என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தகுதி சான்றிதழை புதுப்பிக்க கட்டணம் உயர்வு - தமிழகத்தில் 30 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்
- 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- எப்.சி. புதுப்பிக்க முடியாமல் ஏறத்தாழ 30 ஆயிரம் லாரிகள் கடந்த ஒரு மாதகாலமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
நாமக்கல்:
15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரி, பஸ்களுக்கு தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் (எப்.சி.) ரூ.2,500 இருந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி அனைத்து வாகனங்களுக்கும் தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தியது.
அதன்படி 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரிகள் மற்றும் பஸ்களுக்கு தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் ரூ.12,500 ஆகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஏறத்தாழ 10 மடங்கு வரை தகுதிச்சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் உயர்ந்து இருப்பதால், லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் சான்றிதழை புதுப்பிக்காமல் வைத்து உள்ளனர். இதனால் ஒன்றிரண்டு பழைய லாரிகளை வைத்து தொழில் செய்து குடும்பத்தை நடத்தி கொண்டு இருக்கும் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து சம்மேளன நிர்வாகிகள் கூறியதாவது:-
தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை மற்ற மாநிலங்களை போன்று தமிழகத்திலும் நிறுத்தி வைக்க வேண்டும் என மாநில போக்குவரத்து துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஏறத்தாழ 10 மடங்கு வரை தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் உயர்ந்து இருப்பதால், ஒரு லாரி வைத்து தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் எப்.சி. புதுப்பிக்க முடியாமல் ஏறத்தாழ 30 ஆயிரம் லாரிகள் கடந்த ஒரு மாதகாலமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
எனவே லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உயர்த்தப்பட்ட எப்.சி. கட்டணத்தை குறைக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகம் முழுவதும் ஏற்கனவே போதிய லோடு கிடைக்காமல் ஆயிரக்கணக்கில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், எப்.சி. கட்டண உயர்வால் மேலும் 30 ஆயிரம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது லாரி உரிமையாளர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.






