என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சு.வெங்கடேசன்"
- பாராளுமன்ற வளாகத்தில் வாசலின் முன் இருந்த காந்தி சிலை பின்னால் உள்ள பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
- எம்.பி சு.வெங்கடேசன் மீண்டும் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி இன்று [அக்டோபர் 2] கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காந்தியின் திரு உருவச் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறனர். ஆனால் பாராளுமன்ற வளாகத்தில் வாசலின் முன் இருந்த காந்தி சிலை உட்பட வெவ்வேறு இடங்களுக்கு இருந்த தலைவரின் சிலைகள் கட்டடத்தின் பின்னே உள்ள பூங்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
பாஜக அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. அந்த வகையில் தற்போது காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதை ஒட்டி மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மீண்டும் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நாடாளுமன்றத்தின் முன்புற வாசலின் முன்னே இருந்த உனது திருவுருவச் சிலை இப்பொழுது பின்புற வாசலுக்கும் பின்னே வைக்கப்பட்டுள்ளது. பாசிஸ்டுகள் அவைக்குள் வருகிற பொழுது உன் முகத்தில் முழிக்கக்கூடாதென நினைக்கிறார்கள். நீ அல்லவோ எம் தேசத்தின் தந்தை. வாழ்க நீ எம்மான்.
என்றென்றும் வணங்குகிறோம் உன்னை.
என்று தெரிவித்துள்ளார்
- 'மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம்' என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.
- எது "நன்நெறி" என்பதைத் தமிழ்நாடு அரசின் கல்வித்துறை செயலில் காட்ட வேண்டிய நேரமிது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை, அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார். இந்த பேச்சால் கோபமான அந்த பள்ளியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் மகாவிஷ்ணுவின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தார். அதற்கு மகாவிஷ்ணு அந்த ஆசியரிடம் மோசமாக நடந்து கொண்ட வீடியோவும் வெளியாகி கண்டனங்களைக் குவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பாஜக ஆளும் மாநிலம் ஒன்றில் ஓராண்டுக்கு முன் நாடாளுமன்ற கல்வி நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டோம். அங்கன்வாடி ஊழியர்கள் கிராமத்தில் உள்ள கோயில்களைத் தூய்மைப்படுத்தும் பணியும், அங்கு குழந்தைகளுக்குப் போதிப்பதைப் பற்றியும் நாங்கள் கேள்வி எழுப்பினோம். அப்போது அந்த மாநிலத் தலைமைக் கல்வி அதிகாரி "கோயிலில் பாவ புண்ணியத்தைப் பற்றிப் போதிக்காமல் ஒருவனுக்கு வாழ்வியலை எப்படி போதிக்க முடியும்?" என்று கேட்டார்.
இன்று அதே கேள்வியைத் தமிழ்நாட்டு அரசுப் பள்ளியில் சிறப்பு விருந்தினராக வந்து ஒருவர் கேட்கிறார். மறுப்பு தெரிவிக்கும் ஆசிரியரைப் பார்த்து, "உங்கள் பெயரென்ன?" என்று கேட்கிறார். அந்த ஆசிரியரின் பெயர் ஜான்சன் ஆகவோ, ஜாஹீர் உசேனாகவோ இருந்திருந்தால் இன்று முதல் பள்ளிக் கல்வி பற்றிய பிரச்சனை ஆர். என். இரவியிடமிருந்து ஹெச்.ராஜாவுக்கு மாற்றப்பட்டிருக்கும். அவர்கள் தெரிந்தே செய்கிறார்கள். எது "நன்நெறி" என்பதைத் தமிழ்நாடு அரசின் கல்வித்துறை செயலில் காட்ட வேண்டிய நேரமிது என்று தெரிவித்துள்ளார்.
- மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர். என். ரவி கூறியுள்ளார்.
- ஆளுநரின் இந்த பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது,மாநில பாடத்திட்டங்கள் தரம் மோசமாக உள்ளது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் இந்த பேச்சுக்கு அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர். என். இரவி கூறியுள்ளார்.புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை.தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு.… pic.twitter.com/MffGBNnjj4
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 2, 2024
அவரது பதிவில், "மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர். என். இரவி கூறியுள்ளார்.
புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை.
தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு" என்று பதிவிட்டுள்ளார்.
அண்மையில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட உயர்கல்வி நிலையங்களின் தரவரிசை பட்டியலில், முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டிலிருந்து 22 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- ஈரோடு பழனிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- காட்பாடி - விழுப்புரத்துக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரெயில் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
தேர்தலுக்கு முன்பு போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு கோடிக்கணக்கில் ஒதுக்கப்பட்ட நிதி, 2024-25 முழுமையான பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் இரயில்வே பிங்க் புத்தகம் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கேடசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுபெற்ற பின் இன்றைய தினம் ரயில்வே திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான பிங்க் புத்தகம் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு அப்பட்டமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ. 976 கோடி ஒதுக்குவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், இன்று வெளியிடப்பட்டுள்ள பிங்க் புத்தகத்தில் அத்தொகை ரூ. 301 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இரட்டைப்பாதை திட்டங்களுக்கு ரூ 2,214 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ரூ.1,928 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய வழித்தடங்களான திண்டிவனம் - செஞ்சி- திருவண்ணாமலை வழித்தடத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்திப்பட்டு- புத்துருக்கு ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம்- நகரிக்கு ரூ. 350 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது 153 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பழனிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை- மகாபலிபுரம்- கடலூர் கடற்கரை பாதைக்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்போது வெறும் ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி- இருங்காட்டுக்கோட்டை -ஆவடி லைனுக்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மொரப்பூர் - தர்மபுரிக்கு ரூ.115 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ரூ.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல இரட்டை பாதை திட்டங்களில் காட்பாடி - விழுப்புரத்துக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சேலம் -கரூர்- திண்டுக்கல் இரட்டை பாதைக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு -கரூர் இரட்டை பாதைக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட்டில் வந்த பிங்க் புத்தகத்தில் ரூ. 350 கோடி, ரூ. 150 கோடி என்று ஒதுக்கியது வெறும் தேர்தலுக்காக தான். உண்மையான பிங்க் புத்தகம் வந்த பிறகு தான் அது வெட்ட வெளிச்சமாகும் என்று நான் நாடாளுமன்றத்திலேயே கூறினேன். இப்போது உண்மை வெளிவந்து விட்டது.
பொது பட்ஜெட் முடிந்ததும் வெளியிடப்பட வேண்டிய இரயில்வே பிங்க் புத்தகத்தை வெளியிடாமலே மோடி அரசு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்தது. இடைக்கால பட்ஜெட்டில் தேர்தலுக்காக இவர்கள் செய்த போலி அறிவிப்புகள் நாடாளுமன்ற விவாதத்தின் வழியே நாட்டுமக்களுக்கு தெரிந்துவிடும். இவர்களின் போலி அரசியல் அம்பலமாகிவிடும் என்பதால் இவர்கள் பிங்க் புத்தகத்தையே வெளியிடாமல் விவாதத்தை நடத்தி முடித்தனர்.
பொது பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் அப்பட்டமான துரோகத்தை செய்த மோடி அரசு இரயில்வே திட்டங்களிலும் அதே துரோகத்தை அரங்கேற்றியுள்ளது.
இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நிதியும் பறிக்கப்பட்டது. பிங்க் புத்தகம் வெளியிடாமல் அது சார்ந்த உண்மையும் மறைக்கப்பட்டது. அதன் மீது நாடாளுமன்றத்தில் நடைபெற வேண்டிய விவாதமும் பறிக்கப்பட்டது. மோடி அரசு தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகத்தின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது.
இது சம்பந்தமாக நான் குற்றச்சாட்டை முன்வைத்த போது எனக்கு எதிராக பேசிய பாஜக தலைவர்கள் வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்கள் இப்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்?
பொது பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ உள்ளிட்ட தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இப்பொழுது ரயில்வேயின் புதிய வழித்தடங்கள் அனைத்துக்கும் இழைக்கப்பட்டுள்ளது. இந்த அநீதிக்கு எதிரான எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இரயில்வே பிங்க் புத்தகம் வெளியானது.தமிழ்நாட்டு திட்டங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதியும் பறிக்கப்பட்டது.தெற்கு இரயில்வேக்கு அப்பட்டமான அநீதி.சு. வெங்கடேசன் எம் பி.நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுபெற்ற பின் இன்றைய தினம் ரயில்வே திட்டங்கள் குறித்த… pic.twitter.com/uamTMDlpMd
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 14, 2024
- மத்திய அரசின் பட்ஜெட்டை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டி பதிவிட்டுள்ளார்.
- ஜூலை 31 பணி ஓய்வு பெறுபவர் எங்கேயோ துண்டைப் போட்டு வைக்கிறார் போல.
2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் பட்ஜெட்டை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டி பதிவிட்டுள்ளார்.
ராஜ்பவனின் பதிவில், "வறியநிலை மக்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் நிதிநிலை அறிக்கையை வழங்கிய பிரதமர் மோடி அவர்களுக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த முன்னோக்கு நிதிநிலை அறிக்கை, வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை அளிப்பதுடன், மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளை கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதற்காகவும் இந்த பட்ஜெட்டை குறிப்பாகப் பாராட்டுகிறோம்.
2047-ம் ஆண்டுக்குள் சமமான, அனைவரையும் உள்ளடக்கிய, வலிமையான மற்றும் நிலையான தன்னிறைவு பாரதத்தை வளர்த்து, 2030-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறுவதற்கு இந்த நிதிநிலை அறிக்கை வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது" என்று பதிவிடப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகையின் இந்த பதிவை மதுரை எம்பி சு. வெங்கடேசன் விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரின் எக்ஸ் பதிவில், "அண்ணாமலையை முந்த போட்டி போடும் ஆர். என்.ரவி. தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாத பட்ஜெட்டை "முன்னோக்கு நிதிநிலை அறிக்கை" என்கிறார் தமிழ்நாட்டின் ஆளுநர். ஜூலை 31 பணி ஓய்வு பெறுபவர் எங்கேயோ துண்டைப் போட்டு வைக்கிறார் போல" என்று பதிவிட்டுள்ளார்.
- எம்.பி. சு வெங்கடேசன், கேரள எம்.பி A.A. ரஹீம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநிலத் தலைவர் எஸ். கார்த்தி மற்றும் சில கம்யூனிச தலைவர்கள் கலந்து கொண்டனர்
- கௌரவக் கொலைகள் என்று கூறப்பட்டு வந்த சாதிய கொலைகளை, ஆணவக் கொலைகள் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டோம்.
மதுரையில் நேற்று ஜூலை 14, 2024 ஆம் தேதி மாலை 4 மணியளவில் காந்தி அருங்காட்சியகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு(DYFI) மாநில குழு சார்பாக நடத்தப்பட்ட 'காதலைப் போற்றுவோம்'என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மதுரை எம்.பி. சு வெங்கடேசன் உள்ளிட்ட பல கம்யூனிச தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தென்னிந்தியாவின் பிரபல யூடியூபர் மதன் கௌரி ஆணவக் கொலை உள்ளிட்ட பல காரசாரமான விஷயங்களை உணர்ச்சி பொங்க பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நிகழ்ச்சியில் பேசிய மதன் கௌரி, ஓட்டுப் போட்டாலும் போடாமல் விட்டாலும், நியாய தர்மத்தின் பக்கம் நிற்பவர்கள் கம்யினிஸ்டுகள் என்று புகழாரம் கூறினார். மேலும் மதுரையின் ஒரு சிறப்பம்சமாக காசு கொடுக்காமல் தேர்தலில் நின்ற எம்பியை பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறோம் என்று கூறினார். நாம் தெய்வமாக வணங்கும் மீனாட்சி அம்மன் கூட இமயமலை சென்று அங்கு ஒருவரை சாதி மறுப்பு திருமணம் செய்ததாகவும், மீனாட்சி அம்மன் அப்போதே சாதியை எதிர்த்து உள்ளார் என்பதையே காட்டுவதவாத தெரிவித்தார்.
கௌரவக் கொலைகள் என்று கூறப்பட்டு வந்த சாதிய கொலைகளை, ஆணவக் கொலைகள் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டோம். ஆனால் இன்னும் ஆங்கிலத்தில் 'ஹானர் கில்லிங்' என்றே கூறப்பட்டு வருகிறது, அதில் பெருமை எதுவும் இல்லை. என்னுடைய சேனலில் ஆணவக் கொலைகளை நான் குறிப்பிடும் போது இனி 'அடாசிட்டி கில்லிங்' என்றே கூறுவேன், அது ஆணவக் கொலைகள் தான், கௌரவக் கொலைகள் கிடையாது என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
- பாராளுமன்ற விவாதத்துக்கும், தெருக்களில் நடக்கும் விவாதத்துக்கும் வித்தியாசத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
- 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லாத பிரதமரை பார்த்து பேசப் பழகுங்கள் அவைத்தலைவரே.
புதிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களிலும் அனல் பறந்தன.
இந்தநிலையில் சபாநாயகர் ஓம்பிர்லா தனது சொந்த தொகுதியான ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு சென்றார்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓம்பிர்லா, "பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்தது ஜனநாயகம் செழிப்பாக இருப்பதை காட்டுகிறது. இது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. பாராளுமன்ற விவாதம் தெருச்சண்டை போல் இருக்கக்கூடாது. பாராளுமன்ற விவாதத்துக்கும், தெருக்களில் நடக்கும் விவாதத்துக்கும் வித்தியாசத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்று பேசியுள்ளார்.
ஓம்பிர்லாவின் இந்த கருத்து தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "எதிர்க்கட்சிகள் முழு பலத்துடன் நாடாளுமன்றத்தை பயன்படுத்த துவங்கியதும், விவாதம் தெருச்சண்டை போல் இருக்க கூடாது என்கிறார் ஓம் பிர்லா. 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லாத பிரதமரை பார்த்து பேசப் பழகுங்கள் அவைத்தலைவரே" என்று தெரிவித்துள்ளார்.
- செங்கோல் என்பது ஒன்று மன்னராட்சியின் குறியீடு. இரண்டாவது நேர்மையின் குறியீடு.
- நேர்மைக்கும் பா.ஜ.க.வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான மதுரை எம்பி சு.வெங்கடேசன் உரையாற்றினார். அப்போது செங்கோல் குறித்து, தமிழக மன்னர்கள் குறித்தும் அவர் அவதூறாக பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
மேலும் மதுரை மேயரின் கையில் கொடுத்த என்ன? என போட்டோவைக் காட்டி கேள்வி அவர் எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு சு.வெங்கடேசன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,
"அண்ணாமலை அவர்கள் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எனது உரைகுறித்து நீங்கள் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள்.
"செங்கோல் என்பது ஒன்று மன்னராட்சியின் குறியீடு. இரண்டாவது நேர்மையின் குறியீடு. நேர்மைக்கும் பா.ஜ.க.வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? தமிழ்நாடு தேர்தல் முடியும் வரை தமிழர்களைப் பாராட்டிப் பேசிவிட்டு, தேர்தல் முடிந்தவுடன் உ. பி.யிலும் ஒடிசாவிலும் தமிழர்களை அவமானப்படுத்தியவர்கள்தானே நீங்கள்" என்று பேசினேன்.
ஆனால் நீங்களோ "செங்கோல் அறத்தின், நேர்மையின் குறியீடு" என்று நான் சொன்னதை வசதியாக மறைத்துவிட்டு மன்னராட்சியின் குறியீடு என்பதையும் மன்னர்கள் தங்களது அந்தப்புரத்தில் பெண்களை அடிமையாக வைத்திருந்தனர் என்பதையும் மட்டும் விமர்சித்திருக்கிறீர்கள்.
செங்கோல், அறத்தின், நேர்மையின் குறியீடு என்பதைப்பற்றிப் பேசாமல் தவிர்த்ததன் மூலம் பா.ஜ.க.வின் நேர்மையின்மையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்.
அதிகாரத்தில் இருப்பவர்களை அறவழிப்படுத்துவதும் நீதியின்பால் ஆட்சிசெய்ய வைப்பதும்தான் காலங்காலமாக இருந்துவரும் பெரும்பிரச்சனை. அதனால்தான் அறத்தின் குறியீடாக செங்கோலைத் தமிழ் இலக்கியங்கள் பேசின. "வம்ப வேந்தர்களாகவும், பிறர் மண் உண்ணும் செம்மல்களாகவும்" மன்னர்கள் தான்தோன்றித்தனமாக ஆட்சி நடத்தியபோது அவர்களை கொடுங்கோல் ஆட்சி நடத்தாதீர்கள் என இலக்கியங்கள் இடித்துரைத்தன. நீதி மற்றும் அறத்தின் குறியீடாக "செங்கோல்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
மன்னராட்சிக் காலம் முடிந்துவிட்டது. ஜனநாயக காலத்திற்கு வந்துவிட்டோம். நமக்கான நீதியின் அடையாளமாகவும் அடிப்படையாகவும் நமக்கு நாமே உருவாக்கிக்கொண்டதுதான் இந்திய அரசியல் சாசனம்.
நாடாளுமன்ற வாசலில் இருந்த தேசத்தந்தை காந்தியின் சிலையையும் அண்ணல் அம்பேத்கரின் சிலையையும் அகற்றிவிட்டு, எங்கோ ஓர் அருங்காட்சியகத்திலிருந்த செங்கோலை எடுத்துவந்து அவையின் மையத்தில் நிறுவுகிறீர்கள்.
நாடாளுமன்றத்தில் நாற்பதடி உயரத்திற்கு சாணக்கியனின் உருவத்தைப் பொறிப்பதும் நாடாளுமன்றத்தின் ஆறு வாசலுக்கும் சமஸ்கிருதத்தில் பெயர்சூட்டுவதும் தற்செயலல்ல. உங்களது இந்துத்துத்துவா மதவெறித்தத்துவம் உங்களை வழிநடத்துகிறது. அதற்குத் தடையாக இருக்கும் அரசியல் சாசனத்தை நீங்கள் அகற்ற நினைக்கிறீர்கள்.
இந்திய மக்கள் அனைவருக்குமான சட்டங்கள் இயற்றப்படும் மாமன்றத்தில் நமது அரசியல் சாசனமும் அது சார்ந்த அடையாளங்களுமே கோலோச்ச வேண்டும். அங்கே மன்னராட்சிக்கால அடையாளத்தைக் கொண்டுவந்து நிறுவுவது நமது ஜனநாயக அமைப்பின் மீதான திட்டமிட்ட கருத்தியல் தாக்குதல் ஆகும்.
எனவேதான் நாங்கள் அரசியல் சாசனத்தைக் கைகளில் ஏந்தி 18ஆவது நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தோம். அதனை உயர்த்திப்பிடித்துப் பதவி யேற்றுக்கொண்டோம். "நீங்கள் அழிக்க நினைப்பதை காப்பாற்றத்தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்" என்று நாடாளுமன்றத்தில் முழங்கினோம்.
அண்ணாமலை அவர்களே,மதுரை மாநகராட்சி மேயர் பொறுப்பேற்ற பொழுது அவரிடம் கொடுக்கப்பட்டது குடியாட்சியின் குறியீடான இந்திய அரசுச்சின்னம் பொறிக்கப்பட்ட செங்கோல்; நாடாளுமன்றத்தில் உள்ளதைப்போன்று மத அடையாளங்கொண்ட செங்கோல் அல்ல.
நீங்கள் நாளையே மதுரை மாநகராட்சியின் கூட்ட அரங்கிற்கு செல்லுங்கள். அங்கு அச்செங்கோல் இருக்காது. அது கருவூல அறையில் வைக்கப்பட்டிருக்கும். செங்கோலைக் குறியீடாக பயன்படுத்துவதற்கும் அதனை அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக நிலைநிறுத்துவதற்கும் வேறுபாடு உண்டு.
பெரியோரை வணங்குதல் என்பது வேறு. மக்களவையில் எல்லோரையும்விடப் பெரியவர் அவைத்தலைவர்தான் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது வேறு. பண்பாட்டின் பெயரைச்சொல்லி சட்ட விதிகளை நிராகரிக்கும் உரிமையை ஒவ்வொருவரும் கையிலெடுத்தால் இந்த நாட்டின் நிலை என்னவாகும்?
எல்லாவற்றையும்விட உயர்ந்தது அரசியல் சாசனமும், அது உருவாக்கியுள்ள ஜனநாயக விதிகளும்தான் என்பதை ஏற்றுக்கொளாதவர்கள் சாணக்கியனின் மூலமும், செங்கோலின் மூலமும் தாக்குதலை நடத்துகிறார்கள்.
அந்தத் தாக்குதலை எதிர்கொள்ளும் வல்லமையும் முதிர்ச்சியும் இந்திய ஜனநாயக்த்திற்கு உண்டு. அதன் வெளிப்பாட்டில் ஒன்றுதான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு.
ஆனால் இந்த 18 ஆவது நாடாளுமன்றத்திற்கு வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய பிரச்சனை வந்து நிற்கிறது. தெய்வப்பிறவி என்று தன்னை கருதிக்கொள்ளும் ஒருவர், மன்னராட்சிக்கால அடையாளத்தை கொண்டுவந்து வைத்துக்கொண்டு ஜனநாயக நாட்டின் பிரதமராக வீற்றிருக்கிறார்.
ஒரே நேரத்தில் தன்னைத் தெய்வப்பிறவியாக நம்பி, மன்னராகவும் உணர்கிற ஒரு பிரதமரிடம் இந்த நாடு போராடிக்கொண்டிருக்கிறது. எங்கள் போராட்டத்தின் உண்மையையும் நேர்மையையும் மக்கள் அறிவார்கள்.
நீங்கள் எனது எழுத்தின் வாசகர் என்று கூறியுள்ளீர்கள். மகிழ்ச்சி. எனது இரண்டு நாவல்களிலும் காலம்தான் கதாநாயகன்.
"அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்துகொண்டு நான்தான் எல்லாமுமாக இருக்கிறேன் என உலகுக்கு அறிவித்துக்கொண்டவர்களை எல்லாம் காலநதி ஒரு கூழாங்கல்லைப் போல உருட்டி எங்கோ கொண்டு சென்றுள்ளது".
வரலாற்றுச் சக்கரம் எப்போதும் முன்னோக்கியே நகரும். காலத்தை பின்னுக்கிழுக்க நினைப்பவர்களின் அகந்தை நிலைக்காது. இது சாணக்கிய நீதி காலம் அல்ல. சமூகநீதியின் காலம், சமத்துவத்தின் காலம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது
- இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் களம் காண்கிறது
பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் களம் காண்கிறது.
இந்நிலையில், இந்தியா கூட்டணிக்கே எனது ஆதரவு என 'அயலான்' பட இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மற்றும் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களான சச்சிதானந்தம், சு.வெங்கடேசன் ஆகியோரின் படங்களைப் பதிவிட்டு இந்தியா கூட்டணிக்கே எனது ஆதரவு என்று அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இன்று நாளை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்த ரவிக்குமார் அண்மையில் அயலான் திரைப்படத்தை இயக்கினார். அவர் இயக்கிய 2 திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ளதால் வெற்றிப்பட இயக்குநர் என அவர் பெயர் எடுத்துள்ளார்.
- மருத்துவர் சரவணன் அவர்கள் வாக்கு சேகரிப்பதற்கு உருவாக்கும் யுக்திகள் அவரையே கேலி பொருளாக மாற்றி விடுகின்றன
- மக்களிடம் வாக்குகள் கேட்பதற்கு அவரிடமோ, அவர் சார்ந்த கட்சியிடமோ சொந்தத் திட்டங்கள் எதுவும் இல்லாதால் அவதூறுகளை நம்பி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்
மதுரை எம்.பி நிதி ₹17 கோடி ஒதுக்கீடு இருந்தும் ₹5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என சரவணன் கூறியதற்கு, ₹17 கோடியில் ₹16.96 கோடி செலவு செய்து 245 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்
அதிமுக வேட்பாளர் சரவணன் அவதூறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதில்,
"மதுரைத் தொகுதியில் அதிமுக கேட்பாளாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் சரவணன் அவர்கள் வாக்கு சேகரிப்பதற்கு உருவாக்கும் யுக்திகள் அவரையே கேலி பொருளாக மாற்றி விடுகின்றன. மக்களிடம் வாக்குகள் கேட்பதற்கு அவரிடமோ, அவர் சார்ந்த கட்சியிடமோ சொந்தத் திட்டங்கள் எதுவும் இல்லாதால் அவதூறுகளை நம்பி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.
உண்மையில் தேர்தல் பிரச்சாரம் என்பது கருத்தியலும் களச் செயல்பாடும் முன்வைக்கப்படும் மேடைகள், அந்த மேடைகள் ஆரோக்கியமான விவாதமாக மாற்றுவதே பண்பட்ட அரசியல். தற்போது சரவணன் அவர்கள் ஒரு ஆங்கில் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் வெங்கடேசன எம்.பி நிதிக்கான 17 கோடி ஒதுக்கீட்டில் 5 கோடி மட்டுமே செலவிட்டுள்ளார். மீதம் 12 கோடியை பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
அவர் பைனாகுலர் மூடியைத்தான் திறக்காமல் வீட்டுவிட்டதாய் செய்திகள் வெளிவந்தன. உண்மையில் அவர் தனது சொந்தக் கண்களைக் கூட திறக்க மறந்து விட்டாரா? என்ற கேள்வி எழுகிறது.
நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்ட காலத்திலும் கூட களச் செயல்பாட்டினாலும், விரைவான தலையீடுகளினாலும் கோவிட் காலத்தில் மதுரை மக்களை காக்க செய்த பணிகளை அருகிருந்து பார்த்தவர் தான், அன்றைய திருப்பரங்குன்றத்தின் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் சரவணன் அவர்கள்,
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மோபாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 17 கோடி 10 கோடியே 98 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அநேகமாக 100 சதவீதம். ஓட்டுமொத்தமாக 245 பணிகளைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்துள்ளோம். எண்ணிக்கையில் அடிப்படையில் இவ்வளவு அதிகமான பணிகளை செய்திருப்பதே ஒரு சாதனை தான்.
ஆனால் மரியாதைக்குரிய மருத்துவர் சரவணன் அவர்கள் 5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக சொல்வது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல். அரசு ராசாசி மருத்தவமனை பெருந்தொற்று நோய் சிகிச்சை, அனைத்து அரசு நூலகங்களிலும் மாணவர் போட்டித் தேர்வுக்காக நூல்கள், மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தின் சுற்றுப்புற உயர்மின் கோபுர விளக்குகள், இளைஞர்களுக்கான கபாடி மைதானங்கள் என இந்தியாவிற்கு முன்னுதாரணம் சொல்லும் பல பணிகளை செய்துள்ளோம்.
உண்மை இப்படி இருக்க 5 கோடி மட்டுமே செல்வழித்துள்ளோம். மீதப்பணந்தை செலவழிக்க வில்லை எனக்கூறுவது அவதூறுகளை தாண்டி வேறு எதுவும் ல்லை. அவதூறுகளுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல; ஆனால தாங்கள் உதிர்க்கும் சொற்களுக்கு நீங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி இருக்குமென்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
- இந்த சீர்மரபினர் வகுப்பினர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்க்கப்பட்டு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
- இந்த உத்தரவுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ் அவர்களும் நன்றி தெரிவித்திருந்தார்
சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில் குற்றப்பரம்பரை சட்டத்தினால் (Criminal Tribes Act) பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்பு என வகைப்படுத்தப்பட்டனர். இவ்வாறு 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சீர்மரபினர் வகுப்பினர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்க்கப்பட்டு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities / Denotified Tribes என இரண்டு சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சரின் இந்த உத்தரவுக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "சீர்மரபினருக்கு DNC & DNTஎன இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக , தமிழகத்தில் DNT என்ற பிரிவின் கீழ் 68 சமூகங்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை CPIM சட்டமன்ற உறுப்பினர் தோழர் சின்னதுரை அவர்கள் சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசினார்.
இந்நிலையில், 68 சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார் .
இதற்கு முன்னதாக, இந்த உத்தரவுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ் அவர்களும் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதிக்கு சென்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பார்வையிட்டார்.
- மருத்துவமனைக்கான பணிகள் ஒரு சதவீதம் கூட நிறைவடையவில்லை என குற்றச்சாட்டு
மதுரை:
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் கூற்றுப்படி, 95 சதவீத பணிகள் நிறைவுபெற்ற மதுரை எய்ம்ஸ் கட்டிடம் எங்கே? என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துமவனையின் கட்டுமானத்திற்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன என்றார். இது தமிழக அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.
நட்டாவின் பேச்சைத் தொடர்ந்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நேற்றே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுடன் சென்று, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிறைவடைந்த பணிகளை பார்க்கப் போவதாகவும், அதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட உள்ளதாகவும் கூறியிருந்தார்.
அதன்படி, மதுரை எம்பி சு.வெங்கடேசனுடன் இன்று எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூர் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அங்கு மருத்துவமனைக்கான எந்த கட்டுமான பணியும் நடக்கவில்லை. சுற்றிலும் சுவர்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தது. காலியாக உள்ள அந்த இடத்தில் இருவரும் நடந்து செல்லும் புகைப்படங்களை மாணிக்கம் தாகூர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
We went to the Thoppur AIIMS Madurai site … we found nothing . #MaduraiAIIMS pic.twitter.com/9CBxHEs6Mt
— Manickam Tagore .B🇮🇳✋மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) September 23, 2022
அதில், 'அன்பிற்குரிய நட்டா அவர்களுக்கு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 95 சதவீத பணிகளை முடித்தமைக்கு நன்றி. நானும் மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் தோப்பூர் வளாகத்தில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள்' என கூறி நட்டாவை டேக் செய்துள்ளார். அத்துடன் 95 சதவீதம் வேலை முடிந்த எய்ம்ஸ் எங்கே? என்ற கேள்வியுடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
'பாஜக ஆட்சி புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிதத்தை தேடி நானும் மாணிக்கம் தாகூர் எம்.பி.யும் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிபோட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்' என சு.வெங்கடேசன் ட்வீட் செய்துள்ளார்.
உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை. ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை. அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இங்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் ஒரு சதவீதம் கூட நிறைவடையவில்லை. நிதி ஒதுக்கீட்டிலும் குளறுபடிகள் உள்ளன என எம்.பி.க்கள் இருவரும் குற்றம்சாட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்