என் மலர்
நாமக்கல்
- 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- எப்.சி. புதுப்பிக்க முடியாமல் ஏறத்தாழ 30 ஆயிரம் லாரிகள் கடந்த ஒரு மாதகாலமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
நாமக்கல்:
15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரி, பஸ்களுக்கு தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் (எப்.சி.) ரூ.2,500 இருந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி அனைத்து வாகனங்களுக்கும் தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தியது.
அதன்படி 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரிகள் மற்றும் பஸ்களுக்கு தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் ரூ.12,500 ஆகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஏறத்தாழ 10 மடங்கு வரை தகுதிச்சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் உயர்ந்து இருப்பதால், லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் சான்றிதழை புதுப்பிக்காமல் வைத்து உள்ளனர். இதனால் ஒன்றிரண்டு பழைய லாரிகளை வைத்து தொழில் செய்து குடும்பத்தை நடத்தி கொண்டு இருக்கும் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து சம்மேளன நிர்வாகிகள் கூறியதாவது:-
தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை மற்ற மாநிலங்களை போன்று தமிழகத்திலும் நிறுத்தி வைக்க வேண்டும் என மாநில போக்குவரத்து துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஏறத்தாழ 10 மடங்கு வரை தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் உயர்ந்து இருப்பதால், ஒரு லாரி வைத்து தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் எப்.சி. புதுப்பிக்க முடியாமல் ஏறத்தாழ 30 ஆயிரம் லாரிகள் கடந்த ஒரு மாதகாலமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
எனவே லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உயர்த்தப்பட்ட எப்.சி. கட்டணத்தை குறைக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகம் முழுவதும் ஏற்கனவே போதிய லோடு கிடைக்காமல் ஆயிரக்கணக்கில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், எப்.சி. கட்டண உயர்வால் மேலும் 30 ஆயிரம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது லாரி உரிமையாளர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
- எஸ்ஐஆர் படிவங்களில் விடுபட்டவர்கள் பெயர்களை சேர்ப்பது குறித்து வீடு வீடாக சென்று பணிகள் மேற்கொள்வது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
- தமிழக வெற்றிக்கழக தலைமையை ஏற்று வருகிற கட்சிகளுடன் தான் கூட்டணி.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எஸ்ஐஆர் படிவங்களில் விடுபட்டவர்கள் பெயர்களை சேர்ப்பது குறித்து வீடு வீடாக சென்று பணிகள் மேற்கொள்வது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. அடுத்த மக்கள் சந்திப்பு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளிவரும் .
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைய உள்ளது. அந்தக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமையும். எங்கள் தலைவர் முதல்வராக பதவியேற்பார். ஏற்கனவே எங்களது கொள்கை எதிரி யார்? அரசியல் எதிரி யார் என்பதை தெளிவாக அறிவித்து விட்டோம். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. தமிழக வெற்றிக்கழக தலைமையை ஏற்று வருகிற கட்சிகளுடன் தான் கூட்டணி. எங்கள் தலைவரை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி. தி.மு.க.- பா.ஜ.க.வை தவிர யார் எங்கள் தலைவரை முதலமைச்சராக ஏற்று கூட்டணிக்கு வந்தாலும் அரவணைத்து செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- செந்தில்நாதன் மீது பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மகளிர் அணி நிர்வாகியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அவர் மீது பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்சிக்கு எந்த விதமான களங்கத்தை யார் விளைவித்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கழிவறை, சமையல் கூடம், ஆய்வுக்கூடம் டாக்டர்கள் அறை, செவிலியர்கள் அறை மற்றும் பிற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- தங்குதடையின்றி பாதுகாப்பான சுகாதாரமான சேவைகளை பொது மக்களுக்கு வழங்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வருகை தந்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று கொல்லிமலையில் இருந்து காரவள்ளி வரை சுமார் 25 கிலோ மீட்டர் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் நடைபயணம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் சேர்ந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சிகிச்சை பெற்று வரும் பயனாளிகளிடம் மருத்துவமனையின் சிகிச்சை முறைகள் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாளர்கள் ஆகியோர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் கழிவறை, சமையல் கூடம், ஆய்வுக்கூடம் டாக்டர்கள் அறை, செவிலியர்கள் அறை மற்றும் பிற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் தங்குதடையின்றி பாதுகாப்பான சுகாதாரமான சேவைகளை பொது மக்களுக்கு வழங்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராஜ்மோகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
இதை தொடர்ந்து நாமக்கல் மாநகராட்சியில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் புதிய சித்த மருத்துவமனையை திறந்து வைத்தார். ரூ.2.28 கோடி மதிப்பில் புதுச்சத்திரம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு வட்டாரங்களில் 3 புதிய பொது சுகாதார வளாகம், 2 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தையும் திறந்து வைத்து பேசினார்.
- தகவல் சரிபார்ப்பகம் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளது.
- சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.
நாமக்கல் மாவட்டம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளது.
நாமக்கல் தனியார் கல்லூரியின் விடுதியில் வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிநீரால் கடந்த 27 மற்றும் 28-ந் தேதிகளில் பாதிக்கப்பட்ட 128 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினர். மேலும், உணவு தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவத்தில் மாணவர்கள் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தியே என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், சிலர் இறந்து விட்டதாக தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது நாமக்கல் மாவட்ட காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்ஸல் குழும கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் 27.10.2025 (திங்கட்கிழமை) காலை சில மாணவர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்களில் சில மாணவர்கள் எக்செல் கல்லூரி மருத்துவ மையம் மற்றும் குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் புறநோயாளிகளாக(OP) சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கல்லூரி விடுமுறையை தொடர்ந்து தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.
மாணவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ள நிலையில் அவர்களில் சிலர் இறந்துவிட்டதாக சமூக விரோதிகள் சிலர் சமூகத்தில் பதற்றத்தையும் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் "Pokkiri Victor (@Pokkiri_Victor)" w "Phoenix Vignesh (@PhoenixAdmk) என்ற எக்ஸ் வலைதலங்களில் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உணவு தயாரிக்கும் கூடம் சமைக்கவே முடியாத அளவிற்கு அசுத்தமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- மாணவர்களுக்கு குடிநீர் வழங்கும் தொட்டி முழுவதும் அசுத்தமாகவும், புழுக்களுடன் இருந்ததாகவும் புகார் கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கல்லூரியில் வழங்கப்பட்ட உணவை அருந்திய நிலையில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து கல்லூரிக்கு சென்று உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் உணவு தயாரிக்கும் கூடம் சமைக்கவே முடியாத அளவிற்கு அசுத்தமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு குடிநீர் வழங்கும் தொட்டி முழுவதும் அசுத்தமாகவும், புழுக்களுடன் இருந்ததாகவும் புகார் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தனியார் கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியில் உணவு சமைக்க, குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான பொன்னுசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி. முன்னதாக 2016-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட பொன்னுசாமி தோல்வியை தழுவினார்.
பொன்னுசாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- கியாஸ் டேங்கர் லாரிகள் சாலை ஓரங்கள் மற்றும் பட்டறைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மண்டல எல்.பி.ஜி.கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக கியாஸ் டேங்கர் லாரிகள் சாலை ஓரங்கள் மற்றும் பட்டறைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலைகளுக்கு கியாஸ் கொண்டு செல்லும் பணி முற்றுலுமாக முடங்கியுள்ளது. எனவே தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
- அ.தி.மு.க., விஜய் கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
- அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.
விஜய்யின் அரசியல் வருகை 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் இருந்தது.
அதே நேரம் அவருடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் சில கட்சிகள் ஈடுபட்டன. ஆனால் தி.மு.க. மற்றும் பா.ஜனதா மீது அவர் வைத்த கடுமையான விமர்ச னங்கள் மூலம் தனித்து போட்டியிடும் முடிவைத் தான் விஜய் தேர்வு செய்வார் என்று நினைக்க வைத்தது.
இந்த சூழ்நிலையில் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அரசியல் போக்கையே மாற்றியது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விஜய் மீதான அணுகுமுறை த.வெ.க.வினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டங்களில் த.வெ.க.வினர் தங்கள் கட்சி கொடிகளுடன் கலந்து கொள்ள தொடங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி, விஜய் ஆகியோர் படங்களுடன் சுவரொட்டிகளையும் த.வெ.க.வினர் ஒட்டினார்கள்.
இந்த இணக்கமான போக்கு அ.தி.மு.க., விஜய் கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் த.வெ.க.வினர் கொடிகளுடன் கலந்து கொண்டதை சுட்டிக் காட்டிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.
இந்நிலையில், கூட்டத்தில் தவெக கொடிகளை வைத்திருந்தவர்கள் தவெகவினர் இல்லை. அதிமுக இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் அதிமுக டி-ஷர்ட் அணிந்தபடி தவெக கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.
அந்த இளைஞர்களைப் பார்த்து "கொடி பறக்குது பாருங்க.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என இபிஎஸ் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தி.மு.க. ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், ஏன் மூதாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை.
- கரூரில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறுகிறார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியில் நேற்று இரவு திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அது வெற்று கூட்டணி. ஆனால் நமது கூட்டணி வெற்றி கூட்டணி. வெல்லுகிற கூட்டணி நம் தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி. அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும்.
(த.வெ.க.) கொடி பறக்குது... பிள்ளையார் சுழி போட்டாங்க... எழுச்சி ஆரவாரம்... இந்த கூட்டத்தின் ஆரவாரம் மு.க.ஸ்டாலின் செவியை துளைத்துக்கொண்டு போகப்போகிறது. உங்களுடைய திட்டம் நிறைவேறாது. ஆகாயத்தில் கோட்டை கட்டி கனவு கண்டு கொண்டு இருக்கிறார். அவர் தங்களது கூட்டணியை நம்பி இருக்கிறார். மீண்டும் ஆட்சியை அமைத்துவிடலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு கானல் நீராக போகும். தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்கள் எவ்வளவு துன்பத்தையும், துயரத்தையும் அனுபவித்து வருகிறார்கள்.
தி.மு.க. ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், ஏன் மூதாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் எப்போது எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ? அப்போது எல்லாம் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருக்கும். தற்போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாக இருக்கிறார்கள். அதனை கட்டுப்படுத்தக்கோரி சட்டசபையிலும், பல்வேறு போராட்டங்கள் வாயிலாகவும் வலியுறுத்தினோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடத்தப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் சட்டம் சந்தி சிரிக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் வறுமையால் உடல் உறுப்புகளை மக்கள் விற்பனை செய்யக்கூடிய அவலம் இருந்து வருகிறது. தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான ஒரு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு கிட்னி எடுக்கப்பட்டது. ஆனால் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கிட்னி முறைகேட்டை மதுரை ஐகோர்ட்டு கடுமையாக கண்டித்து உரிய விசாரணை நடத்தவும் அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால் தனியாக சிறப்பு விசாரணை நடத்தப்படவில்லை.
கரூர் சம்பவத்தில் 41 பேரின் உயிர்கள் பலியாகி இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவோடு, இரவாக அங்கு சென்றுள்ளார். உடனடியாக ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்று அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?. அதிகாரிகளை வைத்து அங்கு என்ன நடந்தது? என்பது பற்றி அதிகாரிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் கூறுகிறார்கள்.
அரசியல்வாதிகள் அரசியல் பேசலாம். ஆனால் அதிகாரிகள் அரசியல் பேசலாமா?. இதில் இருந்து கரூரில் திட்டமிட்டு சதி நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. இதனால் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை தேவை என வலியுறுத்தி வருகிறோம்.
கரூரில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறுகிறார்கள். இதனால் காவல்துறை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும். எனவே, மக்களுக்கு நியாயம், உண்மை தெரிய வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். அப்போது தான் இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்ற உண்மை வெளிவரும்.
தி.மு.க. ஆட்சி அமைந்து 53 மாதங்கள் முடிந்துவிட்டன. இன்னும் உங்களுக்கு 7 மாதங்கள் தான் ஆயுட்காலம். விரைவில் தி.மு.க. ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுக அரசு திருச்செங்கோடு தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை.
- கொரோனா பரவல் காலத்தில் மாணவர்களை ஆல் பாஸ் ஆக்கியது அதிமுக அரசு.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று மாலை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை நடத்தினார்.
அப்போது அவர் உரையாற்றியதாவது:-
திருச்செங்கோடு தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. அதிமுக எங்கு கூட்டம் நடத்தினாலும் அது வெற்றி கூட்டமாக இருக்கும்.
திமுக அரசு திருச்செங்கோடு தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. திருச்செங்கோடு தொகுதிக்கு அதிமுக ஆட்சி காலத்தில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அதிமுக அரசு மக்களை காப்பாற்றியது. கொரோனா பரவல் காலத்தில் மாணவர்களை ஆல் பாஸ் ஆக்கியது அதிமுக அரசு.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம், தாலிக்கு தங்கம் திட்டத்தில் பட்டு வேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பரமத்திவேலூர்-பொத்தனூர் நான்கு ரோடு சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமி பேச போலீசில் அனுமதி கேட்கப்பட்டது.
- அனுமதி கேட்ட இடங்களுக்கு போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல்:
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி கடந்த 19-ந்தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20-ந்தேதி நாமக்கல் மற்றும் பரமத்திவேலூரிலும், 21-ந் தேதி திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையத்திலும் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் நடக்க இருந்தது. ஆனால் மழை காரணமாக அவரின் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பதிலாக அக்டோபர் 5 மற்றும் 6-ந்தேதிகளில் பிரசாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருச்செங்கோடு தொகுதியில் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகிலும், அதன்பிறகு குமாரபாளையம் தொகுதியில் ஓலப்பாளையத்தில் உள்ள தியேட்டர் அருகிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய போலீசில் அனுமதி கேட்கப்பட்டது. அதேபோல், நாளை மறுநாள் (6-ந்தேதி) மாலையில் நாமக்கல் பழைய பஸ் நிலையம் அருகிலும், அதைத்தொடர்ந்து பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பரமத்திவேலூர்-பொத்தனூர் நான்கு ரோடு சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமி பேச போலீசில் அனுமதி கேட்கப்பட்டது.
இதற்கிடையே அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய திருச்செங்கோடு, குமாரபாளையம், நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளில் அனுமதி கேட்ட இடங்களுக்கு போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் ஓரங்களில் பொதுக்கூட்டம் நடத்த அரசியல் கட்சிகளுக்கு கோர்ட் அனுமதி கொடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அவர்கள் கேட்ட இடங்களுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்றனர். எனவே எடப்பாடி பழனிசாமி வேறு இடத்தில் பிரசாரம் செய்யவும், பட்டா இடத்தில் 3 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் கூட்டத்தை நடத்திக்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நாளையும், நாளை மறுநாளும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.






