என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முட்டைகள் தேக்கத்தால் 12 நாட்களில் 110 காசுகள் சரிவு
    X

    முட்டைகள் தேக்கத்தால் 12 நாட்களில் 110 காசுகள் சரிவு

    • அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கடந்த 3 நாட்களாக முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டு உள்ளது.
    • முட்டை விலை வேகமாக குறைந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ள இங்கு தினசரி 7 கோடிக்கும்மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் சுமார் 80 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதற்கான விலையை தினசரி தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்கிறது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக முட்டை கொள்முதல் விலை 600 காசுகளை தொட்டது. தொடர்ந்து அதிகரித்து வந்தமுட்டை கொள்முதல் விலை 640 காசுகள் என்கிற புதிய உச்சத்தை தொட்டது. பின்னர் படிப்படியாக முட்டை விலை குறைய தொடங்கியது. கடந்த 12 நாட்களுக்கு முன்பு 540 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் 460 காசுகளாக குறைந்தது.

    நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 30 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக குறைந்து உள்ளது. இதனால் கடந்த 12 நாட்களில் மட்டும் முட்டை விலை 110 காசுகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே கோடை காலம் மற்றும் ரம்ஜான் பண்டிகை தொடங்கி உள்ள நிலையில் முட்டையின் நுகர்வு குறைந்துள்ள நிலையில் அமெரிக்கா- ஈரான் போரால் அரபு நாடுகளுக்கு தினசரி 80 லட்சம் அளவிலான முட்டை ஏற்றுமதியும் தற்போது முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் முட்டை விலை வேகமாக குறைந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    இது குறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் நாமக்கல் மண்டல நிர்வாகிகள் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ரம்ஜான் நோன்பு, கிறிஸ்தவர்களின் தவக்காலம் போன்ற காரணங்களால் முட்டை நுகர்வு சரியும். அதன்படி தற்போது 20 சதவீதம் வரை பொதுமக்கள் இடையே முட்டை நுகர்வு சரிந்து உள்ளது. அதனால் விற்பனையை அதிகரிக்க கொள்முதல் விலை குறைக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினசரி துபாய், கத்தார், ஓமன் போன்ற வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு சுமார் 80 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கடந்த 3 நாட்களாக முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் வெளிநாடுகளுக்கு செல்லும் சுமார் 2 கோடியே 40 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி அடியோடு நிறுத்தப்பட்டு உள்ளது.

    இது தவிர ரம்ஜான் பண்டிகை மற்றும் கோடை காலம் தொடங்கி உள்ளதால் ஏற்றுமதி சரிந்துள்ளதால் 15 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் முட்டைகளை குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைக்கும் பணியில் பண்ணையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.

    Next Story
    ×