என் மலர்
நீங்கள் தேடியது "Farmers Protest"
- மாவட்ட கலெக்டரிடம் மற்றும் வேளாண்மை துறை அலுவலகம் பலர் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
- இதை கண்டித்து ஆத்தூர் உழவர் சந்தை எதிரே விவசாயிகள் பச்சை நிற உடை அணிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் உழவர் சந்தைக்கு ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, தலைவாசல் சுற்றுவட்டார நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டு வந்து தினந்தோறும் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த உழவர் சந்தையில் விவசாயிகளை விட வியாபாரிகள் அதிகம்பேர் போலியான உழவர் அட்டை வைத்துக்கொண்டு விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.
மேலும் இங்கு பணியாற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் விவசாயிகளை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசுவதாகவும் அரசுத்துறை அலுவலர்கள் வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் தக்காளியை கொண்டுவந்து கூடுதல் விலை நிர்ணயம் செய்து உழவர் சந்தையில் விற்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
மாவட்ட கலெக்டரிடம் மற்றும் வேளாண்மை துறை அலுவலகம் பலர் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதை கண்டித்து ஆத்தூர் உழவர் சந்தை எதிரே விவசாயிகள் பச்சை நிற உடை அணிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி விவசாயி மணிமேகலை கூறும்போது, ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகளை விட வியாபாரிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருள்களுக்கு விற்பனை செய்ய முடியவில்லை. போலியான உழவர் அட்டை வைத்து பலர் உழவர் சந்தையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
அரசுத்துறை அலுவலர்கள் தங்களுக்கு தேவையானவர்களுக்கு விளைபொருட்களின் விலை கூடுதலாக போட்டு விற்பனை செய்ய அனுமதி வழங்கி வருகின்றனர். மேலும் பெண்களை இழிவாக பேசி வரும் அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார்.
மீனா என்ற பெண் விவசாயி கூறும்போது, இங்கு பணியாற்றும் சின்னதுரை என்ற வேளாண்மை அலுவலர் பெண்களை இழிவாக பேசி தரக்குறைவாக பேசி வருகிறார். மேலும் பலரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு போலியான அட்டைகளை வழங்கி உள்ளார். இது குறித்து கலெக்டரிடமும், அதிகாரிகளிடமும் புகார் செய்தும் எந்த பலனும் அளிக்கவில்லை என்றார்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பிஏபி பாசனத் திட்டத்தில் 4.25 ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்
- அரசு சாா்பில் அரசாணையை ரத்து செய்வதாக உறுதியான முடிவைத் தெரிவிக்க வேண்டும்.
உடுமலை :
கோவை மாவட்டம், ஆழியாற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீா்க் கொண்டு செல்வது தொடா்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதனால், பிஏபி பாசனத் திட்டத்தில் 4.25 ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், இத்திட்டத்தில் விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு குறையும் என்பதால் விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீா்க் கொண்டு செல்வதற்கான அரசாணையை ரத்து செய்யக் கோரி பொள்ளாச்சியில் வருகிற 27 ந் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு, பாலாறு பாசன சங்க பிரதிநிதிகளுடன் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆலோசனை நடத்தினார்.அப்போது பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு ஏற்படுத்த வேண்டும் என்பதால் ஆா்ப்பாட்டத்தை ஒத்திவைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனா். இது தொடா்பாகஅனைத்து சங்கங்களுடனும் ஆலோசனை நடத்தி முடிவைத் தெரிவிக்குமாறு வலியுறுத்தியிருந்தாா். இதைத தொடா்ந்து, விவசாயிகள் சங்கப்பிரதிநிதிகள் பாசன சபை சங்க நிா்வாகிகள், பொள்ளாச்சி பகுதி வணிகா்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனா்.
இது குறித்து திருமூா்த்தி நீா்த்தேக்க முன்னாள் திட்டக் குழுத்தலைவா் மெடிக்கல் பரமசிவம் கூறியதாவது:- செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோளின்படி பாசன சபை சங்க நிா்வாகிகள், வணிகா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது கோப்புபடம் அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் அரசுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டமாக மாற்றிக் கொள்வோம்.
அதேவேளையில், அரசு சாா்பில் அரசாணையை ரத்து செய்வது தொடா்பாக உறுதியளிக்காவிட்டால் ஏற்கனவே அறிவித்தபடி 27-ந் தேதி பொள்ளாச்சியில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா்.
- திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
- தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையம் திறந்து விவசாயிகளிடம் லஞ்சம் வாங்காமல் நெல் கொள்முதல் செய்ய உதவிட வேண்டும்
திருச்சி:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் துணைத்தலைவர் மேகராஜன், செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் இன்று தனது ஆதரவாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
அப்போது திடீரென்று அய்யாக்கண்ணு தனது ஆதரவாளர்களுடன் கலெக்டர் அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் முழுவதும் பாலைவனமாக மாறிவிடும். மேகதாது அணை கட்டாமல் இருக்கவும், அணை கட்ட உதவி வரும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மீது உரிய வழக்கு தொடர வேண்டும்.
உரத்தின் விலை மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே அதையும் குறைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையம் திறந்து விவசாயிகளிடம் லஞ்சம் வாங்காமல் நெல் கொள்முதல் செய்ய உதவிட வேண்டும்.
கோடை காலத்தில் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காததால் 100 நாட்கள் வேலைத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.
தற்பொழுது வருடம் முழுவதும் 100 நாட்கள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்தியதால் மழைக்காலங்களில் நடவு நட, களையெடுக்க ஆட்கள் கிடைக்கவில்லை. எனவே 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் வேலையாட்களை விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நீண்ட நேரமாக கலெக்டர் அலுவலக வாசலில் உட்கார்ந்து கொண்டு மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து அய்யாக்கண்ணு தரப்பிலான விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
- அரசு ஆதார கொள்முதல் விலையாக கிலோவிற்கு 20.60 ரூபாய் நிர்ணயித்த போதிலும் கொள்முதல் மையம் திறக்கப்படாததால், தனியாரிடம் குறைந்த விலைக்கு கிலோ 14 ரூபாய் அளவிற்கு நெல்லை விற்பனை செய்கிறோம்.
- சோளங்காபாளையம் நால் ரோட்டின் மத்தியில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாலும் சாலையின் இருபுறங்களிலும் வழக்கம்போல் போக்குவரத்து பாதிப்பில்லாமல் நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சோளங்காபாளையத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்க கோரி இன்று காலை ஈரோடு-கரூர் பிரதான சாலையில் திடீரென நெல்லை கொட்டியும், டிராக்டரை நிறுத்தியும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-
காலிங்கராயன் கால்வாய் பாசனத்தில் இந்த பகுதியில் மட்டும் சுமார் 700 ஏக்கரில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் இருந்தது. ஆனால் மே மாதத்துடன் அவை அனைத்தும் மூடப்பட்டு விட்டது.
அரசு ஆதார கொள்முதல் விலையாக கிலோவிற்கு 20.60 ரூபாய் நிர்ணயித்த போதிலும் கொள்முதல் மையம் திறக்கப்படாததால், தனியாரிடம் குறைந்த விலைக்கு கிலோ 14 ரூபாய் அளவிற்கு நெல்லை விற்பனை செய்கிறோம். அதையும் வியாபாரிகள் வாங்க மறுத்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சோளங்காபாளையம் நால் ரோட்டின் மத்தியில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாலும் சாலையின் இருபுறங்களிலும் வழக்கம்போல் போக்குவரத்து பாதிப்பில்லாமல் நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கொட்டித்தீர்த்து வரும் மழையால் சுமார் 100 ஏக்கருக்கும் மேலாக நெல் வயல்கள் நீரில் மூழ்கி அழிந்துவிட்டன.
இவற்றுக்கு நிவாரணம் வழங்க கோரி, திருமானூர் ஒன்றியம் டெல்டா பகுதியான கீழக்கா வட்டாங்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குந்தபுரம் கிராமத்தில் நீரில் மூழ்கிய வயல்வெளியில் இறங்கி அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் விவசாயிகள் முத்து, உத்திராபதி, வளர்மதி, ஆனந்த், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநில செயலாளர் அருளானந்தம், உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும், நெற்பயிர்கள் பாதிப்புக்கு காரணமாக உள்ள கீழக்காவட்டாங்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குந்தபுரம்கள்ளூர் சாலையில் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக உயர்த்தி தர வேண்டும் எனவும் மேலும் ஓடைகளை சரியான முறையில் தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட நெல் வயல்களை உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேளாண் துறை அதிகாரிகளை அனுப்பி வைத்து விவசாயிகளை சந்தித்து ஆறுதல் படுத்திட வேண்டும் எனவும், முறையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டம் நடைபெற்றது.

