search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Kallanai"

  • ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர் கூட்டம் கூட்டமாக குளித்து மகிழ்ந்தனர்.
  • அனைத்து விளையாட்டு சாதனங்களிலும் சிறுவர் சிறுமியர் ஏறி விளையாடி கூச்சலிட்டு மகிழ்ந்தனர்.

  பூதலூர்:

  தொடர்ந்து விடுமுறை நாளாக அமைந்ததால் நேற்று கல்லணையில் கூட்டம் அலைமோதியது. கார் நிறுத்துமிடங்களில் இடம் இல்லாததால் கொள்ளிடம் புதிய பாலத்தில் இரு இருபுறமும் கார்கள் வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்ததால் காவிரி ஆற்றில் பாலங்களில் அருகில் குளிக்காமல்,

  பாலத்திற்கு அருகில் சற்று மேடான பகுதிகளில் கடலில் குளிப்பது போல் ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர் கூட்டம் கூட்டமாக குளித்து மகிழ்ந்தனர். சிறுவர் பூங்காவில் இருந்த அனைத்து விளையாட்டு சாதனங்க ளிலும் சிறுவர் சிறுமியர் ஏறி விளையாடி கூச்சலிட்டு மகிழ்ந்தனர். கல்லணையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலடி வழியாக வந்த பாஸ்கள் அனைத்தும் புதிய படத்தி லிருந்து திருப்பி விடப்ப ட்டன. இதனால் பொதுமக்கள் சற்று அவதிப்பட்டனர்.

  • மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் மாயனூர் கடந்து நேற்று முக்கொம்பை அடைந்தது.
  • கல்லணைக்கு வந்த தண்ணீரை பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

  தஞ்சாவூர்:

  தஞ்சை, திருவாரூர் நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

  இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

  மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் மாயனூர் கடந்து நேற்று முக்கொம்பை அடைந்தது. அங்கிருந்து தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு காவிரி நீர் நள்ளிரவில் வந்தடைந்தது. இதையடுத்து இன்று காலை கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு விழா நடைபெற்றது.

  இதனை முன்னிட்டு கல்லணையில் உள்ள ஆதிவிநாயகர், ஆஞ்சநேயர், கருப்பண்ண சுவாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

  கல்லணைக்கு வந்த தண்ணீரை பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

  தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, பொத்தானை அமுக்கி தண்ணீர் திறந்து விட்டார். பின்னர் நவதானியங்கள் மற்றும் மலர்களை தூவப்பட்டன. இதேப்போல் விவசாயிகள் காவிரி ஆற்றை வணங்கி மலர்களையும், நவதானியங்களையும் தண்ணீரில் தூவி, விவசாயம் செழிக்க வேண்டிக் கொண்டனர்.

  இதனை தொடர்ந்து மதகுகளில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. கல்லணை மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3.42 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும்.

  இன்று காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் தலா 500 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 100 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது .

  நீர் வரத்துக்கு ஏற்றவாறு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும். இந்த தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு 10 நாட்களில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  கல்லணை திறப்பை முன்னிட்டு கல்லணையில் உள்ள அகத்தியர் சிலை, காவிரி அன்னை சிலை, சர் ஆர்தர் காட்டன் சிலை, கரிகால சோழன் சிலை ஆகிய சிலைகளுக்கு வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காணப்பட்டது. இந்த சிலைகளுக்கு அதிகாரிகள் மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.

  கல்லணை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலெக்டர்கள் தீபக்ஜேக்கப் ( தஞ்சாவூர் ), பிரதீப்குமார் (திருச்சி), ஜானிடாம் வர்கீஸ் (நாகை) , மகாபாரதி (மயிலாடுதுறை), சாருஸ்ரீ (திருவாரூர்) , அருண்தம்புராஜ் (கடலூர்), எம்.பி.க்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், கல்யாணசுந்தரம், ராமலிங்கம், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் , மற்றும் பொதுப்பணித்துறை ,நீர்வளத்துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் , விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • மேளதாளங்கள் முழங்க முதலில் கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடைபெறும்.
  • காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை சிறப்பாக நிம்மதியாக செய்யவும் வழிகிடைக்கும் என்று நம்புகின்றனர்.

  பூதலூர்:

  தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

  அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் இன்று இரவு கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

  கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்படும். கல்லணையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்கள் பயன்பெறும். இந்த மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும். இது தவிர சம்பா, தாளடியையும் சேர்த்தால் சுமார் 18 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

  இந்த ஆண்டு பிரதான கால்வாய்கள் மட்டுமல்லாமல் சிறிய கிளை கால்வாய்களும் தூர்வாரப்பட்டுள்ளதால் விரைவில் கடைமடைக்கு தண்ணீர் சென்று சேரும் என்றும், பிரதான வாய்க்கால்களில் இருந்து கிளை வாய்க்கால்களில் தண்ணீர் விரைவாக சென்று வயல்களில் பாய்ந்து குறுவை சாகுபடி சிறப்பான முறையில் மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

  விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம் ஆகியவை போதுமான அளவிற்கு இருப்பில் உள்ளதாக வேளாண்மை துறை தெரிவித்துள்ளன. தனியார் நிறுவனங்களிலும் விதை நெல் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

  நாளை கல்லணையில் தண்ணீர் திறக்கப்படுவதை ஒட்டி கல்லணை பாலங்களில் தோரணங்கள் கட்டப்பட்டு காணப்படுகிறது. கல்லணை பாலங்களில் மேல் அமைந்துள்ள மாமன்னன் கரிகாலன், ராஜராஜ சோழன், காவேரி அம்மன், அகத்தியர், ஆர்தர் காட்டன் ஆகிய சிலையில் புது வண்ணம் பூசப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன .

  நாளை காலை மேளதாளங்கள் முழங்க முதலில் கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடைபெறும் . அதனை தொடர்ந்து கல்லணை பூங்காவில் உள்ள ஆதி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதன்பின்னர் முதலில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக இடத்திலிருந்து முக்கிய பிரமுகர்கள் பொத்தானை அமுக்கி தண்ணீரை திறந்து விடுவார்கள்.

  திறந்து விடப்படும் தண்ணீரில் மலர்களையும் விதை நூல்களையும் தூவுவார்கள். காவிரியை தொடர்ந்து வெண்ணாறு, கல்லணை கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்படும் . நிறைவாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் . கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

  கல்லணை திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பாசனப்பகுதியில் குறுவை சாகுபடிப்பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. அதே சமயத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கினால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து காவிரி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை சிறப்பாக நிம்மதியாக செய்யவும் வழிகிடைக்கும் என்று நம்புகின்றனர். எப்படியாக இருந்தாலும் விவசாயிகள் நம்பிக்கையோடு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • கல்லணையில் உள்ள பாலங்கள் அனைத்தும் வண்ணம் பூசும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
  • தோகூர் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள வடிகால் பாலத்தினை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

  பூதலூர்:

  காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

  இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டதும் ஜூன் 16-ந்தேதி கல்லணை தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து கல்லணையில் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

  கல்லணையில் உள்ள பாலங்கள் அனைத்தும் வண்ணம் பூசும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கல்லணை பாலங்களின் மேல் உள்ள மாமன்னன் கரிகாலன் சிலை உள்ளிட்ட சிலைகளுக்கும் வர்ணம் பூசும் பணி தொடங்கி உள்ளது. மேட்டூர் அணை தண்ணீரை எதிர்நோக்கி கல்லணையில் அனைத்து பணிகளும் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

  இது தவிர கொள்ளிடம் ஆற்றில் ஷட்டர்கள் ஏற்றி இறக்கும் மின்மோட்டார்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. கொள்ளிடம் மணல் போக்கி பகுதியில் புதிய ஷட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

  அதேபோல தோகூர் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள வடிகால் பாலத்தினை அகலப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.

  திருக்காட்டுப்பள்ளியில் உள்ள காவிரி குடமுருட்டி ஆற்றின் தலைப்பில் காவிரி ஆற்றில் நீரொழுங்கி அமைக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

  • காவேரி , வெண்ணாறு என இரண்டு ஆறுகளும் பல இடங்களில் அகலமாகவும் சில பகுதிகளில் குறுகியும் உள்ளது.
  • நீரோட்டத்திற்கு தடையாகமண்மேடிட்டு கருவேல முள் செடிகள்,புதர்கள் குறுங் காடுகள் போல் வளர்ந்து உள்ளன.

  பூதலூர்:

  தஞ்சாவூர் மாவட்டத்தில் 189 தூர்வாரும் பணிகளுக்காக ரூ20.45 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டு ஆங்காங்கே பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளை கண்காணிக்க மேலாய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன

  பிரதான வாய்க்கால்கள் அதிலிருந்து பிரியும் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. வாய்க்கால்கள் தூர்வாரப்படுவதால் வாய்க்காலில் கடைமடை வரை தண்ணீர் சீராக சென்று சேரும் என்றும், பருவ மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் விரைந்து வடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

  காவேரி , வெண்ணாறு ஆகியவை இயற்கையாக அமைந்த ஆறுகள் என்பதால் இரண்டு ஆறுகளும் பல இடங்களில் அகலமாகவும் சில பகுதிகளில் குறுகியும் அமைந்துள்ளன. கல்லணை அருகில் புதூர்,சுக்காம்பார், கோவிலடி ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றில்நடுவில் நீரோட்டத்திற்கு தடையாகமண்மேடிட்டு கருவேல முள் செடிகள்,புதர்கள் குறுங் காடுகள் போல் வளர்ந்து உள்ளன.

  கல்லணையில் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் இந்த பகுதியில் மண்மேடிட்டு காடுகள்போல வளர்ந்து உள்ள பகுதிகளில் செல்ல இயலாது,

  காவிரி கரை ஓரத்தில் தண்ணீர் ஓடும் நிலை உள்ளது.இதைப்போலவே வெண்ணாற்றில் அடப்பன்பள்ளம் சைபன் எனப்படும் கீழ் பாலத்தின் அருகே 2கிலோமீட்டர் தூரத்திற்கு மண் மேடிட்டு ஆற்றின் நடுவே மரம் செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன.

  வெண்ணாற்றில் விண்ணமங்கலம் பாலத்தின் பகுதியில் நெய்வேலி காட்டாமணக்கு செடிகள் பரந்து வளர்ந்து நீரோட்டத்தை தடுக்கும் வகையில் உள்ளது.தற்போதுள்ள சூழலில் கல்லணை தலைப்பு பகுதியில் காவிரி மற்றும் வெண்ணாற்றில் நீரோட்டத்திற்கு தடையாக இருக்கும் குறுங் காடுகள் மற்றும் மண்மேடு களை அகற்றி சீரான நீரோட்டத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  • தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு, இரண்டு மடங்காகி இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
  • கல்லணையை சிறந்த உட்கட்டமைப்பிற்கான உதாரணமாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

  புதுடெல்லி:

  உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, நாட்டின் வளர்ச்சியில் உள்கட்டமைப்பு எப்போதும் முக்கிய தூணாக இருந்து வருவதாகவும், 2014ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் சராசரி தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு, இரண்டு மடங்காகி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

  தமிழ்நாட்டில் உள்ள கல்லணையை சிறந்த உட்கட்டமைப்பிற்கான உதாரணமாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். சோழர்களால் கட்டப்பட்ட கல்லணை 2000 ஆண்டுகள் பழமையானது என தெரிவித்த அவர், இந்த அணை இன்றளவும் இயங்கி வருவது குறித்து மக்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவார்கள் என்றார். கல்லணை போன்ற ஒரு பழமையான ஒரு அணை இன்றளவும் அப்பகுதிக்கு வளர்ச்சியை வழங்கி வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

  • இன்றைய காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 ஆயிரத்து 642 கனஅடியாக உள்ளது.
  • கால்வாய் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு முறைப்பாசன ஏற்பாடு உகந்ததாக இல்லை.

  பூதலூர்:

  தஞ்சை வளநாட்டை வளமாக தொடர்ந்து வைத்திருக்கும் காவிரித்தாய் இந்த ஆண்டு பெருகி வந்து கொண்டிருக்கிறாள். கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் பெருகி வந்து மேட்டூர் அணையை நிரப்பிக் கொண்டுள்ளது.

  இன்றைய காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 ஆயிரத்து 642 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 113.96 அடியாக உயர்ந்து உள்ளது.தொடர்ந்து நீர்வரத்து இதே நிலையில் தொடர்ந்தால் இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு இன்று காலை நிலவரப்படி 18,024 கன அடியாக திறந்து விடப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரியில் 510 கனஅடியும், வெண்ணாற்றில் அதிகபட்ச அளவாக 8104 கன அடியும், கல்லணை கால்வாயில் நடப்பு ஆண்டில் இன்றைய தினத்தில் 2,219 கன அடியும், கொள்ளிடத்தில் 1,207 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

  காவிரி பாசன பகுதிகளில் உள்ள கடைமடை பகுதிகளில் இன்னமும் தண்ணீர் சென்று சேராத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கல்லணையிலிருந்து 6 நாட்களுக்கு ஒரு முறை காவிரி மற்றும் வெண்ணாற்றில் மாறி மாறி தண்ணீர் திறந்து விடப்படுவது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கால்வாய் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு முறைப்பாசன ஏற்பாடு உகந்ததாக இல்லை. முழு அளவில் நடவு முடியும் வரை அதிகளவில் தண்ணீர் விட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  ஒரு பக்கம் தண்ணீர் பெருகி வந்து கொண்டிருந்தாலும் மறுபக்கத்தில் வறட்சியான நிலை எதார்த்தமான ஒன்று. கல்லணையின் தலைப்பு பகுதியாக உள்ள பூதலூர் ஒன்றியத்தின் செங்கிப்பட்டி பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஏரிகள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.செங்கிப்பட்டி பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய், உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் மூலம் தண்ணீர் பெற்று ஏரிகளை நிரப்பி அதன் மூலம் 10,000 ஏக்கர் ஒருபோக சாகுபடி நடைபெறும்.

  இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போது, பரிசோதனை அடிப்படையில் செங்கிப்பட்டி பகுதி பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டு இருபோக சாகுபடி செய்ய வழிவகை செய்யப்படுமா ? என்று மாலை மலரில் செய்தி வெளியாகி இருந்தது.

  அதை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மற்றவர்களும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இன்னமும் காலம் கடத்தாமல் பூதலூர் ஒன்றியத்தின் செங்கிப்பட்டி பகுதி பாசனத்திற்கு உடனடியாக புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் களில்தண்ணீர் திறந்து ஏரிகளை நிரப்பி, ஒட்டுமொத்தமாக நாற்றங்கால் அமைத்து இந்த பகுதியில் இரு போக சாகுபடிக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேளாண் துறையும், நீர்வள ஆதார துறையும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது விவசாயத் துறை முன்னோடி்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • சுமார் 230 மாணவ-மாணவிகளை அப்பகுதியில் உள்ள பாரதியார் உயர்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.
  • 2 நாட்களில் பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டம் நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  நெல்லை:

  நெல்லை டவுன் பெருமாள் கீழரதவீதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி (கல்லணை) இயங்கி வருகிறது.

  இங்கு கடந்த ஆண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரை 400 மாணவ-மாணவிகள் பயின்று வந்தனர். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சேர்ந்தனர்.

  இதனால் பள்ளியில் இடநெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் 230 மாணவ-மாணவிகளை அப்பகுதியில் உள்ள பாரதியார் உயர்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.

  மேலும் கல்லணை பள்ளியில் சத்துணவு தயாரிக்கப்பட்டு அங்கிருந்து பாரதியார் பள்ளிக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

  இதற்கு மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாரதியார் உயர்நிலைப்பள்ளியில் ஏற்கனவே பயிலும் மாணவர்களுக்கு தேவையான அளவுக்கு அடிப்படை வசதிகள் இருப்பதாகவும், கல்லணை பள்ளி மாணவர்கள் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டால் அங்கு அவர்களுக்கு கழிவறை உள்ளிட்ட போதிய வசதிகள் இல்லை எனவும் கூறி கடந்த 21-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அப்போது மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 நாட்களில் பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டம் நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  ஆனால் 2 நாட்களுக்கு பிறகும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கல்லணை தொடக்கப்பள்ளியில் போதிய இடவசதி இல்லாததை கண்டித்து இன்று அங்கு பயிலும் மாணவ -மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

  இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்கள் கூறுகையில், கல்லணை பள்ளி அருகிலேயே மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. அங்கு மாணவ-மாணவிகளை அமர வைத்து வகுப்புகளை நடத்தலாம். ஆனால் அதைச்செய்யாமல் போதிய வசதி இல்லாத பாரதியார் உயர்நிலை பள்ளிக்கு மாணவர்களை இடமாற்றம் செய்துள்ளதால் அவர்கள் அவதிப்படுகிறார்கள் என்றனர்.

  சம்பவ இடத்திற்கு மண்டல உதவி கமிஷனர் பைஜூ நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து போலீஸ் உதவிகமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் இளவரசன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  அப்போது வருகிற திங்கட்கிழமைக்குள் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடத்தி பள்ளியில் போதிய இடவசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

  அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் மலர் தூவி நீரை திறந்து வைத்தனர்.
  டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

  இதனை,  அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் மலர் தூவி நீரை திறந்து வைத்தனர்.

  கடந்த 24ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதையும் படியுங்கள்.. அரசு நிலங்களை அபகரிக்க உதவும் புதிய உத்தரவை திரும்ப பெற வேண்டும்- சீமான்
  தமிழக விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

  தமிழக காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். 

  மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர்  இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்த நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீரை திறந்து விட பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.

  கல்லணை திறப்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக தஞ்சை நீர்வளத்துறை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுவதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

  இதைய