என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய குழு"

    • தமிழகத்​துக்கு 3 குழுக்​களை மத்​திய உணவுத்துறை அனுப்​பி​யுள்​ளது.
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 21 லட்சம் ஹெக்டேரில் நெல், சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்த நெற்பயிரில் 3.60 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 1,819 கொள்முதல் நிலையங்கள் மூலம் 9.67 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு முன்னரே தண்ணீரில் மூழ்கின. அறுவடை செய்த நெல்லும் அதிக ஈரப்பதத்துடன் உள்ளது. எனவே, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17-ல் இருந்து 22 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தமிழகத்துக்கு 3 குழுக்களை மத்திய உணவுத்துறை அனுப்பியுள்ளது.

    இதன்படி முதல் குழுவில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் ஆர்.கே. ஷாகி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல் சா்மா, தனூஜ் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 2-வது குழுவில் அந்த நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங், ஷோபித், ராகேஷ் பரலா ஆகியோரும் 3-வது குழுவில் உதவி இயக்குநர் டி.எம்.பிரீத்தி, பிரியா பட், அனுபமா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    தமிழகம் வந்துள்ள இந்த 3 மத்திய குழுக்களும் இன்று தங்களது ஆய்வை தொடங்கினார்கள். அதன்படி முதல் குழுவினர் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இதில் அயப்பாக்கம், வெள்ள ப்பந்தல், தத்தலூர், வழுவத்தூர், ஈசூர், பூதூர், படாளம், கள்ளபிரான்புரம், பொளம்பாக்கம், கயப்பாக்கம் ஆகிய 10 இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் அவர்கள் சுமார் 15 நிமிடங்கள் ஆய்வு செய்தனர். அவர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    2-ம் குழுவினர் இன்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நாளை திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், வருகிற 27-ந்தேதி கடலூர் மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொள்கிறார்கள். 3-ம் குழுவினர் இன்று திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். நாளை தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இந்த குழுக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நெல் கொள்முதலுக்கு 17 சதவீதம் ஈரப்பதம் அளவாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
    • ஒரு குழுவில் ஒரு துணை இயக்குனர் மற்றும் 2 தொழில்நுட்ப அலுவலர் இடம் பெற்றுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, 80 சதவீத அறுவடை பணிகள் முடிந்துள்ளன. இதில் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்து குவித்துள்ளனர்.

    இந்த நிலையில் போதிய முன்னேற்பாடு செய்யாதது, லாரிகள் போதிய அளவு இல்லாததால், ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் தாமதமாவதால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி உள்ளன. இதனால் விவசாயிகள் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இந்த சூழலில் கடந்த 16-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் அவ்வப்போது மழை பெய்து மழைநீரில் நெல் மூட்டைகள் நனைந்து, நெல் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

    நெல் கொள்முதலுக்கு 17 சதவீதம் ஈரப்பதம் அளவாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், தற்போது 17 சதவீதம் வரை இருக்க வேண்டும் என்பதை கடந்து 20 முதல் 25 சதவீதம் வரை நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதை கொள்முதல் செய்ய மறுக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களிலும், சாலையிலும் நெல்லை கொட்டி வைத்துக் காத்துக் கிடக்கின்றனா்.

    எனவே, 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திய நிலையில், இதுதொடா்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதமும் அனுப்பியது.

    இதையடுத்து, டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து ஈரப்பதத்தை ஆய்வு செய்ய, மத்திய அரசு தலா 3 அதிகாரிகளை கொண்ட 3 குழுக்கள் அமைத்துள்ளன. இதில் ஒரு குழுவில் ஒரு துணை இயக்குனர் மற்றும் 2 தொழில்நுட்ப அலுவலர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் இன்று (சனிக்கிழமை) முதல் தொடர்ந்து 3 நாட்கள் தமிழகத்தின் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்ய இருந்தனர்.

    அதன்படி, தஞ்சையில் இன்று 2-ம் குழு வண்ணாரப்பேட்டை, பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ராராமுத்திரை கோட்டை ஆகிய 4 இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய இருந்தனர். இந்த ஆய்வு பணிகளை முடித்து பிற்பகலில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஆய்வு செய்ய இருந்தனர்.

    இந்த நிலையில் மத்திய குழுவின் ஆய்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக ஆய்வு பணி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆய்வு செய்யும் தேதி, நேரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    22 சதவீத ஈரப்பதத்திற்கு அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு இந்த ஆய்வு ஒத்திவைப்பு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இருந்தாலும் மீண்டும் மத்திய குழுவினர் உடனடியாக நெல்லின் ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு மழைநீர் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு வருகிறதா என்பதையும் தெரிந்து கொண்டார்.
    • 100 நாள் வேலை திட்டத்தின் பயன்கள், வாரத்திற்கு எத்தனை நாட்கள் வேலை வழங்கப்படுகிறது, ஒரு நாள் வேலைக்கான கூலி என்ன போன்றவை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றிய ஊராட்சிகளில் திருக்கடையூர், தலையுடையார் கோயில்பத்து, மற்றும் முடிதிருச்சம்பள் ஊராட்சியில் உள்ள வட்டார நாற்றங்கால் உற்பத்தி மையத்தை ஆய்வு செய்தனர். மழை நீர் சேகரிப்பு குறித்தும் கேட்டறிந்தனர்.

    இதில் மத்திய ஆய்வு குழு பொறுப்பு அலுவலரும், மத்திய ஜவுளித்துறை துணை செயலாளருமான சுக்லா, தொழில்நுட்ப விஞ்ஞானி ஸ்ரீ சௌஸ்ரீ பாபு பாலாசாஹிப் மற்றும் குழுவினர் 100 நாள் வேலை திட்ட பெண்களிடம் கலந்துரையாடினர்.

    அப்போது பொறுப்பு அலுவலர், 100 நாள் வேலை திட்டத்தின் பயன்கள், வாரத்திற்கு எத்தனை நாட்கள் வேலை வழங்கப்படுகிறது, ஒரு நாள் வேலைக்கான கூலி என்ன போன்றவை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு மழைநீர் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு வருகிறதா என்பதையும் தெரிந்து கொண்டார். மேலும் நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்துவதற்கான சோதனை ஆய்வு செய்து காண்பிக்கப்பட்டது.

    இதனையடுத்து மத்திய குழுவினர் அந்த மையத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மரங்க் கன்றுகள் பூக்கள், பழங்கள், மூலிகை செடிகள் உள்ளிட்டவைகளின் நாற்றாங்களை பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள், மைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, தண்ணீர் ஊற்றினர். ஆய்வின்போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், உதவி திட்ட அலுவலர் பிரபாகர், செயற்பொறியாளர் பிரேம்குமார், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, குத்தாலம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பன்னீர்செல்வம், ஜனகர், தமிழ்ச்செல்வன் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ஸ்ரீதர், ஊராட்சி செயலாளர் முருகவேல் மற்றும் அலுவலர்கள், மகளீர் சுயகுழுவினர் உள்ளிட்ட பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
    • மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.

    அந்தக் கடிதத்தில், 'பிப்ரவரி மாதத்தில் (இம்மாதம்) நெல் அறுவடை செய்ய தயாராக இருந்த நேரத்தில் துரதிஷ்டவசமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் சுமார் ஒரு லட்சம் எக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன என்று ஆரம்ப மதிப்பீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்து.

    வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி அறுவடை பணியை மீண்டும் தொடங்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பதம் அளவு அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சி அடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவும், சேதம் அடைந்த நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை தளர்த்தவும் தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

    இந்தக் கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளதாக தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை வருகிறது.

    • காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்தன.
    • பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

    சென்னை:

    தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.

    இந்தக் கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக் குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளதாக தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து மத்திய குழு இன்று ஆய்வு செய்கிறது. யூனுஸ், பிரபாகரன், போயா ஆகிய தொழிநுட்ப வல்லுநர்கள் அடங்கிய மத்திய குழு இன்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளையும், பயிர் பாதிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    இந்த ஆய்வின் முடிவில், அவர்கள் மத்திய அரசுக்கு அளிக்கும் விவரங்களின் அடிப்படையில் மத்திய அரசு ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து தமிழக அரசுக்கு உத்தரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு பணியை ஆரம்பித்தனர்.
    • மத்திய குழுவிடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 1-ந் தேதி முதல் 4-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் பலத்த மழை பெய்தது.

    பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான சுமார் 2.10 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாரம் தாங்காமல் சாய்ந்தது. மேலும் வயல்களில் தேங்கிய தண்ணீரால் நெற்பயிர் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதேபோல் உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களும் சேதமாகின.

    திடீர் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

    அதன்படி கடந்த 5-ந்தேதி வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து சென்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் பயிர் சேதங்களை ஆய்வு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து 6-ந்தேதி பயிர் சேத விவரங்கள் குறித்த அறிக்கையினை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சமர்ப்பித்தனர். இதையடுத்து 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம், சேதமடைந்த இளம்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம், உளுந்து விவசாயம் செய்ய 50 சதவீதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் கடிதம் எழுதினார். அதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    அதனை ஏற்று ஈரப்பத தளர்வு அறிவிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழுவை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. அதன்படி சென்னையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ், பெங்களூருவில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன், போயோ ஆகியோர் அடங்கிய மத்திய குழு இன்று டெல்டா மாவட்டங்களில் தங்களது ஆய்வை தொடங்கினர்.

    முதற்கட்டமாக இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு பணியை ஆரம்பித்தனர். அங்கு கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர்.

    மேலும் நெல்லின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்து கொண்டனர். கொள்முதல் செய்யப்படும் விதம், நாள்தோறும் எவ்வளவு அளவு கொள்முதல் செய்யப்படுகிறது போன்ற பல்வேறு விவரங்களை பணியாளர்களிடம் கேட்டறிந்தனர்.

    அப்போது அங்கு திரண்ட விவசாயிகள், தங்கள் நிலங்களில் சேதமடைந்த அழுகிய நெற்பயிரை கையில் எடுத்து வந்து மத்திய குழுவினரிடம் காண்பித்தனர். அதனையும் புகைப்படம் எடுத்துக்கொண்ட அதிகாரிகள் மாதிரிக்காகவும் கொண்டு சென்றனர்.

    அப்போது மத்திய குழுவிடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமாகியது. அதோடு நெல்லின் ஈரப்பதமும் அதிகரித்துள்ளது.

    தற்போது 19 சதவீதம் வரையிலான நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் மழையால் ஈரப்பதம் அதைவிட அதிகரித்துள்ளது. எனவே 22 சதவீதம் வரையிலான ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

    கொள்முதல் நிலையங்களில் தினமும் 1000 மூட்டை கொள்முதல் செய்யப்படுவதை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை வாங்கி மத்திய அரசிடம் பேசி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குழுவினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து மத்திய குழுவினர் திருக்குவளை தாலுகா கச்சநகரம் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். தொடர்ந்து வலிவலம் உள்ளிட்ட பல்வேறு கொள்முதல் நிலையங்களில் ஆய்வு நடத்த உள்ளனர்.

    நாளை (9-ந்தேதி) திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுகள் அனைத்தையும் முடித்து கொண்டு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகின்றனர். அதன்பின்னர் வருகிற 13-ந்தேதி டெல்லியில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்கிறார்கள். அதன்பின்னரே நெல்லின் ஈரப்பத தளர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பாதித்து இருவர் உயிரிழப்பு.
    • மத்திய சுகாதாரத்துறை மந்திரி நிபா வைரஸ் பாதிப்பை உறுதிப்படுத்தியது.

    கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உறுதிப்படுத்தி இருக்கிறார்.

    இதுதவிர கேரளா மாநிலத்திற்கு இரண்டு பேர் அடங்கிய சுகாதார குழுவினரை அனுப்பி வைத்துள்ளார். இந்த குழு கேரளா மாநிலத்தில் நிலவும் சூழல் பற்றி ஆய்வு செய்ய உள்ளது.

    மேலும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதை தொடர்ந்து, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கேரளா மாநில சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. இதோடு மாவட்டம் முழுக்க எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.

    நிபா வைரஸ் மூலம் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசின் அதிகாரிகள் உயர்மட்டக்குழு வருகிற 13-ந் தேதி கோவை வருகிறது.
    • விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    தென்னை விவசாயிகள் மற்றும் தென்னை நார் தொழிற்சாலைகளின் கோரிக்கைகள், பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அரசின் அதிகாரிகள் உயர்மட்டக்குழு வருகிற 13-ந் தேதி கோவை வருகிறது.

    கோவையில் கடந்த வாரம் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதியளித்தபடி இந்த குழு தேங்காய், கொப்பரை விலை, தென்னை நார் தொழில் தொடர்பாக கோவை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு நேரில் வருகை தருவர். விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மத்திய குழு 2 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் ஆய்வு செய்ய உள்ளது.
    • மத்திய குழு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திவிட்டு டெல்லி திரும்ப முடிவு.

    மிச்சாங் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மத்திய குழு சென்னை வருகிறது.

    டிசம்பர் 11ம் தேதி சென்னை வரும் மத்திய குழுவினர், 2 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

    பிறகு, டிசம்பர் 12ம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திவிட்டு மத்திய குழுவினர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நாளை முதல் இரண்டு நாட்கள் நான்கு மாவட்டங்களில் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு.
    • வியாழக்கிழமை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின், அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

    வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் காரணமாக, வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகியவற்றில் கடந்த 3 மற்றும் 4-ந்தேதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்தது. கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்தன. வெள்ள சேதத்தை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த 7-ந்தேதி சென்னை வந்தார். ஹெலிகாப்டரில் சென்று வெள்ள சேதத்தை பார்வையிட்ட அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று உறுதி அளித்தார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்கட்ட நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க மத்திய அரசை வலியுறுத்தினார். மத்திய அரசும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.450 கோடியை வழங்குவதாக அறிவித்தது.

    இந்த நிலையில், புயல் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழு இன்று மாலை 4 மணிக்கு சென்னை வருகிறது.

    இந்த குழுவில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நிதித்துறை (செலவினம்), மின்சாரத்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடம் பெற்றிருக்கின்றனர்.

    மத்திய குழுவினர் நாளை மற்றும் நாளை மறுநாள் 2 பிரிவாக பிரிந்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.

    ஆய்வு பணிகள் முடிந்ததும் வரும் 14-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

    அதன் பின்னர் டெல்லி புறப்பட்டு செல்லும் மத்திய குழுவினர், சேத மதிப்பு இறுதி அறிக்கையை ஒரு வார காலத்துக்குள் தயார் செய்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து பேசி விட்டு அதன் பிறகு மத்தியக் குழுவினர் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.
    • வெள்ள சேத மதிப்பு விவரங்களை விரிவாக தயாரித்து மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள்.

    சென்னை:

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிச்சாங் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்திருந்தனர்.

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (என்.டி.எம்.ஏ.) ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் திமான்சிங், வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை இணை இயக்குனர் ஏ.கே.சிவ்ஹரே, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விஜயகுமார், நிதித்துறை சார்பில் ரங்கநாத் ஆடம், மின்சாரத்துறை துணை இயக்குனர் பவ்யா பாண்டே ஆகிய 6 பேர் வந்திருந்தனர்.

    அவர்கள் நேற்று காலை தலைமைச் செயலகம் சென்று தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்திய பிறகு தென்சென்னைக்கு ஒரு குழுவும், வடசென்னை பகுதிக்கு மற்றொரு குழுவினரும் சென்று பார்வையிட்டனர்.

    பட்டாளம், புளியந்தோப்பு, மணலி, வியாசர்பாடி, கணேசபுரம், வடபெரும்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளை பார்வையிட்டனர்.

    இன்று 2-வது நாளாக மத்திய குழுவினர் இடம்பெற்றிருந்த சிவ்கரே, விஜயகுமார், பவ்யா பாண்டே ஆகியோர் நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி அருகே உள்ள கழிவுநீரகற்று பம்பிங் ஸ்டேஷன் கீழ்ப்பாக்கம் குடிநீர் நீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர்.

    இதனை தொடர்ந்து வில்லிவாக்கம் அம்பேத்கர் நகர், சிட்கோ நகர், அம்பத்தூர் எஸ்டேட் சிட்கோ தொழிற்பேட்டை பகுதிகளை பார்வையிடுகின்றனர். அதன் பிறகு பாடி, கொரட்டூர் பகுதிகளுக்கு சென்று வெள்ள சேத பகுதிகளை பார்க்கின்றனர்.

    கொரட்டூரில் மழை நீர் புகுந்த வீடுகளை பார்த்ததுடன் வடக்கு அவென்யூ ரோடு, பம்பிங் ஸ்டேஷன், ஏரிக்கரை பகுதிகளுக்கும் சென்றும் பார்வையிடுகின்றனர். அவர்களுக்கு மாநகராட்சி உயர் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

    இதே போல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெள்ள சேதங்களை மறறொரு குழுவில் இடம் பெற்றிருந்த குணால் சத்யார்த்தி, திமான்சிங், ரங்கநாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் முதலில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், நன்மங்கலம் ஏரி, சமத்துவ பெரியார் நகர், மூவேந்தர் நகர், பாரதியார் நகர், குட்வில் நகர் பகுதிகளை பார்வையிட்டனர்.

    இடுப்பளவு தண்ணீரில் மூழ்கிய வரதராஜபுரம்-ராயப்பா நகர், மகாலட்சுமி நகர் பாலம், தாம்பரம்-முடிச்சூர் ஸ்ரீபெரும்புதூர் சாலை ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.

    இன்று மதியம் குன்றத்தூர் வேல்நகர், பிரிதிவிநகர், செம்பரம்பாக்கம் அமரம்பேடு, மாதா கல்லூரி அருகே உள்ள பகுதிகள், பூந்தமல்லி நசரத்பேட்டை, அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய பகுதி, திருவேற்காடு, ஐ.சி.எப். காலனி, நூம்பல், முகவலிவாக்கம் திருவள்ளூர் நகர், மணப்பாக்கம் முகலிவாக்கம் சாலை, பெல்நகர் காவ்யா கார்டன், ராமமூர்த்தி அவென்யூ ஆகிய பகுதிகளுக்கும் சென்று பார்வையிட உள்ளனர்.

    இதே போல் மற்றொரு குழுவினர் புழல் ஏரி, சோழவரம் ஏரி, ஆவடி வீட்டு வசதி வாரியம், பருத்திப்பட்டு, பொன்னேரி, திருவேற்காடு, பஞ்செட்டி சாலை, சுப்பாரெட்டி பாளையம், அத்திப்பட்டு, புதூர் நகர், தட்டமஞ்சி, தச்சூர், அத்திப்பட்டு அனுபம்பட்டு, கொசஸ்தலை ஆறு பகுதிகள், சோமஞ்சேரி, பிரளயம்பாக்கம், ஆரணியாறு, பழவேற்காடு புலிகாட் ஆகிய இடங்களை பார்வையிட உள்ளனர்.

    இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை (வியாழக்கிழமை) சந்தித்து பேசி விட்டு அதன் பிறகு டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். பின்னர் வெள்ள சேத மதிப்பு விவரங்களை விரிவாக தயாரித்து மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள்.

    • 4 மாவட்டங்களிலும் ஏற்பட்டிருந்த வெள்ள சேதம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக எடுத்துக் கூறினார்.
    • மத்திய குழுவினர், கண்டிப்பாக தமிழகத்திற்கு தேவையான உதவிகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர்.

    சென்னை:

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிச்சாங் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் கடந்த 2 நாட்களாக பார்வையிட்டனர்.

    இந்த குழுவில் இடம் பெற்றிருந்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (என்.டி.எம்.ஏ.) ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் திமான் சிங், வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை இணை இயக்குனர் ஏ.கே.சிவ்ஹரே, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விஜயகுமார், நிதித்துறை சார்பில் ரங்கநாத் ஆடம், மின்சாரத்துறை சார்பில் இயக்குனர் பவ்யா பாண்டே ஆகிய 6 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    இவர்கள் கடந்த 11-ந்தேதி தலைமைச் செயலாளர் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகளை சந்தித்து விட்டு அதன் பிறகு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வந்தனர். அவர்களுடன் சென்னை மாநகராட்சி அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் சில இடங்களுக்கு உடன் சென்று பாதித்த விவரங்களை எடுத்துக் கூறினார்கள்.

    இதே போல் மற்ற மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கலெக்டர்கள் உடன் சென்று சேத விவரங்களை எடுத்து கூறினார்கள்.

    அதன் அடிப்படையில் மத்திய குழுவினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை கணக்கெடுத்துள்ளனர். 4 மாவட்டங்களிலும் வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு மத்திய குழுவினர் இன்று தலைமைச் செயலகத்திற்கு சென்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மத்திய குழுவினர் சென்று சந்தித்தனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யாத்ரி தலைமையில் குழுவில் உள்ள அனைவரும் முதலமைச்சரை சந்தித்தனர். அவர்களுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பொதுத்துறை செயலாளர் முருகானந்தம் ஆகியோரும் உடன் இருந்தனர்.


    அப்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் ஏற்பட்டிருந்த வெள்ள சேதம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக எடுத்துக் கூறினார்.

    அப்போது இடைக்கால நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.5060 கோடி கேட்டிருந்ததைவிட இப்போது சேத மதிப்பு அதிகமாக உள்ளதால் கூடுதலாக நிவாரண உதவி தேவைப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    புயல் பாதிப்பு தொடர்பாகவும் நிதி ஒதுக்கீட்டிற்கான கோரிக்கை மனுவினையும் மத்திய குழுவின் தலைவரான குணால் சத்யாத்ரியிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய சேதத்தை சரி செய்து மீண்டு உருவாக்கவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு அதனை மீண்டும் உருவாக்கி வழங்கிடவும் தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரம் மட்டும் போதுமானதல்ல. மத்திய அரசு பங்களிப்பும் பெருமளவு தேவைப்படுகிறது.

    எனவே மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களை மீட்க தேவையான உதவிகளை வழங்கவும் பல்வேறு வகையான சமூக கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்யவும், மத்திய அரசுக்கு நீங்கள் உரிய பரிந்துரை செய்து தமிழ்நாடு அரசு கோரி உள்ள தொகையை பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதற்கு மத்திய குழுவினர், கண்டிப்பாக தமிழகத்திற்கு தேவையான உதவிகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர்.

    ×