என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல் கொள்முதல் நிலையம்"

    • பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும்.
    • நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளி கிடங்குகளாக உள்ளது.

    திருவிடைமருதூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அம்மன்குடி பகுதியில் மழை நீரில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி இன்று காலை நேரில் வந்து பார்வையிட்டார்.

    நாற்று நடப்பட்ட கொஞ்ச நாட்களில் மழை நீரில் நாற்றுகள் மூழ்கி அழுகி வீணாகி விட்டதை விவசாயிகள் அவரிடம் காண்பித்து வேதனை தெரிவித்தனர். பின்னர் நிருபர்களுக்கு சவுமியா அன்புமணி பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இன்னும் அதிகளவில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக வடிகால்களை சீரமைத்து விவசாயிகளை பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தூர்வாரும்பணி நடைபெற்று விட்டதாக கூறுகிறது.

    ஆனால் எந்த பணிகளும் செய்யப்படவில்லை. அதனால்தான் தண்ணீர் வயல்களில் தேங்குகிறது.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிப்பது போல் முதலில் நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணத்தை அறிவிக்க வேண்டும்.

    தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொடுப்பதில்லை. எனவே தான் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளி கிடங்குகளாக உள்ளது. மழையில் நனைந்து மக்கிப்போயும் முளைத்தும் நெல்கள் வீணாகிறது.

    எனவே அரசு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.

    அப்போது அவருடன் உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி உள்பட பலர் இருந்தனர்.

    • தமிழகத்​துக்கு 3 குழுக்​களை மத்​திய உணவுத்துறை அனுப்​பி​யுள்​ளது.
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 21 லட்சம் ஹெக்டேரில் நெல், சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்த நெற்பயிரில் 3.60 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 1,819 கொள்முதல் நிலையங்கள் மூலம் 9.67 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு முன்னரே தண்ணீரில் மூழ்கின. அறுவடை செய்த நெல்லும் அதிக ஈரப்பதத்துடன் உள்ளது. எனவே, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17-ல் இருந்து 22 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தமிழகத்துக்கு 3 குழுக்களை மத்திய உணவுத்துறை அனுப்பியுள்ளது.

    இதன்படி முதல் குழுவில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் ஆர்.கே. ஷாகி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல் சா்மா, தனூஜ் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 2-வது குழுவில் அந்த நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங், ஷோபித், ராகேஷ் பரலா ஆகியோரும் 3-வது குழுவில் உதவி இயக்குநர் டி.எம்.பிரீத்தி, பிரியா பட், அனுபமா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    தமிழகம் வந்துள்ள இந்த 3 மத்திய குழுக்களும் இன்று தங்களது ஆய்வை தொடங்கினார்கள். அதன்படி முதல் குழுவினர் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இதில் அயப்பாக்கம், வெள்ள ப்பந்தல், தத்தலூர், வழுவத்தூர், ஈசூர், பூதூர், படாளம், கள்ளபிரான்புரம், பொளம்பாக்கம், கயப்பாக்கம் ஆகிய 10 இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் அவர்கள் சுமார் 15 நிமிடங்கள் ஆய்வு செய்தனர். அவர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    2-ம் குழுவினர் இன்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நாளை திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், வருகிற 27-ந்தேதி கடலூர் மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொள்கிறார்கள். 3-ம் குழுவினர் இன்று திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். நாளை தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இந்த குழுக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஓவேல்குடி கிராமத்தில் குவியல் குவியலாக தேங்கிக்கிடந்த நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கின
    • விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்க முடியாமல் வேதனையில் உள்ளனர்.

    மன்னார்குடி:

    மேட்டூர் அணை இந்த ஆண்டு (2025) வழக்கம் போல் ஜூன் மாதம் குறித்த நேரத்தில் திறக்கப்பட்டது.

    இதனால் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் ஒன்றிய பகுதிகளில் சிறு, குறு விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். சாகுபடியும் அமோக விளைச்சலை தந்தது, அறுவடை நேரத்தில் மழையும் ஒத்துழைப்பு நல்கியது. விவசாயிகள் அனைவரும் குறித்த நேரத்தில் அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்து விட்டனர்.

    சிறு, குறு விவசாயிகள் மழை வருவதற்கு முன்னதாக அறுவடை செய்தாலும், அந்த நெல்லை விற்பதற்கு வழி இல்லாமல் இன்னும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்து காத்துக் கிடக்கின்றனர்.

    அறுவடைக்கு முன்பு மழையில் இருந்து தப்பித்த விவசாயிகள், தற்போது அறுவடை முடிந்து விற்பனைக்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்ட நெல்லும், மூட்டைக்கட்டி அடுக்கி வைக்கப்பட்ட நெல்லும் மழையில் நனைந்து வீணாகிறது.

     

    இதேபோல், ஓவேல்குடி கிராமத்தில் குவியல் குவியலாக தேங்கிக்கிடந்த நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கின. இதனை கண்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

    தீபாவளி நேரத்தில் புத்தாடை வாங்க பணம் கிடைக்கும் என்று நினைத்து நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்தோம். ஆனால் அதற்கு மாறாக நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி வருகிறது. நெல் கொள்முதலுக்கு ஏன் இவ்வளவு தாமதம் எனக்கேட்டால் இதுவரை 12 ஆயிரம் நெல்மூட்டைகள் பிடித்திருக்கிறோம். ஆனால், 7 ஆயிரம் நெல் மூட்டைகளை தான் குடோன்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். மீதமுள்ள 5 ஆயிரம் நெல் மூட்டைகளும் அப்படியே கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி கிடக்கிறது என்கிறார்கள். அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்படுவது அப்பாவி விவசாயிகள் தான்.

    கோட்டூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 4 லட்சம் நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டு தேங்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்க முடியாமல் வேதனையில் உள்ளனர்.

    எனவே, மாவட்ட கலெக்டர் கோட்டூர் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு உடனடியாக கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை லாரிகளை அனுப்பி ஏற்றி குடோன்களுக்கு அனுப்பி நெல்லை விரைவில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட 15 லட்சம் நெல் மூட்டைகள் திருவாரூரில் கிடங்கில் இருக்கின்றன.
    • டெல்டா மாவட்டங்களில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.

    சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன என்று குற்றம்சாட்டினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    * ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட 15 லட்சம் நெல் மூட்டைகள் திருவாரூரில் கிடங்கில் இருக்கின்றன.

    * 15 லட்சம் மூட்டைகளை குடோனுக்கு கொண்டு சென்றபிறகே மீண்டும் நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை அடுக்கலாம்.

    * டெல்டா மாவட்டங்களில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.

    * ஒவ்வொரு நிலையங்களிலும் 600 மூட்டைகள் மட்டுமே நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

    * நெல் கொள்முதல் நிலையங்களில் தினமும் 600 மூட்டைகளுக்கு பதிலாக 1,000 மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • குடவாசல் பகுதியில் விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கு 35 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர்

    திருவாரூர்: 

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கு 35 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் விவசாயிகள் சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர். தனியார் அறுவடை எந்திரங்கள் வாடகைக்கு அறுவடை செய்ய ரூ.3 ஆயிரம் வசூல் செய்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் வேளாண்மை பொறியியல் துறைக்கு ஆலோசனை வழங்கி போதிய அளவு அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

    அதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திருவாரூர் மாவட்டத்தில் உடனடியாக திறந்து விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை காலதாமதம் இன்றி கொள்முதல் செய்ய வேண்டும் என கலெக்டருக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கந்தர்வகோட்டை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது
    • அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தொடங்கி வைத்தார்

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அண்டனூர் ஊராட்சியில் மஞ்சம்பட்டியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பரமசிவம், மாவட்ட பிரதிநிதி முருகேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முருகேசன், ராஜேந்திரன், ஆணையர்கள் ஸ்ரீதரன், நளினி, துணைத் தலைவர் மலர்விழி சிவானந்தம், ஊராட்சி செயலர் இளவரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கறம்பக்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கபட்டது
    • விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கறம்ப விடுதி ஊராட்சியில் உள்ள சொக்கம்பேட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.விடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ. சின்னதுரை சொக்கம்பேட்டை பட்டவன் கோவில் திடலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி திறக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த பகுதியிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்துள்ளோம். விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் ஆத்மா கமிட்டி சேர்மனும்மான முத்துகிருஷ்ணன், கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மங்களா கோவில் பரமசிவம், கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஜினி இளங்கோவன், சங்கன் விடுதி தங்கராசு, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 20 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைய உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நேரடியாக அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக கீழ்க்கண்ட ஊராட்சி ஒன்றியங்களில் அரசு நேரடி நெல் கொள்மு தல் நிலையங்கள் துவங்கப்பட்டு செயல்படுகிறது.

    அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில், மங்களக்குடி, திருவாடானை, பாண்டுக்குடி, திரு வொற்றியூர், நெய்வயல், மாவூர், அஞ்சு க்கோட்டை, புல்லூர்(வெள்ளை யாபுரம்), கட்டவிளாகம் (நீர்க்குன்றம்), கவ்வூர், டி.கிளியூர். ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், கற்காத்தக்குடி, ஆனந்தூர், கூடலூர், பகவதிமங்கலம், கோவிந்தமங்கலம் (ராதானூர்), சோழந்தூர்.கமுதி ஊராட்சி ஒன்றி யத்தில், கமுதி, டி.புன வாசல், எ.தரக்குடி.போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில், சேமனூர், பாண்டிக்கண்மாய், அரியக்குடி.நயினார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில், நயினார் கோவில், காரடர்ந்தகுடி, வல்லம், பொட்டக வயல், பி.கொடிக்குளம், எஸ்.வி.மங்கலம்.பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில், விளத்தூர், பரமக்குடி, பாம்பூர், கமுதகுடி (பொது வக்குடி), களையூர் (வெங்களக்குறிச்சி), தடுத்தலாங்கோட்டை, கள்ளிக்குடி, தேவனேரி, நெல்மடூர், கீழப்பருத்தியூர், கொளந்தபூரி. ராமநா தபுரம் ஊராட்சி ஒன்றி யத்தில் புத்தேந்தல், கடலாடி ஊராட்சி ஒன்றி யத்தில் ஆப்பனூர், கடலாடி (கடுகு சந்தை), சாயல்குடி.திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில், களரி (மாலங்குடி), உத்த ரகோசமங்கை.முது குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், மேலக்கொடுமலூர், புளியங்குடி (காக்கூர்) ஆகிய 50 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் கூடுதலாக 20 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைய உள்ளன. ஒவ்வொரு நெல் கொள்மு தல் நிலையமும் தொடர்ந்து தினந்தோறும் காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும், தொடர்ந்து மதியம் 2:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை செயல்படும். விவசாய பெருமக்கள் தங்கள் விலை நிலத்தில் விளைந்த நெல்லை நேரடியாக கொள்முதல் நிலையத்தில் விற்று அரசு நிர்ணயித்துள்ள தொகையினை தங்கள் வங்கி கணக்கின் மூலமாக பெற்று பயனடையும் வகையில் செயல்படுத்தப்படுகின்றன.

    மேலும் நெல் கொள்மு தல் நிலையத்தில் யாருக்கும் எந்த வகையிலும் பணம் செலுத்த வேண்டிய அவசி யம் கிடையாது. நெல் கொள்முதல் நிலையத்தில் குறைகள் ஏதும் இருப்பின் கீழ்கண்ட அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.

    மண்டல மேலாளர் அலுவலக தொலைபேசி எண்: 94422 30767

    உதவி மேலாளர் (தரக்கட்டுப்பாடு) தொலைபேசி எண்: 97915 61006

    துணை மண்டல மேலாளர் தொலைபேசி எண்: 97860 76408

    விழிப்புப்பணி அலுவலக தொலைபேசி எண்: 044-26424560

    பொது மேலாளர் (சந்தை) அலுவலக தொலைபேசி எண்: 044-26422448

    மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077-ல் விவசாயிகள் தொடர்பு கொண்டு நெல் கொள்முதல் நிலையம் தொடர்பான விவரங்கள் மற்றும் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதல் கூறப்பட்டுள்ளது.

    • அரியலூர் மாவட்டத்தில் மேலும் 9 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கபட உள்ளது
    • வரும் 6-ந் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதால்,விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கரீப் கேஎம்எஸ் 2022-2023 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு 4 ஆம் கட்டமாக அரியலூர் வட்டத்தில் மஞ்சமேடு, தூத்தூர், கள்ளுர், முடிகொண்டான், திருவெங்கனூர், திருமானூர், கரைவெட்டி, குந்தபுரம் மற்றும் செந்துறை வட்டத்தில், படைவெட்டிகுடிகாடு, ஆகிய 9 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் வரும் 6-ந் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகில் உள்ள விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் குற்றச்சாட்டு
    • 15 கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுனில் தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் மாநில தலைவர் விஜயகீர்த்தி தலைமையில் 15 கோரிக்கை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணி அண்ணா சிலை, காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, பழைய பஸ் நிலையம், ஆற்றுபாலம் வழியாக சென்று மா மரம் பஸ் நிறுத்தத்தில் முடிவடைந்தது.

    கூட்டுறவு சங்கத்தின் கடன் தவனை நீட்டிக்க வேண்டும். நேரடி கொள்முதல் நிலையம் இல்லாத ஊர்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரத்தை வேளாண்மை கூட்டுறவு மூலம் விற்பனை செய்ய வேண்டும் . கரும்பு டன்னுக்கு 6000 ரூபாய் ஆக உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தினர்.

    நெல் கொள்முதல் நிலையங்களில் 1 கிலோவிற்கு 1 ரூபாய் கட்டாயம் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குகின்றனர். இதனை அதிகாரிகள் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியும் கோஷமிட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் அரிகிருஷ்ணன், மாநில பொருளாளர் அரிகிருஷ்ணன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் பெருமாள் மாவட்ட பொருளாளர் வேலு, ஆரணி வட்டார தலைவர் வேலப்பாடி கோபி, நெசல் கிளைத் தலைவர் மணிவண்ணன், கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கிளைச் செயலாளர்கள் வெற்றி வேந்தன் வெங்கடேசன் சக்திவேல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    • 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர்.

     தாராபுரம் :

    தாராபுரம் அலங்கியத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றுவதற்கு 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர். ஆனால் அங்கு பணிபுரிந்து வந்த கொள்முதல் நிலைய அதிகாரி ஏழுமலை என்பவர் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் விவசாயிகளிடம் நீங்கள் வாங்கும் ரூ.15 உடன் எங்களுக்கும் சேர்த்து கூடுதலாக ரூ.10 வாங்கி தர வேண்டும் என சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரிடம் செல்போனில் லஞ்சம் கேட்டு பேசியதாக தெரிகிறது.

    இவ்வாறு அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனையடுத்து மாவட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரி அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரி ஏழுமலை என்பவரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்தார். அதற்கு பதிலாக புதிய அலுவலராக இளவரசன் என்பவரை அதிரடியாக அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டார்.

    • விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த வேடல், அரக்கோணம் பகுதியில் உள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேடல் செம்பேடு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர் அம்பிகா பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள் பாலன், குமார், சுந்தரமூர்த்தி, கருணாநிதி, பிரசாத், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் கலந்துகொண்டு 2 இடங்களில் அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சவுந்தர், பொதுக்குழு தலைவர் கிருஷ்ணன், அவைத்த லைவர் சக்கரவர்த்தி, ஒன்றிய துணைச் செயலா ளர்கள் எஸ்.இ.போர் பாபு, பூசனம் கன்னியப்பன், பிரகாஷ், மாவட்ட பிரதிநிதிகள் எம்.மூர்த்தி, குப்புசாமி, ராமலிங்கம், சுற்றுச்சூழல் ஒன்றிய துணை அமைப்பாளர் ஐயப்பன், தொழில்நுட்ப பிரிவு சந்துரு, ராகுல், தனசேகர், கிளைக் கழக செயலாளர்கள் மிலிட்டரி சுப்பிரமணி, ஏழுமலை, ராஜகோபால், சேகர், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×