search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    7 ஆயிரம் ஏக்கரில் மூழ்கி கிடக்கும் 20 நாட்களே ஆன சம்பா, தாளடி இளம் நாற்றுகள்
    X
    தஞ்சை மாவட்டம், உதாரமங்களம் பகுதியில் தொடர் மழையால் மூழ்கிய சம்பா பயிர்களை சோகத்துடன் காண்பிக்கும் விவசாயி.

    7 ஆயிரம் ஏக்கரில் மூழ்கி கிடக்கும் 20 நாட்களே ஆன சம்பா, தாளடி இளம் நாற்றுகள்

    • மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
    • நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் சம்பா, தாளடி பயிர்கள் மூழ்கி உள்ளன.

    தஞ்சாவூர்:

    தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது 2 முதல் 4 மணி நேரம் தொடர் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணி நேரம் விடாது 177 மி.மீ கனமழை பெய்தது.

    இந்நிலையில் நேற்றும் மாலை 1 மணி நேரம் கனமழை பெய்தது. தற்போது குறுவை அறுவடை பணிகள் முடிந்து சம்பா, தாளடி நடவுப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்

    இந்நிலையில் இந்த கனமழையால் தஞ்சை மாவட்டம் முழுவதும் சுமார் 1000 ஏக்கரில் சம்பா, தாளடி இளம் நாற்றுகள் முற்றிலும் மூழ்கி கிடக்கிறது. முறையாக தூர்வாரப்படாததால் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் மதியம் முதல் சுமார் 2 மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் தியாகராஜர் கோவிலின் கிழக்கு கோபுர வாசல் வழியாக மழைநீர் கோவிலுக்குள் புகுந்து குளம் போல் தேங்கியது.

    இதைப்போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான மன்னார்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகள் உள்ள குடியிருப்புகள் மற்றும் வயல்களில் மழைநீர் சூழ்ந்தது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சம்பா, தாளடி, இளம் நாற்றுகள் மூழ்கி கிடப்பதால் விவசாயிகள் தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் சம்பா, தாளடி பயிர்கள் மூழ்கி உள்ளன.

    ஆனால், போர் செட் மூலமும், மேட்டு பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி செய்த விவசாயிகளும் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் கடல் சீற்றம் காரணமாக வேதாரண்யம், கோடிக்கரை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 4 நாட்களுக்கும் மேலாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

    விடிய விடிய மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீர்காழி நகரின் தாழ்வான பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது

    சீர்காழி வ.உ.சி நகரில் ரவி என்பவரின் கூரை வீடு இடிந்து விழுந்தது. சில இடங்களில் சாலை மற்றும் தெருக்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    திருமுல்லைவாசல், தொடுவாய் உள்ளிட்ட 4-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக மீன் பிடிக்க செல்லவில்லை.

    கொள்ளிடம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக வடிகால் வாய்க்கால்களின் மூலம் மழைநீர் கடலில் சென்று கலப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது

    மாவட்டம் முழுவதும் 12 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி, இளம் நாற்றுகள் வயல்களில் மழைநீரில் மூழ்கி கிடப்பதாகவும் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யாமல் இருந்தால் இந்த பயிர்களை காப்பாற்ற இயலும் என்றும், ஆனால் தாழ்வான பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள வயல்களில் மூழ்கி உள்ள பயிர்களை காப்பாற்றுவது சற்று கடினம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    டெல்டா மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி, இளம்நாற்றுகள் மூழ்கி உள்ளன.

    ஏற்கனவே குறுவை அறுவடை நேரத்தில் பெய்த மைழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூடுதல் ஈரப்பதம் காரணமாக நெல்லை விற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்த சம்பா, தாளடி, இளம்நாற்றுகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தொடர் மழை காரணமாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

    Next Story
    ×