search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சரின் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணம்.. தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்தார்

    • விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
    • விருந்தினர் மாளிகையில் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வரும் நோக்கில் மேற்கொண்ட ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

    அவ்வகையில், இன்று டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுப்பணியை தொடங்கினார். காவிரி டெல்டா பாசன கால்வாய், நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார். முதலில் தஞ்சை மாவட்டம் முதலை முத்துவாரி பகுதியில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். வரைபடம், புகைப்படங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் குறித்து முதல்வருக்கு அதிகாரிகள் விளக்கினர். அதன்பின்னர் தஞ்சை அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

    குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி தொடங்க உள்ள நிலையில் கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் சென்றடைய வேண்டும் என்பதற்காக தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அவர் ஆய்வு செய்கிறார்.

    நாகை, திருவாரூர் என ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்த பிறகு 11-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுகிறார்.

    முதல்வரின் வருகையை முன்னிட்டு திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    Next Story
    ×