search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Department of Archaeology"

    • பெரும்பாலான புதைகுழிகள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்தன.
    • இதே போன்ற புதை குழிகள் கிருஷ்ணகிரி மற்றும் கோவை பகுதிகளிலும் ஏற்கனவே காணப்பட்டன.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இங்கு பல நூற்றாண்டுகளாக பூர்வீக குடிமக்கள் வசித்து வருகின்றனர்.

    ஜவ்வாது மலையில் உள்ள மேல் செப்பிலி மற்றும் கீழ் செப்பிலி கிராமங்களுக்கு அருகில் சில புதைகுழிகள் இருப்பதாக தொல்பொருள் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று ஜவ்வாது மலை சென்று ஆய்வு செய்தனர்.

    மேல்செப்பிலி மற்றும் கீழ் செப்பிலி கிராமங்களுக்கு அருகே 100-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால புதை குழிகள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

    7.5 மீட்டர் அகலம் 1.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த கற்கால புதை குழிகளை இறந்தவர்கள் உடல்களை புதைக்க பயன்படுத்தி உள்ளனர். மேலும் இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய கற்கால கருவிகளையும் சேர்த்து அதில் வைத்து அடக்கம் செய்துள்ளனர்.

    ஒவ்வொரு புதை குழியிலும் அந்த காலத்தில் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் இருந்தன. பெரும்பாலான புதைகுழிகள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்தன.

    இதே போன்ற புதை குழிகள் கிருஷ்ணகிரி மற்றும் கோவை பகுதிகளிலும் ஏற்கனவே காணப்பட்டன.

    இதன் மூலம் இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பூர்வீக குடிமக்கள் இருந்திருக்க வேண்டும் என தொல்பொருள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த புதைகுழிகள் மூலம் ஜவ்வாது மலையில் அகழாய்வு நடத்த முடிவு செய்துள்ளோம் என அவர்கள் கூறினர். 

    • தஞ்சை அரண்மனை வளாகம் மராட்டி தர்பார் மண்டபத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
    • பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவன மாணவர்களுக்கு களப்பயிற்சி நடந்து வருகிறது.

    இந்த பயிற்சியை தமிழ்நாடு தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் பார்வையிட்டார். பின்னர் தஞ்சை அரண்மனை வளாகம் மராட்டி தர்பார் மண்டபத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-மதுரை திருமலை நாயக்கர் மகால், தரங்கம்பாடி கோட்டை, கவர்னர் மாளிகை என தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் ரூ. 25 கோடி மதிப்பில் புராதன கட்டிடங்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தஞ்சை அரண்மனை வளாக மராட்டா தர்பார் மண்டபம், சர்ஜா மாடி ஆகிய இடங்களில் பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை மேம்பாலம் அருகே சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பஞ்சபாண்டவர் மண்டபத்தின் மேல்பகுதியில் வலுவிழந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது.
    • மண்டபத்தின் மேற்பகுதியில் ஏற்பட்டு உள்ள விரிசலின் அளவு, கல்லின் தன்மை, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களான ஐந்துரதம், கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பகுதி, அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட இடங்களை பார்க்க தினந்தோறும் வெளிநாட்டினர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

    இதையடுத்து புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளில் சுற்றுலாபயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் புராதன சின்னங்களை மின்விளக்கு ஒளியில் ரசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அர்ச்சுணன் தபசு பகுதியை பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகள் அதன் அருகே உள்ள பஞ்சபாண்டவர் மண்டபத்தையும் ரசிப்பது வழக்கம். இந்நிலையில் பஞ்சபாண்டவர் மண்டபத்தின் மேல்பகுதியில் வலுவிழந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே தொல்லியல்துறையினர் மண்டபத்தின் மேற்பகுதியில் அவ்வப்போது ரசாயன சிமெண்ட் கலவை வைத்து பராமரித்து வந்தனர். தற்போது விரிசல் அதிகமாகி மண்டபத்தின் உள்ளே மழைநீர் ஒழுகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மழை பெய்யும் போது பஞ்சபாண்டவர் மண்டபத்தில் ஒதுங்கி நிற்கும் சுற்றுலா பயணிகள் விரிசல் வழியாக வரும் மழை நீரில் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். சிலர் இணையதளம் வழியாக டெல்லியில் உள்ள தொல்லியல் துறையின் தலைமை அலுவலகத்திற்கும் புகார் அனுப்பினர்.

    இதையடுத்து சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள மத்திய தொல்லியல்துறை தொல்பொருள் ஆய்வாளர்கள், பழங்கால கட்டிட கட்டமைப்பு பாதுகாப்பு என்ஜினீயர்கள் பஞ்சபாண்டவர் மண்டபத்தில் திடீர் ஆய்வு செய்தனர். மண்டபத்தின் மேற்பகுதியில் ஏற்பட்டு உள்ள விரிசலின் அளவு, கல்லின் தன்மை, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து விரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • ஒரு சில தங்க நாணயங்களின் விளிம்பில் டெல்லி நாணயத்தின் சித்தரிப்பு உள்ளது.
    • ஆந்திர மாநில தொல்லியல் துறை தங்க நாணயங்களை இன்னும் கைப்பற்றவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், சித்தேபள்ளி கிராமத்தில் அங்காளம்மா கோவில் உள்ளது.

    இந்த கோவில் அருகே உள்ள மலையில் பாறாங்கல் ஒன்றின் அடியில் நேற்று தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது. இதில் 450-க்கும் மேற்பட்ட தங்கக் காசுகள் இருந்தன.

    இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) இயக்குனர் கே முனிரத்தினம் ரெட்டி கூறுகையில்:-

    புதையலில் இருந்த தங்க காசுகள் 15 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளில் இருந்த தங்க நாணயங்கள், விஜயநகர மன்னர் I மற்றும் II ஹரிஹரர் மற்றும் டெல்லி சுல்தான்களுக்கு சொந்தமானது.

    ஒரு சில தங்க நாணயங்களின் விளிம்பில் டெல்லி நாணயத்தின் சித்தரிப்பு உள்ளது. இப்பகுதியில் உள்ள பழமையான கோவிலுக்கு அருகிலேயே இந்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது.

    இடைக்காலங்களில், முறையான வங்கி முறை இல்லாததால், மக்கள் தங்கள் பணத்தை கோவில்களில் டெபாசிட் செய்தனர்.

    ஆந்திர மாநில தொல்லியல் துறை தங்க நாணயங்களை இன்னும் கைப்பற்றவில்லை.

    இந்த நாணயங்களை அருங்காட்சியகங்களில் வைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    • கோட்டையானது 16-ம் நூற்றாண்டில் சேந்தமங்கலம் பாளையக்காரரான ராமசந்திரன் நாயக்கரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
    • கோட்டை மதில் சுவர் இடிந்து விழும் முன் சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை உள்ளது. ஒரே கல்லால் ஆன இந்த மலையின் உச்சியில் 246 அடி உயரத்தில் கோட்டை மதில்சுவர் உள்ளது.

    இக்கோட்டையானது 16-ம் நூற்றாண்டில் சேந்தமங்கலம் பாளையக்காரரான ராமசந்திரன் நாயக்கரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

    ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடுவதற்காக திப்புசுல்தான் இம்மலைக் கோட்டையை பயன்படுத்தினார் என்ற வரலாற்று தகவல்களும் உண்டு.

    இத்தகைய சிறப்பு மிக்க மலைக்கோட்டையின் மேல் வரதராஜ பொருமாள் கோவிலும், மசூதியும் உள்ளன. இவை தவிர மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள குடைவறைக் கோவில்களான நரசிம்மர், அரங்கநாதர் கோவில்களும், மலையை ஒட்டி கமலாலயக் குளம் ஆகியவையும் உள்ளன.

    நாமக்கல் நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோட்டையை சுற்றி பார்த்து செல்வர்.

    இந்நிலையில் மலைக்கோட்டையின் மதில்சுவரானது ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. மேலும் மழை பெய்யும்போது மதில் சுவரின் அடிப்பாகத்தில் இருந்து தண்ணீர் அருவி போல் வெளியேறுகிறது.

    இதனால் சுவரின் உறுதி தன்மை பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

    இதனால் கோட்டை மதில் சுவர் இடிந்து விழும் முன் சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதால் மத்திய தொல்லியல் துறையினர் நாமக்கல் மலைக் கோட்டையை நேரடியாக ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து சேலம் மண்டல மத்திய தொல்லியல் துறை அதிகாரி ஸ்ரீதர் கூறியதாவது:

    நாமக்கல் மலைக் கோட்டை மதில்சுவர் ஆங்காங்கே இடிந்தும், விரிசல் அடைந்தும் உள்ளது. இதனை சீரமைக்க விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    மேலும் காலை, இரவு நேரங்களில் மலைக்கோட்டையை ஆக்கிரமத்துக் கொள்ளும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்த நுழைவு வாயில் பகுதியில் இரும்பு வேலி அமைக்கவும், நரசிம்மர் கோவில் கொடிமர மண்டபத்தில் உள்ள விரிசலை புனரமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி தொல்லியல் துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.

    அனுமதி கிடைத்ததும் மலைக்கோட்டை சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மீனாட்சி அம்மன் கோவிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் கோரிக்கை வைத்தனர்.
    • இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை பா.ஜ.க. பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் நிர்வாகிகள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது கலெக்டர். அனீஷ்சேகரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 15 வருடங்களுக்கு முன்பு கோவில் கோபுரங்களில் விரிசல் ஏற்பட்டது. தொல்லியல் துறை பரிந்துரைப்படி கனரக வாகனங்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. கோவில் கோபுரத்தை சுற்றி இருந்த காவல் ஆணையர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன.

    கோபுரத்தை சுற்றி 9 மீட்டர் உயரத்துக்கு கூடுதலாக கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் கட்டிட உரிமையாளர்கள் பூமிக்கு அடியில் பல மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் தோண்டி கட்டிடங்களை கட்டி வருகின்றனர். இதனால் கோவில் கோபுரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    கட்டிடங்களை உயர்த்து வதால், பிரகாரத்துக்குள் மழை நீர் தேங்கி, கோவிலின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் கோவில் பொலிவை இழந்து வருகிறது. கோவிலுக்குள் வாடகை கடைகள் தற்போது அகற்றப்பட்டு உள்ளன.

    ஆனால் தமிழக அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்து அறநிலைய துறையின் கீழ் உள்ள கோவில் சொத்துகளை குத்தகைக்கு விட புதிய உத்திரவு பிறப்பித்து உள்ளார். இதன் மூலம் அரசியல் செல்வாக்கு உள்ள வேறு நபர்களுக்கு கோவில் இடத்தை பல ஆண்டுகளுக்கு குத்தகை விட முயற்சிகள் நடக்கிறது.

    கோவிலுக்குள் பலத்த பாதுகாப்பு இருந்தும் தீ விபத்து ஏற்பட்டு தூண்கள், மண்டபங்கள் இடிந்து சேதம் அடைந்தது. எனவே மீனாட்சி அம்மன் கோவிலின் பழமையை பேணி காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல்லி யல் துறை அறிவுறுத்தியது. அங்குள்ள சேதம் அடைந்த மண்டபம், தூண்கள் இதுவரை சீரமைக்கப்பட வில்லை.

    உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் பழமை, பொலிவை பேணி காக்கும் வகையில், அதனை மத்திய அரசின் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிபா.ஜ.க.வித்தார்.

    ×