று ஏவப்பட்ட டிரோன்கள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் குடியிருப்பு அமைந்துள்ள செசாரியா நகர் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்தது.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பெரும் தவறு செய்துவிட்டீர்கள் என ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேதன்யாகு கூறியதாவது:

    இன்று என்னையும் எனது மனைவியையும் படுகொலை செய்ய ஈரானின் பினாமி ஹிஸ்புல்லா மேற்கொண்ட முயற்சி ஒரு பெரிய தவறு.

    இது என்னையும், இஸ்ரேல் அரசையும் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக எதிரிகளுக்கு எதிரான நமது நியாயமான போரைத் தொடர்வதிலிருந்து தடுக்காது.

    ஈரானுக்கும் அதன் தீமையின் அச்சில் உள்ள அதன் பினாமிகளுக்கும் சொல்கிறேன்: இஸ்ரேல் மக்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் பெரும் விலை கொடுக்க வேண்டும். பயங்கரவாதிகளையும், அவர்களை அனுப்புபவர்களையும் ஒழிப்போம்.

    எங்கள் பிணைக்கைதிகளை காசாவில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவோம். நமது வடக்கு எல்லையில் வசிக்கும் குடிமக்களை பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்புவோம்.

    நமது போர் நோக்கங்கள் அனைத்தையும் அடைய இஸ்ரேல் உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.

    • கடந்த சில மாதங்களில் ரஷியாவின் மிகப்பெரிய டிரோன் தாக்குதல் இதுவாகும்.
    • 136 டிரோன்களில் 68 டிரோன்களை வான் பாதுகாப்பு சிஸ்டம் இடைமறித்து அழித்துள்ளது.

    உக்ரைன் பகுதிகளை குறிவைத்து ரஷியா இன்று டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 130 டிரோன்கள் உக்ரைனின் கீவ் மற்றும் பல நகரங்களை குறிவைத்து செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இரண்டு ஏவுகணைகள் கொண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

    உக்ரைனின் வான் பாதுகாப்பு சிஸ்டம் 136 டிரோன்களில் 68 டிரோன்களை தடுத்து அழித்துள்ளது. இரண்டு டிரோன்கள் மீண்டும் ரஷியா பகுதிக்கு சென்றுள்ளது. 64 டிரோன்கள் குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை என உக்ரைன் தெரிவித்துள்ளது.

    டெர்னோபில் வடக்கு பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்று டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பிடித்து எரிந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த சில மாதங்களில் ரஷியாவின் மிகப்பெரிய டிரோன் தாக்குதல் இதுவாகும். ரஷியாவின் படையெடுப்பை தடுப்பதற்கான திட்டத்தை ஜெலன்ஸ்கி வெளியிடுவதற்கு முன்பாக ரஷியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

    இந்த டிரோன் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரண்டு ஏவுகணைகளை வடக்கு செர்னிஹிவ் மற்றும் கிழக்கு டொனட்ஸ்க் பிராந்தியத்தில் செலுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

    • பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு போரில் ஈடுபட்டு வருகிறது.
    • லெபனான் நாட்டில் இருந்தபடி இஸ்ரேலை தாக்கி வருகிறது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காசா பகுதியில் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்தனர்.

    இதற்கிடையே, பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. 

    இந்நிலையில், இஸ்ரேலின் பினியாமினா பகுதியில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு படையினரை நோக்கி அதிக அளவிலான டிரோன்கள் ஏவப்பட்டன.

    இதில் படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர் என்று, 50-க்கும் அதிகமான வீரர்கள் படுகாயம் அடைந்தனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

    • பெல்கோரோட் பிராந்தியத்தில் ஆயில் டெப்போ மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • ஓரியல் பிராந்தியத்தில் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ரஷியா- உக்ரைன் எல்லையில் உள்ள ரஷியப் பகுதிகளில் உக்ரைன் நேற்றிரவு சரமாரியாக டிரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம், வான்பாதுகாப்பு சிஸ்டம் மூலம் 75 டிரோன்களை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது.

    பெல்கோரோட், கிராஸ்னோடர், கர்ஸ்க், ஓரியல், ரோஸ்டவ், வொரோனேஸ் உள்ளிட்ட பிராந்தியங்களில் உள்ள பகுதிகளை குறிவைத்து உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

    ரோஸ்டவ் பிராந்தியத்தில் மட்டும் 36 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுவேளையில் ரோஸ்டவ் கவர்னர் வாசிலி கொலுபெவ், 55 டிரோன்களால் ரோஸ்டவ் தாக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

    எத்தனை டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. எத்தனை டிரோன்களை இலக்கை தாக்கியது என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை. மோரோசோவ்ஸ்க், கமென்ஸ்கி மாவட்டங்களில் உள்ள ஆயுதகிடங்குகள் சேதம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

    பெல்கோரோட் கவர்னர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ், ஆயில் டெப்போ பாதிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார். ஒரு டேங்க் வெடித்து சிதறியதாகவும், வேகமாக மற்றவற்றை வெளியேற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

    ஓரியல் பிராந்திய கவர்னர், இரண்டு டிரோன்கள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மோதி தீ விபத்து ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

    • ஜோர்டானில் நடந்த தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • அதற்கு பதிலடியாக அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ஆதரவு பெற்ற கதாய்ப் ஹிஸ்புல்லா அமைப்பின் மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

    அதில் ஒருவர் அந்த அமைப்பின் மூத்த தளபதி (விஸ்ஸாம் முகமது அபு பக்கர் அல்-சாதி) ஆவார். கொல்லப்பட்டவர்கள் கிழக்கு பாக்தாத் மஷ்தல் என்ற இடத்தில் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தபோது, அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

    ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழு ஜோர்டான் நாட்டில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மூன்று அமெரிக்கா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற கதாய்ப் ஹிஸ்புல்லா அமைப்புதான் முக்கிய காரணம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா ஈரான், சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரம் ஈரான் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்களை குறிவைத்து 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. அதன்தொடர்ச்சியாக நேற்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

    பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா நிலைகளை அமைத்து வீரர்களை அமர்த்தியுள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் தொடங்கியதில் இருந்த அமெரிக்கா நிலைகளை குறிவைத்து ஆயுதமேந்திய குழுக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    ஜோர்டான் தாக்குதலுக்குப் பிறகு, ஈராக் அரசுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தடுக்க, அமெரிக்க நிலைகள் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்படும். ஆனால், மற்ற இடங்களில் தாக்குதல் தொடரும் என கதாய்ப் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜோர்டான் எல்லைப் பகுதியில் நடைபெற்ற டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • அமெரிக்க வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.

    ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள், கிளர்ச்சி குழுக்கள் ஈராக், சிரியா போன்ற நாடுகளில் உள்ளன. இந்த குழுக்கள் அமெரிக்கப்படைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.

    சில தினங்களுக்கு முன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அமெரிக்கா வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஒருமுறை மட்டும் தாக்குதல் நடத்தப்படாது. பதிலடியாக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.

    இந்த நிலையில ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களை குறிவைத்து 12-க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. நீண்டதூரம் சென்று தாக்கும் குண்டுகளை பயன்படுத்தி இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.

    இந்த தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் "அமெரிக்க வீரர்களுக்கு தீங்கி விளைவித்தால், அதற்கு சரியான பதில் கொடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் இந்த தாக்குதல் இறையாண்மை மீறல் என ஈராக் கண்டனம் தெரிவித்துள்ளது.

    • ஹமாசுக்கு ஆதரவாக இருக்கும் போராளிகள் குழுக்கள் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளன.
    • தாக்குதலின் உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது.

    வாஷிங்டன்:

    பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. இதனால் ஹமாசுக்கு ஆதரவாக இருக்கும் போராளிகள் குழுக்கள் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளன.

    இந்த நிலையில் ஜோர்டானில் நடந்த டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிரியா எல்லைக்கு அருகில் வட கிழக்கு ஜோர்டானில் அமெரிக்க படைகள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் இரவு இந்த படைகளை குறி வைத்து அதிரடி டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 3 பேர் உயிர் இழந்தனர். 36 பேர் படுகாயம் அடைந்ததாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கிய பிறகு முதன் முறையாக அமெரிக்க படைகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அதிபர் ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஜோர்டானில் அமெரிக்க தளங்களின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 வீரர்களை இழந்து இருக்கிறோம். இந்த தாக்குதலின் உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது. இது சிரியா மற்றும் ஈராக்கில் இயங்கும் தீவிர ஈரான் ஆதரவு போராளி குழுக்களால் நடத்தப்பட்டது என்பது எங்களுக்கு தெரியும். இதற்குதக்க பதிலடி கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து தாக்குதலை நடத்தியுள்ளனர் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்.
    • F-18 போர் விமானம் இந்த தடுப்பு நடவடிக்கையில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதில் செங்கடல் பகுதியில் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து போர் கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய டிரோன்கள், ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் இடைமறித்து சுட்டு வீழ்த்தியது.

    செங்கடல் பகுதியில் சென்ற கப்பல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தினர். இதையடுத்து அமெரிக்க ராணுவப் படைகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு ஏவுகணை, டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

    10 மணி நேர கால இடைவெளியில் 12 டிரோன்கள், மூன்று கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் இரண்டு தரைவழி தாக்குதல் ஏவுகணைகளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் கப்பல்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

    • இந்தியா வந்த சரக்கு கப்பல் மீது அரபிக்கடலில் வைத்து டிரோன் தாக்குதல்.
    • இதனால் பாதுகாப்பு பணியில் 3 போர்க்கப்பல்களை இந்தியா அப்பகுதியில் நிறுத்தியுள்ளது.

    அரபிக் கடலில் லைபீரிய நாட்டு எண்ணெய் கப்பல் எம்.வி. கெம்புளூட்டோ மீது கடந்த 23-ந்தேதி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கடந்த 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தது.

    இதேபோன்று செங்கடலில் பயணித்த கபோன் நாட்டுக்குச் சொந்தமான எம்.வி. கெம் புளூட்டோ சரக்கு கப்பல் மீது 23-ந்தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் அரபிக்கடலின் மேற்கு பகுதியில் இந்திய எல்லையில் வைத்து தாக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேல் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். மோர்முகாவோ, ஐ.என்.எஸ். கொச்சி, ஐ.என்.எஸ். கொல்கத்தா ஆகிய 3 போர்க்கப்பல்கள் அரபிக் கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    தொலைதூர கண்காணிப்புக்கு அதிநவீன பி-81 என்ற ரோந்து விமானத்தையும் இந்திய விமானப்படை ஈடுபடுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே கடந்த 23-ந்தேதி தாக்குதலுக்கு உள்ளான எம்.வி. கெம் புளூட்டோ சரக்கு கப்பல் நேற்று மும்பை துறைமுகம் வந்தடைந்தது. இந்திய கடற்படையின் வெடிகுண்டு நிபுணர் குழு அந்தக் கப்பலை ஆய்வு செய்தது.

    • ஆயுத கும்பலை குறிவைத்து ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
    • பண்டிகை ஒன்றுக்காக கிராம மக்கள் ஏராளமானோர் கூடிய இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    நைஜீரிய நாட்டின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஆயுத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்கு எதிராக ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள கடுனா மாகாணம் டுடுன்பிரி கிராமத்தில் ராணுவ டிரோன் ஒன்று தாக்குதல் நடத்தியது.

    அந்த கிராமத்தில் பண்டிகை ஒன்றுக்காக கிராம மக்கள் ஏராளமானோர் ஒரு இடத்தில் கூடி இருந்தனர். அப்போது ராணுவ டிரோன் தவறுதலாக கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தியது.

    இதில் ஏராளமானோர் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இந்த தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

    ஆனால் கிராம மக்கள் கூறும்போது, 30 பேர் பலியானதாகவும், 60 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவித்தனர். மற்றொரு தகவலில் 85 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டிரோன் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
    • தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு தான் இப்பகுதியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

    ஹோம்சில்:

    உலக நாடுகளின் போர்க்களமாக சிரியா திகழ்ந்து வருகிறது. அங்குள்ள ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அடிக்கடி தாக்குதல் நடத்துவதால் அப்பாவி பொது மக்கள் பலியாகி வருகின்றனர்.

    இந்நிலையில் ராணுவ பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவின் மத்திய மாகாணமான ஹோம்சில் பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் உள்ளது. இந்த முகாம் மீது நேற்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதம் தாங்கிய டிரோன்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 100 பேர் வரை கொல்லப்பட்டதாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் பலியானவர்கள் உடல்கள் சிதறி கிடந்தன.

    இந்த டிரோன் தாக்குதலுக்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    இந்த தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு தான் இப்பகுதியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் சிரியா நாட்டின் பாதுகாப்பு மந்திரி கலந்து கொண்டார். விழா முடிந்து அவர் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அவரது உயிருக்கு குறி வைத்து டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • பிஸ்கோவ் விமான நிலையத்தில் நான்கு விமானங்கள் சேதம்
    • ஏராளமான டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 18 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் அடி வாங்கிக் கொண்டிருந்த உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவால் தற்போது பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக டிரோன் மூலம் முக்கியமான இடத்தை டார்கெட் செய்து வருகிறது.

    இதனால் ரஷியாவில் உயிர்ச்சேதம் இல்லை என்றாலும், கட்டிடங்கள் போன்றவை கட்டமைப்புகள் சேதம் அடைந்து வருகின்றன.

    இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை (இன்று) ஆறு பிராந்தியங்களை இலக்காக வைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 18 மாதங்களில் ரஷியா மீதான மிகப்பெரிய தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது.

    ரஷியாவின் மேற்கு பிராந்தியமான பிஸ்கோவில் உள்ள விமான நிலையம் டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் அப்பகுதி தீப்பிடித்து எரிந்ததாக உள்ளூர் கவர்னர் மற்றும் மீடியாக்கள் தெரிவித்தன. இதற்கிடையே ஓர்யோல், பிரயான்ஸ்க், ரியாஜான், கலுகா மற்றும் மாஸ்கோ பிராந்தியத்தில் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பிஸ்கோ பிராந்தியம் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில், நான்கு Il-78 போக்குவரத்து விமானங்கள் சேதமடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து பிஸ்கோவ் கவர்னர் மிஹைல் விடேர்னிகோவ், இந்த விமான நிலையத்தில் வரும், செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

    ×