என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது அநீதியானது - அமர்நாத் ராமகிருஷ்ணன்
- ஆய்வறிக்கையில் எழுத்துப்பிழையை வேண்டுமானால் திருத்துவேன், உண்மையைத் திருத்த மாட்டேன்
- ஆய்வின் அடிப்படையில் கீழடி நாகரிக காலத்தை கண்டுபிடித்தேன், அனுமானத்தின் அடிப்படையில் அல்ல.
கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.
ஆனால் மத்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என மத்திய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.
இதனையடுத்து, கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று மத்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்தார்.
இந்நிலையில், கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேட்டி அளித்த அமர்நாத் ராமகிருஷ்ணன், "கீழடி அகழாய்வு அறிக்கையைத் திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது. ஆய்வறிக்கையை சமர்ப்பித்தால் அதில் மீண்டும் திருத்தம் செய்ய கூடாது. 982 பக்க ஆய்வறிக்கையில் எழுத்துப்பிழையை வேண்டுமானால் திருத்துவேன், உண்மையைத் திருத்த மாட்டேன். எனது கண்டுபிடிப்பைத் திருத்தினால் நான் குற்றவாளியாகிவிடுவேன்.
ஆய்வின் அடிப்படையில் கீழடி நாகரிக காலத்தை கண்டுபிடித்தேன், அனுமானத்தின் அடிப்படையில் அல்ல. கீழடி பற்றி அறியாத ஒருவர் எப்படி அங்கு ஒன்றுமில்லை என கூறமுடியும்? அறிக்கையை முதலில் ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவத் படித்துப் பார்க்கட்டும். அவர்கள் எப்போதும் சிந்து சமவெளி நாகரிகம், வேத நாகரிகம், 5 மௌரிய மற்றும் ஹர்ஷவர்தன வரலாற்றைப் பற்றியே பேசுகிறார்கள், ஏன் நாட்டின் பிற பகுதிகளை பார்ப்பதில்லை..? சங்ககால வரலாற்றை பற்றி ஒன்றிய அரசு ஏன் ஆய்வு மேற்கொள்ளவில்லை?
கி.மு 8ம் நூற்றாண்டின் கீழடி நாகரிகத்தை கி.மு 3ம் நூற்றாண்டு என திருத்துமாறு மத்திய அரசு வலியுறுத்துகிறது. கீழடி நாகரிகத்தின் தொன்மையை சிதைக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபடுவதுபோல் தெரிகிறது" என்று தெரிவித்தார்.






