என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நாமக்கல் அருகே விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
    X

    நாமக்கல் அருகே விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

    • மர்ம நபர்கள் சேட்டு வீட்டின் கதவு மீது பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே ஆனங்கூர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (42). விவசாயியான இவர் வெல்டிங் பட்டறையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி நிர்மலா (37). இவர்களுக்கு பிரீத்தி (19), சன்சிகா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். சேட்டுவின் மூத்த மகள் பிரீத்தி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகள் சன்சிகா பெற்றோருடன் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார்.

    நேற்று இரவு சேட்டு அவரது மனைவி நிர்மலா, மகள் சன்சிகா ஆகிய 3 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் சேட்டு வீட்டின் கதவு மீது பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர். அப்போது பெட்ரோல் குண்டு வெடித்ததில் அதி பயங்கர சத்தம் கேட்டது. அப்போது தீப்பிடித்து உள் பக்க கதவு எரிந்தது. அதேபோல் வீட்டுக்குள்ளும் தீ பரவியது. இதில் வீட்டில் இருந்த பல்வேறு பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த சத்தம் கேட்டு சேட்டு வெளிேய ஓடி வந்து பார்த்தார். அப்போது வீட்டு முன்பு தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவசர அவசரமாக வீட்டில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தார்.

    பின்னர் வீட்டின் முன் பக்கம் உள்ள இரும்புகேட்டை திறக்க முயன்ற போது அது வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சேட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் விைரந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    சேலத்தில் உள்ள தடய அறிவியல் நிபுணர் வடிவேல் தலைமையிலான குழுவினரும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் ஆய்வு நடத்தினர். இதுதொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து நள்ளிரவில் இந்த வழியாக வந்த நபர்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டுக்குள் சேட்டு அவரது மனைவி நிர்மலா, மகள் சன்சிகா 3 பேரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது பெட்ரோல் குண்டு வீசி அவர்களை கொல்ல திட்டமிட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. சேட்டு சத்தம் கேட்டு எழுந்து வந்து தீயை அணைத்ததால் அதிர்ஷ்டவசமாக 3 பேரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×