என் மலர்
நீங்கள் தேடியது "Mamallapuram"
- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- இன்று கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு:
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க தொல்லியல்துறை இன்று அனுமதி அளித்துள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பல்வேறு புராதன சின்னங்கள் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர். இந்த புராதன சின்னங்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒரு வாரத்திற்கு மேலாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதித்துள்ளது
- புயலில் பாதிப்படைந்த மீனவர் பகுதி பொதுமக்களை சந்தித்து விபரங்களை கேட்டரிந்தார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் "மாண்டஸ்" புயல் பாதித்த பகுதிகளை முன்னாள் அமைச்சரும், முன்னாள் தமிழக சட்டப்பேரவை தலைவருமான ஜெயக்குமார் புயலில் பாதிப்படைந்த மாமல்லபுரம் மற்றும் தேவனேரி மீனவர் பகுதி பொதுமக்களை சந்தித்து விபரங்களை கேட்டரிந்தார்.
அவர்கள் மீன்வளத்துறை அறிவிப்பால் ஒரு வாரத்திற்கு மேலாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதித்துள்ளது என கூறினார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி உணவு வழங்கினார்.
பின்னர் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், முன்னாள் எம்.எல்.ஏ தனபால், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் உள்ளிட்ட அ.தி.மு.க கட்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
+2
- சாலையோரம் முறிந்து விழுந்த பேனர்களை கட்சியினரும், தனியார் நிறுவனங்களும் இன்னும் அகற்றவில்லை.
- பேனர்கள் வைக்க நீதிமன்றம் கட்டுப்பாடு இருந்தும் அரசு அனுமதி பெறாமல் பேனர்களை வைக்கிறார்கள்.
மாமல்லபுரம்:
சென்னை-மாமல்லபுரம் இடையே கரைகடந்த "மாண்டஸ்" புயலால் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுகுன்றம் உள்ளிட்ட பகுதியில், அரசு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த கல்லூரி, ரியல் எஸ்டேட், கட்சிகளின் விளம்பர பேனர்கள் என 100 க்கும் மேற்பட்டவை சூறாவளி காற்றில் முறிந்து விழுந்தது.
சாலையோரம் முறிந்து விழுந்த பேனர்களை கட்சியினரும், தனியார் நிறுவனங்களும் இன்னும் அகற்றவில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, முதல் கட்டமாக போக்குவரத்து இடையூறு இல்லாமல் சாலையோரம் சரிந்த மின் கம்பங்கள், சுவர் உள்ளிட்டவைகளை அகற்றி வருகிறோம்.
பேனர்கள் வைக்க நீதிமன்றம் கட்டுப்பாடு இருந்தும் அரசு அனுமதி பெறாமல் அவர்கள் பெரியவகை பேனர்களை வைக்கிறார்கள். இதுபோன்ற பேரிடர் நேரங்களில் அது சரிந்து விழுந்தால் அதன் இரும்பு பைப்புகளால் விபத்து, உயிர் சேதம் ஏற்படும். இதை அப்பகுதி ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் தான் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
- சென்னையில் இரண்டு நாட்கள் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கலந்தாய்வு நடக்கிறது
- 12 பேர் கொண்ட மத்திய குழுவினர் மாமல்லபுரம் வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
மாமல்லபுரம்:
ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் 200 நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதில் ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் சென்னையில் நட்சத்திர ஹோட்டல் மற்றும் ஐ.ஐ.டி வளாகத்தில் இரண்டு நாட்கள் வெவ்வேறு துறைசார் கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வுக்கு பிறகு தலைவர்கள் சுற்றுலாவாக சென்னை அடுத்த மாமல்லபுரத்திற்கு வருகின்றனர். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் பகுதிகளான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன்தபசு போன்ற பகுதிகளை பார்வையிடவும், அதன்முன் நின்று புகைப்படம் எடுக்கவும் உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சக தலைவர் சைதன்ய பிரசாத் மற்றும் மத்திய கல்வித்துறை இணை செயலாளர் நீதா பிரசாத் தலைமையில் 12 பேர் கொண்ட மத்திய குழுவினர் மாமல்லபுரம் வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆய்வில், தலைவர்களை பாதுகாப்புடன் அழைத்து வருவது, உணவருந்தும் இடம், எவ்வாறு வரவேற்பது, எங்கே நின்று புகைப்படம் எடுக்கவைப்பது போன்ற விஷயங்களை திட்டமிட்டனர்.
இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை எஸ்.பி பிரதீப், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அதிகாரி சக்திவேல், தாசில்தார் பிரபாகரன், தொல்லியல்துறை அலுவலர் இஸ்மாயில் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- மாமல்லபுரம் கூடுதலாக சர்வதேச கவனம் பெற்று உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவிற்கு குவியும் நகரமாக மாறி உள்ளது.
- பிரதமர் மோடி-சீன அதிபரின் வருகை மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பின்னர் மாமல்லபுரத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்து உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் என்றதுமே அங்குள்ள கற்சிற்பங்கள் தான் நினைவுக்கு வரும். இங்குள்ள புராதன சின்னங்களை பார்க்க தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இடமாக மாமல்லபுரம் மாறி உள்ளது.
சிறப்புமிக்கு சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரம், தற்போது சென்னை அடுத்த துணை நகரமாக மாற உள்ளது. இதற்கான அறிவிப்பை கவர்னர் ஆர். என்.ரவி சட்டசபையில் அறிவித்தார். இதையடுத்து அரசின் அனைத்து துறையின் கவனமும் தற்போது மாமல்லபுரம் பக்கம் திரும்பி உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் என்றாலே சவுக்கு காடுகளும், முறையான அடிப்படை வசதிகளும் இல்லாததே நினைவுக்கு வரும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவு இருட்டுவதற்கு முன்பே திரும்பி விடுவார்கள். இந்தநிலை தற்போது படிப்படியாக குறைந்து, இ.சி.ஆர், ஓ.எம்.ஆர் சாலைகள் மேம்படுத்தப்பட்டது. போக்குவரத்து வசதி, நகரில் ஒளி விளக்குகள் அதிகரிக்கப்பட்டது.
மேலும் தொல்லியல்துறை சார்பில் புராதன சின்னங்களை சுற்றி புல்வெளி அமைத்து பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.
கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங், முறைசாரா மாநாடாக மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். தலைவர்கள் இருவரும் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இருந்த பகுதியில அமர்ந்து ரசித்தனர். அங்குள்ள அனைத்து சின்னங்களையும் பார்வையிட்டு அதன் சிறப்புகளை பிரதமர் மோடி, சீன அதிபரிடம் விளக்கி கூறினார்.
இதன் பின்னர் மாமல்லபுரத்தின் மதிப்பு உலக அரங்கிலும் பல மடங்கு அதிகரித்தது. அதன் தொன்மை மற்றும் புராதன சின்னங்களின் வரலாறு குறித்த தேடுதல்கள் அதிகரித்தன.
பிரமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகைக்கு பின்னர் மாமல்லபுரம் நகரின் அழகு மேலும் அதிகரிக்கத்தொடங்கியது. பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள், புராதன சின்னங்களுக்கு இரவில் லேசர் ஒளி, கருங்கல் நடைபாதை, டிஜிட்டல் பலகைகள், நவீன தெரு விளக்குகள் என மேம்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு "சர்வதேச செஸ் ஒலிம்பியாட்" போட்டி இந்தியாவில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதனை தமிழகத்தில் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து அனுமதி பெற்றார். இந்த போட்டியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த மாமல்லபுரத்தில் நடத்தியது கூடுதல் சிறப்பு ஆகும். இதன் பின்னர் மாமல்லபுரத்தின் பெயர் மற்றும் அங்குள்ள கற்சிற்பங்களின் மதிப்பு உலக அளவில் மேலும் உயர்ந்தது. இதனால் தற்போது மாமல்லபுரம் கூடுதலாக சர்வதேச கவனம் பெற்று உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவிற்கு குவியும் நகரமாக மாறி உள்ளது.
கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகையின் கணக்கெடுப்பில் உலக அதிசயமான டெல்லியில் உள்ள தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளிவிட்டு மாமல்லபுரம் முதல் இடத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மாமல்லபுரம் துணை நகரமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதன் அழகிய முகம் மேலும் வளர்ச்சி அடைந்து மாறி வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கைவசம் உள்ள ஆளவந்தாரின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் துணை நகரம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் கூடுதலாக அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சென்னை நகரருக்கு இணையாக மாமல்லபுரம் மாறும் என்று உள்ளூர் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதுகுறித்து மால்லபுரம் பகுதி மக்கள் கூறும்போது, மாமல்லபுரம் துணை நகரமாவதால் மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் உள்ளிட்ட நவீன வசதிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். மாமல்லபுரம் சுற்றுலா தலமாக இருந்தாலும் இதற்கு முன்பு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பிரதமர் மோடி-சீனஅதிபரின் வருகை மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பின்னர் மாமல்லபுரத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்து உள்ளது. இந்திய அளவிலும், உலக அளவிலும் மாமல்லபுரம் உச்சத்தில் உள்ளது. மாறி வரும் மாமல்லபுரத்தை நினைத்தால் இங்கு வசிப்பது பெருமையாக இருக்கிறது என்றனர்.
- கடற்கரை கோவில் மற்றும் ஐந்துரதம், அா்ச்சுனன் தபசு உள்ளிட்ட அனைத்து புராதன சிற்பங்களை ரசித்து பார்த்த அவர் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.
- ஜப்பான் நாட்டு தூதர் வரும் நேரத்தில் சுற்றுலா பயணிகள் யாரும் தடுத்து நிறுத்தப்படவில்லை.
மாமல்லபுரம்:
இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டு தூதர் சுசோகி ஹிரோசி மாமல்லபுரத்துக்கு நேற்று சுற்றுலா வந்தார். முன்னதாக கடற்கரை கோவிலுக்கு வந்த அவரை மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரி இஸ்மாயில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கடற்கரை கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சிற்பங்களையும் பார்த்த பிறகு அவருடன் டெல்லியில் இருந்து வந்த ஜப்பான் நாட்டு தூதரக அதிகாரி ஒருவர் அவருக்கு மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றிய அரிய தகவல்களை ஜப்பான் நாட்டு மொழியில் விளக்கி கூறினார்.
பிறகு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் கண்டுரசித்தார்.
கடற்கரை கோவில் மற்றும் ஐந்துரதம், அா்ச்சுனன் தபசு உள்ளிட்ட அனைத்து புராதன சிற்பங்களை ரசித்து பார்த்த அவர் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். ஜப்பான் தூதரின் பெண் உதவியாளர் தங்கள் நாட்டு தூதரை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து தங்கள் நாட்டு சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து அவரை மகிழ்ச்சி படுத்தினார்.
நேற்று காணும் பொங்கல் விசேஷ தினம் என்பதால் தனக்காக இங்கு சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாப்புக்காக யாரும், தடுத்து நிறுத்த வேண்டாம் என்றும், அவர்கள் வழக்கம் போல் சுற்றி பார்க்கட்டும் என்றும், நானும் அவர்களுடனேயே சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன் என்று தன்னுடன் வந்திருந்த அதிகாரிகளிடம் பெருந்தன்மையுடன் அவர் தெரிவித்தார்.
அதனால் ஜப்பான் நாட்டு தூதர் வரும் நேரத்தில் சுற்றுலா பயணிகள் யாரும் தடுத்து நிறுத்தப்படவில்லை. அவர்கள் வழக்கம்போல் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்த்துவிட்டு சென்றதை காண முடிந்தது.
- பார்கோடை ஸ்கேன் செய்தால் சுற்றுலா இடங்களின் வரலாறு, செல்லும் தூரம், உள்ளிட்ட விபரங்கள் டிஜிட்டல் ஆடியோவில் வரும்.
- புதிய பார்கோடு முயற்சிக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் முக்கிய சுற்றுலா இடத்தில் மாமல்லபுரம் இடம் பிடித்து வருகிறது.
இந்நிலையில் மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தாங்கள் விரும்பிய இடத்திற்கு செல்லும் முன் அப்பகுதி விபரங்களை ஆடியோ வழியாக அறிந்து கொள்வதற்கு வசதியாக புதிதாக பார்கோடு ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது. தொல்லியல்துறை மற்றும் சுற்றுலாத் துறையின் ஏற்பாட்டில் 'ஸ்டோரி டிரையல்ஸ் ஆடியோ டூர்' என்ற பெயரில் டிஜிட்டல் முறையில் புதிய பார்கோடு ஒன்றை உருவாக்கி ஐந்துரதம், கடற்கரை கோயில் பகுதியில் முதற்கட்டமாக அறிமுகம் செய்து ஒட்டி வைத்து உள்ளனர்.
சுற்றுலா பயணிகள் இந்த பார்கோடை தங்களது செல்போனில் ஸ்கேன் செய்தால் அருகில் உள்ள முக்கிய புராதன சின்னங்கள், சுற்றுலா தலங்கள், கோயில்கள், போன்ற இடங்களின் வரலாறு, செல்லும் தூரம், உள்ளிட்ட விபரங்கள் டிஜிட்டல் ஆடியோவில் வரும்.
இதனால் சுற்றுலா பயணிகள் வழிகாட்டிகள் உதவியின்றி புராதன சின்னங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். மேலும் சுற்றுலா தலம் குறித்து முழுவதும் அறிந்து கொண்டு வேகமாக தங்களது பயணத்தை முடிக்க முடியும்.
இந்த புதிய பார்கோடு முயற்சிக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். புராதன சின்னங்கள் குறித்து முழுமையாக சரியான தகவலை பெற முடிகிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு அனைத்து சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவித்தது.
- மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர்.
மாமல்லபுரம்:
உலகின் பாரம்பரிய நினைவு சின்னங்களை பாதுகாத்து அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, யுனெஸ்கோ அமைப்பினர் ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ந் தேதியை உலக பாரம்பரிய தினமான கடைபிடித்து வருகிறார்கள். மத்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று உலக பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி தமிழ்நாட்டில் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கோட்டை மியூசியம், மாமல்லபுரம் புராதன சின்னங்கள், செஞ்சிகோட்டை, தஞ்சாவூர், தாராசுரம் கோயில், வேலூர் கோட்டை, கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளை, இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு அனைத்து சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவித்தது.
அதன்படி இன்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டை பாறை, புலிக்குகை, மற்றும் குடவரை கோயில் பகுதிகளை இலவசமாக பார்த்து ரசித்து சென்றனர். இதனால் வழக்கத்தை விட இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
- 2019ல் பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரம் வந்த போது மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் தொல்லியல் துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, பகுதிகளை இரவிவிலும் பார்த்து ரசிப்பதற்காக, கடந்த 2019ல் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரம் வந்த போது மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டது. இரவு 9 மணிவரை சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்க்க அனுமதியும் வழங்கப்பட்டது. பின்னர் ஓரிரு வாரத்தில் பராமரிப்பு இல்லாமல், பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டது.
இந்த இரவு ஒளிக்காட்சி குறித்து அறிந்து உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் மாலை நேரத்தில் வந்தனர். ஆனால் அவர்கள் ஒளிக்காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அதன்பின்னர், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட், ஜி-20 சர்வதேச கூட்டங்கள், காத்தாடி திருவிழா, அலைச்சறுக்கு என சர்வதேச நிகழ்ச்சிகள் நடைபெற்றதால், நிகழ்ச்சிக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் புராதன சின்னங்களை இரவிலும் பார்வையிட மீன்டும் அலங்கார ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டன. இதை சுற்றுலா பயணிகளும் கண்டு ரசிக்கும் வகையில் இரவு 9 மணி வரை, ஒளிவிளக்குகளை எரியவிட்டு, உள்ளே அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தொல்லியல் துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து வரும் 15ஆம் தேதியில் இருந்து இரவு 9 மணி வரை அலங்கார மின்னொளியுடன், புராதன சின்னங்கள் திறந்திருக்கும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி மற்றும் வெளி மாநிலம் என 14 இடங்களுக்கு 9 மணிவரை அனுமதி வழங்கியுள்ளது.
- வரும் நாட்களில் மற்ற இடங்களும் மின்னொளியில் ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- இரவு 9மணிவரை ஏராளமான சுற்றுலா பயணிகள் மின்னொளியில் கடற்கரை கோவிலை பார்த்து ரசித்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
புராதன சின்னங்களை மின்னொளியில் இரவிலும் பார்வையிட ஏற்பாடு செய்யவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று முதல்(15-ந்தேதி) புராதன சின்னங்களை இரவில் மின்னொளியில் ரசிக்கலாம் என்று மத்திய தொல்லியல் துறையினர் அறிவித்து இருந்தனர். இரவு 9மணி வரை அலங்கார மின்னொளியுடன், புராதன சின்னங்கள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை பகுதிகளை மின்னொளியில் ரசிக்கலாம் என எதிர் பார்த்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்தனர். ஆனால் கடற்கரை கோவிலை மட்டும் மின்னொளியில் சுற்றுலா பயணிகள் ரசிக்க அனுமதி வழங்கப்பட்டது. மற்ற இடங்களில் மின்னொளி ஏற்பாடுகள் செய்யப்பட வில்லை. பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஆட்கள் பற்றாக்குறை காரணமாக மத்திய தொல்லியல்துறை கடற்கரை கோவிலை மட்டும் முதல் கட்டமாக மின்னொளியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளித்து உள்ளதாக தெரிகிறது.
வரும் நாட்களில் மற்ற இடங்களும் மின்னொளியில் ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். புராதன சின்னங்களில் இரவு மின்னொளி காட்சியை அறிந்து விடுதிகளில் தங்கியிருந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மாலையில் கடற்கரை கோவில் வளாகத்தில் திரண்டு இருந்தனர். உள்நாட்டவர்களுக்கு ரூ.40, வெளிநாட்டவர்களுக்கு- ரூ.600-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இரவு 9மணிவரை ஏராளமான சுற்றுலா பயணிகள் மின்னொளியில் கடற்கரை கோவிலை பார்த்து ரசித்தனர். செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, கடற்கரைகோவில் போல் ஐந்துரதம், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை பகுதிகளும் மின்னொளியில் காட்சியளித்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்றனர்.
- 7 டி.எக்ஸ் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் விரைவில் கட்டப்பட உள்ளது.
- நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாமல்லபுரம்:
கோவளம் அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் படுகு குழாம் உள்ளது. இங்கு ரூ.50லட்சம் செலவில் புதிய சுகாதார மையம், குழந்தைகள் விளையாட்டு மையம், கழிவுநீர் சுத்திகரிப்பு, காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சுற்று லாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாமல்லபுரத்தில் உள்ள புரான சின்னமான அர்ச்சுனன் தபசு அருகில் ரூ.5 கோடி மதிப்பில், 7 டி.எக்ஸ் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் விரைவில் கட்டப்பட உள்ளது.
இதில் மாமல்லபுரம் புராதன சின்னங்களின் வரலாறு குறித்து "3டி லேசர்" ஒளி, ஒலி காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சென்னை, புதுச்சேரி செல்லும் பயணிகள் பஸ்சுக்காக அங்கு பயத்துடன் காத்து நிற்கின்றனர்.
- ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் சந்தேகத்துக்கு இடமான செயின் பறிப்பு நபர்கள் சுற்றுவதாகவும் கூறப்படுகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பையாஸ் பகுதியில் உள்ள மின் விளக்குகள் ஒரு வாரமாக எரியாததால் அப்பகுதி இருட்டாக காணப்படுகிறது.
சென்னை, புதுச்சேரி செல்லும் பயணிகள் பஸ்சுக்காக அங்கு பயத்துடன் காத்து நிற்கின்றனர்.
சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிகளவில் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளும் அங்கு பஸ்சுக்கு குடும்பமாக, குழந்தைகளுடன் நிற்கின்றனர். போதை ஆசாமிகள் அவர்கள் வெளியூர் ஆட்கள் என தெரிந்து கொண்டு, அவர்களிம் மது அருந்த பணம் கேட்பதாகவும், ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் சந்தேகத்துக்கு இடமான செயின் பறிப்பு நபர்கள் சுற்றுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாமல்லபுரம் இ.சி.ஆர் மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.