என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாமல்லபுரம்"
- மாமல்லபுரத்தில் காரில் வந்தவர்கள் காரை நோ பார்க்கிங்கில் நிறுத்த முயன்றதாக தெரிகிறது.
- சம்பவத்தை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
அக்டோபர் 20 ஆம் தேதி மாமல்லபுரம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் நோ பார்க்கிங் வழியாக கார் ஒன்று செல்ல முயன்றது.அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி ஏழுமலை (வயது 45) என்பவர் காரை ஐந்துரத வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு கூறினார். அதை மீறி காரில் வந்தவர்கள் காரை நோ பார்க்கிங்கில் நிறுத்த முயன்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் ஏழுமலை அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது.
உடனே காரில் இருந்து இறங்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் "ஏய் யாரை பார்த்து திட்டுகிறாய்" என ஆவேசமடைந்து, நடுரோட்டிலேயே ஏழுமலையை சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களுடன் வந்த ஆண்களும் சேர்ந்து அவரை கடுமையாக தாக்கினர். இந்த கைகலப்பு சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பானது.
பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் 4 பேரையும் சமாதானம் செய்து காவலாளி ஏழுமலையை அவர்களின் பிடியிலிருந்து காப்பாற்றினர். பின்னர் 2 பெண்கள் உள்ளிட்ட 4 சுற்றுலா பயணிகளும் காரில் சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் முகத்தில் காயமடைந்த ஏழுமலை ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இச்சம்பவத்தை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
காவலாளி ஏழுமலைக்கு அங்குள்ள வியாபாரிகள் நாள் ஒன்றுக்கு ரூ.500 ஊதியம் என்ற தினக்கூலி அடிப்படையில் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் அவரை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐந்துரதம் வணிக வளாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து காவலாளியை தாக்கியது தொடர்பாக முடிச்சூரை சேர்ந்த பிரபு இன்பதாஸ் (41), சண்முகப்பிரியா (38), கீர்த்தனா (29) உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இன்று திருப்போரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனையடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்
Women Tourists beat a private security personnel near Five Rathas , Mamallapuram when he asked them not to take their car to no parking area. Hope Mamallapuram police will act on seeing this @tnpoliceoffl @SP_chengalpattu pic.twitter.com/1Ltt6kxfHF
— R SIVARAMAN (@SIVARAMAN74) October 21, 2024
- நோவா உலக சாதனைக்காக 1,000 மண் ஓடுகளை தொடர்ச்சியாக உடைத்து நொறுக்கினார்.
- கல்லூரி நுழைவிடத்தில் 10 வரிசைகளில் 10 ஓடுகள் வீதம், வரிசைக்கு 100 ஓடுகள் என 1,000 ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தைச் சேர்ந்த பஞ்சாட்சரம் (வயது 47) குங்பூ தற்காப்புக்கலை வீரரான இவர், செவன்த் டான் பிளாக் பெல்ட் உள்ளிட்டவை பெற்றுள்ளார்.
நீண்டகாலமாக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் தனியாகவும், பள்ளிகளுக்கும் குங்பூ பயிற்சியாளராக இருந்து வருகிறார். பெண்கள், வாலிபர்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோருக்கு குங்பூ பயிற்சி அளித்து வருகிறார்.
இவர் நோவா உலக சாதனைக்காக 1,000 மண் ஓடுகளை தொடர்ச்சியாக உடைத்து நொறுக்கினார். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி நுழைவிடத்தில் 10 வரிசைகளில் 10 ஓடுகள் வீதம், வரிசைக்கு 100 ஓடுகள் என 1,000 ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டது. அவைகளை உடைத்து சாதனை செய்தார்.
முன்னதாக நோவா வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் குழுவினர் அவருக்கு மருத்துவ பரிசோதனை, ஓடுகளில் சோதனை உள்ளிட்ட உலக சாதனை நடைமுறைகளை செய்தனர். பின்னர் அவரை ஓடுகளை உடைக்க அனுமதித்தனர். 10 நிமிடங்களில் அனைத்து ஓடுகளையும் உடைத்து நோவா உலக சாதனை வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
- பல்லவர்கள் காலத்தில் பாறைக்குன்றில் வடிவமைக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவில் துர்கா சிற்பத்துடன் உள்ளது.
- மாசிமாதத்தில் இந்த கோவில் 3 அடி உயரத்திற்கு கடல் நீரால் சூழப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால புராதன சின்னங்களில் கடற்கரை கோவில் முக்கியத்துவம் வாய்ந்த உலக பாரம்பரிய நினைவு சின்னமாக உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீர் கோவில் வரை உட்புகுந்து அரிக்க தொடங்கியதால், கோவிலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்ட தொல்பொருள்துறை இந்த கோவிலின் தென்புறம் முதல் வடபுறம் வரை கடந்த 1984-ம் ஆண்டு கடற்கரையில் பாறைகளை குவித்து பாதுகாப்பு அரண் அமைத்து கடல் நீர் உட்புகாமல் இருக்க பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் கடற்கரை கோவிலின் வடக்கு புறப்பகுதியில் பல்லவர்கள் காலத்தில் பாறைக்குன்றில் வடிவமைக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவில் துர்கா சிற்பத்துடன் உள்ளது.
மாசிமகத்தன்று கடற்கரையில் குவியும் பழங்குடி இருளர் இனமக்கள் அப்போது காலநிலை மாறி, கடல் நீரால் சூழப்பட்டு இருக்கும் இந்த மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலில் முழங்கால் கடல் நீரில் நடந்து சென்று அங்கு உள்ள துர்கா சிற்பத்திற்கு பூஜை செய்து வணங்குவர். குறிப்பாக மாசிமாதத்தில் இந்த கோவில் 3 அடி உயரத்திற்கு கடல் நீரால் சூழப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்கரை கோவிலுக்கு கற்கள் குவித்து பாதுகாப்பு தடுப்பு அரண் அமைக்கப்பட்டபோது, இந்த மகிஷாசுரமர்த்தினி குடைவரை சிற்பத்தை சேர்த்து பாதுகாப்பு கற்கள் அமைக்காமல் வெளியே அப்படியே விட்டுவிட்டனர். தற்போது இந்த கோவிலை குறிப்பிட்ட சில மாதங்கள் கடல்நீர் சூழ்வதும், குறிப்பிட்ட சில மாதங்கள் கடல் உள்வாங்குவதும் நடைபெறும். தற்போது கடல் உள்வாங்கியதன் மூலம் மகிஷாசுரமர்த்தினி கோவில் முழுமையாக வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.
பல்லவர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்டு, முற்றுபெறாத துர்கா சிற்பத்துடன் உள்ள புராதன சின்னமான மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மத்திய கலாசார துறையின் கீழ் உள்ள இந்திய தொல்பொருள் துறை நிர்வாகம் கடற்கரை கோவிலை பாதுகாப்பு அரணாக கற்கள் கொட்டி பாதுகாக்கப்படுவதுபோல் மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலையும் கற்கள் கொட்டி பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் தொல்பொருள் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடற்கரை கோவிலை கண்டு ரசித்தார்.
- பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கண்டு ரசித்தார்.
மாமல்லபுரம்:
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தின் கவர்னரான மிசெல்லே லுஜன் கிரிஷாம், அந்நாட்டு அரசு உயரதிகாரிகள் குழுவினருடன், உயர்கல்வி, வர்த்தகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைக்காக இந்தியா வந்துள்ளார்.
இந்த நிலையில், அரசுத்துறை குழுவினர் மற்றும் அவரது கணவர் ஆகியோருடன் மாமல்லபுரம் வந்தார். அங்குள்ள கடற்கரை கோவிலை கண்டு ரசித்தார்.
பல்லவர்கள், சைவ, வைணவ வழிபாட்டிற்காக, இந்த கோயிலை உருவாக்கியதும், இதுதவிர 6 கோவில்கள் கடலில் மூழ்கியது. பல்லவர்களின் துறைமுகமாக விளங்கியது, பழங்காலத்தில் பக்தர்கள் வழிபட்டு வந்த இந்த கோயில் தற்போது பாரம்பரிய நினைவுச் சின்னமாக தொல்லியல்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருவது உள்ளிட்ட பல்லவர் காலத்து வரலாற்று தகவல்களை, சுற்றுலாத்துறை அங்கிகாரம் பெற்ற வழிகாட்டி மதன் என்பவர் அவரிடம் விளக்கினார்.
அவற்றைக் கேட்டு வியந்த அவர் தன் மொபைல் போனில் கணவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். சுற்றுலாப் பயணிகள் சிலரும் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
- சங்குகள் ஆழ்கடல் பாறை இடுக்குகளில் பல ஆண்டுகளாக வாழும்.
- மீனவர்கள் இவ்வகை சங்கு வருவதை அறிந்து படகில் சென்று பிடிக்கிறார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடலில் பாசி படர்ந்த பாறைகளுக்கு இடையிலும், மணல் மேடு பகுதியிலும் தற்போது "முள்சங்கு" எனப்படும், மருத்துவ குணமுடைய விலை உயர்ந்த சங்கு வகைகள் மீனவர்களின் தூண்டில் மற்றும் சிறிய வலைகளில் சிக்கி வருகிறது.
இவ்வகை சங்குகளின் சதைகள் மருத்துவ குணமுடையது என்பதால் ஒரு சங்கு ரூ.20ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம் வரை வெளிநாட்டு மருந்து கம்பெனிகளுக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் கூறுகையில், 'இந்த வகை சங்குகள் ஆழ்கடல் பாறை இடுக்குகளில் பல ஆண்டுகளாக வாழும்.
தற்போது கடல் வெப்பம், கடலின் சீற்றம், அலையின் திசை மாற்றம் உள்ளிட்ட இயற்கை காலநிலை மாற்றத்தால் கடற்கரை ஓரம் இழுத்து வரப்பட்டு, இப்பகுதியில் கரையோரம் உள்ள பாறை இடுக்குகளில் வாழ்கிறது.
மீனவர்கள் இவ்வகை சங்கு வருவதை அறிந்து படகில் சென்று பிடிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு நல்ல வருவாயும் கிடைக்கிறது' என்றனர்.
- குடியிருப்பவர்களை இடத்தை காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறி வந்தனர்.
- 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு குப்பம் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்குள்ள துலுகானத்தம்மன் கோவில் அருகே உள்ள 40 வீடுகள் மற்றும் இறால் பண்ணை ஆகியவை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நெம்மேலி ஆள வந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு குடியிருப்பவர்களை இடத்தை காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறி வந்தனர். ஆனால் மீனவ கிராமமக்கள் இடத்தை காலி செய்ய வில்லை. இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை காஞ்சீபுரம் உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன் தலைமையில் செயல் அலுவலர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் சூலேரிக்காடு குப்பம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். அவர்களை அப்பகுதி பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தும் அதன் முன்பு அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மீனவ கிராம மக்களின் போராட்டத்தால் வீடுகளை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்குள்ள இறால் பண்ணைக்கு சென்று இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று மட்டும் போர்டு வைத்து சீல் வைத்தனர்.
மேலும் அங்கு பூட்டி இருந்த வீடு ஒன்றுக்கும் சீல்வைத்து நோட்டீஸ் ஒட்டினர். அப்பகுதி மக்கள் அங்குள்ள துலுக்கானத்தம் கோவில் வளாகத்தில் திரண்டு உள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. ரவி அபிராம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- உயர் அதிகாரிகள் ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆய்வு செய்தனர்.
- கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணுமின் நிலையத்தில் மத்திய தொழல் பாதுகாப்பு படையினர் ஷிப்டு முறையில் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இங்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாதுகாப்பு படைவீரர் ரவி கிரண் (வயது37) பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் ரவிகிரண் அணுமின்நிலையத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பணி முடிந்து அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் நகரியத்திற்கு செல்ல உடன் பணியாற்றும் மற்ற வீரர்களுடன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அனைவரும் தங்களது துப்பாக்கியை வைத்து இருந்தனர்.
சதுரங்கபட்டினம் "டச்சு கோட்டை" அருகில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பஸ் குலுங்கியது.
அந்த நேரத்தில் ரவிகிரண் கையில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கி திடீரென வெடித்தது. இதில் துப்பாக்கி குண்டுகள் ரவிகிரணின் கழுத்தில் பாய்ந்து தலைவழியாக வெளியே வந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரவி கிரண் உயிரிழந்தார். இதனை கண்டு உடன் பயணம் செய்த மற்ற பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கல்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ரவிகிரணின் உடலை கைப்பற்றி கல்பாக்கம் அணுசக்தி துறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ரவிகிரண் வைத்து இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருந்த குண்டுகள் அகற்றப்படாமல் இருந்தது தெரிந்தது.
வழக்கமாக பாதுகாப்பு பணியின் போது மட்டுமே துப்பாக்கியில் குண்டுகள் லோடு செய்து தயார் நிலையில் வைக்கப்படும். பணி முடிந்ததும் பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை அகற்றி அதனை தங்களது பாதுகாப்பு இடுப்பு பெல்ட்டில் உள்ள சிறிய பையில் வைத்து விடுவார்கள்.
ஆனால் ரவி கிரணிடம் இருந்த துப்பாக்கியில் குண்டுகள் அகற்றப்படாமல் அப்படியே இருந்து உள்ளது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை எதற்காக எடுக்காமல் இருந்தார்? மறந்து விட்டாரா? என்று தெரியவில்லை.
எனவே வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கிய போது ரவிகிரணிடம் இருந்து துப்பாக்கி தவறுதலாக வெடித்து குண்டு பாய்ந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்வதற்கு திட்டமிட்டு துப்பாக்கியில் இருந்த குண்டை அகற்றாமல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் மற்றும் சதுரங்கபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அவருடன் பணியில் இருந்த மற்றும் பஸ்சில் பயணம் செய்த வீரர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ரவிகிரணின் நடவடிக்கைகள் எப்படி இருந்தது என்பது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இறந்து போன ரவிகிரண் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் கர்நாடகாவில் இருந்து கல்பாக்கத்திற்கு பணிமாறுதல் ஆகி வந்து உள்ளார். அவருக்கு அனுசா என்ற மனைவியும், ஷாஸ்வினி, ரித்திகா என்ற 2 மகள்களும் உள்ளனர்.
அணுமின் நிலைய மத்திய பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொதுமக்கள் வசதியாக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கம்.
- சிறப்பு பஸ்கள் ஜூன் முதல் வாரம் வரை இயக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலாலும், இரவு நேரத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் புழுக்கத்தாலும் மக்கள் தவித்து வருகிறார்கள்.
மாலை நேரங்களில் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க சென்னை நகர மக்கள் மெரினா, பெசன்ட்நகர், மாமல்லபுரம் கடற்கரைக்கு படையெடுத்து வருகின்றனர்.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வண்டலூர் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணி களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. தினந்தோறும் கடற்கரை மற்றும் மாமல்லபுரம், வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.
இதையடுத்து இந்த வழித்தடங்களில் மாநகர பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பயணிகளின் வசதிக்காக மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், மாமல்லபுரம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா, கோவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர தினமும் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு பஸ்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரம் வரை இயக்கப்பட உள்ளது.
இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, `கோடை விடுமுறையில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கோவளம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வது அதிகரித்து உள்ளது.
எனவே இந்த வழித்தடங்களில் பொதுமக்கள் சென்று வர வசதியாக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஜூன் மாதம் முதல் வாரம் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மாநகர பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மண்பானையில் குடிநீர், மோர் ஆகியவை தடையின்றி வழங்கப்படுகிறது. பிராட்வே, தி.நகர், திருவான்மியூர், அடையாறு, திருவொற்றியூர் உள்ளிட்ட 70 இடங்களில் இவை வழங்கப்படுகிறது' என்றார்.
- 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
- தினமும் நில மங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பூதத்தாழ்வார், நரசிம்மர், ராமன், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், கருடன் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 16ந் தேதி பங்குனி உத்திர உற்சவம் வெகு விமரிசையாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தினமும் நில மங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், கோவில் உள் பிரகாரத்தில் நிலமங்கை தாயார் சுற்றி வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பங்குனி உத்திரம் நிறைவு நாளான நேற்று காலை பட்டாச்சாரியார்கள் மூலம் யாகம் வளர்த்து பெருமாள், தாயார், பூதத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் செய்யப்பட்டது., இதையடுத்து, மாலை 6 மணிக்கு நான்கு ராஜவீதிகள் வழியாக ஸ்ரீதேவி, பூ தேவியுடன், திருவீதி உலாவந்து தலசயன பெருமாள், நிலமங்கை தாயாருக்கு மாலை மாற்றிய திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மாமல்லபுரத்தில் இன்று காலையிலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது.
- காணும் பொங்கலையொட்டி சென்னை பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் இன்று காணும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காணும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் லட்சக்கணக்கில் மக்கள் குவிந்தனர்.
சென்னை மெரினா கடற்கரைக்கு காணும் பொங்கலையொட்டி இன்று காலை 11 மணியில் இருந்தே பொதுமக்கள் வரத் தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு வந்திருந்தனர். பிற்பகலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர்.
அவர்கள் கடற்கரை மணலில் ஒன்றாக அமர்ந்து பொழுதை போக்கினார்கள். குழந்தைகள் கடற்கரை மணலில் உற்சாகமாக விளையாடினார்கள். தொடர்ந்து பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதன் காரணமாக மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.
மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி பிக்பாக்கெட் மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும், பெண்களிடம் அத்துமீறுபவர்களை கட்டுப்படுத்தவும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜன் மேற்பார்வையில் மெரினா கடற்கரை முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு 13 கேமராக்களும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களில் நின்றபடி 3 போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணித்தனர்.
மெரினாவில் இன்று கடலில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட நீச்சல் பயிற்சி பெற்ற போலீசார் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குதிரைப்படையினருடன், கடற்கரை மணல் பரப்பில் செல்லக்கூடிய 3 வாகனங்கள் மூலமாகவும் ரோந்து சென்றுபோலீசார் கண்காணித்தனர். மேலும் டிரோன் கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரைக்கு வந்த மக்கள் அங்கிருந்து அருகில் உள்ள தீவுத்திடலுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியையும் கண்டுகளித்தனர். அங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டனர். தனியார் அரங்குகளையும் சுற்றிப்பார்த்தனர். மேலும் பொழுதுபோக்கு விளையாட்டுகளிலும் விளையாடி மகிழ்ந்தனர். அங்குள்ள உணவகங்களில் தங்களுக்கு பிடித்த உணவு வகைகளையும் உண்டனர்.
மாமல்லபுரத்தில் இன்று காலையிலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது. உள்நாட்டு பயணிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் அங்குள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கடற்கரை கோவில், ஐந்து ரதம், புலிக்குகை பகுதிகளுக்கு குடும்பம், குடும்பமாக வந்து பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டு, தாம்பரம், திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் அனைத்து வாகனங்களையும் கிழக்கு கடற்கரை சாலை, பூஞ்சேரி பகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்தனர். மாமல்லபுரம் நகருக்குள் மினி பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் 3 கி.மீ தூரம் நடந்து சென்றே புராதன சின்னங்களை பார்க்க வேண்டியது இருப்பதால், அனுமதி பெற்ற உள்ளூர் ஆட்டோக்கள் சிலவற்றை நகருக்குள் இயக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். மாமல்லபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவோர், போதை ஆசாமிகளை கண்காணிக்க சாதாரண உடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி முதலை பண்ணை, திருவிடந்தை கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 2 நாட்களில் 37 ஆயிரம் பேர் வருகை தந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் காணும் பொங்கலையொட்டி இன்று காலையில் இருந்தே வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள விலங்குகள், பறவைகளை பார்வையிட்டனர். சிங்கம், புலி, வெள்ளைப்புலி, யானை, காண்டாமிருகம், மனித குரங்கு, ஒட்டகச்ச்சிவிங்கி, குதிரைகள், பறவைகள், பாம்புகள் ஆகியவற்றை பார்த்தனர். உயிரியல் பூங்காவில் புதிதாக வந்துள்ள உயிரினங்களான இருவாச்சி பறவை, மலேயன் ராட்சத அணில், ஜம்முவிலிருத்து கொண்டு வரப்பட்ட இமாலயன் கருப்பு கரடி, சிவப்பு மார்பக கிளி ஆகியவற்றையும் கண்டுகளித்தனர்.
காணும் பொங்கலையொட்டி சென்னை பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் வந்தனர். அவர்கள் பழவேற்காடு கடற்கரையை சுற்றி பார்ப்பதற்காக உறவினர்கள், நண்பர்களுடன் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். பழவேற்காட்டில் டச்சு கல்லறை, நிழல் கடிகாரம், பழமை வாய்ந்த சிவன் கோயில், ஆதிநாராயண பெருமாள் கோவில், பழமை வாய்ந்த மசூதி, பழவேற்காடு ஏரி, பழவேற்காடு பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவைகளை கண்டு கழித்தனர். குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் சமைத்து கொண்டு வந்த உணவுகளை கடற்கரையில் அமர்ந்து உண்டனர். சிலர் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். பழவேற்காடு கடலில் குளிப்பதற்கும், படகு சவாரிக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- புலிக்குகை உள்ளிட்ட கலைச் சிற்பங்களை, மத்திய தொல்லியல்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது.
- புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன்தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை, புலிக்குகை உள்ளிட்ட கலைச் சிற்பங்களை, மத்திய தொல்லியல்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது.இதை அருகில் சென்று தொட்டு பார்த்து ரசிப்பதற்கு வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600, இந்தியருக்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் பள்ளிக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இதில் கடந்த ஒருவாரத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையால் தொல்லியல் துறைக்கு ரூ.8லட்சம் வரை வருவாய் கிடைத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- சுற்றுலா பயணிகள் இரவு 9 மணி வரை புராதன சின்னங்களை பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
- கடற்கரைகோவில் சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடைய செய்து உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட புராதன சிற்பங்களை பார்த்து ரசித்து செல்கிறார்கள். இதனை இரவிலும் கண்டுகளிக்கும் வகையில், ஒளி அலங்கார மின் விளக்குகள் கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் வந்தபோது அமைக்கபட்டது., பின்னர் சுற்றுலா பயணிகள் இரவு 9 மணி வரை புராதன சின்னங்களை பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து நாளடைவில், மின் விளக்குகள் பழுதடைந்ததால் ஒளிக்காட்சி நிறுத்தப்பட்டது. கடந்த ஜூலை மாதம் முதல் அனைத்து விளக்குகளும் சரி செய்யப்பட்டது. தற்போது கடற்கரைகோவிலில் மட்டும் சுற்றுலா பயணிகள் இரவு 9 மணிவரை அனுமதிக்கப் படுகின்றனர்.
ஆனால் கடற்கரை கோவில் வளாகத்தில் இருந்த நடைபாதை விளக்குகள் மீண்டும் பழுதடைந்து இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. தற்போது பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை, நாட்டியவிழா, மார்கழி மாத செவ்வாடை பக்தர்கள் வருகை என சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்து உள்ள நிலையில் இந்த இருள் சூழ்ந்த கடற்கரைகோவில் சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடைய செய்து உள்ளது.
கடற்கரை கோவிலை இரவில் நடந்து சென்று பார்க்க விரும்பும் சுற்றுலாபயணிகள் மின் விளக்குகள் இல்லாததால் கோவிலின் கரடு முரடான கருங்கல் நடைபாதையில் தடுமாறுகின்றனர். மேலும் முதியோர், பெண்கள், குழந்தைகள் அடிக்கடி விழுந்து காயமடைகின்றனர். எனவே கடற்கரை கோவில் உள்ள பகுதியில் பிரகாசமான விளக்குகளை உடனடியாக அமைக்க தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்