என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டொனால்ட் ட்ரம்ப்"

    • தற்போது காசா போர் மிக குறைந்த அளவிலேயே நடந்துவருகிறது.
    • ஜனநாயக கட்சியினர் ட்ரம்ப் உரையில் குறுக்கிட்டனர்

    இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை தான் நிறுத்தாவிட்டால், 35 மில்லியன் மக்கள் இறந்திருப்பார்கள் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

    நேற்று 100 நிமிடங்களுக்கு மேல் ஆற்றிய யூனியன் உரையில், மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் போரை அவர் நிறுத்தியாக தெரிவித்தார்.

    "நான் பதவியேற்ற முதல் 10 மாதங்களில், எட்டுப் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன்... இதில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான மோதலும் அடங்கும், அது ஒருவேளை அணு ஆயுதப் போராகக்கூட மாறியிருக்கக்கூடும். எனது தலையீடு மட்டும் இல்லையென்றால், 3.5 கோடி (35 மில்லியன்) மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறினார்.' என தெரிவித்தார்.  


    100வது முறை...

    கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இந்தியா-பாகிஸ்தான் போரை தான்தான் முடிவுக்கு கொண்டுவந்ததாக ட்ரம்ப் தெரிவித்து வருகிறார். தற்போது வரை சுமார் 100 முறை இதே கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் ட்ரம்பின் இந்தக் கூற்றுக்கு இந்தியா தொடர்ந்து மறுப்புதெரிவித்து வருகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் போர் மட்டுமின்றி, கம்போடியா - தாய்லாந்து, கொசோவோ -செர்பியா, இஸ்ரேல் - ஈரான், எகிப்து - எத்தியோப்பியா, ஆர்மீனியா - அஜர்பைஜான், காங்கோ - ருவாண்டா, மற்றும் காசா போர் ஆகியவற்றையும் நிறுத்தியதாக கூறினார். தற்போது காசா போர் மிக குறைந்த அளவிலேயே நடந்துவருவதாகவும் தெரிவித்தார்.

    ஒரு கட்டத்தில், சில ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிரம்பின் உரையில் குறுக்கிட்டனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக அவர், 'இது வேடிக்கையாக இல்லையா? இவர்கள் நோயுற்ற (மனநிலை பாதிக்கப்பட்ட) மனிதர்கள்' என்று கூறினார்

    • அதிபர் தேர்தலுக்கு முன்பும் ட்ரம்ப்மீது இரண்டுமுறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
    • இந்த சம்பவம் அதிகாலை 1:30 மணிக்கு நடந்தது.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குச் சொந்தமான புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ சொகுசு விடுதிக்குள் (ரிசார்ட்) அத்துமீறி நுழைய முயன்ற ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

    புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள இந்த ரிசார்ட்டில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேன் எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரகசிய சேவை ஏஜெண்டுகள் மற்றும் பாம் பீச் கவுண்டி ஷெரிஃப் துணை அதிகாரி ஆகியோர் இளைஞர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் உயிரிழந்தார்.

    உயிரிழந்த இளைஞர் வட கரோலினாவைச் சேர்ந்தவர் என்றும், சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. டிரம்ப் பெரும்பாலும் வார இறுதி நாட்களை தனது ரிசார்ட்டில் கழித்தாலும், இந்த சம்பவத்தின் போது அவர் வெள்ளை மாளிகையில் இருந்தார். மனைவி மெலனியா ட்ரம்பும் அவருடன்தான் இருந்தார் என கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தொடர்ந்து இதுதொடர்பாக ரகசிய சேவை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

     

    • பழைய வீடியோவின் ஒரு பகுதி மட்டும் வெட்டப்பட்டு மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.
    • அன்பு என்ற வார்த்தையை நீங்கள் வேறுவிதமாக எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை.

    பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப்,

    "மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் என்னை நேசிக்கிறார்... அன்பு என்ற வார்த்தையை நீங்கள் வேறுவிதமாக எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. அவரது அரசியல் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை" எனப் பேசியிருந்தார். அதாவது காதல் என்ற வார்த்தையை அரசியல் ரீதியாகத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக நகைச்சுவையாக, "அவரது அரசியல் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை" என்று விளக்கம் அளித்தார்.

    கடந்தாண்டு ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பான வர்த்தகப் பதற்றங்கள் நிலவியபோது ட்ரம்ப் இந்தக் கருத்தை முன்வைத்திருந்தார். தற்போது இந்தியா-அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், பழைய வீடியோவின் ஒரு பகுதி மட்டும் வெட்டப்பட்டு மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை... இருப்பினும், அத்தகைய வீடியோ இருந்தால், அது உண்மையாக இருந்தாலும் சரி, பொய்யாக இருந்தாலும் சரி, நாங்கள் அதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்துள்ளார். 

    • இந்திய தலைவர்கள் யாரிடமிருந்தும் இதுபோன்ற அறிக்கையை நான் கேள்விப்படவில்லை
    • இந்தியா மீது விதித்த கூடுதல் 25 சதவீத வரியை ட்ரம்ப் திரும்பப் பெற்றார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைத் தவிர வேறு யாரும் இந்தியா, ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக அறிவிக்கவில்லை என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

    ரஷ்ய நாடாளுமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், "ரஷ்ய எண்ணெய்யை இனி வாங்கப்போவதில்லை என்ற இந்தியாவின் ஒப்பந்தத்தை டொனால்ட் டிரம்ப் அறிவித்ததாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். பிரதமர் மோடி மற்றும் பிற இந்தியத் தலைவர்கள் உட்பட வேறு யாரிடமிருந்தும் இதுபோன்ற அறிக்கையை நான் கேள்விப்படவில்லை" என்று கூறினார்.

    கடந்த வாரம் இந்தியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக அறிவித்த ட்ரம்ப், ரஷ்யாவிலிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது விதித்த கூடுதல் 25 சதவீத வரியையும் ட்ரம்ப் திரும்பப் பெற்றார்.

    ஆனால் தற்போதுவரை இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் நேரடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

    • கோவிட்-19 காலக்கட்டத்திலும் அவர் மரபை மீறவில்லை.
    • ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி அப்துல்ரஹிம் மௌசவி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி நேற்று நடைபெறவிருந்த ராணுவ விமானப்படைத் தளபதிகளுடனான வருடாந்திர சந்திப்பைத் தவிர்த்துள்ளார். 1989-ல் தலைமை பொறுப்பை ஏற்றதுமுதல் கமேனி ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டு வந்தார். கோவிட்-19 காலக்கட்டத்திலும் அவர் அந்த மரபை மீறவில்லை. 

    இந்நிலையில் 37 ஆண்டுகளில் இந்தாண்டு முதல்முறையாக கூட்டத்தை புறக்கணித்துள்ளார். கமேனிக்குப் பதில் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி அப்துல்ரஹிம் மௌசவி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    இதற்கு ஈரானிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எந்தக் காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், இதற்கு அமெரிக்காவுடனான பதற்றம்தான் காரணம் என கூறப்படுகிறது. அமெரிக்காவுடனான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டத்தை கமேனி தவிர்த்ததாக கூறப்படுகிறது. மறுதரப்பினர் 86 வயதாகும் கமேனியின் உடல்நிலை சீராக இல்லை என்றும், அதன் காரணமாகவே அவர் கூட்டத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றன.

    1979-இல் ஈரானிய விமானப்படை அதிகாரிகள் அயதுல்லா கொமேனிக்கு விசுவாசப் பிரமாணம் செய்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 8-ம் தேதி இந்த முக்கியச் சந்திப்பு நடத்தப்படுகிறது. 

    • என்னென்ன முடிவுகளுக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்பது நாட்டு மக்களுக்கும் தெரியாது, நாடாளுமன்றத்திற்கும் தெரியாது.
    • அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்க பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்

    அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

    அதன்படி, இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரியை 25%-லிருந்து 18% ஆக குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் நீண்ட நாட்களாக டிரம்ப் கூறிவந்தவாறே, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதித்துள்ளது. அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

    மேலும் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விமானங்கள் உட்பட சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க இந்தியா உறுதியளித்துள்ளது. குறிப்பாக அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு இந்தியச் சந்தையில் கூடுதல் வாய்ப்புகளை வழங்கவும், வர்த்தகத் தடைகளை நீக்கவும் இந்தியா உடன்பட்டுள்ளது.

    இந்நிலையில் இதுதொடர்பாக எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 

    "பிரதமர் மோடியுடன் உரையாடியதாகவும் பிரதமர் மோடி சில வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒப்புக் கொண்டதாகவும் அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். என்னென்ன முடிவுகளுக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்பது நாட்டு மக்களுக்கும் தெரியாது, நாடாளுமன்றத்திற்கும் தெரியாது.

    அமெரிக்க அரசின் வேளாண்துறை அமைச்சர் இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டி இது அமெரிக்க விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்கிறார். அப்படியென்றால் என்னென்ன அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்க பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • இந்த விலகல் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு இழப்பு
    • அமெரிக்கா 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான தனது கட்டணத்தைச் செலுத்தவில்லை

    அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் உலக சுகாதார அமைப்பு 'சீனாவுக்கு ஆதரவாக' செயல்பட்டதாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டே அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இது ஒரு வருடத்திற்கு பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது.

    பெருந்தொற்றை உலக சுகாதார அமைப்பு கையாண்ட விதம் தவறானது என்றும், தன்னைத்தானே சீர்திருத்திக்கொள்ளும் திறன் அதற்கு இல்லை என்றும், அதன் உறுப்பு நாடுகளின் அரசியல் செல்வாக்கிற்கு அது உட்பட்டுள்ளது என்றும் கூறி, அதிலிருந்து விலகும் முடிவை எடுத்ததாக அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

    இந்தக் குற்றச்சாட்டுகளை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது. மேலும், இந்த விலகல் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு இழப்பு என்று அந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். அமெரிக்கா பாரம்பரியமாக உலக சுகாதார அமைப்பின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான தனது கட்டணத்தைச் செலுத்தவில்லை, இது ஏற்கனவே அந்த நிறுவனத்தில் பெரும் வேலை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    உலக சுகாதார அமைப்பின் வழக்கறிஞர்கள் அமெரிக்கா நிலுவைத் தொகையை செலுத்த கடமைப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாலும், அவ்வாறு செய்ய எந்தக் காரணத்தையும் காணவில்லை என்று வாஷிங்டன் (அமெரிக்கா) கூறியுள்ளது. 

    • காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.
    • உலக பொருளாதார மாநாட்டில் அமைதிக் குழுவிற்கான வரைவை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைய சவுதி அரேபியா முடிவெடுத்துள்ளது.

    இதன்மூலம் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், துருக்கி, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய எட்டு இஸ்லாமிய நாடுகள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாகச் சேருகின்றன.

    காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கம். காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் தாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் அமைதிக் குழுவிற்கான வரைவை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

    • நீதிமன்றம் டிரம்பிற்கு எதிராகத் தீர்ப்பளித்தால், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சுமார் $130 பில்லியன் வரியை திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.
    • கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீதும் வரிகள் விதிக்கப்பட்டன.

    அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர் டொனால்ட் டிரம்பின் இறக்குமதி வரி தொடர்பான வழக்கின் தீர்ப்பை மீண்டும் ஒத்திவைத்துள்ளது. நேற்று நீதிமன்றம் மூன்று வெவ்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்த போதிலும், டிரம்பின் வரி விதிப்பு தொடர்பான முக்கிய வழக்கில் முடிவெடுக்கவில்லை.

    மேலும் உச்ச நீதிமன்றம் தற்போது நான்கு வார கால விடுமுறைக்கு செல்வதால், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அல்லது தீர்ப்பு பிப்ரவரி 20 வரை வெளிவர வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற விசாரணையின்போது 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தை பயன்படுத்தி நாடு தழுவிய அளவில் வரிகளை விதிப்பது அதிபரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    ஒருவேளை நீதிமன்றத்தின் தீர்ப்பு டிரம்பிற்கு எதிராக அமைந்தால், அவர் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பிறகு அவர் சந்திக்கும் மிகப்பெரிய சட்டப்பூர்வ தோல்வியாக இது இருக்கும் என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நீதிமன்றம் டிரம்பிற்கு எதிராகத் தீர்ப்பளித்தால், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சுமார் $130 பில்லியன் (சுமார் ₹10 லட்சம் கோடிக்கும் மேல்) வரியை இறக்குமதியாளர்களுக்கு அமெரிக்க அரசு திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்தும் திட்டங்களை எதிர்த்தால் ஐரோப்பிய நாடுகள் மீது மேலும் வரிகளை விதிக்கும் அவரது தற்போதைய அச்சுறுத்தலுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன் உள்ள இந்த வழக்கு, ஏப்ரல் 2-ம் தேதி டிரம்ப் அறிவித்த 'விடுதலை நாள்' (Liberation Day) வரிகள் தொடர்பானது. இது பெரும்பாலான இறக்குமதிகள் மீது 10 முதல் 50 சதவீதம் வரை வரி விதித்தது. கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீதும் இந்த வரிகள் விதிக்கப்பட்டன.  

    • போராட்டங்கள் தொடங்கிய டிசம்பர் 28 முதல் இதுவரை 10,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • 1,847 போராட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அடக்குமுறைக்கு எதிராக நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டங்களில் பலியானோரின் எண்ணிக்கை 2,000-ஐத் தாண்டியுள்ளது என அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

    ஈரானியப் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சுமார் 1,847 போராட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அரசு தரப்பில் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 135 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்காத 9 குழந்தைகள் மற்றும் 9 பொதுமக்கள் வன்முறையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். போராட்டங்கள் தொடங்கிய டிசம்பர் 28 முதல் இதுவரை 10,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    போராட்டம் குறித்த தகவல்கள் பரவுவதைத் தடுக்க ஈரான் அரசு கடந்த பல நாட்களாக இணையச் சேவையை முழுமையாகத் துண்டித்துள்ளது. போராட்டங்களில் ஈடுபடுவோர் 'கடவுளின் எதிரிகள்' எனக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படலாம் என ஈரானிய அட்டர்னி ஜெனரல் எச்சரித்துள்ளார்.

    இதனிடையே அதிபர் டொனால்ட் டிரம்ப், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, ஈரானிய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளை ரத்து செய்துள்ளார். மேலும், ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்றும், போராட்டக்காரர்களைப் பாதுகாக்க ராணுவத் தலையீடு இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர், 

    ஈரானிய தேசபக்தர்களே, தொடர்ந்து போராடுங்கள் - உங்கள் நிறுவனங்களைக் கைப்பற்றுங்கள்! கொலைகாரர்கள் மற்றும் சித்திரவதை செய்பவர்களின் பெயர்களைச் சேமித்து வையுங்கள். அவர்கள் மிகப்பெரிய விலையைக் கொடுப்பார்கள்.

    போராட்டக்காரர்களின் கொலைகள் நிறுத்தப்படும் வரை, ஈரானிய அதிகாரிகளுடனான அனைத்து சந்திப்புகளையும் நான் ரத்து செய்துள்ளேன். உதவி வந்துகொண்டிருக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • 56 இன்ச் மார்பு இருந்தால், துணிச்சலாகச் செயல்பட்டு, பயங்கரவாதிகளை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும்
    • டிரம்பால் முடிந்தால் உங்களாலும் (மோடி) முடியும்

    டிரம்பால் மற்றொரு நாட்டின் அதிபரையே பிடித்து வர முடியும்போது, பிரதமர் மோடியால் ஏன் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் 26/11 மும்பை தாக்குதல் குற்றவாளிகளை கொண்டுவர முடியாது என ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். 

    மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, 

    "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் படைகள் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்து, அவரது நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றதாக கேள்விப்பட்டோம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைதுசெய்ய முடிந்தால், நீங்களும் (பிரதமர் மோடி) பாகிஸ்தானுக்கு சென்று 26/11 பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை இந்தியாவிற்கு கொண்டு வர முடியும்.

    மோடி அவர்களே, நாங்கள் உங்களிடம் கேட்கிறோம், மசூத் அசார் ஆகட்டும் அல்லது லஷ்கர்-இ-தைபாவைச் சேர்ந்த கொடூரமான ஒரு அரக்கனாக இருக்கட்டும், 26/11 பயங்கரவாதத் தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்டவர்களை இந்தியாவுக்குக் கொண்டு வர ஏன் இந்திய ராணுவத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பக்கூடாது? டிரம்பால் முடிந்தால் உங்களாலும் முடியும். டிரம்புக்கு ஒன்றும் சளைத்தவர் அல்ல நீங்கள். அப்கி பார் டிரம்ப் சர்க்கார் " எனப் பேசியுள்ளார்.

     

    • மீண்டும் அதிபராக விரும்பி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் டிரம்ப்
    • மன்னிப்பதுதான் நாட்டு நலனுக்கு உகந்த முடிவு என்றார் நிக்கி ஹாலே

    அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வருடம் நடைபெற உள்ளது.

    ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ள நிலையில், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை எதிர்த்து தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.

    ஆனால், டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்காவின் புளோரிடா, நியூயார்க் மற்றும் ஜியார்ஜியா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

    2020ல் அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியான போது அவற்றை மாற்ற முயற்சித்தது, ரகசிய ஆவணங்களை தவறாக பயன்படுத்தியது, ஆபாச பட நடிகை ஒருவருக்கு சட்டவிரோதமாக பணம் வழங்கியது உள்ளிட்ட பல தீவிரமான குற்றச்சாட்டுகள் டிரம்ப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

    குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களில் டிரம்பிற்கு அடுத்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி மற்றும் ஐ.நா.விற்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் ஆதரவு தேடி பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், நியூ ஹாம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தில், ஒரு பேட்டியில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு குறித்து பேசிய நிக்கி ஹாலே, "நான் அதிபரானால் டொனால்ட் டிரம்பிற்கு மன்னிப்பு வழங்கி விடுவேன். அதுதான் நாட்டு நலனுக்கு உகந்த செயல். 80 வயது மனிதரை சிறையில் வைத்து அதன் மூலம் நாட்டை பிளவடைய விட மாட்டேன். அவரை மன்னிப்பதன் மூலம் அவரை குறித்த பேச்சுக்களையே தொடராமல் செய்து விடுவேன்" என கருத்து தெரிவித்தார்.

    நிக்கியின் இந்த கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

    சில தினங்களுக்கு முன் இதே கருத்தை மற்றொரு போட்டியாளரான விவேக் ராமசாமியும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×