என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாமக்கல்"

    • தகவல் சரிபார்ப்பகம் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளது.
    • சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.

    நாமக்கல் மாவட்டம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

    இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளது.

    நாமக்கல் தனியார் கல்லூரியின் விடுதியில் வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிநீரால் கடந்த 27 மற்றும் 28-ந் தேதிகளில் பாதிக்கப்பட்ட 128 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினர். மேலும், உணவு தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவத்தில் மாணவர்கள் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தியே என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், சிலர் இறந்து விட்டதாக தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது நாமக்கல் மாவட்ட காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்ஸல் குழும கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் 27.10.2025 (திங்கட்கிழமை) காலை சில மாணவர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்களில் சில மாணவர்கள் எக்செல் கல்லூரி மருத்துவ மையம் மற்றும் குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் புறநோயாளிகளாக(OP) சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கல்லூரி விடுமுறையை தொடர்ந்து தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.

    மாணவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ள நிலையில் அவர்களில் சிலர் இறந்துவிட்டதாக சமூக விரோதிகள் சிலர் சமூகத்தில் பதற்றத்தையும் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் "Pokkiri Victor (@Pokkiri_Victor)" w "Phoenix Vignesh (@PhoenixAdmk) என்ற எக்ஸ் வலைதலங்களில் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

    இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
    • விஜய், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.

    கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதனையடுத்து இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த விஜய், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.

    இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து, தமிழ்நாடு மாணவர் சங்கம் பெயரில் நாமக்கல் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த போஸ்டரில் "தமிழக அரசே 39 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கி, தப்பி ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலைக்குற்றவாளி என கைது செய்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணும் நாமக்கல் தான்.
    • நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரியை எழுதியவர் ராமலிங்கம்.

    தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் நாமக்கல்லில் தனது பிரச்சார உரையை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொடங்கினார்.

    அப்போது, தொண்டர்களிடம் அனைவரும் சாப்பீட்டீர்களா என கேட்ட விஜய் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பும் கேட்டார்.

    என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கம் என்று தவெக தலைவர் விஜய் தனது உரையை தொடங்கினார்.

    அப்போது அவர் மேலும் கூறியதாவது:-

    லாரி பாடி கட்டும் தொழிலில் இருந்து அதிக தொழில்கள் செய்யும் ஊர் நாமக்கல். முட்டையின் உலகமே நாமக்கல் தான்.

    சத்தான உணவு முட்டை கொடுக்கும் ஊர் மட்டுமல்ல. தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணும் நாமக்கல் தான்.

    தமிழக என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரியை எழுதியவர் ராமலிங்கம்.

    பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமையைப் பெற்றுக்கொடுத்த முன்னாள் முதல்வர் சுப்பராயன் பிறந்த மண் நாமக்கல்.

    நாமக்கல்லுக்கு அது செய்வோம் இது செய்வோம் என சொன்னார்களே? செய்தார்களா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராசிபுரம் ஆண்டகளூர் கேட் மற்றும் பழைய பஸ் நிலைய ரவுண்டானா பகுதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • போலீசாரின் அனுமதி கிடைக்கும் என்றும், அதன்பிறகு இந்த பிரசாரத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து தெரியவரும் எனவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 13-ந் தேதி திருச்சி, அரியலூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் முதல்முறையாக தனது தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கினார். இந்த நிலையில் இன்று நாகை, திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இந்த நிலையில் வருகிற 27-ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜய் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு மனு கொடுக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர்.

    அங்கு அவர்கள் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு கடிதத்தை வழங்கினர்.

    குறிப்பாக நாமக்கல் மாநகரில் அவர் பிரசாரம் மேற்கொள்ள 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதாவது, சேலம் சாலையில் உள்ள கே.எஸ். தியேட்டர், பொய்யேரிகரை மதுரை வீரன் கோவில், பூங்கா சாலை என 3 இடங்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல ராசிபுரம் ஆண்டகளூர் கேட் மற்றும் பழைய பஸ் நிலைய ரவுண்டானா பகுதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஓரிரு நாட்களில் போலீசாரின் அனுமதி கிடைக்கும் என்றும், அதன்பிறகு இந்த பிரசாரத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து தெரியவரும் எனவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் வருகிற டிசம்பர் மாதம் 13-ந் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் வருகிற 27-ந் தேதியே விஜய் நாமக்கல்லுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

    • திடீரென லிப்ட் சரிந்து அருகில் சென்று கொண்டு இருந்த மின்வயரில் மோதி நின்றது.
    • நாமக்கல் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்தவர்கள் சிவக்குமார் (46), ஜோதி (45). பெயிண்டிங் தொழிலாளர்கள். இவர்கள் 2 பேரும் இன்று காலை நாமக்கல்-திருச்சி ரோடு நாகராஜபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    இதற்காக இவர்கள் 2 பேரும் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த லிப்ட் மீது நின்று பணியாற்றி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அந்த லிப்ட் சரிந்து அருகில் சென்று கொண்டு இருந்த மின்வயரில் மோதி நின்றது. இதில் லிப்டில் நின்று வேலைசெய்து கொண்டு இருந்த சிவக்குமார், ஜோதி ஆகிய 2 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    அவர்களின் சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்து மின்துறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும் நாமக்கல் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கல்வி, சுகாதாரம், விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் திட்டங்களின் நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
    • மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் நாமக்கல்லுக்கு வந்தார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். கல்வி, சுகாதாரம், விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் திட்டங்களின் நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராேஜந்திரன், மதிவேந்தன், கலெக்டர் துர்கா மூர்த்தி, எம்.பி.க்கள் ராேஜஸ் குமார், மாதேஸ்வரன், பிரகாஷ், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு துறைகளின் சார்பில் 139 பணிகளுக்கு ரூ.87 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டியும், ரூ.10 கோடியே 80 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 36 திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

    பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை துறைகளின் சார்பில் 2,001 பேருக்கு ரூ.33 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அவர் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் ஆகிய நகராட்சிகள் மற்றும் நகராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதற்கட்டமாக இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

    மாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நவீன விளையாட்டு உடற்பயிற்சி கூடத்தினை திறந்து வைத்து, நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் துர்காமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் செய்துள்ளனர்.

    துணை முதலமைச்சர் நாமக்கல் வருகையையொட்டி கரூர்-நாமக்கல் சாலையின் இருபுறமும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. துணை முதலமைச்சா் பங்கேற்க கூடிய விழா மேடைகள் முழுவதும் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • டேங்கர் லாரியில் இருந்தது சுத்திகரிக்கப்படாத மற்றும் சமையலுக்கு பயன்படாத எண்ணெய்.
    • சோயா ஆயிலை பிடித்து செல்வது போன்ற காணொலி சமூக ஊடகங்களில் பரவியது.

    தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சென்ற டேங்கர் லாரி விபத்தில் சிக்கியது.

    விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் இருந்து சமையல் எண்ணெய் வெளியேறியது என தகவல் வெளியானதால், பொது மக்கள் குடம் குடமாக பிடித்துச் சென்றனர்.

    இந்நிலையில், டேங்கர் லாரியில் இருந்தது சுத்திகரிக்கப்படாத மற்றும் சமையலுக்கு பயன்படாத எண்ணெய் என்றும் உணவுப் பொருளாக பயன்படுத்த வேண்டாம் என்று நாமக்கல் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    08.06.2025-ந் தேதி 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி நாமக்கல் மாவட்டம், நாமக்கல் உட்கோட்டம், நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதன்சந்தை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது வாகனம் பழுது ஏற்பட்டு மேம்பாலத்தில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது அதிகாலை 05.00 மணியளவில் அடையாளம் தெரியாத மற்றொரு வாகனம் மோதியதில் ஆயில் டேங்கில் கசிவு ஏற்பட்டு சோயா ஆயில் ரோட்டில் ஊற்றியது. பொதுமக்கள் சிலர் இந்த சோயா ஆயிலை பிடித்து செல்வது போன்ற காணொலி சமூக ஊடகங்களில் பரவியது.

    விபத்தில் கசிவு ஏற்பட்டு வெளியேறிய சோயா ஆயிலானது சுத்திகரிக்கப்படாதது மற்றும் சமையலுக்கு பயன்படாத எண்ணெய் ஆகும்.

    எனவே, இந்த சோயா ஆயிலை பொதுமக்கள் யாரும் உணவு பொருளாக பயன்படுத்த வேண்டாம் 6760T நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மர்ம நபர்கள் சேட்டு வீட்டின் கதவு மீது பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே ஆனங்கூர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (42). விவசாயியான இவர் வெல்டிங் பட்டறையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி நிர்மலா (37). இவர்களுக்கு பிரீத்தி (19), சன்சிகா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். சேட்டுவின் மூத்த மகள் பிரீத்தி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகள் சன்சிகா பெற்றோருடன் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார்.

    நேற்று இரவு சேட்டு அவரது மனைவி நிர்மலா, மகள் சன்சிகா ஆகிய 3 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் சேட்டு வீட்டின் கதவு மீது பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர். அப்போது பெட்ரோல் குண்டு வெடித்ததில் அதி பயங்கர சத்தம் கேட்டது. அப்போது தீப்பிடித்து உள் பக்க கதவு எரிந்தது. அதேபோல் வீட்டுக்குள்ளும் தீ பரவியது. இதில் வீட்டில் இருந்த பல்வேறு பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த சத்தம் கேட்டு சேட்டு வெளிேய ஓடி வந்து பார்த்தார். அப்போது வீட்டு முன்பு தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவசர அவசரமாக வீட்டில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தார்.

    பின்னர் வீட்டின் முன் பக்கம் உள்ள இரும்புகேட்டை திறக்க முயன்ற போது அது வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சேட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் விைரந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    சேலத்தில் உள்ள தடய அறிவியல் நிபுணர் வடிவேல் தலைமையிலான குழுவினரும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் ஆய்வு நடத்தினர். இதுதொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து நள்ளிரவில் இந்த வழியாக வந்த நபர்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டுக்குள் சேட்டு அவரது மனைவி நிர்மலா, மகள் சன்சிகா 3 பேரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது பெட்ரோல் குண்டு வீசி அவர்களை கொல்ல திட்டமிட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. சேட்டு சத்தம் கேட்டு எழுந்து வந்து தீயை அணைத்ததால் அதிர்ஷ்டவசமாக 3 பேரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 50.2 மி.மீ. மழை பதிவானது.
    • கோடை மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்றும் பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொது மக்கள் வீடுகளில் மு டங்கினர். சேலத்தில் நேற்று 101.1 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் திடீரென வானில் கரு மேகங்கள் திரண்டன. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்தது. குறிப்பாக எடப்பாடி மற்றும் சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கன மழை கொட்டியது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ள காடாக காட்சி அளித்தது. ஏற்காட்டில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் ரம்மியமான சூழல் நிலவியதால் அங்கு குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாநகரில் நேற்று மாலை 6 மணியளவில் இடி, மின்னல் ஏற்பட்டது. ஆனால் லேசாான தூறலுடன் மழை நின்று போனதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் மக்கள் நிம்மதியாக தூங்கினர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 50.2 மி.மீ. மழை பதிவானது. சங்ககிரி 10.4, சேலம் மாநகர் 3, ஏற்காடு 2, ஆனைமடுவு 1 என மாவட்டம் முழுவதும் 66.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று எருமப்பட்டி, குமாரபாளையம், பரமத்திவேலூர் உள்பட பல பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகள் தண்ணீர் காடாக காட்சி அளித்தது. இந்த கோடை மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக எருமப்பட்டியில் 60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குமாரபாளையம் 26.2, நாமக்கல் 4.5, பரமத்திவேலூர் 30, புதுச்சத்திரம் 4, சேந்தமங்கலம் 2, திருச்செங்கோடு 8, கலெக்டர் அலுவலகம் 7, கொல்லிமலை 10 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 151.7 மி.மீ. மழை பெய்து உள்ளது.

    • அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற தன்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ராசி குமரிபாளையம் காந்தமலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (29). இவரது மனைவி தன்யா (25), இவரது மாமியார் கோகிலா (45). இவர்கள் 3 பேரும் நேற்றிரவு மோகனூரில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    இதேபோல் அணியாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே உள்ள பிள்ள விடுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (19), கள்ளக்குறிச்சி மாவட்டம் கொசப்பாடி பகுதியை சேர்ந்த இளவரசன் (18) ஆகிய 2 பேர் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நாமக்கல்-மோகனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை பாலகிருஷ்ணன் ஓட்டி வந்தார். அவருக்கு பின்னால் இளவரசன் அமர்ந்திருந்தார்.

    இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நாமக்கல்-மோகனூர் சாலையில் எதிர் எதிரே சென்றபோது நேருக்கு நேர் மோதி விபத்தானது. இதில் நவீன், தன்யா, கோகிலா ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தனர். இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தன்யாவை சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், நவீனை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், கோகிலாவை அங்கிருந்து மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

    அதேபோல் இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் பாலகிருஷ்ணன், இளவரசன் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இளவரசனை சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற தன்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நவீன் மற்றும் அவரது மாமியார் கோகிலா ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் கந்தம்பட்டி பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது.
    • ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று காலை முதலே மேகங்கள் சூழ்ந்து கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவியது.

    சேலம்:

    சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை நெருங்கியதால் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்தநிலையில் சேலம் மாநகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேகமூட்டமாக காட்சி அளித்தது. பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென சேலம் மாநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு வரை சாரல் மழையாக நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.

    சேலம் கந்தம்பட்டி பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து மின் கம்பத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    இதேபோல சேலம் புறநகர் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், தம்மம்பட்டி , கரியகோவில், வீரகனூர், நத்தக்கரை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வயல்வெளிகளில் தண்ணீர் காடாக காட்சி அளித்தது.

    கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், எடப்பாடி, சங்ககிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    தலைவாசல் பகுதியில் நேற்று மதியம் மழை பெய்த நிலையில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று காலை முதலே மேகங்கள் சூழ்ந்து கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவியது. மதியத்திற்கு மேல் மழை பெய்ததால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்குள்ள முக்கிய பகுதிகளை சுற்றி பார்த்தமுடன் குதூகலம் அடைந்தனர்.

    5 அடி தூரத்தில் இருப்பவர்கள் கூட தெரியாததால் ஏற்காடு மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே ஊர்ந்து சென்றனர். மழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக நத்தக்கரையில் 67 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 9.8, ஏற்காடு 14.4, வாழப்பாடி 20, ஆனைமடுவு 22, ஆத்தூர் 36, கெங்கவல்லி 26, தம்மம்பட்டி 33, ஏத்தாப்பூர் 8, கரியகோவில் 47, வீரகனூர் 43, சங்ககிரி 13, எடப்பாடி 2, மேட்டூர் 5.4, ஓமலூர் 5.5, டேனீஸ்பேட்டை 10.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 362.7 மி.மீ. மழை கொட்டியது.

    நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரம், வெண்ணந்தூர், நாமகிரி பேட்டை, குமாரபாளையம், மங்களபுரம், புதுச்சத்திரம், சேந்தமங்கலம் திருச்செங்கோடு, கொல்லி மலை, பரமத்திவேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கொல்லிமலையில் 30 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குமாரபாளையம் மற்றும் மங்களபுரத்தில் 22.6, மோகனூர் 2, நாமக்கல் 15, பரமத்திவேலூர் 4, புதுச்சத்திரம் 22, ராசிபுரம் 21.8, சேந்தமங்கலம் 18, கலெக்டர் அலுவலகம் 12.5, என மாவட்டம் முழுவதும் 191.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • இந்திய துணைத் தூதரின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை.
    • திருச்சி விமான நிலையத்திலிருந்து 90 ஆயிரம் முட்டைகள் அனுப்பி வைப்பு

    மலேசியாவில் தற்போது நிலவி வரும் முட்டை தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுமாறு கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்திடம், மலேசிய உணவு பாதுகாப்பு அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் அடிப்படையில், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய மலேசிய அரசு தயாராக உள்ளதாக கோலாலம்பூரில் உள்ள இந்திய துணைத் தூதர், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். 


    இதையடுத்து நாமக்கல்லில் இருந்து முதல் முறையாக மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய மண்டல தலைவர் ஷோபனா குமார் தெரிவித்துள்ளார்.

    திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 90 ஆயிரம் முட்டைகள் விமானத்தில் ஏற்றப்பட்டு மலசியாவிற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முட்டைகள் சோதனைக்கு பிறகு அங்கீகரிக்கப்படும் என்றும், அதன் பின்னர் நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    ×