என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்: ரூ.639 கோடி மதிப்பிலான திட்டங்களை அர்ப்பணிக்கிறார் முதலமைச்சர்
    X

    நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்: ரூ.639 கோடி மதிப்பிலான திட்டங்களை அர்ப்பணிக்கிறார் முதலமைச்சர்

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20-ந்தேதி டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
    • புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, கல்லூரி மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

    நெல்லை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் வருகிற 20, 21-ந்தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக 20-ந்தேதி பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகிறார்.

    அவருக்கு மாவட்ட எல்லையான பாளை கே.டி.சி.நகர் பகுதியில் பாலம் அருகே நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் நெல்லை மேற்கு ஆவுடையப்பன், மத்தி அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிழக்கு கிரகாம்பெல் மற்றும் நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இதில் 2-வது நாளான 21-ந்தேதி பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்த பின்னர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைத்து அரசு சார்பில் நடைபெறும் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை சபாநாயகர் அப்பாவு தலைமையில், கலெக்டர் சுகுமார், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல், மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என். நேரு நேற்று ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20-ந்தேதி டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அன்று இரவு வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். மறுநாள் 21-ந்தேதி காலை ரெட்டியார்பட்டியில் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் ரூ.72.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, கல்லூரி மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

    அங்கு புதிய அரசு பஸ் வழித்தடங்களை தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்களை வழங்குகிறார். தொடர்ந்து நடைபெறும் விழாவில் ரூ.181.89 கோடியில் முடிவடைந்த 31 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.356.59 கோடி மதிப்பில் 11 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இவ்வாறாக மொத்தம் ரூ.538.48 கோடி மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    மேலும் ரூ.100 கோடியே 95 லட்சம் மதிப்பில் 44 ஆயிரத்து 924 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். மொத்தம் ரூ.639 கோடி மதிப்பிலான திட்டங்களை நெல்லை மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணிக்கிறார் என்றார்.

    தொடர்ந்து பொருநை அருங்காட்சியகத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். அதன் பின்னர் கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ள தரிசன பூமி மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    Next Story
    ×