search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை
    X

    டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

    • மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறக்க முடியாத காரணத்தால் டெல்டா மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த குறுவை பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்துவிட்டது.
    • குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு எவ்வளவு தொகை நிவாரணமாக அறிவிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது போல் இந்த ஆண்டும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீரை நம்பி காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகள் குறுவை நெல் விதைத்தனர். சுமார் 5 லட்சம் ஏக்கர் அளவுக்கு குறுவை நெல் பயிரிடப்பட்டிருந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சாகுபடிக்கு தேவையான நீர் கடைமடை வரை சென்றடையவில்லை.

    குறிப்பாக நாகை மாவட்டத்தில் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்ட நிலையில் விவசாயிகள் ஆற்றுப்பாசனத்தை முழுவதுமாக நம்பி இருந்தனர். ஆனால் பாசன நீர் கிடைக்காமல் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகியது. கர்நாடக மாநில அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு போதிய தண்ணீர் திறந்துவிடப்படாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

    இதனால் மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறக்க முடியாத காரணத்தால் டெல்டா மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த குறுவை பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்துவிட்டது.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் வேளாண்மைத் துறை ஆணையர் சுப்பிரமணியன் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் குறுவை சாகுபடி செய்யப்பட்ட இடங்களில் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்களை பார்வையிட்டு சேத மதிப்புகளை கணக்கிட்டனா். அங்குள்ள விவசாயிகள், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதுமட்டுமின்றி சம்பா சாகுபடிக்கு தயாராகும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் குறுவை பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கேற்ப விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    இதில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்துறை கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில் குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு எவ்வளவு தொகை நிவாரணமாக அறிவிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.

    இதுகுறித்து உயர் அதிகாரி கூறுகையில், விவசாயிகளுக்கு நெற்பயிர்களுக்கான இழப்பீடு எவ்வளவு என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×