என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி வீடு, அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- சோதனை முடிவில் இது வெறும் புரளி என தெரிய வந்தது.
திருச்சி:
தமிழக காவல்துறை இயக்குனர் அலுவலக மின்னஞ்சலுக்கு இன்று காலை ஒரு மெயில் வந்தது.
அதில் திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வீடு, அலுவலகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு, அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
உடனே திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநகர காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் தில்லைநகர் 5-வது கிராஸில் உள்ள அமைச்சர் கே .என்.நேரு வீடு மற்றும் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
இதேபோன்று தென்னூர் அண்ணா நகரில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு மற்றும் சத்திரம் வி என் நகர் பகுதியில் அமைந்துள்ள திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனை முடிவில் இது வெறும் புரளி என தெரிய வந்தது.
அமைச்சர்கள் மட்டுமல்லாமல் திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் கல்லூரி அலுவலக அறைகள் வகுப்பறைகள் ஆய்வறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சல்லடை போட்டு தேடினர். ஆனால் அங்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
அமைச்சர்கள் வீடு மற்றும் அலுவலகம் தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






