என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யாக்கண்ணு"

    • கோவை வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து கருப்பு கொடி காட்டும் போராட்டம் வரும் 19-ந்தேதி நடத்த உள்ளோம்.
    • விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும்.

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு, விவசாய சங்க தலைவர் நாகை காவிரி தனபாலன், தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி ஆகியோர் திருச்சி பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    காவிரியில் மாதந்தோறும் நீர் பங்கீடு செய்வதை நிறுத்தி தினந்தோறும் நீர் பங்கீடு செய்து தமிழகத்துக்கு வழங்க வேண்டும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், மரபணு திருத்தப்பட்ட பயிர்களை ஊக்குவிப்பதற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததற்கு கண்டனம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து கருப்பு கொடி காட்டும் போராட்டம் வரும் 19-ந்தேதி நடத்த உள்ளோம்.

    மேலும் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தனிநபர் இன்சூரன்ஸ் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாளை மறுநாள் (17-ந்தேதி) நூற்றுக்கணக்கான விவசாயிகள் திருச்சியில் இருந்து டெல்லி செல்கின்றனர்.

    டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். பீகார் தேர்தலில் கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் வருகிற ஜனவரி மாதம் கள் விடுதலை மற்றும் மதுவிலக்கு மாநாடு நடத்த உள்ளோம்.

    இது 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பேட்டியின்போது விவசாய சங்கத் தலைவர்கள் தஞ்சை பழனியப்பன், தீட்சிதர் பாலசுப்ரமணியன், அர்ஜுனன், வாரணவாசி ராஜேந்திரன், நாகை ராமதாஸ், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மேகராஜன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

    • மேகதாது பகுதி இரண்டு மலைகளுக்கு நடுவில் உள்ளது.
    • தமிழக மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு நேரடியாக வருகிறது.

    கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி ஆகிய அணைகளை நிரப்புகிறது. பின்னர் அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு ஒகேனக்கல் வழியாக தமிழகத்துக்குள் நுழைகிறது. பின்னர் அங்கிருந்து பயணிக்கும் காவிரி ஆறு மேட்டூர் அணையை வந்தடைகிறது.

    மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் இருப்பை பொறுத்து மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடைபெறும். இது தவிர பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் கடலில் கலக்கிறது.

    இதற்கிடையே தமிழக-கர்நாடகா இடையே நீர்பங்கீடு பிரச்சனை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. மழைக்காலங்களில் உபரிநீரை காவிரியில் திறந்து விட்டு தமிழகத்துக்கான பங்கீட்டை அளவுக்கு அதிகமாக வழங்கி விட்டதாக ஒவ்வொரு முறையும் கர்நாடக அரசு கூறி வருகிறது.

    இந்த நிலையில் பெங்களூரு மாநகரின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே ராம்நகர் மாவட்டம் மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிய அணையை கட்ட 2018-ம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்திடம் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.14 ஆயிரத்து 500 கோடியாகும். மேலும் இந்த அணைக்காக 4,716 ஹெக்டேர் காடுகளும், 280 ஹெக்டேர் வருவாய் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர மேகதாது அணையில் 67 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கவும், இதன் மூலம் பாசனம் மற்றும் குடிநீர், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

    கர்நாடகாவின் மேதாது திட்டத்துக்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று நீதி பதி தீர்ப்பு வழங்கினார்.

    அதில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சட்டப்படியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கலாம், எனவே கர்நாடக அரசு கடந்த 2018-ம் ஆண்டு சமர்பித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப மத்திய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரிய தமிழ்நாடு அரசு உள்ளிட்ட மனுக்கள் உரிய நேரத்துக்கு முன்பே தாக்கல் செய்துள்ளதை கருத்தில் கொண்டு மனுக்கள் முடித்து வைத்து தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. இந்த தீர்ப்புக்கு கர்நாடக அரசு வரவேற்று உள்ளது.

    இந்த தீர்ப்பு குறித்து கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் கூறும்போது, மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழ்நாட்டிற்கு அதிக நன்மை பயக்கும். கடினமான காலங்களில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட இந்த திட்டம் உதவும். எனவே இந்த தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

     

    இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-

    1924-ம் ஆண்டில் அப்போதைய சென்னை மாநில அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கர்நாடகம் 5 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே காவிரியில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் 30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய அந்த ஒப்பந்தம் அனுமதி வழங்கியது.

    அதேபோன்று 400, 500 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்தது. மேலும் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேட்டூரில் தமிழக அரசும், கிருஷ்ணராஜ சாகரில் கர்நாடக அரசும் அணைகளை கட்டிக் கொண்டது.

    அதன்படி 50 ஆண்டுகள் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தண்ணீர் கிடைத்தது. அதன் பின்னர் 1974 முதல் 78 வரை தமிழக அரசியல்வாதிகள் தூங்கிக் கொண்டிருந்ததால் கர்நாடகம் கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, ராம தீர்த்தம், லட்சுமண தீர்த்தம் ஆகிய 5 அணைகளை கட்டி இன்றைக்கு 28 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்கிறது.

    நமது சாகுபடி பரப்பளவு சுருங்கியது. பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக விவசாயிகளும், தமிழக அரசும் விழித்துக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காரணத்தினால் 2007-ல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

    அதன் பின்னர் 2018 உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்துக்கு காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் தண்ணீர் அவர்கள் முறையாக திறப்பதில்லை.

    தற்போது மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். அதன் மூலம் பெட்ரோல், டீசல், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை இங்கு செயல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு வசதியாக இருக்கும்.

    மேகதாது பகுதி இரண்டு மலைகளுக்கு நடுவில் உள்ளது. இந்த மலையின் ஒரு பகுதி கர்நாடகத்திலும் இன்னொரு பகுதி தமிழகத்திலும் உள்ளது. அதன் நீர் வழித்தடம் கர்நாடகாவில் உள்ளது.

    தற்போது தமிழக மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு நேரடியாக வருகிறது. மேகதாதுவில் அணை கட்டும் போது அந்த நீர் நமக்கு வராது.

    அதுமட்டுமல்லாமல் காவிரியில் நமக்கு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதே அளவாக உள்ளது. தற்போது மேகதாது அணை அந்த வழித்தடத்தில் கட்டப்படுவதால் நமக்கு வரும் தண்ணீரின் அளவும் தெரியாமல் போய்விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவோடு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இது உச்சநீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் உடையது. இதற்கு முன்பு தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகள் காவிரிநீர் தொடர்பான பிரச்சனை வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து காவிரி நடுவர் மன்றத்தில் முறையிடுங்கள் என கூறியது வரலாறு. அப்படி இருக்கையில் தற்போது மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கைக்கு கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்தது அரசியல் சட்ட சாசனத்தை மீறும் செயலாகும்.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் மவுனமாக உள்ளார். மேகதாதுவில் அணை கட்டினால் சென்னை உள்பட 22 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் பறிபோகும். 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனமாகி விடும். டெல்டா விவசாயிகள் அகதிகளாக வெளியேறும் சூழ்நிலை உருவாகும்.

    எனவே தமிழக முதலமைச்சர் உடனடியாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி மேகதாது விவகாரம் தொடர்பாக உறுதியான முடிவை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனையில் தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போகிறதா? சட்டப்படி என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம் ? என்பதை உடனே தெளிவுப்படுத்த வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் கர்நாடக அரசை மேகதாதுவில் அணை கட்ட விடக்கூடாது. அதனை தடுத்து தமிழகத்தின் உரிமையை மீட்க உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விதைநெல், உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
    • தமிழக முழுவதும் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் பிரச்சாரப் பயணம் மேற்கொள்வது என முடிவு.

    ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு (கட்சி சார்பற்றது) மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் திருச்சியில் இன்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது;-.

    தமிழ்நாட்டில் பெரும்பா லான நெல் கொள்முதல் நிலையங்களில் தினசரி 40 கிலோ எடையுள்ள 500 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவ சாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி, சுமை தூக்கும் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க வேண்டும்.

    மத்திய அரசை காரணம் காட்டாமல், 22 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல் மணிகளை தடையில்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் காலவரை யற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ள விவசாயி கள், தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். விதைநெல், உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.

    கரும்பு, நெல் உள்ளிட்ட விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபக ரமான விலை வேண்டும் என்பன உள்ளிட்ட விவ சாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, அனை த்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து, தமிழக முழுவதும் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் பிரச்சாரப் பயணம் மேற்கொள்வது என முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    மேலும் விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கேட்டு 7-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில், 5 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பேட்டியின் போது மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் வந்தது.
    • போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    திருச்சி:

    விவசாய விளைபொருளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் 120 நாளுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை அந்த மாநில காவல்துறை துணை ராணுவப்படை உதவியோடு விவசாயிகள் மீது தடியடி நடத்தி கைது செய்துள்ளனர்.

    இதனைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி சிந்தாமணி அருகேயுள்ள காவிரி பாலத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் வந்தது.

    அதனை நடுப்பாலத்தில் மறித்து விவசாயிகள் முழக்கமிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு , மாநில துணைத் தலைவர் மேகராஜன்உள்ளிட்ட 20 விவசாயிகளை கைது செய்தனர். இப்போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • மேகதாது அணை கட்ட முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா நினைவிட நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு உள்பட விவசாயிகள் 90 பேரை கைது செய்தனர்.

    சென்னை:

    கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு, தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நேற்று மதியம் எழும்பூர் வந்தனர்.

    பின்னர் அவர்கள் எழும்பூரில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு சென்றனர், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்காக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ரெயில் மூலமாக செல்ல முயன்றனர். இதனையறிந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இந்த நிலையில் அய்யாகண்ணு தலைமையில், விவசாயிகள் 90 பேர், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு சென்றனர். கர்நாடகா மேகதாது அணை கட்ட முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா நினைவிட நுழைவு வாயில் முன்பு அமர்ந்து இன்று காலை 7.30 மணி யளவில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு உள்பட விவசாயிகள் 90 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர்.

    • விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
    • காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து நிஜாமுதீன் சம்பர் க்ராந்தி விரைவு ரெயிலில் நேற்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    இவர்கள் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் கர்நாடக அரசு மாதா மாதம் தண்ணீர் திறக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.

    • வாரணாசி தொகுதிக்கு வருகிற 1-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • நேற்றோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார். தமிழகத்தில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு, பின்னர் விவசாயிகளை திரட்டி டெல்லியில் போராட்டம் நடத்தினார். அரை நிர்வாண போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்தார். என்றபோதிலும் மத்திய அரசு இவரது தலைமையிலான போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை.

    இருந்தபோதிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட விரும்பினார்.

    வாரணாசி தொகுதிக்கு வருகிற 1-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நேற்று (மே 14-ந்தேதி) ஆகும்.

    கடைசி நாளில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். அய்யாக்கண்ணு கடந்த 10-ந்தேதி வாரணாசி செல்லும் ரெயில் பயணம் செய்தார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை ரெயிலில் இருந்து இறக்கிவிட்டதாக தெரிகிறது.

    இதனால் தன்னால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரத்தை நீட்டிக்க வலுயுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அய்யாக்கண்ணு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விக்ரம் நாத் மற்றும் சதீஷ் சந்திரா சர்மா ஆகிய நீதிபதிகள் "இந்த மனு சுயநலத்தை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால், இந்த மனுவை வாபஸ பெற எங்களால் அனுமதிக்க முடியும். நாங்கள் டிஸ்மிஸ் செய்ய நீங்கள் விரும்பினால், எங்களால் டிஸ்மிஸ் செய்ய முடியும்" எனத் தெரிவித்தனர்.

    மேலும், அய்யாக்கண்ணு ஏன் வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புகிறார்? என இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த மனு விளம்பரத்தை பெறுவதற்கானது என பார்க்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அத்துடன் அய்யாக்கண்ணு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.

    • அய்யாக்கண்ணு மற்றும் மாநில துணைத்தலைவர் , சதாசிவம், கென்னடி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும் போது, ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு உரிமை உள்ளது.

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தேர்தல் வாக்குறுதி படி விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்காததை கண்டித்து மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு தொகை தருவதாக கூறி வழங்காத மத்திய அரசை கண்டித்து பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக 120 விவசாயிகள் வாரணாசி புறப்பட்டனர்.

    அவர்களை செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் தமிழக போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து இன்று(புதன்கிழமை) சென்னை சாஸ்திரி பவன் மற்றும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அய்யாக்கண்ணு அறிவித்தார்.

    இதையடுத்து நேற்று மதியம் முதல் அய்யாக்கண்ணு சென்னை செல்வதை தடுப்பதற்காக திருச்சி அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பல்லவன் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை புறப்பட அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் தயாரானார்கள். இதையடுத்து அய்யாக்கண்ணு மற்றும் மாநில துணைத்தலைவர் மேகராஜன், நிர்வாகிகள் உமா காந்த், உத்தண்டன், வெற்றிவேல், சதாசிவம், மதிமன்னன், ராஜேந்திரன், கென்னடி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பின்பு அவர்களை உறையூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதுபற்றி அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும் போது, ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு உரிமை உள்ளது.

    எங்களுக்கு போராட்டம் நடத்துவதற்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி போலீசார் கைது செய்துள்ளனர். ஆகவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறேன் என்றார்.

    • போராட்டத்தில் 15க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • சுடுகாட்டில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மத்திய மாநில அரசுகளை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.

    இன்று கர்நாடகா மற்றும் கேரளா அரசு புதிய அணை கட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி ஆற்றில் நதிநீர் பங்கீட்டின்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் உள்ள தகன மேடையில் விவசாயிகள் பிணம் போல படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தப் போராட்டத்தில் 15க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேற்று முன்தினம் திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் கார்த்திகை தீப கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து கோவில் உதவி ஆணையர் அனிதா கொடுத்த புகாரின் பேரில் அய்யாக்கண்ணு உள்பட 8 விவசாயிகள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று முக்கொம்பு அணைக்கட்டு பகுதியில் தண்ணீரில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சுடுகாட்டில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அய்யாக்கண்ணு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.
    • போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    திருச்சி:

    விவசாயிகளின் விளை பொருள்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    விவசாயிகளின் வேளாண் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் தியானம் இருக்கும் நரேந்திர மோடியை கண்டித்து கன்னியாகுமரியில் போராட்டம் நடத்த புறப்பட்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து உதவி போலீஸ் கமிஷனர் தலைமையிலான போலீசார் இன்று காலை திருச்சி மலர் சாலை அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டுக்கு சென்றனர்.

    பின்னர் அவரை அங்கிருந்து வெளியில் செல்ல விடாமல் வீட்டு காவலில் சிறை வைத்தனர். இதில் மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட சில விவசாயிகள் சிக்கியுள்ளனர்.

    மேலும் அந்த பகுதியில் 20-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கலெக்டர் அலுவலகங்களில் மனு கொடுக்க திட்டம்.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் காவல்.

    திருச்சி:

    திருச்சியில் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டனர். அதற்காக அவர்கள் இன்று அய்யாக்கண்ணுவின் இல்லத்தில் இருந்து திரண்டு புறப்பட தயாராகியுள்ளனர்.

    இந்த நிலையில், திருச்சி மாநகர போலீசார் அங்கு வந்து அவர்களை வெளியில் செல்ல முடியாதவாறு வீட்டு காவலில் அடைத்து சிறை வைத்தனர். மேலும் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுன்னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடிசெய்யவேண்டும், வேளாண் உற்பத்திற்கு 2 மடங்கு லாபம் கொடுக்க வேண்டும், மரபணு மாற்று விதையை அனுமதிக்கக்கூடாது, எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

    இன்று தமிழகம் முழுவதும் விவசாயிகள் கலெக்டர் அலுவலகங்களில் மனு கொடுக்க திட்டமிட்டனர். மற்ற மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திருச்சியில் மட்டும் எங்களை போலீசார் வீட்டுக்காவலில் சிறை வைத்தது வேதனையாக உள்ளது' என்றார். 

    • அய்யாக்கண்ணு, துணைத் தலைவர் உள்ளிட்ட விவசாயிகள் வெளியில் செல்ல முடியாதபடி வீட்டில் சிறை வைத்தனர்.
    • தமிழக காவல்துறையினர் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

    திருச்சி:

    விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரியில் மாதந்தோறும் தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் நாளை டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

    இதற்காக விமானம் மூலம் டெல்லி செல்ல அந்த சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் ஆயத்தம் ஆகினர்.

    இது பற்றி தகவல் அறிந்த மாநகர போலீசார் அதிகாலை 3 மணியளவில் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீடு முன்பு போலீஸ் குவிக்கப்பட்டனர்.

    பின்னர் அய்யாக்கண்ணு, துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் வெளியில் செல்ல முடியாதபடி தடுத்து வீட்டில் சிறை வைத்தனர்.

    இது பற்றி அய்யாக்கண்ணு கூறும்போது, ஜனநாயகத்தில் போராடும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அதை தமிழக காவல்துறையினர் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

    ×