என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமைச்சர் கேஎன் நேரு"
- அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சென்னை:
தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- வடகிழக்கு பருவமழை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
- பருவமழை வருவதற்குள் கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆணையிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்கி வருவதால், சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ள மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தபடுவதற்கு 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
156 பேட்டரி ஸ்ப்ரேகள், 324 புகைப்பரப்பும் இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 64 புகைப்பரப்பு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய ஆலோசனை கூட்டத்தில், ஓட்டேரி, விருகம்பாக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணி விரைந்து நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, மின்சார துறை, நகர்ப்புற உள்ளாட்சி துறை பல்வேறு துறை அதிகாரிகளையும் வைத்து முதலமைச்சர் நேற்று ஆலோசனை நடத்தினார். பருவமழை வருவதற்குள் கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆணையிட்டுள்ளார்.
1156 இடங்களில் 792 கிமீ தொலைவில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 6 நாட்களில் எல்லா பணிகளும் விரைவாக முடியும். 13 செ.மீ மழை பெய்த இடத்தில் கூட, எவ்வளவு நேரம் அங்கு மழைநீர் தேங்கியது என மணி நேரத்தை கணக்கில் வைத்து அங்கு என்ன செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை செய்துள்ளோம்.
கொசஸ்த்தலை ஆற்று வடிகால் பணிகள், 24.08.2024-க்குள் முடித்திருக்க வேண்டும். அது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது வரை கொசஸ்தலை ஆற்றை நீர்வளத்துறையினர் தான் சீர் செய்து வருகிறார்கள். எங்கள் துறை பணி என்னவென்றால் மழைநீர் கால்வாய் குழாய்களை அதில் சேர்க்க வேண்டியது தான்.
நாங்கள் குழாய் இணைப்பு சரியாக வைத்துள்ளோம். அவர்கள் வேலை முடிந்தவுடன் இணைத்து விடுவோம். இரண்டு மூன்று மாதங்களில் நிரந்தரமாகவே அது முடிந்துவிடும்.
வானிலை ஆய்வு மையம் கூறும் சராசரி மழையின் அளவுக்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். திடீரென்று ஒரே நாளில் 30 செ.மீ, 45 செ.மீ மழை பெய்தால் என்ன செய்வது.? இயற்கையை வெல்ல யாராலும் முடியாது. ஆனாலும் அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
- அதிகமாக மழை பெய்தால் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கும்.
திருச்சி:
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளோம்.
* திருச்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் முன்னேற்பாட்டு பணிகள் தயாராக உள்ளது.
* சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
* அனைத்து பகுதிகளிலும் ஆகாய தாமரையை அகற்றி விட்டோம்.
* சென்னை மாநகராட்சியில் புதிதாக ரூ.22 கோடி மதிப்பில் எந்திரம் வாங்கி உள்ளோம். அந்த எந்திரத்தை பயன்படுத்தி அனைத்து வாய்க்காலிலும் தூர்வாரப்பட்டு வருகிறது.
* எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
* சென்னை மட்டுமல்லாது எல்லா மாநகராட்சிகளிலும் வாய்க்காலை சுத்தப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம்.
* மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் அனைத்து இடங்களிலும் முடிந்து விட்டது.
* 20 செ.மீ., 25 செ.மீ. மழை பெய்தால் எந்த வடிகாலுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.
* அதிகமாக மழை பெய்தால் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கும். அங்கு மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. தண்ணீர் தேங்கினால் மோட்டார் வைத்து உடனே அகற்றப்படும்.
* எல்லா சுரங்கப்பாதைகளையும் சுத்தம் செய்து விட்டோம் என்று கூறினார்.
- மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
- மழைக்காலம் முடியும் வரை, அதிகாரிகளை மாற்றக்கூடாது என அறிவுறுத்தல்.
சென்னையில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 7 அமைச்சர்களும் வரிசையாக அமர்ந்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை அடுக்கினர்.
அப்போது, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், மழைநீர் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்," மழைநீர் வடிகால்களை தூர்வாறும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் பணிகளை அடுத்த 30 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தனியாக ஆய்வு செய்யாமல், மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து செல்ல கூறியுள்ளோம். மழைக்காலம் முடியும் வரை, அதிகாரிகளை மாற்றக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.
- கோவை மேயர் தேர்தலையொட்டி, இன்று காலை தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
- மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் ரங்கநாயகி, புதிய மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா பதவி வகித்து வந்தார். கடந்த 2¼ ஆண்டுகளாக மேயராக இருந்த அவர் கடந்த மாதம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து புதிய மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தி.மு.க. சார்பில் மேயர் வேட்பாளரை தேர்வு செய்யும் கூட்டம் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் தலைமையில் கோவையில் நடந்தது. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் தி.மு.க. மேயர் வேட்பாளராக 29-வது வார்டு கவுன்சிலரான ரங்கநாயகி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் ரங்கநாயகி, புதிய மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆணையாளர் அறிவித்தார். தொடர்ந்து அவருக்கு வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாக, கோவை மேயர் தேர்தலையொட்டி, இன்று காலை தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பணிகள் குழு தலைவரும், கவுன்சிலருமான சாந்தி முருகன், "கட்சிக்காக உழைச்சு ஓடா தேஞ்சுட்டோம். கட்சிக்காக 50 வருஷம் கஷ்டப்பட்டு, கோடிக்கணக்குல இழந்து ஒடுக்கப்பட்டிருக்கோம். சும்மா ஒன்னும் வரலை. இதையெல்லாம் பார்த்து பொறுத்துட்டு இருக்க முடியாது..." என அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி முன்னிலையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, நீங்கள் பொதுவாக பேசுறீங்க. நீங்கள் எல்லாம் எப்படி உறுப்பினராகி வந்தீங்களோ.. அதுமாதிரி தான் நான் சேர்மன் ஆகி இந்த இடத்துக்கு வந்துருக்கேன். உள்ளாட்சிக்கு கடந்த காலத்தில் எவ்வளவு பணம் ஒதுக்கியிருக்காங்க, தளபதி ஆட்சியில் எவ்வளவு பணம் ஒதுக்கியிருக்காங்கன்னு உங்களுக்கு சொல்றேன். கோவைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிங்க என்று முதலமைச்சர் என்னிடம் கேட்டார். அதற்கு 3 கோடி ஒதுக்கியிருக்கோம்னு சொன்னேன், அதற்கு 3 கோடி பத்தாது 300 கோடி ஒதுக்குன்னு முதலமைச்சர் சொன்னார். பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே நேரத்தில் பத்தாண்டு காலம் நிறுத்திவைக்கப்பட்ட பணி 2 ஆண்டு காலத்தில் நடக்கணும் என்பது இயலாத காரியம். எனவே உங்களுக்கும் ஆதங்கம் இருக்கும். இப்ப சொல்லியிருக்கிங்க.. அதை செய்து கொடுப்போம். உறுதியா செய்கிறோம். அதில் ஒன்றும் மாற்றம் இல்லை என்றார்.
- கொரோனா காலத்தில் கண்காணிப்பு இல்லாமல் விடப்பட்டதே தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணம்.
- சென்னை போன்ற பெருநகரங்களின் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்,
சென்னையில் வார்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தற்போது சென்னையில் உள்ள 200 வார்டுகளில் சராசரியாக ஒரு வார்டில் 40,000 பேர் கூடுதலாக வசிக்கின்றனர். வார்டுகள் எண்ணிக்கையை அதிகரித்து மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700ஆக உயர்த்தப்பட உள்ளது. தற்போது 138 நகராட்சிகள் உள்ள நிலையில் 159ஆக உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் அடுத்த 20 நாட்களில் மேலும் 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சித் துறைகளில் 3000 பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
தெருநாய் பிரச்சனைகளில் இருந்து மக்களை காக்கும் பணியை அரசு மேற்கொள்ளும். கொரோனா காலத்தில் கண்காணிப்பு இல்லாமல் விடப்பட்டதே தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணம். தெருநாய்களுக்கு கருத்தடைசெய்யப்படுவதன் மூலம் நாய்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படும்.
சென்னை மாநகரில் மழைக்காலங்களில் நீர் தேங்க மெட்ரோ திட்ட பணிகளே காரணம்.
சென்னை போன்ற பெருநகரங்களின் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். மாடுகள் முதன்முறை பிடிபட்டால் ரூ.5,000, 2-ம் முறை பிடிபட்டால் ரூ.10,000, 3-ம் முறை பிடிபட்டால் ஏலம் விடும்படி சட்டம் கொண்டு வரப்படும்.
கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ.75 கோடி செலவில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும் என்றார்.
- அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை கொசூர் பகுதியில் இருந்து பிரசாரம் மேற்கொண்டார்.
- எனக்கு மயக்கமாக வருகிறது என்று கூறி உடனடியாக பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார்.
கரூர்:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 21 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் கே.என்.நேரு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று (புதன்கிழமை) காலை கொசூர் பகுதியில் இருந்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனக்கு மயக்கமாக வருகிறது என்று கூறி உடனடியாக பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு, பிரசார வாகனத்திலிருந்து கீழே இறங்கி தனது காரில் ஏறி மருத்துவமனைக்கு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
- பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள்.
- மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் சைவ உணவு மற்றும் அசைவ உணவு மதியம் வழங்கும் வகையில் உணவு சமைத்து பரிமாறப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு தொடர்பாக இன்று மாநாட்டு திடலில் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை மாலை 5 மணி அளவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விமானத்தில் சேலம் வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வந்து விடுகிறார். மாலை 6 மணி அளவில் மாநாட்டு சுடர் திடலை வந்தடைகிறது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாநாடு திடலுக்கு வருகிறார்கள்.
1500 பேர் பங்கேற்றுள்ள மோட்டார்சைக்கிள் பேரணி மாநாடு திடலை வந்தடைகிறது. 1000 டிரோன்கள் பங்கேற்கும் டிரோன் ஷோ நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சுமார் 1 மணி நேரம் நடைபெறுகிறது.
மறுநாள் காலையில் (21-ந்தேதி) 9 மணி அளவில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மாநாடு திறப்பு விழா மற்றும் புகைப்பட கண்காட்சி ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதன் பிறகு காலை 10 மணி அளவில் மாநாடு தொடங்கியவுடன் தீர்மானங்கள் வாசிக்கப்படுகின்றன.
இதையடுத்து பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள். காலையில் சுமார் 1 மணி நேரம் அமர்ந்து முதலமைச்சர் மாநாடு நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு தி.மு.க. முன்னணி தலைவர்கள் மாநாட்டில் பேசுகிறார்கள். 7 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேரூரை நிகழ்த்துகிறார்.
இந்த மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, உணவு வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து மட்டும் 1200 பஸ்களில் தொண்டர்கள் மாநாட்டுக்கு வருகை தர உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஏற்பாட்டின் தொடக்கமாக அமையும் முன்னோட்டமாக இந்த மாநாடு அமையும். வெற்றி மாநாடாக அமையும். வாகனம் நிறுத்துவதற்கு 300 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ஊரில் இருந்தும் வாகனம் வரும்போது அவர்களுக்கு ஜி.பி.எஸ். நவீன வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் சைவ உணவு மற்றும் அசைவ உணவு மதியம் வழங்கும் வகையில் உணவு சமைத்து பரிமாறப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தார்.
- எத்தனை நாளைக்கு மத்திய அரசை குறை சொல்லி குறை சொல்லி வண்டியை ஓட்டுவார்கள்.
- மக்களே சாலைக்கு வந்து மத்திய அரசு இதுவரை கொடுத்த நிதி எங்கே என்று கேள்வி கேட்கின்றனர்.
சோழிங்கநல்லூர்:
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை மாநகராட்சி 15-வது மண்டலம் 198-வது வார்டுக்கு உட்பட்ட காரப்பாக்கம் பகுதியில் 5000 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி 198-வது வார்டு மாமன்ற உறுப்பினரும் ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவருமான லியோ என்.சுந்தரம் ஏற்பாட்டில் காரப்பாக்கம் கங்கையம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு 5000 பேருக்கு அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-
மக்கள் கஷ்டத்தில் இருக்கும்போது பாரதிய ஜனதா தொண்டர்கள் முன்வந்து மக்களுக்கு உதவி செய்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு அதிகாரிகள் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகள் நேரில் வந்து மக்களை சந்திக்க வேண்டும்.
அப்போதுதான் இங்கு என்ன நடக்கிறது என தெரியும். சென்னையில் உள்ள மையப் பகுதியை விட புறநகர் பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை மைய பகுதியை மட்டும் முதலமைச்சர் பார்வையிடுகிறார்.
அரசு உதவிகள் மக்களுக்கு வராமல் உள்ளது. அதனால்தான் அந்தப் பொறுப்பை நாங்கள் கையில் எடுத்து செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என கூறுவதால் தான் மக்கள் ஆத்திரமடைந்து மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
அமைச்சர் கே.என்.நேரு நான்கு மாதங்களுக்கு முன்பு 98 சதவீதம் வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக கூறினார். நேற்று அவர் கூறிய கருத்தின் படி 42 சதவீதம் தான் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளது.
ஒரு பொறுப்புள்ள மூத்த அமைச்சர் இது போன்று மாற்றி மாற்றி பேசுகிறார். அரசே பொய் சொல்ல ஆரம்பித்தால் மக்கள் யாரை நம்புவார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சென்னை மக்கள் பொறுமையாக இருப்பார்கள் என்று நேற்று கே.என்.நேரு பேசிய பேச்சால் மக்கள் சாலைக்கு வந்து எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களை கேள்வி கேட்டு மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
மத்திய அரசு ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு கொடுத்த நிதி எங்கே போனது என தெரியவில்லை. எத்தனை நாளைக்கு மத்திய அரசை குறை சொல்லி குறை சொல்லி வண்டியை ஓட்டுவார்கள். மக்களே சாலைக்கு வந்து மத்திய அரசு இதுவரை கொடுத்த நிதி எங்கே என்று கேள்வி கேட்கின்றனர். அதற்கே இவர்களால் கணக்கு கொடுக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடியாத நிலையில் உள்ள சில இடங்களில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது.
- இன்று மதியம் முதல் சென்னையில் கருமேகம் அதிகமாக இருக்கும்.
சென்னை:
`மிச்சாங்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ரிப்பன் மாளிகையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, அங்கு அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் மழைக்காலங்களில் அதிகமாக மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களில் ரூ.2 ஆயிரத்து 43 கோடி செலவில், 267 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய் பணி முடிந்த காரணத்தால், பிரகாசம் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, வால்டாக்ஸ் சாலை, ராஜாஜி சாலை, போலீஸ் கமிஷனர் சாலை உள்பட பல்வேறு பிரதான சாலைகளில் மழைநீர் வழக்கம் போல தேங்கவில்லை.
மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடியாத நிலையில் உள்ள சில இடங்களில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. அவற்றை அகற்றும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
'மிச்சாங்' புயல் எச்சரிக்கை இருப்பதால் பொதுமக்கள் யாரும், பூங்கா மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. மேலும், இன்று (ஞாயிறு) மதியம் முதல் சென்னையில் கருமேகம் அதிகமாக இருக்கும். அதனால் கனமழை அதிகமாகவே இருக்கும் எனவே, எந்த இடத்தில் தண்ணீர் தேங்கினாலும் அவற்றை அகற்ற முன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.7.85 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரம் உபயதாரர் நிதியில் இரண்டு நிலையோடு கூடுதலாக 5 நிலைகள் அமைக்கும் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டினர்.
- ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தேக்கு மரத்தினால் உருவாக்கப்பட்ட மரத்தேரின் வெள்ளோட்டத்தினை அமைச்சர் சேகர் பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சென்னை:
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி கோவிலில் உபகோவிலான திருவெள்ளரை, புண்டரிகாட்ச பெருமாள் கோவிலானது 108 திவ்ய தேசங்களில் 4-வது திருத்தலமாகும். 13-ம் நூற்றாண்டில் ஹொய்சால மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் வடக்கில் நிறைவுபெறாத 2 நிலை ராஜகோபுரமாக அமையப் பெற்றதில் கூடுதலாக 5 நிலைகள் அமைக்க அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின்படியும், மக்களின் நீண்டநாள் விருப்பத்தின்படியும் பணிகள் மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மாநில வல்லுநர் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.
அதன்படி இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ரூ.7.85 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரம் உபயதாரர் நிதியில் இரண்டு நிலையோடு கூடுதலாக 5 நிலைகள் அமைக்கும் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டினர்.
முன்னதாக திருச்சி மாவட்டம், மலைக்கோட்டை, தாயுமானசுவாமி கோவிலில் வீற்றிருக்கும் மாணிக்க விநாயகருக்கு உபயதாரர் நிதியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தேக்கு மரத்தினால் உருவாக்கப்பட்ட மரத்தேரின் வெள்ளோட்டத்தினை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிகளில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், இணை ஆணையர்கள் மாரியப்பன், பிரகாஷ், உதவி ஆணையர்கள் ஹரிஹர சுப்பிரமணியன், லட்சுமணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது.
- சென்னை மக்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட வேண்டிய குடிநீரின் தரம் மற்றும் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
பொன்னேரி:
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் மீஞ்சூர், காட்டுப்பள்ளியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நேற்று மாலை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை எவ்வித தொய்வுமின்றி மேற்கொள்ள வேண்டும் எனவும், சென்னை மக்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட வேண்டிய குடிநீரின் தரம் மற்றும் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், செயல் இயக்குநர் செ.சரவணன், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருவள்ளூர் எம்.பி.கே.ஜெயகுமார், எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி, டி.ஜெ.கோவிந்த ராஜன், துரை சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்