search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Embassy"

    • என்ஜினீயர் வீரமணி பாண்டியன் ரியாத் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
    • சமூக ஆர்வலர் ஷாஹிப் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு வீரமணிக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

    திருச்சி:

    திருச்சியை சேர்ந்தவர் வீரமணி பாண்டியன் (வயது 45). மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் கடந்த செப்டம்பர் மாதம் சவுதி அரேபியா நாட்டுக்கு வேலைக்காக புறப்பட்டுச் சென்றார். பின்னர் புதிய வேலையில் சேர்ந்த அவர் வேலை பிடிக்காமல் ஓரிரு தினங்களில் ஊர் திரும்ப முடிவு செய்தார்.

    அதற்காக அவர் ரியாத் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சுமார் 2 மாத சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு சுய நினைவு திரும்பி உள்ளது. அதைத்தொடர்ந்து மீண்டும் ஊர் திரும்புவதற்கு அவர் முயற்சித்தார். ஆனால் அவரது மருத்துவ செலவினத்தை பார்த்தபோது அவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு 1.4 லட்சம் சவுதி ரியால்கள் மருத்துவ கட்டணமாக செலுத்தக் கூறி இருந்தது.

    இது இந்திய ரூபாயின் பண மதிப்பில் ரூ.30 லட்சம் ஆகும். இப்போது அவர் சமூக ஆர்வலர் ஷாஹிப் என்பவரது பராமரிப்பில் இருந்து வருகிறார். அவர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு வீரமணிக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, சம்பவம் நடந்தபோது சுயநினைவின்றி இருந்ததால், குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிப்பது வீரமணியின் விருப்பமாக இருக்க வாய்ப்பு இல்லை. இந்த விவகாரம் குறித்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.

    மருத்துவமனையில் வீரமணி அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அடையாளம் தெரியாத சிலர் மருத்துவமனை பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளனர். வீரமணி கடந்த செப்டம்பர் 24-ந்தேதி நஜ்ரான் மினரல் வாட்டர் பாட்டில் ஆலையில் பணியில் சேர்ந்தார். இரண்டு நாட்களில் வேலை பிடிக்காததால் வீடு திரும்ப முடிவு செய்தார். அவரை பணியமர்த்திய ஒப்பந்ததாரரும் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு செல்ல அனுமதித்தார்.

    இப்போது மீண்டும் ஊர் திரும்ப மருத்துவமனையின் அனுமதிக்காக வீரமணி காத்திருக்கிறார். உறவினர்களும் இந்திய தூதரகத்தின் உதவியை நாடி இருக்கின்றனர்.

    மருத்துவக்கட்டணத்தை செலுத்தாததால் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வரும் அவரை பத்திரமாக அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளளதோடு, அவரது வருகையை எதிர்பார்த்துள்ளனர்.

    ×