search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai flood"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ரூ.6 ஆயிரம் பணம் கேட்டு ரேசன் கடைகளில் விண்ணப்பம் செய்திருந்தனர்.
    • ரேசன் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பித்தனர்.

    சென்னை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக வீடு வீடாக ஆய்வு செய்யும் பணியும் நடந்தது.

    சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ரூ.6 ஆயிரம் பணம் கேட்டு ரேசன் கடைகளில் விண்ணப்பம் செய்திருந்தனர். ரேசன் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு இன்று முதல் ரூ.6 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    • ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது.
    • பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார்.

    முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.45 மணியளவில் சட்டசபைக்கு வந்தார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி 9.55 மணிக்கு வந்தார். அவருக்கும் பேண்டு வாத்தியம் முழங்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

    பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    சட்டசபை வளாகத்தில் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபைக்குள் அழைத்து செல்லப்பட்டார். கவர்னர் சபைக்குள் வந்ததும் சரியாக காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது.



    தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை கவர்னர் ஆர்.என்.ரவி படிக்காமல் புறக்கணித்தார். இதையடுத்து அந்த உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் மையமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், மக்கள் தொகையில் 6 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ள நமது மாநிலம் இந்தியாவின் பொருளாதாரத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்கினை அளிக்கிறது.

    2022-2023-ம் ஆண்டில் 7.24 சதவீத நிலையான வளர்ச்சி வீதத்தை விஞ்சி நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் சராசரி பண வீக்கத்தை பொறுத்தவரை 2022-23-ம் ஆண்டிலும் நாட்டின் 6.65 சதவீத பண வீக்கத்துடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97 சதவீதமாக உள்ளது. இந்திய நாட்டை விட தமிழ்நாடு வேகமாக வளர்ச்சி அடைவதோடு அதே கால கட்டத்தில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் நமது மாநிலம் திறம்பட செயல்பட்டு வருவதை இது மெய்ப்பிக்கிறது.

    தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையின் கீழ் இந்த அரசின் அயராத முயற்சியின் விளைவாக குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியினை கண்டுள்ளது.

    மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால் 2021-2022-ல் 4-ம் இடத்தில் இருந்த நமது மாநிலம் 2022-2023-ம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது 14.54 லட்சம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முன் எப்போதும் இல்லாத அளவில் மொத்தம் 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்வதற்கு, சாதனை படைக்கும் வகையில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

    ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.

    6-வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்தி காட்டியது பெருமை அளிக்கிறது. இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. ஜி.எஸ்.டி. காரணமாக தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணிகளுக்கு உறுதி அளித்தபடி மத்திய அரசு நிதி அளிக்கவில்லை. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாததால் மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    மக்களுடன் முதல்வர் திட்டத்தால் 2.40 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகிறது. புயல் பாதிப்பு நிவாரணத்துக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. பண வீக்கத்தை கட்டுப்படுத்தி விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களின் வருமான ஆதாரம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை ரூ.24,926 கோடி சுய உதவிக்குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டு உள்ளது.

    அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் முகவரியாக தமிழகம் உள்ளது. மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கி நிதி உதவி வழங்க வேண்டும். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான முழு செலவினமும் தமிழக அரசின் நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது.

    மகளிருக்கு மாதம் ரூ.1000 என்ற தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டியாகும்.

    ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

    மத்திய அரசு அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக எடுக்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, கற்றல் திறன் அதிகரித்துள்ளது.

    நாட்டிற்கே முன்னோடியாக காலை சிற்றுண்டி திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை சிற்றுண்டி திட்டம் 16.85 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

    முதலமைச்சரின் கனவுத் திட்டமாக காலை சிற்றுண்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சிறுபான்மையினர், மீனவர்களை காப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுகிறது.

    பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது நாட்டிற்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது. 5.59 லட்சம் ஏக்கராக குறுவை சாகுபடியை உயர்த்தி தமிழக வேளாண்துறை சாதனை படைத்துள்ளது.

    வரலாற்றிலேயே முதல் முறையாக பால் கொள்முதல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொடர் முயற்சியால் இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும். 3 லட்சம் பெண்களை கொண்டு புதிதாக 27 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 அளிக்கப்பட்டு வருகிறது.

    2.17 லட்சம் பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் பலன் அடைந்துள்ளனர்.

    மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். இல்லம் தேடி கல்வித் திட்டம் 1.65 லட்சம் மையங்களில் நடைபெறுகிறது. இதன் மூலம் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

    சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4671 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. சரக்கு சேவை வரிக்கான இழப்பீட்டை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும்.

    மருத்துவ சுற்றுலாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. விளையாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பரவலான வளர்ச்சியை கொண்டு வர அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 24.86 லட்சம் மாணவர்கள் இல்லம் தேடி கல்வி திட்டத்தால் பயன் அடைந்து வருகின்றனர்.

    3 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூ.18,228 கோடியில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் 1 கோடிக்கும் மேலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.294 கோடியில் திட்டம் உள்ளது.

    ரூ.76 கோடியில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு மூலம் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்த்தி தமிழக வேளாண் துறை சாதனை படைத்துள்ளது.

    சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இயற்கை பேரிடரால் பாதித்த 24.25 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.6000, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 6.63 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.6000 வழங்கப்பட்டது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு மேம்பாட்டு செயல் திட்டம்-2024 எனும் சட்ட முன்வடிவை நடப்பு கூட்டத் தொடரின் போது அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

    அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தை இந்த அரசு தொடங்கியுள்ளது.

    கிண்டியில் 1000 படுக்கைகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ரூ.240 கோடி செலவில் அரசு கொண்டு வந்து சானை புரிந்துள்ளது.

    ஸ்டார்ட் அப் இந்தியா 2022 தரவரிசையில் நம் மாநிலம் சிறந்த செயலாற்றும் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு இணைய வசதி தற்சார்பு தெழிலாளர்கள் நல வாரியத்தை தொடங்கி உள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. விரிவான சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3059 கி.மீ. நீள சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.4861 கோடி செலவிலும் 187 பாலங்கள் கட்டுமான பணிகளை ரூ.553 கோடி செலவிலும் இந்த அரசு நடப்பாண்டில் மேற்கொண்டு வருகிறது.

    விடுதிகளில் மாதாந்திர உணவுக் கட்டணத்தை பள்ளி மாணவர்களுக்கு 1000 ரூபாயில் இருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயில் இருந்து ரூ.1500 ஆகவும் அரசு உயர்த்தி உள்ளது. இதன் மூலம் 1.71 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்மவீரர் காமராஜரின் மதிப்புமிகு திட்டங்களால் தான் தமிழகத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடிந்துள்ளது.
    • சாதியை வைத்து அரசியல் நடத்தும் அரசு சாதிவாரி கணக்கெடுப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

    மதுரை:

    மதுரையில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் நாடார் மகாஜன சங்க 72-வது மாநாட்டில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நெல்லையில் வெள்ளம் சற்றே தணிந்திருந்தாலும் தூத்துக்குடி மாவட்டம் மீள பல நாட்கள் ஆனது. 6 நாட்களுக்கு பிறகு நான் அங்கு சென்றபோது பிரதான 2 சாலைகளை தவிர மற்ற சாலைகளை பயன்படுத்த முடியவில்லை.


    சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது இரண்டே நாட்களில் அப்புறப்படுத்தி விட்டார்கள். ஆனால் தூத்துக்குடிக்கு அப்படி எதையும் செய்யவில்லை. நான் அனைவரிடமும் கேட்டுக்கொண்டேன். தூத்துக்குடிக்கு ஏதாவது உதவிகள் செய்யுங்கள் என்று. காலநிலை மாற்றம் என்பது மிகவும் முக்கியம். இதனை வருங்கால சந்ததியினர் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.

    கர்மவீரர் காமராஜரின் மதிப்புமிகு திட்டங்களால் தான் தமிழகத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடிந்துள்ளது. அதுபோன்ற திட்டங்கள் அவருக்கு பின்னர் யாரும் செயல்படுத்த முன்வரவில்லை. எனவே மீண்டும் அது போன்ற திட்டங்களை கொண்டுவர ஒன்றாக சேர்ந்து நாம் ஆளுவோம்.

    மற்றவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்து விட்டோம். போதும், 5 ஆண்டு காலம் நாம் ஆண்டு பார்ப்போம். சரியில்லை என்றால் ஒதுங்கிவிடுவோம். அமைதியான முறையில் வளர்ச்சியை அடைய வாய்ப்பு தாருங்கள். சாதியை வைத்து அரசியல் நடத்தும் அரசு சாதிவாரி கணக்கெடுப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மழை வெள்ளத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மழை வெள்ளத்திலும் உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டு கொண்டு வருவது நீங்கள்தான்.
    • தற்போது திராவிட மாடல் அரசு 2 இடங்களில் பாராட்டு விழாவை நடத்தி மீனவர்களை கவுரவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு மீனவளத்துறை சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மீனவ மக்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் இன்று பாராட்டு விழா நடக்கிறது.

    அதில் எனக்கு கூடுதல் பெருமை கூடுதல் மகிழ்ச்சி மழை வெள்ள நேரத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு படகுகளை எடுத்துச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் நீங்கள். வெள்ள நேரத்தில் முதலமைச்சரும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், மேயரும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மக்களை போய் சந்தித்தோம்.

    யாரும் வீட்டில் போய் ஒளியவில்லை. எல்லோரும் களத்தில் மக்களோடு மக்களாக நின்றோம். மீட்பு பணியில் நீங்கள் எங்களுக்கு துணை நிற்பீர்கள் என்ற தைரியத்தில் மக்களிடம் போய் நின்றோம்.

    மீனவர்கள் நலன் மீது அரசுக்கு எப்போதும் தனி அக்கறை உண்டு. மீனவர்களுக்கும் தி.மு.க. அரசு மீது மிகப்பெரிய அளவில் நம்பிக்கை இருக்கிறது.

    மழை வெள்ளத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மழை வெள்ளத்திலும் உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டு கொண்டு வருவது நீங்கள்தான்.


    2015-ல் இதே போல் மிகப்பெரிய வெள்ளம் வந்தது. அப்போதும் மீனவ நண்பர்கள்தான் களத்தில் இறங்கி மக்களை காப்பாற்றினீர்கள்.

    தற்போது திராவிட மாடல் அரசு 2 இடங்களில் பாராட்டு விழாவை நடத்தி மீனவர்களை கவுரவித்துள்ளது. எனவே மீனவ மக்களிடம் எனக்கு பிடித்தது நேர்மையும், துணிச்சலும் தான். எதற்கும் கவலைப்படமாட்டீர்கள். யாருக்கும் பயப்படமாட்டீர்கள்.

    உங்களை நம்பி வந்தால் அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் நம்பி வந்தவர்களுக்கு தோளோடு தோள் நின்று காப்பாற்றுபவர்கள் தான் நீங்கள்.

    இன்று மிகமிக முக்கியமான நாள். மதுரையில் ஜல்லிக்கட்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்து உள்ளார். அந்த துறைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். ஆனால் அந்த விழாவுக்கு செல்லாமல் இன்று உங்கள் விழாவில் பங்கேற்றுள்ளார்.

    அந்த அளவுக்கு இது முக்கியமான நிகழ்ச்சி என்பதை நீங்கள் உணர வேண்டும். மீனவர்களை பாராட்டுகிற நிகழ்ச்சியில் ஏன் ஜல்லிக்கட்டு பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும். அதற்கு ஒரு காரணம் உள்ளது.

    2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்தது. அப்போது மாணவர்கள் இளைஞர்கள் தெருவில் இறங்கி கடற்கரையில் போராடினார்கள். குறிப்பாக கடந்த 25 வருடத்தில் இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய போராட்டம் நடந்தது என்றால் அது ஜல்லிக்கட்டு போராட்டம்தான்.

    அப்போது இருந்த ஆட்சியாளர்கள் போராட்டத்தை ஒடுக்க நினைத்த போது மாணவர்கள் இளைஞர்களுக்கு ஆதரவாக இருந்தது மீனவர்கள்தான்.

    ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராடினார்கள். ஆனால் அந்த மாணவர்களுக்காக இந்த மீனவ நண்பர்கள் போராடினீர்கள். அதுதான் உங்களது மனித நேயம்.

    கடந்த 2½ ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்களை மீனவர்களுக்கு அரசு நிறைவேற்றி உள்ளது. இனிவரும் காலங்களிலும் பல்வேறு திட்டங்களை உங்களது கோரிக்கைகளை முதலமைச்சர் நிச்சயம் செய்து தருவார்.

    இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் யார் உண்மையான கடவுள், யார் உண்மையான இறைவன் என்றால் இன்னொரு உயிரை காப்பாற்றுகிறவன் தான் உண்மையான இறைவன். அப்படி பார்த்தால் நீங்கள் கடவுளுக்கு சமம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், புயல் மழையின் போது மீனவர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றினார்கள். அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது உண்மையில் சிறப்பு வாய்ந்தது. மீனவர்களின் பணியை பாராட்டி 1200 மீனவர்களுக்கு சான்றிதழ் நிவாரணப் பொருட்கள் வழங்கி கவுரவித்துள்ளோம் என்றார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, கலாநிதி எம்.பி., மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள், த.வேலு, ஐடீரீம் மூர்த்தி, எஸ்.எஸ். பாலாஜி கலந்து கொண்டனர்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் வாக்கு திருட்டு சதியை முறியடிப்போம், மீண்டும் வாக்குச் சீட்டு முறையை மீட்டெடுப்போம் என கோஷமிட்டனர்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

    தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல் மழை-வெள்ள பாதிப்பை தீவிர பேரிடராக அறிவிக்க வேண்டும். ரூ.21 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், காங்கிரஸ் ஊடகத்துறை மாநில தலைவர் கோபண்ணா, அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், அய்யநாதன், காந்தராஜ், விடுதலை சிறுத்தை எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு ஆகியோர் உரையாற்றினார்கள்.

    மாவட்ட செயலாளர்கள் வேலுமணி, சாரநாத், சேத்துபட்டு இளங்கோ, சைதை ஜேக்கப், இளையா, கரிகால்வளவன், அப்புன், சவுந்தர், உஷாராணி, இளங்கோவன், ஞானமுதல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம் வரவேற்பு நிகழ்த்தினார்.

    ஆர்ப்பாட்டத்தை மேலிட பொறுப்பாளர்கள் நீலவானத்து நிலவன், எழில் கரோலின், தமிழினியன், அப்துர் ரகுமான், முபாரக், செல்வராஜ், செல்லத்துரை, கதிர்நிலவன், இரா.செல்வம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வாக்கு திருட்டு சதியை முறியடிப்போம், மீண்டும் வாக்குச் சீட்டு முறையை மீட்டெடுப்போம் என கோஷமிட்டனர்.

    • வடிகால் பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது.
    • பணிகள் நிறைவடைய எவ்வளவு காலம் ஆகும்.

    சென்னை:

    கடந்த டிசம்பர் மாதம் மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள், தெருக்களில் தேங்கிய வெள்ளம் வடிய காலதாமதம் ஆனது. மழை நீர் வடிகால் அமைத்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது எப்படி என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில் இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு இருந்தது

    இந்நிலையில், சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    வடிகால் பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது, எந்தெந்த நிதிகளின் கீழ் பணிகள் நடைபெற்றது, பணிகள் நிறைவடைய எவ்வளவு காலம் ஆகும், வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன உள்ளிட்ட தகவல்களுடன் விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரேஷன் கார்டு இணைத்து 2 லட்சத்து 46 ஆயிரம் பேரும், ரேஷன் கார்டு இல்லாமல் 3 லட்சத்து 5 ஆயிரம் பேரும் மனு கொடுத்து இருந்தனர்.
    • ஆதார் அட்டை வைத்து விண்ணப்பங்கள் சரி பார்க்கப்படுகின்றன.

    சென்னை:

    மிச்சாங் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

    குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகை கடந்த 17-ந்தேதி முதல் வழங்கப்பட்டன. சென்னை மாவட்டத்தில் 13.72 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.

    சர்க்கரை கார்டு, எந்த பொருளும் வாங்க முடியாத கார்டுதாரர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், வெளியூரில் இருந்து இங்கு வந்து தங்கி வேலை செய்வோருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான விவரத்தை அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து 15 மண்டலங்களில் 5 லட்சத்து 51 ஆயிரத்து 677 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    ரேஷன் கார்டு இணைத்து 2 லட்சத்து 46 ஆயிரம் பேரும், ரேஷன் கார்டு இல்லாமல் 3 லட்சத்து 5 ஆயிரம் பேரும் மனு கொடுத்து இருந்தனர். இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு ஆதார் அட்டை வைத்து விண்ணப்பங்கள் சரி பார்க்கப்படுகின்றன.


    அதில் ஏற்கனவே ரேஷன் கார்டு அடிப்படையில் ரூ.6 ஆயிரம் வாங்கியவர்கள் விண்ணப்பித்து இருந்தாலும் அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பித்து இருந்தாலும் அவை நிராகரிக்கப்படும். மற்ற விண்ணப்பங்களை அந்தந்த வார்டு வருவாய், சுகாதாரம், பொறியியல் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கள ஆய்வு செய்து அனுமதி வழங்குகிறார்கள். இந்த பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நீர்நிலைகளை ஒட்டி வசிப்போர், தாழ்வான பகுதியில் மற்றும் 24 மணி நேரத்திற்கு மேல் வெள்ளம் தேங்கி நின்ற பகுதியை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் போது தவறான தகவல் பெறப்பட்டால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நின்று பாதிப்பு ஏற்பட்டதா என அதிகாரிகள் உறுதி செய்கின்றனர். வெள்ளப் பாதிப்பு உள்ள பகுதி எது? பாதிப்பு இல்லாத பகுதி எது என ஆய்வு செய்து நிவாரணத் தொகை வழங்கவோ, நிராகரிக்கவோ செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

    ரேஷன் கார்டு இல்லாதவர்களின் விண்ணப்பங்களுடன் ஆதார் மற்றும் முகவரி சான்றுக்கான வாடகை ஒப்பந்தம், கியாஸ் பில், வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

    • சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 5.64 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
    • மழைக்கு பின் தொற்றுநோய் எதுவும் பரவவில்லை.

    சென்னை :

    சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் 100 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டன. சென்னை மாநகராட்சியில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் 42 சதவீத வடிகால் பணிகள் முடிந்துள்ளன.

    கடந்த இரண்டரை ஆண்டுகளில் 876 கிலோ மீட்டருக்கு மழைநீர் வடிகால்கள் போடப்பட்டுள்ளன. 876 கி.மீ. பணிகள் நடைபெற்றதால் தான் 60 விழுக்காடு தண்ணீர் 48 மணி நேரத்திற்குள் வடிந்தது.

    சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 5.64 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். மழைக்கு பின் தொற்றுநோய் எதுவும் பரவவில்லை. மருத்துவ முகாம்கள் தொடரும் என்றார்.

    • அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
    • முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

    சென்னை:

    மிச்சாங் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதையடுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சட்டசபை துணைத் தலைவர் பிச்சாண்டி மற்றும் அரசு தலைமைக் கொறடா செழியன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அமைச்சர்களின் ஒரு மாத ஊதியமான ரூ.35,70,000, திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான ரூ. 91,34,500 என மொத்தம் 1,27,04,500 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்கள்.

    • அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் ரேஷன் கடைகளுக்கு சென்று ரூ.6 ஆயிரம் வாங்கி உள்ளனர்.
    • ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமானோர் ரேஷன் கடைக்கு சென்று விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4-ந்தேதிகளில் வீசிய மிச்சாங் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டன.

    இதில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.


    அதன்படி அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் ரேஷன் கடைகளுக்கு சென்று ரூ.6 ஆயிரம் வாங்கி உள்ளனர். இதில் இதுவரை 21 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    ரேஷன் கடைகளில் உள்ள பட்டியலில் பெயர் இல்லாத வசதி படைத்தவர்கள், வருமானவரி செலுத்துபவர்கள், ஏ கிரேடு, பி கிரேடு அதிகாரிகளின் வீடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்கள் ரேஷன் கடைக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது.

    அதன்படி ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமானோர் ரேஷன் கடைக்கு சென்று விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். அதில் பாதிப்பு விவரங்கள், ஆதார் எண், வங்கி கணக்கு எண், செல்போன் எண்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த மனுக்களை ஆய்வு செய்து அவர்களின் வங்கி கணக்குக்கு ரூ.6 ஆயிரம் பணம் அனுப்பி வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    அந்த வகையில் இப்போது எழுதி கொடுத்த 6 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு இன்னும் ஓரிரு நாளில் பணம் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த திட்டத்துக்காக மொத்தம் ரூ.1,500 கோடியை அரசு ஒதுக்கி உள்ள நிலையில் இதுவரை ரூ.1260 கோடி, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. பணம் கிடைக்காதவர்களுக்கு சனிக்கிழமைக்குள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மத்திய அரசின் நிதியை முழுமையாக பெற்றால்தான் முழுமையான நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும்.
    • தென் மாவட்டங்களில் 8 அமைச்சர்கள், 10 ஆட்சி அலுவலர்கள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    டெல்லி:

    டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழ்நாடு அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பெருமளவு பாதிப்பும், சேதமும் தவிர்க்கப்பட்டது. புயல் ஓய்ந்த மறுநாளே சென்னையில் போக்குவரத்து சீரானது.

    * தற்போது தென் மாவட்டங்களில் மழையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வானிலை மையம் தெரிவித்ததை விடவும் அதிகமாக மழை பெய்துள்ளது.

    * மத்திய அரசின் குழுவினர் 4 மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்.

    * இது பெரும் பேரிடர் என்பதால் கூடுதல் நிதியை கோரியுள்ளோம்.

    * மத்திய அரசின் நிதி வரட்டும் என காத்திருக்காமல் 4 மாவட்ட மக்களுக்கான இழப்பீட்டை அரசு அறிவித்தது.

    * மத்திய அரசின் நிதியை முழுமையாக பெற்றால்தான் முழுமையான நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும்.

    * பிரதமரை சந்தித்து மிச்சாங் புயல் நிவாரணத்தோடு, தென் மாவட்ட பாதிப்புக்கு நிவாரணம் கோர உள்ளேன்.

    * நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

    * ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் கொட்டித் தீர்த்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.

    * தென் மாவட்டங்களில் 8 அமைச்சர்கள், 10 ஆட்சி அலுவலர்கள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    * மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை தென்மாவட்டங்களுக்கு செல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 24 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என்று எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
    • மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீண்டும், மீண்டும் வேதனைக்கு உள்ளாக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கும் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் துயரங்களைப் போக்குவதற்கு பதிலாக வேதனையையும், மன உளைச்சலையும் அதிகரித்திருக்கிறது. நிவாரண உதவி வழங்குவதில் நிகழும் குளறுபடிகள் தான் அனைத்துக்கும் காரணம் ஆகும். இந்த தவறான அணுகுமுறை கண்டிக்கத்தக்கது ஆகும்.

    சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குடிசைகளில் வாழும் ஏழை மக்களுக்குக் கூட நிவாரண உதவி மறுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் அனைத்து வசதிகளுடன் வாழும் பணக்காரர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. எந்த அடிப்படையில் நிதி உதவி பெறுவதற்கான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. நிவாரண உதவி கண்டிப்பாக தேவைப்படும் நிலையில் உள்ள ஏழை மக்களை புறக்கணிப்பது அவர்களின் துயரங்களை மேலும் அதிகரிக்கும்.

    தமிழக அரசின் நிவாரண உதவி பெறுவதற்கான ஒரே தகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தான். அதன்படி பார்த்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 40 லட்சத்திற்கும் கூடுதலான குடும்பங்கள் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மழை - வெள்ளத்தை பார்வையிட வந்த மத்தியக் குழுவிடம் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளில் இதை தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. அதன்படி, 40 லட்சம் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், 24 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என்று எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.

    நிவாரண உதவி மறுக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான முறை நடைமுறைக்கு சிறிதும் ஒத்துவராததாக உள்ளது. அதற்காக கோரப்படும் ஆவணங்களையும், சான்றுகளையும் சேகரித்து வழங்குவது பாமர மக்களால் இயலாத ஒன்றாகும். மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீண்டும், மீண்டும் வேதனைக்கு உள்ளாக்கக் கூடாது. மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும், மற்றவர்களுக்கும் எந்த நிபந்தனையும் இல்லாமல் ரூ.6000 இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

    ×