என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொடுப்பதில்லை- சவுமியா அன்புமணி
- பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும்.
- நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளி கிடங்குகளாக உள்ளது.
திருவிடைமருதூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அம்மன்குடி பகுதியில் மழை நீரில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி இன்று காலை நேரில் வந்து பார்வையிட்டார்.
நாற்று நடப்பட்ட கொஞ்ச நாட்களில் மழை நீரில் நாற்றுகள் மூழ்கி அழுகி வீணாகி விட்டதை விவசாயிகள் அவரிடம் காண்பித்து வேதனை தெரிவித்தனர். பின்னர் நிருபர்களுக்கு சவுமியா அன்புமணி பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இன்னும் அதிகளவில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக வடிகால்களை சீரமைத்து விவசாயிகளை பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தூர்வாரும்பணி நடைபெற்று விட்டதாக கூறுகிறது.
ஆனால் எந்த பணிகளும் செய்யப்படவில்லை. அதனால்தான் தண்ணீர் வயல்களில் தேங்குகிறது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிப்பது போல் முதலில் நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணத்தை அறிவிக்க வேண்டும்.
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொடுப்பதில்லை. எனவே தான் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளி கிடங்குகளாக உள்ளது. மழையில் நனைந்து மக்கிப்போயும் முளைத்தும் நெல்கள் வீணாகிறது.
எனவே அரசு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.
அப்போது அவருடன் உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி உள்பட பலர் இருந்தனர்.






