என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏரியூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
- தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
- போலீசார் மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்த நாகமரை மேல்காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டிக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வருவதில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் குடிநீர் தேவைக்கு அருகில் உள்ள பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை 50-க்கும் மேற்பட்டோர் நாகமரை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஏரியூர் போலீஸ் சப்-இன்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






