search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delta Districts"

    • டெல்டா மாவட்ட ங்களில் கடந்த 4 நாட்களாகவே கனமழை கொட்டியது.
    • இன்று பகலில் மழையின்றி வெளியில் சுட்டெரித்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களாகவே கனமழை கொட்டியது.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது.

    நேற்று மழை பெய்யவில்லை என்றாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ஆனால் இன்று பகலில் மழையின்றி வெளியில் சுட்டெரித்தது.

    இருந்தாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் 2 ஓட்டு வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளது.

    மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-

    மஞ்சளாறு -18.60, ஒரத்தநாடு -4.20, வெட்டிக்காடு -3.60, கும்பகோணம் -3, திருவிடைமருதூர் -2.30, அய்யம்பேட்டை -2.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது.
    • வங்க கடலில் நகர்ந்து கொண்டிருக்கும் புயல் சின்னம் நாளை ஆந்திர கடலோர பகுதிகளில் நிலை கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வங்க கடலில் தென் கிழக்கு பகுதியில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்தது.

    இதன் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் மிக பலத்த மழை பெய்தது.

    இன்று (புதன்கிழமை) அதிகாலை 5.30 மணி அளவில் அந்த குறைந்த காற்றழுத்தம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை இலாக்கா அறிவித்து இருந்தது. அது புயல் சின்னமாக மாறுவதால் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று சற்று தாமதமாக மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 6 மணி நேர தாமதத்திற்கு பிறகு அந்த புயல் சின்னம் மேலும் வலுவடைய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாக்கா அதிகாரிகள் அறிவித்தனர்.

    வங்க கடலில் மேற்கு வட மேற்கு திசை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்வதால் இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது.

    புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் பரவலாக இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று இரவும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை வானிலை இலாக்கா அதிகாரிகள் கூறுகையில், "மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காரைக்கால் பகுதி ஆகியவற்றில் மிக பலத்த மழை பெய்யும்" என்று கூறி இருந்தனர். அதன்படி தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களிலும் இன்று கணிசமான மழை பெய்தது.

    நாளை (வியாழக்கிழமை) நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாக்கா கூறி உள்ளது. இதற்கிடையே வங்க கடலில் நகர்ந்து கொண்டிருக்கும் புயல் சின்னம் நாளை ஆந்திர கடலோர பகுதிகளில் நிலை கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் பிறகு நாளை மறுநாள் (17-ந்தேதி) அது ஒடிசா கடற்கரையில் நிலை கொள்ளும் என்று வானிலை இலாக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு மேலும் அது வடக்கு திசை நோக்கி திரும்பும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    புயல் சின்னம் வடக்கு வடமேற்கு திசைகளுக்கு திரும்பினாலும் காற்று மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை வரை மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.
    • வாட்டல் நாகராஜை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    காவிரியில் உரிய தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசு மற்றும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் , கர்நாடகாவில் போராட்டத்தை தூண்டி விடும் பா.ஜ.க. மற்றும் கன்னட அமைப்பு நிர்வாகிகளை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்பு தலைவர் வாட்டல் நாகராஜ் உருவப்படம் அடங்கிய பேனருக்கு மலர் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது பேனர் முன்பு நின்று ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாட்டல் நாகராஜை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த நூதன போராட்டத்தால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், கூத்தாநல்லூர், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
    • பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பால், மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட வலியுறுத்தியும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் பா.ஜ.க மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்தும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய 8 டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அழைப்பு விடுத்தது.

    இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்கள், இயக்கத்தினர், அமைப்பினர், வணிகர் சங்கத்தினர், மாணவர் அமைப்பினர் முழு ஆதரவு தெரிவித்தனர்.

    அதன்படி இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் காய்கறி, மளிகை, ஓட்டல், செல்போன், பேன்சி, அரிசிக்கடை உள்பட பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டன.

    தஞ்சையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பர்மா பஜார், கீழவாசலில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. இதே போல் நகரில் பல்வேறு இடங்களில் கடைகள் மூடப்பட்டன. காமராஜர் மார்க்கெட், உழவர் சந்தை மூடப்பட்டதால் வெறிச்சோடின.

    கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர், பூதலூர், வல்லம், திருவையாறு உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், கூத்தாநல்லூர், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கவில்லை. அதே போன்று ஆட்டோக்களும் ஓடவில்லை. ஆட்டோக்கள் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டன.

    திருவாரூர் விஜயபுரம் காய்கறி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இதனால் திருவாரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அதேபோன்று காவல்துறை வாகனங்களும் திருவாரூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப்படும் 45 அரசு பஸ்களும் இன்று இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், திருமருகல், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம், திருப்பூண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 20,000க்கும் மேற்பட்ட கடைகள், 3000 உணவகங்களை அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பால், மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 13 மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும், முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார் கோவில், திருக்கடையூர், சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் 11,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பால், மருத்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தன.

    உணவகம், பேக்கரி, டீக்கடைகள், ஸ்டேஷனரி என மொத்தம் 54 கடைகளில் 53 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஒரு டீக்கடை மட்டும் திறந்திருந்தது.

    திருச்சி மாநகரின் பிரதான மார்க்கெட் ஆன காந்தி மார்க்கெட் இன்று வழக்கம் போல் இயங்கியது. பஸ்கள், ஆட்டோ, கார்கள் வழக்கம் போல் இயங்கியது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய வட்டங்கள் டெல்டா பாசனத்தில் காவிரி நதிநீர் மூலம் பாசனம் பெரும் பகுதியாக இருந்து வருகிறது.

    இதில் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கீரமங்கலம் மற்றும் கடைமடை பகுதியான மேற்பனைக்காடு உள்ளிட்ட 2 ஊர்களில் மட்டும் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    கீரமங்கலம் பேரூராட்சியில் டீக்கடைகள், உணவகங்கள், பூ கமிஷன் கடைகளை தவிர்த்து 80 சதவீத வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதே போல மேற்பனைகாடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் சுமார் 210 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பால், மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புத்தூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    முழு அடைப்பு காரணமாக டெல்டா மாவட்டங்களில் 1 லட்சத்துக்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு விவசாயிகள், தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக, மத்திய அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    திருச்சியில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் அக்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டெல்டா மாவட்டங்களில் பஸ் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. அரசு, தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. ஆட்டோ, வேன்களும் இயக்கப்பட்டது.

    மேலும் டெல்டா மாவட்டங்களில் மருந்து, பால் கடைகள் மட்டும் இயங்கின. பெட்ரோல் பங்குகளும் செயல்பட்டது.

    எனினும் கடைகள் அடைக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்கள் முடங்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்ற பிடிவாதத்தில் உறுதியுடன் உள்ளது.
    • காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து நாளை டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் உயிர்நாடியாகவும், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுவதில் மேட்டூர் அணை முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீரை நம்பி தான் டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்படுகிறது. மேலும் குடிநீர் தேவையும் மேட்டூர் அணை பூர்த்தி செய்து வருகிறது. சில இடங்களில் பம்ப் செட் மூலம் சாகுபடி செய்தாலும் மேட்டூர் அணையை நம்பி தான் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி திறந்து விடப்பட்டது. அந்த சமயத்தில் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்தது. குறிப்பிட்ட தேதியில் திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை விஞ்சியும் சாகுபடி செய்யப்பட்டன.

    விவசாயிகள் நம்பிக்கையுடன் குறுவையில் நல்ல விளைச்சல் பெறலாம் என்ற பெரும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் சில நாட்களில் நிலைமை மாறியது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைய தொடங்கியது. தென்மேற்கு பருவமழையும் கை கொடுக்கவில்லை. மேலும் சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்புப்படி தமிழகத்திற்கு மாத வாரியாக வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காமல் வஞ்சித்தது. இந்த காரணங்களினால் குறுவை பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர். 3 லட்சம் ஏக்கர் அளவுக்கு தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் காய்ந்து கருகின.

    இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளானார்கள். தொடர் போராட்டங்கள் நடத்தியும் கர்நாடகா அரசு இறங்கி வரவில்லை. தமிழக அரசு பலமுறை உரிய அழுத்தம் கொடுத்தும் தண்ணீர் திறந்து விட மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு டெல்டாவில் குறுவை பயிர்கள் காவிரி நீரின்றி காய்ந்து சேதம் அடைந்தன. எஞ்சிய பயிர்களை காப்பாற்றவும் தண்ணீர் திறந்து விடவில்லை. அடுத்து சம்பா சாகுபடி தொடங்குவதே கேள்வி குறியாக தான் உள்ளது.

    இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வந்தன. இன்று அணையின் நீர்மட்டம் 30 அடியாக குறைந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 4 மாதத்திற்கு பிறகு இன்று காலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் மீன் வளம், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமான மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி தண்ணீர் நிறுத்தப்படும்.

    இந்நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் நிறுத்தப்படுவதால் டெல்டா விவசாயிகள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவிப்பில் உள்ளனர். எஞ்சிய குறுவை பயிர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். பல இடங்களில் பம்பு செட் மூலம் தண்ணீர் இறைத்து பயிர்களுக்கு பாய்ச்சும் அவல நிலை நடந்து வருகிறது.

    மேலும் அரசு அறிவித்த இழப்பீடு தொகையும் குறைவானது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் கூறும்போது:-

    வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் பெருமளவில் கருகிவிட்டன. கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்ற பிடிவாதத்தில் உறுதியுடன் உள்ளது.

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி தான் தமிழகத்திற்கு உரிய காவிரி தண்ணீர் கேட்கிறோம். ஆனால் அதையும் தராமல் வஞ்சிக்கிறது. இவ்வளவுக்கும் கர்நாடகாவில் பெரும்பாலான அணைகளில் 80 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் உள்ளது. ஆனால் காவிரியில் அவர்கள் போதிய தண்ணீர் திறந்து விடாததால் குறுவை பயிர்கள் வீணாகி விட்டது. இன்று நீர்மட்டம் குறைந்து வந்ததால் மேட்டூர் அணையில் இருந்தும் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். எஞ்சிய குறுவை பயிர்களை காப்பற்றவும் தண்ணீர் இல்லை. அடுத்து சம்பா சாகுபடி தொடங்கவும் தண்ணீர் இல்லை. இதற்கும் மேலாக நீரின்றி பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடு தொகையும் கண்டிப்பாக போதாது. ஏனென்றால் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு கேட்டிருந்தோம். ஆனால் அறிவித்ததோ ஏக்கருக்கு ரூ.5300 தான். நாங்கள் கேட்டதிலிருந்து கால் பங்கு கூட இழப்பீடு தொகை அறிவிக்கவில்லை.

    ஒருபுறம் கர்நாடக அரசு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடாமல் ஏமாற்றி வருகிறது. மறுபடியும் மத்திய அரசு இதனை வேடிக்கை பார்க்கிறது. இன்று மேட்டூர் அணையில் தண்ணீரும் நிறுத்தப்பட்டு விட்டது. இப்படி பல்வேறு கட்ட பிரச்சனைகளால் டெல்டாவில் குறுவை பயிர்கள் வீணாகி விட்டன. கஷ்டப்பட்டு கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்களை காப்பாற்ற முடியாமல் பரிதவிப்பில் உள்ளோம். அடுத்து சம்பா சாகுபடி தொடங்கலாமா? வேண்டாமா ? என்பதை அரசு உறுதியுடன் அறிவிக்க வேண்டும். ஏனென்றால் காவிரி நீரை நம்பி தான் பெருமளவில் சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. கர்நாடக அரசு உரிய காவிரி நீரை வழங்கினால் மட்டுமே அடுத்து சாகுபடி பற்றி யோசிக்க முடியும்.

    காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து நாளை டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நடைபெறும். அதன் பிறகும் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் போராட்டம் மேலும் விரிவடையும் என்றார்.

    • டெல்டா மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகிவிட்டன.
    • கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இன்று காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூட்டியக்கத்தைச் சார்ந்த தி.மு.க விவசாய அணி செயலர் ஏ.கே.எஸ். விஜயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் குறுவை தொகுப்பு திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்பட்டதால் வழக்கத்தை விட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. காவிரியில் கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகிவிட்டன.

    எனவே எஞ்சிய குறுவை பயிரை பாதுகாத்திடவும், சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்கிடவும் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

    தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் உள்ள நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகத்தில் இரண்டு முறை முழு அடைப்பு போராட்டத்தை பா.ஜ.க மற்றும் கன்னட அமைப்புகள் நடத்தின.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உடனடியாக காவிரியில் மாத வாரியாக கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தியும், கர்நாடகத்தில் போராட்டத்தைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வரும் பா.ஜ.க மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும், தமிழக அரசு பல முறை மத்திய அரசிடம் வலியுறுத்திய பின்பும் பாராமுகமாக செயல்படும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 11 ஆம் தேதி (புதன்கிழமை) முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இப்போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், அனைத்து விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    முழு அடைப்பு தொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோரை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளோம். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசி உள்ளோம்.

    டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு சூழலுக்கு ஏற்ப இழப்பீட்டை முதலமைச்சர் அறிவித்துள்ளார். அவர் எப்போதுமே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவர் சண்முகம், மாநில பொதுச்செயலர்கள் மாசிலாமணி, சாமி. நடராஜன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் பெரியசாமி, விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் தெய்வசிகாமணி, திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ. துரை. சந்திரசேகரன், கூட்டியக்க நிர்வாகிகள் காளியப்பன், பழனிராஜன், என்.வி. கண்ணன், செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • கடந்த சில நாட்களாக 5000 கனஅடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது. பின்னர் அதையும் குறைத்தது.
    • 161 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதால் தங்களால் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் மறுத்து வருகிறது.

    சென்னை:

    காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் செய்து வருகிறது.

    இதன் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்துவிட்டது.

    காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை தரவேண்டிய நீரில் மூன்றில் ஒரு பங்கை கூட தராத நிலையில் இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. இதில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

    அதன்படி தமிழகத்திற்கு காவிரியில் 5000 கன அடிநீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை முதலில் உத்தரவிட்டன. அதற்கு கர்நாடகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த சில நாட்களாக 5000 கனஅடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது. பின்னர் அதையும் குறைத்தது.

    இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு, அடுத்த 15 தினங்களுக்கு தொடர்ந்து 3000 கன அடி நீர் வீதம் தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து பெங்களூருவில் பந்த் நடந்தது. மேலும் மாநிலம் தழுவிய அளவில் இன்று கர்நாடகத்தில் பந்த் நடந்து வருகிறது.

    தமிழகத்திற்கு 3000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்ட நிலையில் அதனை பின்பற்ற கர்நாடகா அரசு பிடிவாதமாக மறுப்பு தெரிவித்து வருகிறது. 161 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதால் தங்களால் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் மறுத்து வருகிறது.

    இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டது.

    இதில் தமிழகம் சார்பில் நீர் வளத்துறை செயலாளர் (பொறுப்பு) டாக்டர் மணிவாசன், காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் எல்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

    அப்போது தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். வினாடிக்கு 12,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட் டால்தான் நெற் பயிர்களை காப்பாற்ற முடியும் என்று வலியுறுத்தினார்கள்.

    ஆனால் இதற்கு கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் எங்களுக்கே தண்ணீர் போதாது என்று கூறினார்கள்.

    கர்நாடகாவின் இந்த பிடிவாதம் காரணமாக இந்த ஆண்டு டெல்டா மாவட்டத்தில் ஒருபோக சாகுபடிக்கு உலை வைத்துவிடும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறக்க முடியாத காரணத்தால் டெல்டா மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த குறுவை பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்துவிட்டது.
    • குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு எவ்வளவு தொகை நிவாரணமாக அறிவிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது போல் இந்த ஆண்டும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீரை நம்பி காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகள் குறுவை நெல் விதைத்தனர். சுமார் 5 லட்சம் ஏக்கர் அளவுக்கு குறுவை நெல் பயிரிடப்பட்டிருந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சாகுபடிக்கு தேவையான நீர் கடைமடை வரை சென்றடையவில்லை.

    குறிப்பாக நாகை மாவட்டத்தில் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்ட நிலையில் விவசாயிகள் ஆற்றுப்பாசனத்தை முழுவதுமாக நம்பி இருந்தனர். ஆனால் பாசன நீர் கிடைக்காமல் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகியது. கர்நாடக மாநில அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு போதிய தண்ணீர் திறந்துவிடப்படாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

    இதனால் மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறக்க முடியாத காரணத்தால் டெல்டா மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த குறுவை பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்துவிட்டது.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் வேளாண்மைத் துறை ஆணையர் சுப்பிரமணியன் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் குறுவை சாகுபடி செய்யப்பட்ட இடங்களில் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்களை பார்வையிட்டு சேத மதிப்புகளை கணக்கிட்டனா். அங்குள்ள விவசாயிகள், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதுமட்டுமின்றி சம்பா சாகுபடிக்கு தயாராகும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் குறுவை பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கேற்ப விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    இதில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்துறை கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில் குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு எவ்வளவு தொகை நிவாரணமாக அறிவிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.

    இதுகுறித்து உயர் அதிகாரி கூறுகையில், விவசாயிகளுக்கு நெற்பயிர்களுக்கான இழப்பீடு எவ்வளவு என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

    • விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
    • விருந்தினர் மாளிகையில் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வரும் நோக்கில் மேற்கொண்ட ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

    அவ்வகையில், இன்று டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுப்பணியை தொடங்கினார். காவிரி டெல்டா பாசன கால்வாய், நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார். முதலில் தஞ்சை மாவட்டம் முதலை முத்துவாரி பகுதியில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். வரைபடம், புகைப்படங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் குறித்து முதல்வருக்கு அதிகாரிகள் விளக்கினர். அதன்பின்னர் தஞ்சை அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

    குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி தொடங்க உள்ள நிலையில் கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் சென்றடைய வேண்டும் என்பதற்காக தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அவர் ஆய்வு செய்கிறார்.

    நாகை, திருவாரூர் என ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்த பிறகு 11-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுகிறார்.

    முதல்வரின் வருகையை முன்னிட்டு திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளது.
    • நாகை, திருவாரூர் என ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு செல்கிறார்.

    சென்னை:

    குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தண்ணீர் திறக்க உள்ளார்.

    இதையொட்டி காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி தொடங்க உள்ள நிலையில் கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் சென்றடைய வேண்டும் என்பதற்காக தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

    இந்த பணிகளை பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந்தேதி இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு 9-ந் தேதி தஞ்சாவூர் சென்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். நாகை,திருவாரூர் என ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்த பிறகு 11-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். 12-ந் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை அருகே உள்ள கொக்கேரி கிராமத்தில் பீமனோடை வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக 2 நாள் பயணமாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சைக்கு சென்றார்.

    அவர் தஞ்சை அருகே உள்ள கொக்கேரி கிராமத்தில் பீமனோடை வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து, இன்று 4 மாவட்டங்களில் 7 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    2 நாள் ஆய்வு பணி முடிவடைந்ததை அடுத்து, டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வு குறித்து திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டியளித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    அனைத்து நீர்வழித் தடங்களிலும் தூர்வாரும் பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது.

    தூர்வாரும் பணிகளால் வடகிழக்கு பருவமழையின்போது சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்காமல் காக்கப்படும்.

    மகசூ, பெருக்கம், மகிழும் விவசாயி என்ற வாக்குறுதி செயல்படுத்தப்படுகிறது.

    காவிரி நீரை முறையாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும்.

    நடப்பாண்டில் 1.56 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை நீர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், தமிழகம் தற்போது அமைதிப் பூங்காவாக இருக்கிறது. கலவரம், சாத, மத மோதல், துப்பாக்கிச்சூடு தற்போது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. காபோன் பிரதமருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு
    அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் மலர் தூவி நீரை திறந்து வைத்தனர்.
    டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனை,  அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் மலர் தூவி நீரை திறந்து வைத்தனர்.

    கடந்த 24ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படியுங்கள்.. அரசு நிலங்களை அபகரிக்க உதவும் புதிய உத்தரவை திரும்ப பெற வேண்டும்- சீமான்
    ×