என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trump"

    • மாணவர்கள் தங்களது சமூக வலைத்தள கணக்குகளை அமெரிக்க அரசு ஆய்வுக்கு உட்படுத்த வழங்கிட வேண்டும்.
    • கொள்கைக்கு விரோதமான பதிவுகள் கண்காணிக்கப்படும்.

    அதிபர் டிரம்ப் கெடுபிடிகளால் அமெரிக்காவில் நிறுத்திவைக்கப்பட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகள் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியுள்ளது.

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடனான டிரம்ப்பின் சண்டைக்கு பிறகு வெளிநாட்டு மாணவர்களுக்கு மாணவர் விசா வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த மாதம் அமெரிக்க அரசு அறிவித்தது.

    மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்து, அவர்களை பற்றிய பின்னணியை அறிய கால அவகாசம் தேவைப்படுவதால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.

    இதனால், அமெரிக்காவில் படிப்பு என்ற கனவில் இருந்த வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் பணியை அமெரிக்கா மீண்டும் தொடங்கி உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

    மாணவர்கள் தங்களது சமூக வலைத்தள கணக்குகளை அமெரிக்க அரசு ஆய்வுக்கு உட்படுத்த வழங்கிட வேண்டும் என்றும் அப்படி ஆய்வு செய்ய அனுமதி மறுப்பவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பதாரர்களின் சமூக வலைத்தள கணக்குகளில், அமெரிக்காவுக்கு விரோதமாகவோ, அதன் அரசாங்கம், கலாசாரம், அமைப்புகள், அடிப்படை கொள்கை ஆகியவற்றுக்கு விரோதமாகவோ ஏதேனும் பதிவுகளோ, செய்திகளோ இருக்கிறதா என்று தூதரக அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

    ஒவ்வொரு தூதரக அதிகாரியும் தணிக்கை அதிகாரிகளாக செயல்படுவார்கள். மொத்த மாணவர் எண்ணிக்கையில் 15% குறைவான வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கபடும் என வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

    • சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் டிக்டாக் செயலியை நிர்வகித்து வருகிறது.
    • அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் டிக்டாக் செயலியை பயன்படுத்தினர்.

    வாஷிங்டன்:

    டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.

    சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் இச்செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிக்கு முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடை விதித்தார். இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    இதை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை என தெரிவித்தது.

    அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி 19 முதல் அமலில் உள்ளது. இதனால் தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், டிக்டாக் செயலிக்கு வழங்கப்பட்ட கெடுவை மூன்றாவது முறையாக மேலும் 90 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

    • தேசியத்தை தடம் புரள செய்ய துடிக்கிறது.
    • காங்கிரஸ் நிலைப்பாடு மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் சண்டைக்கு பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இந்த போர் நிறுத்தத்துக்கு நான் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல முறை தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருந்தது.

    இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்த பங்கும் வகிக்கவில்லை என்று டிரம்பிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தெரிவித்தாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து காங்கிரசை பா.ஜ.க. விமர்சித்துள்ளது. தனது எக்ஸ் தள பதிவில் பா.ஜ.க. கூறியதாவது:-

    இந்த உரையாடல் காங்கிரசுக்கு ஒரு கெட்ட செய்தியாகும். ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றியை பெற்றதில் இருந்து காங்கிரஸ் பொய்கள், வதந்திகள் மற்றும் குழப்பங்களை பரப்புவதில் மும்முரமாக ஈடுபட்டது. தேசியத்தை தடம் புரள செய்ய துடிக்கிறது.

    ஆனால் பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் தெளிவாகவும், விரிவாகவும் பேசியதன் மூலம் உண்மை வெளிவந்துள்ளது. இடைத்தரகர்களுக்கு இடமில்லை. சூழ்ச்சிக்கு இடமில்லை. காங்கிரஸ் நிலைப்பாடு மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க தயாரா? என்று சவால் விடுத்துள்ளது.

    உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறும்போது 'மோடியின் மக்கள் இதை சொல்கிறார்கள். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுபற்றி டுவிட் செய்து தனது வார்த்தையை திரும்ப பெறுவதாக கூற வேண்டும். பிரதமர் மோடி இப்போது சொல்வதை யார் நம்புவார்கள்?' என்றார்.

    • ரொனால்டோ ஜெர்சியை டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா வழங்கினார்.
    • இது தொடர்பான வீடியோவை டீம் டிரம்ப் இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது.

    போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா வழங்கினார்.

    அந்த ஜெர்சியில், "அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு" என்று ரொனால்டோ எழுதியுள்ளார்.

    இது தொடர்பான வீடியோவை டீம் டிரம்ப் இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. 

    • நான் இப்போது வாஷிங்டனுக்குச் செல்வதற்கான காரணம் பிரான்ஸ் அதிபருக்கு தெரியாது
    • இம்மானுவேல் எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறார்

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், "ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறி, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான "போர் நிறுத்தத்தை" ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவிற்கு டிரம்ப் திரும்பி சென்றார்" என்று தெரிவித்தார்.

    ஆனால் மேக்ரானின் இந்த கூற்று தவறு என்று டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில், "விளம்பரம் தேடும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், நான் கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறி, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான "போர் நிறுத்தத்தை" ஏற்படுத்துவதற்காக அமெரிக்கவிற்கு திரும்பிச் சென்றதாகத் தவறாகக் கூறினார். நான் இப்போது வாஷிங்டனுக்குச் செல்வதற்கான காரணம் அவருக்குத் தெரியாது, ஆனால் அதற்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது அதை விட மிகப் பெரியது. வேண்டுமென்றே செய்தாலும் இல்லாவிட்டாலும், இம்மானுவேல் எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறார்" என்று தெரிவித்தார்.

    • நான் சொன்ன 'ஒப்பந்தத்தில்' ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
    • ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது

    இஸ்ரேலும் ஈரானும் இன்று ஐந்தாவது நாளாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானியர்களை தலைநகர் தெஹ்ரானில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தினார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "அணு ஆயுத மேம்பாட்டை தடுப்பதற்காக நான் கையெழுத்திடச் சொன்ன 'ஒப்பந்தத்தில்' ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இதனால் எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளது. ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது. நான் மீண்டும் மீண்டும் சொல்கிறன், அனைவரும் உடனடியாக தெஹ்ரானை விட்டு வெளியேறுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    ஆனால் அதே சமயம், ரஷியா ஈரானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது.ஈரானுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும், இஸ்ரேல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் வலியுறுத்தியுள்ளார்.

    • இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது
    • ஈரான் மூலம் உலகுக்கு ஏற்படும் அணு ஆயுத அச்சுறுத்தலை ஒழிக்கத் தேவையானதை செய்வோம்.

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அறிவித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கினால் ஈரானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப் படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை கொலை செய்ய ஈரான் திட்டம் போட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

    உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பேட்டியில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "ஈரான் அணு ஆயுதங்கள் வைத்து இருப்பதை டிரம்ப் விரும்பவில்லை என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளார். இதனால் அவர் ஈரானின் நம்பர் ஒன் எதிரியாக இருந்து வருகிறார். டிரம்ப் தங்களது அணு சக்தி திட்டத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்பதால் அவரை கொல்ல ஈரான் திட்டமிட்டு உள்ளது. அவர்களின் உளவுத்துறை மூலம் டிரம்பை கொல்ல விரும்புகிறது.

    ஈரானின் அணு சக்தி நடவடிக்கைக்கு இஸ்ரேலின் தாக்குதல் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது. ஈரானால் நாங்கள் உடனடி அச்சுறுத்தலை எதிர்கொண்டோம். ஈரான் உலகிற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அகற்ற தேவையான அனைத்தையும் செய்ய இஸ்ரேல் தயாராக இருக்கிறது." என்று தெரிவித்தார்.

    இதற்கிடையில் ஈரான் நாட்டின் ஆட்சியாளரும், மதத்தலைவருமான கமேனியை கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டு இருந்ததை டிரம்ப் தடுத்து நிறுத்தினார் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையே கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில் அமெரிக்கா வெளியிட்ட இந்த தகவல் பரபரப்பை எற்படுத்தி இருக்கிறது.

    • இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது
    • ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். விரைவாக நல்ல முடிவு எடுத்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த நான் எடுத்த முயற்சிகளை ஏற்றுக்கொண்டு அந்த தலைவர்கள் செயல்பட்டது போல இஸ்ரேல் மற்றும் ஈரான் தலைவர்களும் போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • குடியேற்ற கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
    • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து நாட்டின் குடியேற்ற கொள்கையில் பல்வேறு திருத்தங்களைச் செய்து உத்தரவிட்டார்.

    அதன்படி விசா காலம் முடிந்தும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள், சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேரை கைதுசெய்ய டிரம்ப் உத்தரவிட்டார். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, கடந்த 7-ம் தேதி கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி புலம்பெயர் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

    அதன்பின் அவர்களை நாடு கடத்தும் முயற்சி துரிதமாக நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி ஒடுக்க முயன்றனர்.

    இதனையடுத்து டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்களும் போராட்டத்தில் இணைந்தனர். அப்போது கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. எனவே போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

    இதனையடுத்து போராட்டக்காரர்கள் டிரம்புக்கு எதிராக முழக்கமிட்டனர். போராட்டம் மேலும் தீவிரம் அடைவதால் இதனை கட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் அங்கு ராணுவத்தைக் குவித்துள்ளது.

    பொதுவாக, தேசிய நெருக்கடி ஏற்படும்போதுதான் மாகாணங்களில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்படுவர். ஆனால் தற்போது மாகாண கவர்னரின் அனுமதியின்றி டிரம்ப் அங்கு ராணுவத்தை நிறுத்தி உள்ளார். இதனை எதிர்த்து கலிபோர்னியா மாகாண கவர்னர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.

    • ஜனநாயக கட்சியின் சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • இதுபோன்ற கொடூரமான வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மின்னசோட்டா சட்டசபை உறுப்பினர்கள் இருவர் தங்கள் வீடுகளில் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர்.

    போலீஸ் வேடமணிந்து வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    மற்றொரு சட்டசபை உறுப்பினர் ஜான் ஹாப்மேன் படுகாயம் அடைந்தார். இவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுதொடர்பாக, கவர்னர் டிம்.வால்ஸ் கூறுகையில், மின்னசோட்டாவில் நடந்த அரசியல் வன்முறைகளுக்கு எதிராக நிற்கவேண்டும். தாக்குதல் நடத்தியவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப். பி. ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டசபை உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், மின்னசோட்டாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமானது என கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இதுபோன்ற கொடூரமான வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது என கூறினார்.

    • அகமதாபாத் விமான விபத்தில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
    • விமான விபத்து குறித்து பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    அகமதாபாத் விமான விபத்தில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். விமான விபத்து குறித்து பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

    விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான ஒன்று. இந்தியாவுக்கு எந்தத் திறனிலும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளது.

    விமான விபத்து மிகவும் பயங்கரமானது. நான் ஏற்கனவே அவர்களிடம் (இந்தியா) சொல்லியிருக்கிறேன், நாம் என்ன செய்ய முடியும். இது ஒரு பெரிய நாடு, ஒரு வலிமையான நாடு, அவர்கள் அதைக் கையாளுவார்கள், நான் உறுதியாக நம்புகிறேன்.

    ரஷிய அதிபர் புதின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

    விமான விபத்து குறித்து அதிபர் புதின் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இரங்கல் தெரிவித்தார் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

    விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

    மேலும், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான், கனடா பிரதமர் மார்க் கார்ட்னி உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • லாஸ் ஏஞ்சல்சுக்கு தேசிய படையை அனுப்பிய டிரம்பின் நடவடிக்கை பொறுப்பற்றதாகும்.
    • டிரம்ப் மீது வழக்கு தொடருவோம். டிரம்ப் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்.

    அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் தீவிரமாக எடுத்து வருகிறார். இதனையொட்டி ஏராளமானோர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். இதில் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் கைது செய்யப்படுகிறார்கள்.

    இதற்கிடையே அதிபர் டிரம்பின் நடவடிக்கையை கண்டித்து கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டன.

    மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    போராட்டத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியாததால் தேசிய படையை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அனுப்பப்பட்டனர். ஆனாலும் கலவரம் கட்டுக்குள் வரவில்லை.லாஸ் ஏஞ்சல்சில் 4-வது நாளாக போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும் கலவரத்தால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இதனிடையே லாஸ் ஏஞ்சல்சில் நடந்து வரும் போராட்டங்கள், கலவரத்தை ஒடுக்க கூடுதலாக தேசிய படையை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்களை அனுப்ப அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.

    இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்சில் நடந்து வரும் போராட்டங்கள் தொடர்பாக அதிபர் டிரம்ப் மற்றும் கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பேசிய கவர்னர் கவின் நியூசம், "லாஸ் ஏஞ்சல்சுக்கு தேசிய படையை அனுப்பிய டிரம்பின் நடவடிக்கை பொறுப்பற்றதாகும். இது எங்கள் துருப்புக்களுக்கு அவமரியாதை அளிப்பதாக உள்ளது. கலிபோர்னியா கவர்னர், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் என யாரையும் கேட்காமல், தன்னிச்சையாக தேசிய படைகளை அனுப்பி உள்ளார். இது சட்டவிரோதமானது. கலிபோர்னியா மாகாணத்தின் இறையாண்மையை பறிக்கும் செயலாகும். இதுதொடர்பாக டிரம்ப் மீது வழக்கு தொடருவோம். டிரம்ப் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்" என்று தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்து பேசிய டிரம்ப், கலவரங்களைச் சமாளிக்க" தேசிய காவல்படை துருப்புக்களை அனுப்பி இருக்காவிட்டால் லாஸ் ஏஞ்சல்ஸ் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும். இதற்கு கவர்னர், மேயர் எனக்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் கவர்னர் விமர்சனம் செய்து வருகிறார். அவரை கைது செய்ய கூட நான் பரிந்துரைப்பேன். கவர்னர் கவின் நியூசம் விளம்பரத்தை விரும்புகிறார். அவர் மிகவும் திறமையற்றவர் என்பது அனைவருக்கும் தெரியும்" என்று தெரிவித்தார்.

    ×