search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AMMK"

    • பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
    • தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கோவையிலிருந்து திருப்பதி செல்லும் ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில் அத்துமீறி நுழைந்த இருவர், அதில் பயணம் செய்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததோடு, தன்னைக் காப்பாற்றக் கூறி கூச்சலிட்ட பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

    நேற்று ஒரே நாளில், கோவை மேட்டுப்பாளையத்தில் ஆட்டோ ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது சிறுமி, திருச்சியில் பள்ளித்தாளாளரின் கணவரால் பாலியல் துன்புறுத்தப்பட்ட 4 வயது குழந்தை, கடலூரில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் தொந்தரவுக்குள்ளான 16 வயது சிறுமி என அடுத்தடுத்து நடைபெற்றிருக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?

    குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பில் சிறிதளவும் அக்கறையற்ற திமுக அரசால், அரசுப் பள்ளிகள், பொது இடங்கள், பொது போக்குவரத்து என அனைத்து இடங்களிலும் சர்வசாதாரணமாக நடைபெறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    எனவே, கடுமையான சட்டங்களை கொண்டுவந்த பிறகும் தினந்தோறும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றச்சம்பவங்களை அடியோடு தடுத்து நிறுத்திட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சரையும், அவர் வசம் இருக்கும் காவல்துறையையும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். 

    • நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
    • நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட அரசு மருத்துவமனைகள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவும் மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுகுறித்து டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    அரசு மருத்துவமனைகளில்நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிப்பு – மாரத்தான் ஓட்டத்திற்கு கொடுக்கும் கவனத்தை மக்கள் நலனில் செலுத்த தயங்குவது ஏன் ?

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் மாலை 5 மணிக்கு மேல் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், அங்கு வரும் நோயாளிகளுக்கு செவிலியர்களே சிகிச்சை அளித்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

    நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நிலையில், அம்மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களை கூட நியமிக்காமல் நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    அவசர சிகிச்சைக்காக இரவு நேரங்களில் அரசு மருத்துவமனைகளை தேடி வரும் நோயாளிகளை மருத்துவர்கள் பற்றாக்குறை எனக்கூறி வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சையின்றி பல நோயாளிகளின் உடல்நிலை மேலும் பாதிப்புக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து பலமுறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சக மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    எனவே, தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட அரசு மருத்துவமனைகள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவும் மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மின்சாரப் பிரிவு தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் பழவை P. பன்னீர்செல்வம்
    • வட சென்னை கிழக்கு மாவட்ட மன்ற துணைச் செயலாளர் D. முரளி, 10-வது வட்டச் செயலாளர் C.M. முனிபாபு

    அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மின்சாரப் பிரிவு தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் பழவை P. பன்னீர்செல்வம், வட சென்னை கிழக்கு மாவட்ட மன்ற துணைச் செயலாளர் D. முரளி, 10-வது வட்டச் செயலாளர் C.M. முனிபாபு, 2-வது வட்டச் செயலாளர் காதர் அலி, இணைச் செயலாளர் சாந்தி பெரியசாமி,

    மேலமைப்புப் பிரதிநிதி I. காதர் பாஷா, துணைச் செயலாளர் D. ரகு, 1-வது வட்ட துணைச் செயலாளர் P. பாபு, L. பொற்கேஷ்வரன், N. தயாளன், D. குமார், R. தேசப்பன், R. சரவணன், M. தேசப்பன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்வின்போது, திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாதவரம் V. மூர்த்தி, திருவொற்றியூர் மேற்கு பகுதிக் கழகச் செயலாளர் K. குப்பன், Ex. MLA., உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

    • காலை 10 மணியளவில் திருச்சி பெமினா ஓட்டல், காவேரி அரங்கில் நடைபெற உள்ளது.
    • கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.

    சென்னை:

    அ.ம.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மற்றும் திருச்சி மாநகர் ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் வருகிற 5-ந் தேதி (ஞாயிறுக்கிழமை) காலை 10 மணியளவில் திருச்சி பெமினா ஓட்டல், காவேரி அரங்கில் நடைபெற உள்ளது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மற்றும் திருச்சி மாநகர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வட மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களை சூழ்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே கனமழை பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க ஒரே வழியாக அமையும்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடரும் கனமழையால் முறையான முன்னறிவிப்புக்கு பின்னரே அணைகள் திறக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக நேற்று இரவு முதல் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஏற்கனவே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை என பல மாவட்டங்களில் ஃபெஞ்ஜல் புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மீண்டு வராத நிலையில், கனமழை நீடிக்கும் என்ற தற்போதைய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அம்மாவட்ட மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், எந்தவித முன்னறிவிப்பின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீரால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, வட மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களை சூழ்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது.

    மழை பாதிப்புக்கு பின்பு, வரலாறு காணாத மழை, கணித்ததை விட அதிகளவிலான மழைப்பொழிவு என காரணத்தை தேடாமல், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றி முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே கனமழை பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க ஒரே வழியாக அமையும்.

    எனவே, ஆற்றங்கரையோரம், தாழ்வான பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, முறையான எச்சரிக்கைக்கு பின்னரே அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தேர்வர்களும், தேர்வர்களின் பெற்றோர்களும் கருதுகின்றனர்.
    • இரு தேர்வுகளையும் வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசையும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் (ICAI) வலியுறுத்துகிறேன்.

    சென்னை :

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களும் தமிழகம் முழுவதும் தைத் திருநாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்திய பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தின் (ICAI) சிஏ பவுண்டேசன் தேர்வுகள் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    நாட்டின் முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் சிஏ தேர்வுகள் தமிழகத்தில் 28 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அத்தேர்வுகளுக்கு இடைவிடாது தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு, தேர்வுகள் நடைபெறும் தேதி அட்டவணை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    ஒட்டுமொத்த தமிழக மக்களின் தனிப்பெரும் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாட்களில் தேர்வுகள் நடைபெறுவது, கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தேர்வர்களும், தேர்வர்களின் பெற்றோர்களும் கருதுகின்றனர்.

    எனவே, தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக, தேர்வர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரு தேர்வுகளையும் வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசையும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் (ICAI) வலியுறுத்துகிறேன்.

    • உலகெங்கிலும் பரந்து விரிந்திருக்கும் மீனவ சமுதாய மக்களின் வாழ்க்கையைப் போற்றும் விதமாக கொண்டாடப்படும் உலக மீனவர்கள் தினம் இன்று.
    • மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை மீட்டிடவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    உலகெங்கிலும் பரந்து விரிந்திருக்கும் மீனவ சமுதாய மக்களின் வாழ்க்கையைப் போற்றும் விதமாக கொண்டாடப்படும் உலக மீனவர்கள் தினம் இன்று.

    மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர்களாலும், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களாலும் மிகுந்த இன்னல்களுக்குள்ளாகி வரும் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை மீட்டிடவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை களைய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
    • பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் பெண் பழ வியாபாரியை மாமூல் தர மறுத்ததாக கூறி கொடூரமாக கொலை செய்த ரவுடி, அதனை தடுக்க முயன்ற பெண்ணின் கணவரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து சந்திசிரிக்கும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை களைய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
    • 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகால தொற்றுநோய்களும் தீவிரமடைந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    காய்ச்சல், சளி, தலைவலி, உடல் சோர்வு, வாந்தி, மயக்கம் போன்ற டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளோடு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும்.

    அடுத்த சில மாதங்களுக்கு டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்கும் என கூறப்படும் நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் குறித்தும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

    எனவே, இனியாவது விளம்பர அரசியலை தவிர்த்து, மக்களை பெருமளவு பாதிக்கும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உயிரிழப்புகளை தடுப்பதோடு, பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கும் ஏழை, எளிய மக்களுக்கு மீளவே முடியாத அளவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது.
    • பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக தொழில் கூட்டமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்,

    திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, கடந்த 2022 ஆம் ஆண்டு 30 சதவிகிதமும், 2023 ஆம் ஆண்டு 2.18 சதவிகிதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது நடப்பாண்டில் மீண்டும் 4.83 சதவிகிதம் அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது.

    அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போதே மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான செய்திகளை மறுத்த திமுக அரசு, தேர்தலுக்கு பின்பு மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 221-வதாக இடம்பெற்றிருக்கும் மாதம் தோறும் மின் கணக்கீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பு, ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கும் ஏழை, எளிய மக்களுக்கு மீளவே முடியாத அளவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது.

    மின்சார நிலைக்கட்டணம் மற்றும் உச்ச நேர மின் கட்டண உயர்வால் பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ள மின்கட்டணத்தால் மேலும் பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக தொழில் கூட்டமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வாழ்வை இருளில் மூழ்கச் செய்ததாக பழனிசாமி அரசாங்கத்தை விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலின், முதலமைச்சரான பின் அதே தவறை வருடந்தோறும் இழைத்து வருவது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

    எனவே, மின் நுகர்வோர்களுக்கு கடுமையான நிதிச்சுமையை ஏற்படுத்தும் மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, மின்வாரியம் மூலம் மின் உற்பத்தியை பெருக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    • இந்திய அரசியலை வழிநடத்திய கிங்மேக்கர், கல்விக்கண் திறந்த மேதை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
    • தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டு மக்களுக்காகவே அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர்.

    சென்னை:

    பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழகத்திற்கென தனிப்பெருமையை தேடித் தந்த பெருந்தலைவர், இந்திய அரசியலை வழிநடத்திய கிங்மேக்கர், கல்விக்கண் திறந்த மேதை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று.

    எளிமை, தூய்மை, நேர்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டு தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டு மக்களுக்காகவே அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெருமையையும் புகழையும் அவர் பிறந்த இந்நன்னாளில் போற்றிக் கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார்.

    • புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • அடுத்தடுத்து நடைபெறும் கைது சம்பவங்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 13 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்திருப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்திருக்கும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.

    கடந்த இரு வாரங்களில் மட்டும் 40க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் கைது சம்பவங்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

    எனவே, ஒவ்வொருமுறை மீனவர்கள் கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் நாடகத்தை இனியும் தொடராமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    ×