என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மன்னார்குடி பகுதி கொள்முதல் நிலையங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்
    X

    மன்னார்குடி பகுதி கொள்முதல் நிலையங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்

    • ஓவேல்குடி கிராமத்தில் குவியல் குவியலாக தேங்கிக்கிடந்த நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கின
    • விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்க முடியாமல் வேதனையில் உள்ளனர்.

    மன்னார்குடி:

    மேட்டூர் அணை இந்த ஆண்டு (2025) வழக்கம் போல் ஜூன் மாதம் குறித்த நேரத்தில் திறக்கப்பட்டது.

    இதனால் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் ஒன்றிய பகுதிகளில் சிறு, குறு விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். சாகுபடியும் அமோக விளைச்சலை தந்தது, அறுவடை நேரத்தில் மழையும் ஒத்துழைப்பு நல்கியது. விவசாயிகள் அனைவரும் குறித்த நேரத்தில் அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்து விட்டனர்.

    சிறு, குறு விவசாயிகள் மழை வருவதற்கு முன்னதாக அறுவடை செய்தாலும், அந்த நெல்லை விற்பதற்கு வழி இல்லாமல் இன்னும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்து காத்துக் கிடக்கின்றனர்.

    அறுவடைக்கு முன்பு மழையில் இருந்து தப்பித்த விவசாயிகள், தற்போது அறுவடை முடிந்து விற்பனைக்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்ட நெல்லும், மூட்டைக்கட்டி அடுக்கி வைக்கப்பட்ட நெல்லும் மழையில் நனைந்து வீணாகிறது.

    இதேபோல், ஓவேல்குடி கிராமத்தில் குவியல் குவியலாக தேங்கிக்கிடந்த நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கின. இதனை கண்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

    தீபாவளி நேரத்தில் புத்தாடை வாங்க பணம் கிடைக்கும் என்று நினைத்து நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்தோம். ஆனால் அதற்கு மாறாக நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி வருகிறது. நெல் கொள்முதலுக்கு ஏன் இவ்வளவு தாமதம் எனக்கேட்டால் இதுவரை 12 ஆயிரம் நெல்மூட்டைகள் பிடித்திருக்கிறோம். ஆனால், 7 ஆயிரம் நெல் மூட்டைகளை தான் குடோன்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். மீதமுள்ள 5 ஆயிரம் நெல் மூட்டைகளும் அப்படியே கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி கிடக்கிறது என்கிறார்கள். அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்படுவது அப்பாவி விவசாயிகள் தான்.

    கோட்டூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 4 லட்சம் நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டு தேங்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்க முடியாமல் வேதனையில் உள்ளனர்.

    எனவே, மாவட்ட கலெக்டர் கோட்டூர் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு உடனடியாக கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை லாரிகளை அனுப்பி ஏற்றி குடோன்களுக்கு அனுப்பி நெல்லை விரைவில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×