கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டதால் விவசாயிகள் அவதி அடைந்தனர்.வண்ணாரப்பேட்டை பகுதியில் திருவையாறு புறவழிச்சாலையில் காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் திரண்டனர்.
நெற்பயிர்களுடன் விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெற்பயிர்களுடன் விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

தஞ்சாவூா்:

டெல்டா மாவட்ட சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டு கடந்த மாதம் 28-ந்தேதி மூடப்பட்டது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழையால் அறுவடை பாதிக்கப்பட்டு சம்பா, தாளடி சாகுபடி காலதாமதமாக நடவு செய்யப்பட்டது.

இதனால் நெற்பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். தண்ணீர் இன்றி பயிர்கள் காய்வதால் மேட்டூர் அணையில் இருந்து இந்த மாதம் இறுதி வரை தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டதால் விவசாயிகள் அவதி அடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை கல்லணையில் இருந்து கல்லணை கால்வாயில் 15 தினங்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் திருவையாறு புறவழிச்சாலையில் காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் திரண்டனர்.

பின்னர் டிராக்டரை சாலையில் மறித்து வைத்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீரை திறந்து பயிரைக் காப்பாற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து நடவு செய்தோம். தற்போது தண்ணீர் இன்றி பயிர்கள் காய்வதால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் உள்ளோம். உடனடியாக தண்ணீர் திறந்தால் மட்டுமே இந்த பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் சாகுபடியை காப்பாற்ற முடியும் என்றனர். இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் .

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com