என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்- அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
    X

    தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்- அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

    • மாநாடு நடக்கும் திடல் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு கருப்பு, சிவப்பு நிறத்தில் சேலைகள், இளம் வயதினருக்கு சுடிதார் போன்றவை வழங்கப்பட உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் வருகிற 26-ந்தேதி தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற தலைப்பில் தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது.

    இதையடுத்து மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு மேற்பார்வையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் அமைச்சர் கே.என்.நேரு முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்த்து ஆய்வு செய்தார்.

    மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.

    மேலும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, மு.பெ.சாமிநாதன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மகளிரணி தலைவர் விஜயா தாயன்பன் உள்பட பலர் பங்கேற்று பேச உள்ளனர்.

    200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக இந்த மாநாடு நடக்கிறது. 100 ஏக்கரில் மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 100 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    மாநாடு நடக்கும் திடல் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    மாநாட்டு திடலில் தி.மு.க. கட்சி கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் 1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு தட்டுப்பாடில்லாமல் தரமான குடிநீர் வசதி, 200-க்கும் அதிகமான மொபைல் கழிவறை வசதி, பஸ் வசதி என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு கருப்பு, சிவப்பு நிறத்தில் சேலைகள், இளம் வயதினருக்கு சுடிதார் போன்றவை வழங்கப்பட உள்ளன.

    மேலும் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு கைப்பையில் நொறுக்கு தீனிகளும் வழங்கப்பட உள்ளன. இதில் கேக், மிக்சர், குடிநீர் பாட்டில், பிஸ்கட், ஹாட்பாக்சில் பிரியாணி போன்றவை இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×