search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குறுவை சாகுபடிக்காக இன்று கல்லணை திறப்பு- அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
    X

    கல்லணையில் அமைச்சர் கே.என்.நேரு தண்ணீரை திறந்து வைத்த போது எடுத்த படம்.

    குறுவை சாகுபடிக்காக இன்று கல்லணை திறப்பு- அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

    • மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் மாயனூர் கடந்து நேற்று முக்கொம்பை அடைந்தது.
    • கல்லணைக்கு வந்த தண்ணீரை பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர் நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் மாயனூர் கடந்து நேற்று முக்கொம்பை அடைந்தது. அங்கிருந்து தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு காவிரி நீர் நள்ளிரவில் வந்தடைந்தது. இதையடுத்து இன்று காலை கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு விழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு கல்லணையில் உள்ள ஆதிவிநாயகர், ஆஞ்சநேயர், கருப்பண்ண சுவாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    கல்லணைக்கு வந்த தண்ணீரை பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, பொத்தானை அமுக்கி தண்ணீர் திறந்து விட்டார். பின்னர் நவதானியங்கள் மற்றும் மலர்களை தூவப்பட்டன. இதேப்போல் விவசாயிகள் காவிரி ஆற்றை வணங்கி மலர்களையும், நவதானியங்களையும் தண்ணீரில் தூவி, விவசாயம் செழிக்க வேண்டிக் கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மதகுகளில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. கல்லணை மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3.42 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இன்று காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் தலா 500 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 100 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது .

    நீர் வரத்துக்கு ஏற்றவாறு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும். இந்த தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு 10 நாட்களில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கல்லணை திறப்பை முன்னிட்டு கல்லணையில் உள்ள அகத்தியர் சிலை, காவிரி அன்னை சிலை, சர் ஆர்தர் காட்டன் சிலை, கரிகால சோழன் சிலை ஆகிய சிலைகளுக்கு வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காணப்பட்டது. இந்த சிலைகளுக்கு அதிகாரிகள் மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.

    கல்லணை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலெக்டர்கள் தீபக்ஜேக்கப் ( தஞ்சாவூர் ), பிரதீப்குமார் (திருச்சி), ஜானிடாம் வர்கீஸ் (நாகை) , மகாபாரதி (மயிலாடுதுறை), சாருஸ்ரீ (திருவாரூர்) , அருண்தம்புராஜ் (கடலூர்), எம்.பி.க்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், கல்யாணசுந்தரம், ராமலிங்கம், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் , மற்றும் பொதுப்பணித்துறை ,நீர்வளத்துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் , விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×