என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selvaperundhagai"

    • தமிழர்கள் மீதான மோடி அரசின் பாரபட்சத்தை, அலட்சியத்தை காட்டுகிறது.
    • தமிழகத்திற்கு மிக அதிக நிதி ஒதுக்கீடு செய்தும், சிலர் அழுது கொண்டே உள்ளதாக, கூசாமல் ஒரு பச்சைப் பொய்யை பேசியுள்ளார்.

    கச்சத்தீவு மீட்பு குறித்து இலங்கை அதிபரிடம் ஒரு வார்த்தைக்கூட பிரதமர் மோடி பேசவில்லை என தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இலங்கை சென்று பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மீனவர்கள் பிரச்சனை மற்றும் கச்சத்தீவு மீட்பு பற்றி ஒரு வார்த்தை கூட இலங்கை அதிபரிடம் பேசவில்லை.

    இது தமிழகத்திற்கு செய்யும் துரோகம். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிக முக்கிய தேவையான கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதை அலட்சியம் செய்துள்ள பிரதமர் மோடி, இந்த முக்கிய பிரச்சனை பற்றி இலங்கை அதிபரிடம் எதுவும் பேசாமல் திரும்பியுள்ளார்.

    இலங்கை பொருளாதாரம் கடும் பாதிப்பிற்குள்ளான பின், இந்தியாவின் நிதி உதவிகள், இதர உதவிகளை நம்பியுள்ள நிலையில், தமிழக மீனவர்களின் நலன்கள் மற்றும் கச்ச தீவு மீட்பு குறித்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அரசுக்கு பெரும் வாய்ப்புகள் உருவாகின.

    ஆனால் மோடி அரசு இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள இன்று வரை மறுத்து வருகிறது. இது தமிழர்கள் மீதான மோடி அரசின் பாரபட்சத்தை, அலட்சியத்தை காட்டுகிறது.

    தமிழகம் இருக்கும் இடத்தில் குஜராத்தும், குஜராத்திகளும் இருந்து, குஜராத் மீனவர்கள் இதே போல பாதிக்கப்பட்டிருந்தால், மோடி இப்படி நடந்து கொள்வாரா என்ற கேள்வி எழுகிறது.

    இன்று ராமேஸ்வரத்தில் நடந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மிக அதிக நிதி ஒதுக்கீடு செய்தும், சிலர் அழுது கொண்டே உள்ளதாக, கூசாமல் ஒரு பச்சைப் பொய்யை பேசியுள்ளார்.

    புயல், வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது, தமிழ்நாட்டிற்கு பள்ளிக் கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது, மாநில திட்டங்களுக்கு மத்திய நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, தமிழ்நாட்டிலிருந்து அதிகமான ஜி.எஸ்.டி வரி வருவாய் கிடைத்த போதும் நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பது ஆகியவற்றை மறைத்து விட்டு, தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார்.

    பண வீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பது இயல்பு.

    ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) அடிப்படையில் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு விகிதம், மொத்த நிதி ஒதுக்கீட்டில் தமிழத்திற்கு அளிக்கப்படும் விகிதம் போன்ற விகிதங்களை ஒப்பிட்டால் உண்மை விளங்கும்.

    புயல், வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மொத்தம் ரூபாய் ரூ.36,000 கோடி நிதி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார்.

    ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு வழங்கியதோ ரூபாய் ரூ.226 கோடி. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2028 கோடி செலவு செய்திருக்கிறது.

    ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததாலும், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தொடங்க நடவடிக்கை எடுக்காததாலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டிய ரூ.2159 கோடி கடந்த பல மாதங்களாக ஒதுக்கப்படாமல் இருக்கிறது.

    இந்த உண்மைகளை பிரமர் மோடி ஏன் பேசவில்லை ? இந்த ஏமாற்று வேலைகள், பொய்கள், துரோகங்களுக்காக பாஜகவிற்கும், மோடிக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்'.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் மனோஜ் மறைவுக்கு இரங்கல்.
    • தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் மனோஜ் பாரதிராஜா.

    இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பு ஏற்பட்டு இன்று மாலை காலமானார்.

    இவரது மறைவின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் மனோஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறுகையில், " இயக்குநர் இமயம் ஐயா திரு. பாரதிராஜா அவர்களின் மகனும், தமிழ்த் திரையுலகக் கலைஞருமான மனோஜ் பாரதி அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

    ஐயா பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    ஓம் சாந்தி!" என குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில், " இயக்குனர் இமையம் பாரதிராஜா அவர்களின் மகனும் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா அவர்கள் மரணமடைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

    திரைத்துறையில் தனது தந்தையின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் மனோஜ் பாரதிராஜா அவர்கள்.

    அன்னாரை இழந்து வாடும் அவரது தந்தை இயக்குனர் இமையம் பாரதிராஜா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" குறிப்பிட்டுள்ளார்.

    இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மறைவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

    எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறுகையில், ``இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மறைந்த செய்தி ஆழ்ந்த வருத்தமளிக்கிறது.

    இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கும், குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' .

    • விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
    • மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு ஏப்ரல் 19ம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, பாஜகவில் சேர்ந்ததை அடுத்து அவர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, விளவங்கோடு இடைத்தேர்தல், தமிழகத்தில் நடைபெறும் மக்களவை தேர்தல் அன்றே நடைபெறுகிறது.

    இந்நிலையில், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிர்வாகிகளை நியமித்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்த அறிக்கையில், " நடைபெறவுள்ள 2024 விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பொறுப்பாளர்களாக கீழ்கண்டவர்கள் கூடுதலாக நியமிக்கப்படுகிறார்கள்.

    1. டாக்டர் சாமுவேல் ஜார்ஜ்

    2. கே.ஜி. ரமேஷ் குமார்

    3. எஸ். சதீஷ்

    4. எஸ். ஷாஜி

    5. எபினேசர்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • செப்டிக் டேங்கின் தருப்பிடித்த இரும்பு மூடியின் மீடி நின்றபோது சிறுமி விழுந்து விபத்து.
    • குழந்தையின் சடல்ததை கைப்பற்றியதுடன், பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் கைது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து யுகேஜி படித்து வந்த 5 வயது சிறி உயிரிழந்துள்ளது.

    செப்டிக் டேங்கின் தருப்பிடித்த இரும்பு மூடியின் மீடி நின்றபோது இந்த விபத்து நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    குழந்தையின் சடல்ததை கைப்பற்றியதுடன், பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் கைது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், குழந்தையின் இறப்பிற்கு பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும்" என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை காட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படித்து வந்த மூன்றரை வயது சிறுமி லியா லட்சுமி கழிவுநீர் தொட்டி விழுந்து உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

    எல்.கே.ஜி படிக்கும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்வது தனியார் பள்ளியின் கடமையாகும். குழந்தையின் இறப்பிற்கு தனியார் பள்ளி முழு பொறுப்பேற்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகம் விரும்பதகாத சம்பவம் ஏற்படுத்திய பள்ளியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன். குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறப்பிட்டுள்ளார்.

    • காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கருத்துக்கு அதிமுகவினர் சட்டப்பேரவையில் எதிர்ப்பு.
    • ஞானசேகரனிடம் செல்போனில் பேசியது யார் என்று மத்திய அரசு தான் வெளியிட வேண்டும்.

    தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

    அப்போது, "தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரச்சனையை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துக் கொண்டேன் என சொல்லக்கூடியவர் அல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

    இவரது கருத்துக்கு அதிமுகவினர் சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

    பிறகு, செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

    ஞானசேகரனிடம் செல்போனில் பேசியது யார் என்று மத்திய அரசு தான் வெளியிட வேண்டும்.

    செல்போன் அழைப்புகள் தொடர்பான விவரங்கள் மத்திய அரசிடம் உள்ளது. அவர்கள் தான் விவரங்களை வெளியிட வேண்டும்.

    10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஒரு விரல் மற்றவரை காட்டினால் மற்ற விரல்கள் உங்களை காட்டும்.

    அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை வாக்கு வங்கி அரசியலாக்கி விட்டார்கள். பாலியல் வன்கொடுமை விஷயத்தை அரசியலாக்குவது அதைவிட கொடுமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீனவர்களை உடனடியாக விடுவிக்க தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
    • மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டன.

    தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண பிரதமர் மோடி உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனில் பாஜக ஆட்சிக்கு எதிராக தமிழக மீனவர்களை திரட்டி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் மன்னார் வடக்கு பகுதியில் உள்ள கடற்பரப்பில் நேற்று இரவு மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ஐந்து விசைப்படகுகளை பறிமுதல் செய்து 42 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை ராணுவ முகாமிற்கு அழைத்துச்சென்று விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி மீனவர்களை உடனடியாக விடுவிக்க தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

    கடந்த ஜனவரி 26ம் தேதி 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த பிப்ரவரி 5ம் தேதி 16 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டன.

    அதில் 3 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூபாய் 60 லட்சமும், மேலும் 16 மீனவர்களுக்கு ரூ 50,000 ஒவ்வொருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

    அபராதம் கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர் கைது இருக்காது, படகுகள் பறிமுதல் இருக்காது என்று 2014 இல் கடல் தாமரை மாநாடு நடத்தி நீலிக்கண்ணீர் வடித்த பாஜகவினர் ஆட்சியில் தான் இத்தகைய தொடர் கைதுகள் மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப்பட்டு வருகிறது.

    ஒன்றிய பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 3,544 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கை சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள 50 க்கும் மேற்பட்ட மீனவர்களையும், 6 முதல் 2 வருடம் வரையிலும் தண்டனை கைதிகளாக உள்ள 20 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் பிப்ரவரி 28 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தான் மீண்டும் 42 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்பிரச்சனையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு 140 கோடி மக்களை ஆட்சி செய்கிற பிரதமர் மோடி வெறும் 2 கோடி மக்களை ஆட்சி செய்கிற சின்னஞ்சிறிய அண்டை நாடான இலங்கை அதிபரோடு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணமுடியவில்லை என்றால் ஒன்றிய பாஜக அரசின் கையாளாக தனத்தை தான் வெளிப்படுத்துகிறது.

    கடந்த காலங்களில் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட முற்றுகை நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணம் பகுதி தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.

    அதை உணர்ந்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் அனுமதி கோரினார்.

    இலங்கை அரசு அனுமதி மறுத்த நிலையில் 32 விசை படகுகள் மூலமாக நிவாரணப் பொருட்கள் யாழ்ப்பாணம் பகுதிக்கு இந்திய அரசு அனுப்பியது.

    அதை இலங்கை அரசு தடுத்த காரணத்தால் 1987 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து 6 இந்திய விமானப்படை விமானங்கள் மூலமாக 25 டன் நிவாரணப் பொருட்கள் இலங்கை எல்லையை மீறி வான் வழியாக யாழ்ப்பாணம் பகுதியில் வாழ்கிற தமிழர்களுக்கு தலைவர் ராஜீவ் காந்தி வழங்கியதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த நடவடிக்கையை ஆபரேஷன் பூமாலை என்று அழைக்கப்பட்டது.

    தமிழக மீனவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்திய இலங்கை கூட்டுப் பணிக்குழு கடந்த நவம்பர் 5, 2016 அன்று அமைக்கப்பட்டது. பிரச்னைக்கு தீர்வு காண 6 மாதங்களுக்கு ஒருமுறை அக்குழு கூடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதன்படி கடந்த 8 ஆண்டுகளில் 16 முறை அந்த கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் 6 முறை தான் அந்த கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.

    கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 25-க்கு பிறகு கூட்டுப்பணிக்குழு கூட்டப்படவே இல்லை. இதன் மூலம் ஒன்றிய பாஜக அரசுக்கு மீனவர்கள் பிரச்னையை தீர்ப்பதில் அக்கறை இல்லை என்பதை உறுதிப்படுத்தப்படுகிறது. இக்குழு கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் என தமிழக முதலமைச்சர் கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.

    எனவே, நடப்பாண்டில் மட்டும் 50 நாட்களில் 109 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 16 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண பிரதமர் மோடி உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனில் பாஜக ஆட்சிக்கு எதிராக தமிழக மீனவர்களை திரட்டி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒவ்வொரு ரெயில்வே நிலையத்திலும் பயணிகள் ரெயிலை அடித்து உடைத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் நாடே பார்த்தது.
    • விமானம் மூலம் தமிழ்நாடு அரசு அழைத்து வந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

    மகா கும்பமேளாவிற்கு ரெயிலில் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி நிம்மதியாக சென்று வந்தனர் என்று பொய் பேசுவதற்கு மத்திய ரெயில்வே அமைச்சர் வெட்கப்பட வேண்டும் என்றார்.

    இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பதாவது:-

    ஒன்றிய ரெயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, இன்று திருச்சி விமானநிலையத்தில் பேசும் போது, 'மகா கும்பமேளாவிற்கு ரெயிலில் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி நிம்மதியாக சென்று வந்தனர்' என்று கூறியுள்ளார். இதுபோன்று பொய் பேசுவதற்கு அமைச்சர் வெட்கப்படவேண்டும்.

    கும்பமேளாவிற்கு ரெயில் சென்று வந்தவர்கள் சொல்லொண்ணா சிரமத்தை அனுபவித்தார்கள். ஒவ்வொரு ரெயில்வே நிலையத்திலும் பயணிகள் ரெயிலை அடித்து உடைத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் நாடே பார்த்தது.

    தமிழ்நாடு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பிரக்யாராஜுக்கு சென்று ரெயிலில் மீண்டு வரமுடியாத நிலையில் அவர்களை விமானம் மூலம் தமிழ்நாடு அரசு அழைத்து வந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

    தொலைதூரப் பயணத்திற்கு சாமானியர்களின் வரப்பிரசாதமாக உள்ள பொதுப்பெட்டிகளை குறைத்து, மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது ரெயில்வே அமைச்சகம்.

    நிலை இவ்வாறு இருக்கையில் பயணிகள் சிரமம் இன்றி கும்பமேளாவிற்கு சென்று வந்தார்கள் என்று கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இருக்கிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை கவர்னர் ஆர்.என். ரவி விளக்குவாரா ?
    • பா.ஜ.க.வின் இரட்டை வேடம் மட்டுமல்ல, பிரதமர் மோடியின் இரட்டை வேடமும் அம்பலமாகியுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமேஸ்வரம் சென்ற கவர்னர் ஆர்.என். ரவி, மீனவர்களை சந்தித்து நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

    இதே ராமநாதபுரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்திய போது, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், மீனவர்கள் கைதும், படகுகள் பறிமுதலும் இருக்காது என்று அன்றைய எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் 2014 தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்தார்.

    அதை நிறைவேற்றுவதற்கு கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை கவர்னர் ஆர்.என். ரவி விளக்குவாரா ?

    சமீபத்தில் இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்க தலைநகர் புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போது இலங்கை அரசுக்கு 4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியதையும், இலங்கை அரசின் கடனை சீரமைக்க இந்தியா மேலும் ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதி கூறினார்.

    இலங்கைக்கு நிதியுதவி செய்கிற பிரதமர் மோடி, கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தாரா? ஏன் வைக்கவில்லை?

    2024 தேர்தல் பிரச்சாரத்தில் கச்சத்தீவை பற்றி பிரதமர் மோடி பேசியதற்கு பிறகு இதுவரை அதனை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்? இதன்மூலம் பா.ஜ.க.வின் இரட்டை வேடம் மட்டுமல்ல, பிரதமர் மோடியின் இரட்டை வேடமும் அம்பலமாகியுள்ளது.

    எனவே, தமிழக மீனவர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்று தமிழக கவர்னருக்கோ, மத்திய பா.ஜ.க. அரசுக்கோ அக்கறை இருக்குமேயானால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    அதுகுறித்து நடவடிக்கை எடுக்க கையாலாகவில்லை எனில் கச்சத்தீவை பற்றி கவர்னர் ஆர்.என். ரவியும், பா.ஜ.க.வினரும் பொதுவெளியில் பிதற்றாமல் இருப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மிகச் சிறந்த பத்திரிகையாளரான நக்கீரன் கோபாலுக்கு பொருத்தமாக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.
    • நெறியாளர்களுக்கு அன்றாட அரசியல் புரிதலும், அரசியல் பின்னணியும் இருந்தால் தான் விவாதங்களை சுவைபட நடத்த முடியும்

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசின் கலைஞர் எழுதுகோல் விருது பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களுக்கும், தொலைக்காட்சி நெறியாளர் சுகிதா சாரங்கராஜ் அவர்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி பெருமைப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கதாகும். விருது பெற்ற அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.

    பத்திரிகை துறையில் புலனாய்வு செய்து செய்திகளை சேகரித்து துணிச்சலுடன் வெளியிடுவதில் சாதனைகளை புரிந்தவர் நக்கீரன் கோபால்.

    பெயருக்கு ஏற்றாற்போல் யார் குற்றம் செய்தாலும் அதை கண்டிக்கின்ற வகையில் செய்திகளை வெளியிடுவதில் தனித்தன்மையுடன் செயல்படுபவர்.

    கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் அவர்களை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்ற போது, அவரை மீட்பதற்காக அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர், நக்கீரன் கோபால் அவர்களை காட்டிற்குள் அனுப்பித் தான் மீட்டார் என்பதை எவரும் மறக்க இயலாது.

    அன்றைக்கு மிகுந்த துணிச்சலோடு காட்டிற்குள் சென்று வீரப்பனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, நடிகர் ராஜ்குமாரை மீட்டததனால் தமிழக - கர்நாடக மக்களிடையே நிலவிய பதற்றத்தை தவிர்த்து நல்லிணக்கம் ஏற்பட தனது உயிரை பணயம் வைத்து செயல்பட்டவர் நக்கீரன் கோபால்.

    மிகச் சிறந்த பத்திரிகையாளரான அவருக்கு பொருத்தமாக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.

    அதேபோல, தொலைக்காட்சி ஊடக நெறியாளராக செயல்பட்டு, விவாதங்களில் கருத்து மோதல்களை அனைவரையும் கவருகிற வகையில் நடத்துவதன் மூலம் பலரது பாராட்டுகளையும் பெற்றவர்.

    நெறியாளர்களுக்கு அன்றாட அரசியல் புரிதலும், அரசியல் பின்னணியும் இருந்தால் தான் விவாதங்களை சுவைபட நடத்த முடியும். அந்த வகையில் சுகிதா சாரங்கராஜ் அவர்கள் நமது பாராட்டுக்குரியவராவார்.

    நக்கீரன் கோபால் அவர்களுக்கும், சுகிதா சாரங்கராஜ் அவர்களுக்கும் கலைஞர் எழுதுகோல் விருது மூலம் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கியிருக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ், குடிமக்கள் தங்கள் அந்தரங்க ரகசியங்களை பாதுகாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.
    • தன்னாட்சி பெற்ற அமைப்புகளை தன்னுடைய ஏவல்துறையாக மாற்றியுள்ளது பா.ஜ.க.அரசு.

    புதிய வருமான வரிச் சட்டம் 2025-க்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புதிய வருமான வரிச் சட்டம் 2025 வரும் ஏப்ரல் மாதம் அமலுக்கு வருகிறது. இந்தச் சட்டத்தின் மூலம் வரி செலுத்துவோரின் வர்த்தக கணக்குகள், ஆன்லைன் வங்கி கணக்குகள், இணைய முதலீட்டு கணக்குகள் உள்ளிட்ட அனைத்திலும் வருமான வரி அதிகாரிகள் உள்ளே நுழைந்து சோதனையிடும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

    வங்கி, முதலீட்டு கணக்குகள், கம்ப்யூட்டர்களில் உள்ள விவரங்கள் அனைத்தையும் பாஸ்வேர்டு எதுவும் தேவைப்படாமல் உடைத்து உள்ளே சென்று சோதனையிடும் அதிகாரம் புதிய வருமான வரிச் சட்டம் பிரிவு 247-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

    மக்களின் சமூக வலைதள கணக்குகள், இமெயில்களில் அவர்களின் பல அந்தரங்கமான விஷயங்கள், வருமான வரி அதிகாரிகளுக்கு தேவையில்லாத பல தகவல்கள் இருக்கும்.

    மேலும், சிலர் தொழில் ரகசியம், தொழில் யுக்திகள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் கம்ப்யூட்டர்கள், இமெயில்கள் வைத்திருப்பார்கள். அவை அனைத்திலும், வருமானவரி அதிகாரிகள், அவர்களது அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்து தகவல்களை சேகரிக்கும் வாய்ப்புள்ளது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ், குடிமக்கள் தங்கள் அந்தரங்க ரகசியங்களை பாதுகாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 19(1) (ஏ)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்துக்குள் தலையிடும் அதிகாரமாகவும் இது பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே, தன்னாட்சி பெற்ற அமைப்புகளை தன்னுடைய ஏவல்துறையாக மாற்றியுள்ளது பா.ஜ.க.அரசு. அரசியலில் தனக்கு வேண்டாதவர்களை பழிவாங்குவதற்கு ஆளும் ஒன்றிய அரசு இதுபோன்று அதிகாரத்தை அளித்துள்ளதோ என சந்தேகமாகவுள்ளது.

    தேவைக்கு அதிகமான அதிகாரமாகவே கருதப்படுவதால் இந்த மாற்றங்களை ஒன்றிய அரசு விலக்கிக் கொண்டு, புதிய வருமான வரிச் சட்டம் 2025 சட்டத்தை அமல்படுத்தவேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வாக்களிக்து தேர்ந்தெடுத்த ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களை குறித்து தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.
    • இவர்கள்தான் ஜனநாயகம் குறித்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து பேசுகின்றனர்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.

    தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்.

    பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யு-டர்ன் போட்டது. கடந்தாண்டு மார்ச் 15இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டு சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையில் அரசு பின்வாங்கியது. சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர். யார் அந்த சூப்பர் முதலமைச்சர் என கனிமொழி பதிலளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து, தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி. கனிமொழியிடம் தெரிவித்தார்.

    இந்நிலையில், தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இன்று நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடளுமன்ற உறுபினர்களை அநாகரீகமாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. வாக்களிக்து தேர்ந்தெடுத்த ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களை குறித்து தான் இவ்வகையில் பேசியுள்ளார்.

    நாடாளுமன்ற மாண்பை பற்றி சிறிதும் தெரியாதவர்கள் பாஜகவினர், சிறுபான்மையின நாடாளுமன்ற உறுப்பினரை அவர் சார்ந்த மதம் குறித்து பாஜக உறுப்பினர் அவதூறாக பேசும்போது, பாஜகவின் மூத்த அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அதை ரசித்து, சிரித்து கொண்டிருந்தார்கள், இவர்கள்தான் ஜனநாயகம் குறித்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து பேசுகின்றனர்.

    பாஜகவினர் கொண்டுவரும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களை, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்பதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வாய்க்கு வந்தததை பேசுகின்றனர். இவற்றையெல்லாம் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள், உரிய நேரத்தில் தகுந்த பதிலடியை கொடுப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×