என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல் மூட்டைகள்"

    • தமிழகத்​துக்கு 3 குழுக்​களை மத்​திய உணவுத்துறை அனுப்​பி​யுள்​ளது.
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 21 லட்சம் ஹெக்டேரில் நெல், சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்த நெற்பயிரில் 3.60 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 1,819 கொள்முதல் நிலையங்கள் மூலம் 9.67 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு முன்னரே தண்ணீரில் மூழ்கின. அறுவடை செய்த நெல்லும் அதிக ஈரப்பதத்துடன் உள்ளது. எனவே, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17-ல் இருந்து 22 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தமிழகத்துக்கு 3 குழுக்களை மத்திய உணவுத்துறை அனுப்பியுள்ளது.

    இதன்படி முதல் குழுவில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் ஆர்.கே. ஷாகி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல் சா்மா, தனூஜ் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 2-வது குழுவில் அந்த நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங், ஷோபித், ராகேஷ் பரலா ஆகியோரும் 3-வது குழுவில் உதவி இயக்குநர் டி.எம்.பிரீத்தி, பிரியா பட், அனுபமா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    தமிழகம் வந்துள்ள இந்த 3 மத்திய குழுக்களும் இன்று தங்களது ஆய்வை தொடங்கினார்கள். அதன்படி முதல் குழுவினர் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இதில் அயப்பாக்கம், வெள்ள ப்பந்தல், தத்தலூர், வழுவத்தூர், ஈசூர், பூதூர், படாளம், கள்ளபிரான்புரம், பொளம்பாக்கம், கயப்பாக்கம் ஆகிய 10 இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் அவர்கள் சுமார் 15 நிமிடங்கள் ஆய்வு செய்தனர். அவர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    2-ம் குழுவினர் இன்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நாளை திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், வருகிற 27-ந்தேதி கடலூர் மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொள்கிறார்கள். 3-ம் குழுவினர் இன்று திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். நாளை தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இந்த குழுக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நெல் கொள்முதலுக்கு 17 சதவீதம் ஈரப்பதம் அளவாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
    • ஒரு குழுவில் ஒரு துணை இயக்குனர் மற்றும் 2 தொழில்நுட்ப அலுவலர் இடம் பெற்றுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, 80 சதவீத அறுவடை பணிகள் முடிந்துள்ளன. இதில் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்து குவித்துள்ளனர்.

    இந்த நிலையில் போதிய முன்னேற்பாடு செய்யாதது, லாரிகள் போதிய அளவு இல்லாததால், ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் தாமதமாவதால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி உள்ளன. இதனால் விவசாயிகள் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இந்த சூழலில் கடந்த 16-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் அவ்வப்போது மழை பெய்து மழைநீரில் நெல் மூட்டைகள் நனைந்து, நெல் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

    நெல் கொள்முதலுக்கு 17 சதவீதம் ஈரப்பதம் அளவாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், தற்போது 17 சதவீதம் வரை இருக்க வேண்டும் என்பதை கடந்து 20 முதல் 25 சதவீதம் வரை நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதை கொள்முதல் செய்ய மறுக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களிலும், சாலையிலும் நெல்லை கொட்டி வைத்துக் காத்துக் கிடக்கின்றனா்.

    எனவே, 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திய நிலையில், இதுதொடா்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதமும் அனுப்பியது.

    இதையடுத்து, டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து ஈரப்பதத்தை ஆய்வு செய்ய, மத்திய அரசு தலா 3 அதிகாரிகளை கொண்ட 3 குழுக்கள் அமைத்துள்ளன. இதில் ஒரு குழுவில் ஒரு துணை இயக்குனர் மற்றும் 2 தொழில்நுட்ப அலுவலர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் இன்று (சனிக்கிழமை) முதல் தொடர்ந்து 3 நாட்கள் தமிழகத்தின் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்ய இருந்தனர்.

    அதன்படி, தஞ்சையில் இன்று 2-ம் குழு வண்ணாரப்பேட்டை, பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ராராமுத்திரை கோட்டை ஆகிய 4 இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய இருந்தனர். இந்த ஆய்வு பணிகளை முடித்து பிற்பகலில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஆய்வு செய்ய இருந்தனர்.

    இந்த நிலையில் மத்திய குழுவின் ஆய்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக ஆய்வு பணி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆய்வு செய்யும் தேதி, நேரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    22 சதவீத ஈரப்பதத்திற்கு அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு இந்த ஆய்வு ஒத்திவைப்பு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இருந்தாலும் மீண்டும் மத்திய குழுவினர் உடனடியாக நெல்லின் ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆயிரக்கணக்கான மூட்டைகளில் நெல்மணிகள் மழையில் நனைந்து அதிகளவில் சேதமடைந்தன.
    • பகுத்தறிவு பேசும் தமிழக அரசின் அடிப்படை அறிவுக்கு எட்டவில்லை என்றே நினைக்க வேண்டி உள்ளது.

    நெருக்கடியில் தவிக்கும் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்:

    தமிழ்நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் முதன்மையானதாக விளங்குகிறது. இந்த காவிரி டெல்டா பகுதி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.

    விவசாயிகள் நிறைந்த இந்த டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் விளைவிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான ஏக்கர்களில் விளைவிக்கப்படும் நெல்மணிகள் அரசு வாணிப கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 1000 நெல் மூட்டைகள் வரை கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் ஆண்டுதோறும் பருவமழை சமயங்களில் நெல் மூட்டைகள் சேதம் அடையும் அவல நிலையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல் மூட்டைகள் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படாமல் வெளியே திறந்தவெளிகளில் தேக்கி வைக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

    அதேபோல் பயிர்க் காப்பீட்டு முறை மூலம் விவசாயிகள் எந்த அளவுக்கு தங்கள் இழப்பை நிவர்த்தி செய்துகொள்ள முடிகிறது என்ற கேள்வியும் உள்ளது. பெரும்பாலான சமயங்களில் காப்பீட்டுத் தொகை அவர்கள் சந்தித்த இழப்புக்கு போதுமானதாக இருந்துவிடுவதில்லை. இந்த வருடம் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாளாகும். ஒரு ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.38 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிரிமியம் தொகையாக விவசாயிகள் ரூ.570 செலுத்த வேண்டும்.

    காயத்துக்கு போடப்பட்ட பேண்டேஜ் ஆகவே இந்த காப்பீடு உள்ளது. மற்ற காப்பீடுகளை போல இதற்கான முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு உள்ள விழிப்புணர்விலும் முன்னேற்றம் தேவையாக உள்ளது. நியாயமான இழப்பீட்டு தொகை கிடைக்கிறதா என்பது கேள்விக் குறியே.

    அதிமுக Vs திமுக:

    இதற்கிடையே வழக்கம்போல இந்த வருடமும் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே ஆயிரக்கணக்கான மூட்டைகளில் நெல்மணிகள் மழையில் நனைந்து அதிகளவில் சேதமடைந்தன.

    நெற்பயிர் அறுவடை நேரத்தில் மழை பெய்தால் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்யவும், மேலும் நெல்லில் இருந்து பெறப்படும் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசியை கலக்கவும் மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்.

    இந்த அனுமதி கடந்த ஆகஸ்ட் மாதமே கிடைத்து என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூற, இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி அந்த கூற்றை மறுத்துள்ளார்.

    இதன் காரணமாக தற்போது 9 லட்சத்து 75 ஆயிரத்து மெட்ரிக் டன் நெல் தேங்கிக் கிடப்பதாக சக்கரபாணி கூறுகிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு நிலையத்திற்கு 800 மூட்டையிலிருந்து 1000 மூட்டைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது என்றும் திமுக ஆட்சியில் 2000 முதல் 3000 மூட்டைகள் வரை வாங்கப்படுவதாக அமைச்சர் கூறுகிறார். எடப்பாடி பழனிச்சாமி இதை நேரில் வந்து பார்த்துவிட்டு மறுத்து பேச வேண்டும் என்று சவால் விடுகிறார்.

    அமைச்சரின் விளக்கம் தற்போதைய நிலைமைக்கு சாக்காக இருந்தபோதிலும் நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமடைவதற்கான தீர்வு என்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.

    என்னதான் தீர்வு:

    கடந்த பல ஆண்டுகளாக நெல் மூட்டைகள் சேதம் அடையும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு குறித்து முந்தைய அதிமுக அரசும் தற்போதைய திமுக அரசும் தீவிரம் காட்டவில்லை என்பதையே ஆண்டுதோறும் கடின உழைப்பின் மூலம் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் யாருக்கும் உபயோகம் இல்லாமல் போவது உணர்த்துகிறது.

    அரசு கொள்முதல் நிலையங்களில் போதிய வசதியின்மையே நெல்மணிகள் சேதத்துக்கு காரணம் என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. பல கொள்முதல் நிலையங்களில் நெல்கள் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

    தமிழ்நாடு அரசு அறிவித்தபடி செமி குடோன்களை உடனடியாக திறக்க வேண்டும். விவசாயிகளின் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று பல வருடங்களாக அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ஆனால் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகளை சேமித்து வைப்பதற்கேற்ப குடோன்களை அமைப்பதில் அரசுக்கு என்ன சிக்கல் என்பது தெரியவில்லை.

    இந்த வசதியை ஏற்படுத்த அதிஉயர்ந்த தொழில்நுட்பம் ஏதும் தேவையில்லை என்பதை பகுத்தறிவு பேசும் தமிழக அரசின் அடிப்படை அறிவுக்கு எட்டவில்லை என்றே நினைக்க வேண்டி உள்ளது.

    கார் பந்தயம் மூலமும் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவதன் மூலமும் கிடைக்கும் விளம்பரம் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதில் அதிகம் கிடைத்துவிடாது என்று அரசு மெத்தனம் காட்டுகிறதா என்ற கேள்வியையும் புறந்தள்ள முடியாது.

    வருடந்தோறும் விவசாயிகளின் வேதனையில் மாறி மாறி அரசியல் செய்துகொள்ளவே இந்த பிரச்சனைக்கு இரு திராவிட அரசுகளும் தீர்வு காணாமல் புறக்கணிக்கிறதா என்றும் எண்ண வேண்டி உள்ளது.

    முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை வரையறுக்கும் அதே சமயம், நெல் மூட்டைகளை தார்பாய்கள் மூலம் மூடி காப்பாற்றிவிட முயலும் சூழல் நிலவுவது முரணானதாக உள்ளது.

    சிறு மழைக்கே விவசாயிகளின் கடின உழைப்பு கண்முன்னே அழிந்து போவது ஆண்டுதோறும் நடந்தேறும் வேதனைக்குரிய சடங்காக மாறிவிட்டதற்கு முன்னாள் மற்றும் இந்நாள் அரசுகளின் தொலைநோக்கு பார்வை இன்மையே காரணம் என்று எளிதில் கூறிவிட முடியும்.

    இனியேனும் ஊடகங்கள் மூலம் சினிமா பாணியில் அறிக்கைகளையும் சவால்களையும் விடுவதை விட்டுவிட்டு இனி வரும் காலங்களுக்கு பயனளிக்கும் ஆக்கபூர்வமான தீர்வை நோக்கி அரசு நகரும் என்று நம்புவோமாக!  

    • ஓவேல்குடி கிராமத்தில் குவியல் குவியலாக தேங்கிக்கிடந்த நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கின
    • விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்க முடியாமல் வேதனையில் உள்ளனர்.

    மன்னார்குடி:

    மேட்டூர் அணை இந்த ஆண்டு (2025) வழக்கம் போல் ஜூன் மாதம் குறித்த நேரத்தில் திறக்கப்பட்டது.

    இதனால் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் ஒன்றிய பகுதிகளில் சிறு, குறு விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். சாகுபடியும் அமோக விளைச்சலை தந்தது, அறுவடை நேரத்தில் மழையும் ஒத்துழைப்பு நல்கியது. விவசாயிகள் அனைவரும் குறித்த நேரத்தில் அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்து விட்டனர்.

    சிறு, குறு விவசாயிகள் மழை வருவதற்கு முன்னதாக அறுவடை செய்தாலும், அந்த நெல்லை விற்பதற்கு வழி இல்லாமல் இன்னும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்து காத்துக் கிடக்கின்றனர்.

    அறுவடைக்கு முன்பு மழையில் இருந்து தப்பித்த விவசாயிகள், தற்போது அறுவடை முடிந்து விற்பனைக்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்ட நெல்லும், மூட்டைக்கட்டி அடுக்கி வைக்கப்பட்ட நெல்லும் மழையில் நனைந்து வீணாகிறது.

     

    இதேபோல், ஓவேல்குடி கிராமத்தில் குவியல் குவியலாக தேங்கிக்கிடந்த நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கின. இதனை கண்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

    தீபாவளி நேரத்தில் புத்தாடை வாங்க பணம் கிடைக்கும் என்று நினைத்து நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்தோம். ஆனால் அதற்கு மாறாக நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி வருகிறது. நெல் கொள்முதலுக்கு ஏன் இவ்வளவு தாமதம் எனக்கேட்டால் இதுவரை 12 ஆயிரம் நெல்மூட்டைகள் பிடித்திருக்கிறோம். ஆனால், 7 ஆயிரம் நெல் மூட்டைகளை தான் குடோன்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். மீதமுள்ள 5 ஆயிரம் நெல் மூட்டைகளும் அப்படியே கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி கிடக்கிறது என்கிறார்கள். அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்படுவது அப்பாவி விவசாயிகள் தான்.

    கோட்டூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 4 லட்சம் நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டு தேங்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்க முடியாமல் வேதனையில் உள்ளனர்.

    எனவே, மாவட்ட கலெக்டர் கோட்டூர் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு உடனடியாக கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை லாரிகளை அனுப்பி ஏற்றி குடோன்களுக்கு அனுப்பி நெல்லை விரைவில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • விவசாயிகளைக் காக்க வேண்டியது அரசின் கடமை.
    • நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க உடனடியாக குடோன்கள் அமைத்துத் தந்து, நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்திருக்கிறது. மழையில் நனைந்ததால் நெல் மூட்டைகளின் விலை வீழ்ச்சியடையும் என்றும், அதைப் பாதுகாக்க குடோன்கள் இல்லாததால் வெட்டவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்ததால் மழையில் நனைந்து சேதமடைந்ததாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மேலும், இதைப்போல் கோடைக்காலத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் இந்த நேரத்தில் கலப்பட சாயம் கலந்தாக ஒரு சர்ச்சையை எழுப்பி அதை மக்களும் நம்பி தர்பூசணி பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது விவசாயிகளுக்கு நஷ்டத்தையும், வேதனையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுபோல ஒரு சர்ச்சையை எழுப்பி மக்களையும் குழப்பி ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் வாழ்க்கையும் பாதிப்படையச் செய்வது ஏற்புடையது அல்ல.

    விவசாயிகளைக் காக்க வேண்டியது அரசின் கடமை. விவசாயிகளுக்குத் துணை நிற்போம் அவர்களை காப்போம். மேலும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க உடனடியாக குடோன்கள் அமைத்துத் தந்து, நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று 7 ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.
    • ஒவ்வொரு மழையின் போதும் இவ்வாறு திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் நனைகின்றன.

    செஞ்சி:

    செஞ்சியில் இன்று அதிகாலை பெய்த மழையால் செஞ்சி கமிட்டியில் விவசாயிகள் கொண்டு வந்த பத்தாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு நெல் அறுவடை சீசன் என்பதால் அதிகமாக நெல் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று 7 ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.

    இந்நிலையில் இன்று விற்பனைக்காக சுமார் 6 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்து திறந்த வெளியில்இறக்கி இருந்தனர். மேலும் நேற்று கொள்முதல் செய்யப்பட்ட வியாபாரிகளின் ஒரு பகுதி நெல் மூட்டைகளும் கமிட்டியின் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    இன்று காலை 6 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் கமிட்டியில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதனால் நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விலை குறைத்து போட படுமோ என்ற அச்சத்தில் வேதனை அடைந்தனர்.

    ஒவ்வொரு மழையின் போதும் இவ்வாறு திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் நனைகின்றன. ஆகையால் செஞ்சி கமிட்டியில் ரூ.2 கோடி மதிப்பில் மேற்கூரை அமைப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்டுள்ளது. இப்பணியை விரைந்து தொடங்கி மேற்கூரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு.
    • நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க கூடுதலாகக் கிடங்குகள் கட்ட தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் போது, எதிர்பாராத விதமாக ஆங்காங்கே ஏற்படும் மழை காரணமாக நெல் மூட்டைகள் சேதமடைவது என்பது வாடிக்கையாக நடந்து கொண்டே இருக்கின்றது.

    அந்த வகையில், தற்போது கடலூர் மாவட்டம், புவனகிரியில் அண்மையில் பெய்த மழையால் ஆதிவராகநத்தம் பகுதியில் கட்டப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன.

    இதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டம், வாழ்குடி, பில்லாளி, மேல பூதனூர், திருமருகல் போன்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது.

    இதே நிலைமை தான் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நிலவுகிறது. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு. தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வருங்காலங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க கூடுதலாகக் கிடங்குகள் கட்ட தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நெல் மூட்டைகள் வீணானதற்கு தமிழக அரசே பொறுப்பேற்று அதற்கான இழப்பீட்டை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    • நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளைப் பாதுகாக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் டெல்டா மாவட்டமான நாகை மாவட்டப் பகுதியில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா குறுவை சாகுபடியில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. பல நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிவிட்டது.

    நெல்கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் பாதுகாப்பற்ற முறையில் சுமார் 30 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்ததால், நேற்று பெய்த மழையில் நனைந்து முற்றிலும் சேதமுற்றன.

    நெல் மூட்டைகள் வீணானதற்கு தமிழக அரசே பொறுப்பேற்று அதற்கான இழப்பீட்டை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளைப் பாதுகாக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வியாபாரிகள் ஆன்லைனில் கொள்முதல்
    • ஈரப்பதமின்றி உலர்த்திக்கொண்டு வந்தால் கூடுதல் விலை கிடைக்கும் என கண்காணிப்பாளர் தகவல்

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 20 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் போளூர் 2-வது இடம் பெற்றுள்ளது.

    இங்கு தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விவசாயிகளின் விளைபொருளான நெல்லை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கு போளூர், கேளூர், செங்குணம், சனிக்குவாடி, உள்பட 40 கிராமங்களில் இருந்து தினசரி நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றன. நெல் மூட்டைகள் காஞ்சிபுரம், கலவை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, போன்ற ஊர்களில் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு நெல் மூட்டைகளை ஆன்லைனில் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    விவசாயிகளின் விளை பொருளுக்கு நல்ல விலை கிடைப்பதாலும் உடனே பணம் தங்கள் கணக்கில் வரவு வருவதாலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நேற்று வரை 26 ஆயிரத்து நெல் மூட்டைகள் வந்து ரூ.4.25 கோடிக்கு விற்பனை ஆயின சன்னரக நெல் 75 கிலோ கொண்ட மூட்டைகள் 1க்கு ரூ.1,450 முதல் 2,000 வரையிலும், குண்டு ரகம் ரூ.1,300 முதல் 1,639 வரையிலும், கோ-51 ரகம் 1,280முதல் ரூ.1,549 வரையிலும் விற்பனை ஆயின.

    மத்திய அரசின் மின்னனும் தேசிய வேளாண் சந்தை (இ.என்.ஏ.எம்) திட்டத்தின் கீழ் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது.

    வியாபாரிகள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு நெல் மூட்டைகளை கொள்முதல் செய்கின்றனர். இதனால் போளூரில் உள்ள 8 கிடங்குகளில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்க மடைந்துள்ளன.

    இடமில்லாமல் சுமார் 6 ஆயிரம் மூட்டைகள் களத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து கண்காணிப்பாளர் என்.வெங்கடேசன் கூறியதாவது:-

    விவசாயிகள் நெல் அறுவடை ஆனவுடன் ஈரப்பதமின்றி நன்கு உலர்த்திக்கொண்டு வந்தால் கூடுதலாக நல்ல விலை அவர்களுக்கு கிடைக்கும். என்று கூறி வருகின்றோம் என்றார்.

    சமீபத்தில் இங்கு ஆய்வு செய்த முன்னாள் அமைச்சரும் போளூர் தொகுதி எம்.எல்.ஏ, -வுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நெல் சேமித்து வைக்க கிடங்கு கட்டித் தருவதாக உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

    தற்சமயம் சம்பா பருவம் முடிந்து விவசாயிகள் அறுவடையில் மும்பரமாக ஈடுபட்டு வருவதால் மேலும் நெல் வரத்து அதிகரிக்கும் வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்வார்கள் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 61,260 நெல் மூட்டைகள் வந்தன. ரூ.9 லட்சத்து 85 ஆயிரத்துக்கு விற்பனை ஆயின.

    • பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கு நெல் மூட்டைகள் அனுப்பப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது.

    இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் திருவள்ளூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.

    இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் புனல்குளம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2 ஆயிரம் டன் நெல், 240 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் நெல்மூட்டைகள் ஏற்றப்பட்டு அரவைக்காக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் மூட்டைகள் குறித்து ஆய்வு செய்தார்.
    • அம்மன்பேட்டையில் உள்ள நவீன அரிசி ஆலையில் ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் உழவர் சந்தையில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர், காய்கறிகள் வரத்து, விலை நிர்ணயம் குறித்து கேட்டறிந்ததுடன் உழவர் சந்தை காய்கறி கழிவுகளை உரமாக்கும் எந்திரத்தின் செயல்பாட்டை யும் பார்வையிட்டார்.

    மேலும் அவர், உழவர் சந்தையில் உள்ள விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழு கடைகளுக்கு சென்று விற்பனை நிலவரத்தை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அவர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படும் மாநில அக்மார்க் ஆய்வகத்தின் செயல்பாடு குறித்தும், சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் மூட்டைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    பின்னர் ஒரத்தநாடு ஒன்றியம் ஈச்சங்கோட்டை யில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற கலெக்டர் தீபக் ஜேக்கப், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    இதையடுத்து அவர், ஈச்சங்கோட்டையில் உள்ள நாற்றாங்கால் பண்ணை, திருவையாறு ஒன்றியம் அம்மன்பேட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலை ஆகியவற்றிலும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, வேளாண்மை துணை இயக்குனர் வித்யா, உதவி பொறியாளர் கலைமாமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள் 7 ஆயிரம் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.
    • மாயமான 7 ஆயிரம் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த தி.மு.க. ஆட்சியில் தற்போது தருமபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7 ஆயிரம் நெல் மூட்டை மாயமாகி உள்ளதாக செய்தித்தாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    சர்க்கரையை எரும்புதின்றது. சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள் 7 ஆயிரம் நெல் மூட்டைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

    மக்கள் வரிப்பணத்தில் உல்லாச பயணம் சென்றிருக்கும் இந்த சர்க்கஸ் அரசின் முதலமைச்சர் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெல் மூட்டைகள் மாயமாவதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாயமான 7 ஆயிரம் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×