என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: காங்கிரசார் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்- செல்வப்பெருந்தகை
- தமிழ்நாடு அரசு ஊழியர்களாக இருந்தாலும் அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பட்டவர்கள் தான்.
- பா.ஜ.க. பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்களாக இருந்தாலும் அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பட்டவர்கள் தான்.
எனவே, சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக மற்ற மாநிலங்களில் எத்தகைய வாக்குத் திருட்டை கையாண்டு பா.ஜ.க. குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்ததோ, அதே அணுகுமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்ற தேர்தல் ஆணையத்தோடு கூட்டணி வைத்து பா.ஜ.க. பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க.வோடு இணைந்து காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுத்திருந்தாலும் சிறப்பு தீவிர திருத்த முயற்சிகளை கண்டித்து நாளை தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் நடத்த இருக்கிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.
சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நானும், சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியினரும் பங்கேற்க இருக்கிறோம்.
மத்திய பா.ஜ.க. அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து நடத்தி வருகிற வாக்குத் திருட்டையும், சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் நடத்த முனைகிற வாக்காளர் மோசடி குறித்து தமிழ்நாட்டு மக்களிடையே எதிர்ப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த நாளை நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






