என் மலர்
நீங்கள் தேடியது "சாலை மறியல்"
- போலீசார் பஸ் கண்ணாடியை உடைத்தாக ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர்.
- பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் இருந்து இன்று காைல அரசு பஸ் ஒன்று விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் பயணம் செய்தனர். இதனால் பஸ்சில் கூட்டம் அலை மோதியது.
இந்த நிலையில் அந்த பஸ் காலை 7.30 மணியளவில் விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டி அருகே வந்த போது அங்குள்ள பஸ் நிறுத்ததில் நிற்காமல் சென்றது. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் பஸ்சின் மீது கல்லை கொண்டு ஏறிந்தனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் பஸ் கண்ணாடியை உடைத்தாக ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைதொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
- போலீசார் மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்த நாகமரை மேல்காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டிக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வருவதில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் குடிநீர் தேவைக்கு அருகில் உள்ள பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை 50-க்கும் மேற்பட்டோர் நாகமரை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஏரியூர் போலீஸ் சப்-இன்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வழிபாடு தலத்திற்கு வரக்கூடிய பக்தர்களிடம் ராம் சேது யாத்திரை பணியாளர்கள் பணம் வசூலிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
- கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே கோதண்டராமர் கோவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் கோதண்டராமர் கோவில் அருகே உள்ள கடற்கரை பகுதியில் இலங்கைக்கு ராமர் செல்லும்போது கடல் நடுவே பாலம் அமைத்து சென்றதாகவும், அதற்கு பயன்படுத்திய தண்ணீரில் மிதக்கும் கல்லை வைத்து வழிபாட்டு தலம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் பக்தர்களிடம் ராமாயணக் கதைகளை கூறி மிதக்கும் கல்லின் அதிசயத்தையும் எடுத்துரைத்து வரக்கூடிய பக்தர்களிடம் ரூ.20 பணம் வசூல் செய்து சுமார் 85 ராம் சேது யாத்திரை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் ராமநாத சாமி கோவில் இணை ஆணை யர் செல்லதுரை, கோதண்ட ராமர் கோவில் அருகே அமைக்கப்பட்ட வழிபாடு தலத்திற்கு வரக்கூடிய பக்தர்களிடம் ராம் சேது யாத்திரை பணியாளர்கள் பணம் வசூலிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதனை எதிர்த்து ராம் சேது பணியாளர்கள் சுமார் 85 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் கோதண்ட ராமர் கோவில் அருகே, தனுஷ்கோடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
- மக்கள் காலி குடங்களுடன் இன்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், ஜீவா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கே குடிநீர் குழாய் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீப காலமாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் புளியம்பட்டி ரோடு அண்ணா நகர் பஸ் நிறுத்தம் இன்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உங்கள் பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து களைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- எப்போதும் காரில் வரும் மோகன்ராஜ் நேற்று பைக்கில் வந்துள்ளார்
- கொலை செய்யப்பட்ட மோகன்ராஜிக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர்.
கூவத்தூர் அடுத்த பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது.50) இவர் கல்பாக்கம் அடுத்த காத்தாங்கடை கிழக்கு கடற்கரை சாலையில் பெட்ரோல் பங்கு நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் பெட்ரோல் பங்கை மூடிவிட்டு தனது பைக்கில் வீட்டுக்கு புறப்படும் போது காத்தாங்கடை சந்திப்பு பகுதியில் காரில் பதுங்கி இருந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் மோகன்ராஜை வழிமறித்து கையில் இருந்த பட்டாகத்தி மற்றும் அருவாலால் அவரதே கழுத்து, தோல்பட்டை, முதுகில் வெட்டி விட்டு அங்கிருந்து காரில் தப்பி ஓடிவிட்டனர்.
இதில் உயிருக்கு போராடிய நிலையில் கொத்துயிரும், கொலையுருமாக ரத்த வெள்ளத்தில் கிடந்த மோகன்ராஜை அப்பகுதியில் கடை வைத்திருப்போர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறினர். தகவலரிந்து அங்கு வந்த மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி அறிவழகன், கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
எப்போதும் காரில் வரும் மோகன்ராஜ் நேற்று பைக்கில் வந்துள்ளார், இதையறிந்த மர்ம கும்பல் மோகன்ராஜை கொலை செய்ய காத்தாங்கடை சந்திப்பில் காரில் நீண்ட நேரமாக காத்திருந்து, திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளார்கள்.
கொலை செய்யப்பட்ட மோகன்ராஜிக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த கொலை ஏதேனும் கொடுக்கல் வாங்கல் பணப் பிரச்சனையா? நிலத்தகராரா? பெட்ரோல் பங்கில் ஏதும் பிரட்சனையா? கோயில் விவகாரமா? அல்லது வேறேதும் காரணங்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளை பிடிக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய் பிரணீத் உத்தரவின் பெயரில் கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, திருக்கழுகுன்றம் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கூவத்தூர் போலீசார் சந்தேகத்தின் பெயரில் நாவங்கால் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆன்மீக பக்தரும் பெட்ரோல் பங்கு அதிபருமான மோகன்ராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இ.சி.ஆரில் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இந்த கொலை சம்பவம் கூவத்தூர், காத்தாங்கடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
- குடிநீர் வழங்காத பட்சத்தில் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த எருமனூர் ஊராட்சியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக குடிநீருடன் உப்பு கலந்த தண்ணீர் வருவதால் குடிப்பதற்கோ, சமையலுகோ பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த ஒரு வார காலமாக முற்றிலும் குடிநீர் வழங்கப்படாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் விருத்தாசலம்-முகாசாபரூர் சாலையில் இன்று காலை திடீரென மறியல் போாரட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி குடிநீர் வழங்காத பட்சத்தில் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனைதொடர்ந்து போலீசார் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிராமத்திற்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் கிராம மக்கள் சாலை மறியலை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த மறியல் போராட்டத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.
- நல்லூர் ஊராட்சி சார்பாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
- போராட்டம் காரணமாக அந்த வழியாக சாலையின் இரு புறம் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நல்லூர் ஊராட்சி சார்பாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். ஆனாலும் முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை அந்த பகுதி சேர்ந்தயை 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் புளியம்பட்டி-சத்தியமங்கலம் ரோடு பகுதியில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக அந்த வழியாக சாலையின் இரு புறம் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் புளியம்பட்டி போலீசார் மற்றும் பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரி இந்திராணி, உங்கள் பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட அங்கிருந்து கலந்து சென்றனர்.
சுமார் ஒரு மணி நேரமாக நடந்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- ஜவஹர்லால் நேரு மார்க்கில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
- தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை மறியல் சம்பவம் தொடர்பான வழக்கில், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து ஜெய்ப்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முக்கேஷ் பாகர் மற்றும் மனீஷ் யாதவ் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்கள், மேலும் ஏழு பேருடன் சேர்ந்து, ஜெய்ப்பூரின் முக்கிய சாலையான ஜவஹர்லால் நேரு மார்க்கில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
2014 ஆகஸ்ட் 13 அன்று, இந்த குழு, காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சவுத்ரி உட்பட, ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டத்தை நடத்தியது. ராஜஸ்தான் பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள பிரதான சாலையை சுமார் 20 நிமிடங்கள் முழுமையாக மறித்ததால், கடுமையான போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
இந்த வழக்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீதிமன்ற விசாரணையில் இருந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், குற்றவியல் சட்டத்தின்படி ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்பதால், தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் உடனடியாக ஜாமீனில் விடுவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய சட்டத்தின்படி, எம்எலஏக்களின் பதவி, தண்டனை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே ரத்து செய்யப்படும். இதனால், இந்தத் தீர்ப்பு இரு எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பாதிக்காது.
- போலீசார் தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
- வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடை அமைத்து விளை பொருட்களான தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் உள்பட பல்வேறு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால் உழவர் சந்தைக்கு முன்பாக உள்ள சாலைகளிலும், பொள்ளாச்சி ரோட்டிலும் விவசாயிகள் அல்லாத வெளி ஆட்கள் சாலை யோரங்களில் காய்கறி கடைகளை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் உழவர் சந்தையில் வியாபாரம் பாதித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். நேற்று காய்கறிகளை தரையில் கொட்டி புகார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலை தாராபுரம் நகராட்சி, நெடுஞ்சாலை துறை மற்றும் போலீசார் தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டனர். இருப்பினும் நகராட்சி ஊழியர்கள் உழவர்சந்தை அருகே உள்ள சாலையில் அமைக்கப்பட்டிருந்த சாலையோர காய்கறி கடைகளை அப்புறப்படுத்தினர்.
- பொது மக்களின் மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பெண்கள் உட்பட பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் வெள்ளியங்காடு வடக்கு முத்துச்சாமி அவுட் பகுதியில் 4 வீதி பொது மக்களுக்கும் பொதுவாக குடிநீர் குழாய் இருந்து வந்துள்ளது. இந்த குடிநீர் குழாய் மூலம் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெற்று வந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியில் பொதுக் குடிநீர் குழாய் இருந்து வந்த நிலையில் தற்போது சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்காக குடிநீர் குழாய் அகற்றப்படுவதாக கூறி அகற்றப்பட்டுள்ளது.
குடிநீர் குழாய் அகற்றப்படுவதற்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் குழாய் அகற்றப்படக்கூடாது, கோடை காலம் என்பதால் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று இரவு குடிநீர் குழாய் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று காலை அப்பகுதியில் குடிநீர் குழாய் இல்லாததை கண்ட அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் மரக்கிளைகளை சாலையில் வெட்டிப்போட்டு முத்துசாமி லே அவுட் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்திற்கு மேலாக பொது மக்களின் மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார் பொது மக்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பெண்கள் உட்பட பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் குடிநீர் வாரிய அலுவலர்களை வரவழைத்து எந்தவித இடையூறும் இல்லாத வகையில் குடிநீர் குழாய் மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மூதாட்டி உயிரிழந்து 2 நாட்கள் ஆகிய நிலையில் அவரது இறுதிசடங்கு செய்து சுடுகாட்டிற்கு கொண்ட செல்ல முடியவில்லை.
- கிராமமக்கள் களக்காடு அம்பேத்கர் சிலை அருகே உயிரிழந்த மூதாட்டி உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கல்லடி சிதம்பராபுரம் வேதநாயகபுரம் கிராமம் உள்ளது. இங்குள்ளவர் இறந்தால் பெருமாள்குளத்தில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் அந்த சுடுகாடு இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என தனியார் ஒருவர் கூறியதுடன் சுடுகாட்டை சுற்றி வேலி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தாங்கள் நீண்டகாலமாக சுடுகாடாக பயன்படுத்தி வரும் இடத்தை தங்களுக்கு மீட்டு தர வேண்டும் என கூறி அந்த கிராமமக்கள் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வேதநாயகபுரத்தை சேர்ந்த சங்கரன் என்பவரது மனைவி இளங்காமணி (வயது70) என்ற மூதாட்டி உடல் நலக்குறைவால் இறந்தார்.
இதையடுத்து அவரது உடலை பெருமாள்குளம் சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்த இடத்தை சொந்தம் என கூறி வரும் நபர்கள் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர். எனவே மூதாட்டி உயிரிழந்து 2 நாட்கள் ஆகிய நிலையில் அவரது இறுதிசடங்கு செய்து சுடுகாட்டிற்கு கொண்ட செல்ல முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் களக்காடு அம்பேத்கர் சிலை அருகே உயிரிழந்த மூதாட்டி உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு நாங்குநேரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
- ஏரியில் இருந்து கடந்த 40 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- இந்த ஏரியில் மீன் வளர்க்க குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது.
கருப்பூர்:
சேலம் மாவட்டம் தேக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள வட்டக்காடு பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வட்டக்காடு பகுதியில் தாக்குட்டை ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து கடந்த 40 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஏரியில் மீன் வளர்க்க குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது. மீன் வளர்ப்பவர்கள் இந்த ஏரியில் ேகாழி கழிவுகள், இறைச்சி கழிவுகள் மீன்களுக்கு தீவனமான ேபாடுவதால் ஏரி நீர் மாசுப்படுகிறது. இந்த தண்ணீர் வட்டக்காடு பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது.
இதை தடுக்க கோரியும் , அந்த ஏரியை தூர்வார கோரியும், ஏரியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவை அகற்றகோரியும், குத்தகையில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்தும் இன்று காலை 8 மணிக்கு கைக்குழந்தைகளுடன் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வட்டக்காடு பஸ் நிறுத்தத்தில் வட்டக்காட்டில் இருந்து சேலத்திற்கு சென்ற அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து மறியிலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் 11 மணி வரை நீடித்தது.
இது பற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி துணை அலுவலர் கோவிந்தராஜ், போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், சப்-இன்பெக்டர் ராஜா, கருப்பூர் வருவாய்துறை அலுவலர் அறிவுக்கண்ணு, ஊராட்சிமன்ற தலைவர் சுதா, துைண தலைவர் பரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் ஏரியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவை அப்புறப்படுத்தப்படும் என்றும் குத்தகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அரசு பஸ்சை விடுவித்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






