என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Workers Death"

    • ஓட்டலின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொழிலாளி ஜெயராமன் இறங்கினார்.
    • 3 பேரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனாவில் உள்ள ஒரு ஓட்டலின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொழிலாளி ஜெயராமன் இறங்கினார். அவர் உள்ளே சிக்கிக்கொண்டதையடுத்து, உடனடியாக அவரை மீட்க சுந்தரபாண்டியன், மைக்கேல் ஆகியோர் தொட்டியில் இறங்கினர்.

    ஆனால் 3 பேரிடமிருந்தும் எந்த பதிலும் இல்லாததால் சக தொழிலாளர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 3 பேரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இறந்தவர்களில் ஒருவர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், மற்ற 2 பேர் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

    • ரவியும், பிரபுவும் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்வதற்காக சாக்கடைக்குள் இறங்கினர்.
    • திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    பொன்மலைப்பட்டி:

    திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் தூய்மை பணிகள் போன்றவற்றில் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக உள்ள சுப்பையா என்பவரிடம் புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரை சேர்ந்த அய்யாவுவின் மகன் ரவி (வயது 38), சின்ன சேலத்தை சேர்ந்த பிரபு (32) ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே முத்துநகர் கார்மல் கார்டன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அடைப்பை சரிசெய்வதற்காக நேற்று மாலை ரவி, பிரபு ஆகியோர் கார்மல் கார்டன் பகுதிக்கு வந்தனர்.

    மேலும் அங்கு திருச்சி மாநகராட்சி உதவி பொறியாளர் ஜெகஜீவன்ராம், இளநிலை பொறியாளர் பிரசாந்த் ஆகியோர் இருந்தனர். இதையடுத்து ரவியும், பிரபுவும் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்வதற்காக சாக்கடைக்குள் இறங்கினர். குறிப்பிட்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்களின் பெயர்களை கூறி அழைத்தனர். ஆனால் பதில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் சாக்கடைக்குள் பார்த்தபோது, ரவியும், பிரபுவும் மயங்கி கிடந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர். இதுபற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள், உடனடியாக திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் அடிப்படையில் திருவெறும்பூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட பின்பு, பாதாள சாக்கடைக்குள் இறங்கினர். அவர்கள் ரவி, பிரபுவை மீட்க முயன்றபோது, 2 பேரும் விஷவாயு தாக்கி இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் உடல்களை கயிறு கட்டி மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் திருவெறும்பூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதாள சாக்கடைக்குள் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் திருச்சி பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    • திடீரென லிப்ட் சரிந்து அருகில் சென்று கொண்டு இருந்த மின்வயரில் மோதி நின்றது.
    • நாமக்கல் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்தவர்கள் சிவக்குமார் (46), ஜோதி (45). பெயிண்டிங் தொழிலாளர்கள். இவர்கள் 2 பேரும் இன்று காலை நாமக்கல்-திருச்சி ரோடு நாகராஜபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    இதற்காக இவர்கள் 2 பேரும் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த லிப்ட் மீது நின்று பணியாற்றி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அந்த லிப்ட் சரிந்து அருகில் சென்று கொண்டு இருந்த மின்வயரில் மோதி நின்றது. இதில் லிப்டில் நின்று வேலைசெய்து கொண்டு இருந்த சிவக்குமார், ஜோதி ஆகிய 2 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    அவர்களின் சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்து மின்துறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும் நாமக்கல் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • விபத்தில் மேலும் பலர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையை அடுத்த மல்லாங்கோட்டை கிராமத்தில் மேகா மெட்டல் குவாரி என்ற பெயரில் கல்குவாரி ஒன்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகைளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

    இங்கு சுமார் 450 அடி ஆழமுள்ள குவாரி இயங்கி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதற்கு முன்பாக அந்த குவாரியில் பாறைகளை உடைக்க வெடி வைக்கப்பட்டு இருந்தது. அந்த வெடி திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது மண் சரிந்ததில் குவாரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.

    உடனே அங்கிருந்த சக தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த 3 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் 3 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்ததாக தெரிகிறது.

    இறந்தவர்கள் பெயர், விபரம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்தில் மேலும் பலர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே விபத்து குறித்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மண்ணில் புதைந்து இறந்தவர்களில் ஒருவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

    • பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    • உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் போஜ்பூரில் காகித தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை பாய்லர் வெடித்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். விசாரணையில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக ஏசிபி ஞான பிரகாஷ் கூறினார்.

    பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஷ வாயு தாக்கி கோவிந்தன், சுப்புராயலு என்ற தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து தனியார் பள்ளி நிர்வாகத்திடம் மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    விஷ வாயு தாக்கி கோவிந்தன், சுப்புராயலு என்ற 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் அவர்களை சடலமாக மீட்டனர்.

    விபத்து குறித்து தனியார் பள்ளி நிர்வாகத்திடம் மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காற்றின் வேகத்தாலும், தொழிலாளர்கள் ஒரே பகுதியில் இறங்கியதாலும், 60 அடி உயர இரும்புத்தூண்கள் மெல்ல வளைய தொடங்கியது.
    • பாரம் தாங்காமல் அந்த இரும்புத் தூண்கள் மொத்தமாக சாய்ந்து டமார் என்ற சத்தத்துடன் தரையில் விழுந்தன.

    கோவை:

    கோவை அடுத்துள்ள கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது.

    இதற்காக 60 அடி உயரத்துக்கு இரும்புத்தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டன. இந்த ராட்சத விளம்பர பலகையில், பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று மாலை நடைபெற்றது.

    இந்த பணியை சேலத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது. இரும்புத் தூண்களின் மேல் ஏறி பேனர் பொருத்தும் பணியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பலத்த காற்று வீசியதால், அந்த இரும்புத்தூண்கள் லேசாக அசைந்தது.

    இதனால் இரும்புத்தூண்களின் மேல் நின்று பேனர் மாட்டிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அதில் இருந்து கீழே இறங்க முயன்றதாக தெரிகிறது.

    காற்றின் வேகத்தாலும், தொழிலாளர்கள் ஒரே பகுதியில் இறங்கியதாலும், 60 அடி உயர இரும்புத்தூண்கள் மெல்ல வளைய தொடங்கியது. இதனால் அச்சத்தில் தொழிலாளர்கள் கூச்சல் போட்டனர்.

    இதற்கிடையே தரையில் இருந்து 10 அடி உயரத்தில் இரும்புத் தூண்களின் சில கம்பிகள் பயங்கர சத்தத்துடன் உடைந்தன.

    இதனால் பாரம் தாங்காமல் அந்த இரும்புத் தூண்கள் மொத்தமாக சாய்ந்து டமார் என்ற சத்தத்துடன் தரையில் விழுந்தன. அப்போது இறங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்களும் இரும்புத்தூண்களுடன் விழுந்தனர்.

    இதில் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த குமார் (வயது 40), சேகர் (45), சேலத்தைச் சேர்ந்த குணசேகரன் (52) ஆகிய 3 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் இடிபாடுகளில் சிக்கி அருண்குமார் (40), சண்முகசுந்தரம் (35) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே விளம்பர பேனர் முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டதா? என்று கருமத்தம்பட்டி நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிக உயரத்தில் பேனர் அமைக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.
    • விளம்பர பலகை அமைக்க எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    கருமத்தம்பட்டி:

    கோவையை அடுத்த கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில் இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடந்தது. இதற்காக 60 அடி உயரத்துக்கு இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டன. அதில் பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கான ஒப்பந்த பணியை சேலத்தை சேர்ந்த பாலாஜி, பழனிசாமி ஆகியோர் எடுத்து செய்து வந்தனர்.

    அதில் பாலாஜியின் மேலாளர் அருண்குமார் மேற்பார்வையில் 7 தொழிலாளர்கள் இரும்பு தூண்களில் ஏறி விளம்பர பேனரை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இரும்புத்தூண் 60 அடி உயரமாக இருந்தபோதிலும் அதில் பாதுகாப்பு ஏற்பாடு ஏதும் செய்யப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திடீரென்று காற்று வீசியதால், இரும்பு கம்பிகள் உடைந்து விழுந்தன. இதனால் அந்த கம்பிகள் மீது நின்று வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்களும் அந்த இரும்பு தூண்களுடன் கீழே விழுந்தனர். இதில் அவர்கள் மீது இரும்பு தூண்கள் விழுந்து அமுக்கியது.இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்த சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த செந்தில்முருகன் (வயது 38), குமார் (52), குணசேகரன் (52) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    இது குறித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், விளம்பர பலகை அமைக்க எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அனுமதி இன்றி பேனர் அமைத்தல், பாதுகாப்பு உபகரணங்கள் அமைக்காதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாலாஜி, பழனிசாமி, அருண்குமார் மற்றும் நில உரிமையாளர் ராமசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் ஒப்பந்ததாரர் பழனிசாமியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரரின் மேலாளர் அருண்குமாரை (27) போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பாலாஜி, நில உரிமையாளர் ராமசாமி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.மேலும் அந்த இடத்தில் விளம்பர பேனர் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதால், அதை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரும்பு தூண்கள், விளம்பர பலகை அனைத்தும் அங்கிருந்து அகற்றப்பட்டது.

    • தூண்களின் மேல் ஏறி விளம்பர பேனர் பொருத்தும் பணியில் சேலத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
    • கடந்த ஒரு மாதத்தில் சுமார் 185 அனுமதியற்ற விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது.

    கோவை:

    கோவையை அடுத்த கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 60 அடி உயரத்திற்கு இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் பேனர் பொருத்தும் பணி நடைபெற்றது.

    இந்த தூண்களின் மேல் ஏறி விளம்பர பேனர் பொருத்தும் பணியில் சேலத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது வீசிய பலத்த காற்று காரணமாக அந்த இரும்பு தூண்கள் வளைந்து, சிறிது நேரத்தில் உடைந்து தரையில் விழுந்தது. இதில் இரும்பு தூண்களில் ஏறி வேலை பார்த்துக்கொண்டு இருந்த தொழிலாளர்களும் சிக்கினர். இந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த குமார், சேகர், குணசேகரன் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கோவை மாவட்டத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றுவது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி கடந்த ஒரு மாதத்தில் சுமார் 185 அனுமதியற்ற விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது. ஊராட்சி பகுதிகளில் விளம்பர பேனர்கள் அமைப்பதற்கு மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

    மேலும், விளம்பர பேனர்கள் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைப்பதற்கு வழிகாட்டல் நெறிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தும், போலீசாரின் பரிந்துரையின்படியும் அனுமதி பெற வேண்டும்.

    கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் போலீசார் இணைந்து தனி குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி, கோவை மாவட்டம் தெக்கலூர் - நீலம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அனுமதியற்ற விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் மூலம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கருமத்தம்பட்டி பகுதியில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இன்றி விளம்பர பலகை அமைக்கும்போது, இரும்பு கம்பம் சரிந்து விழுந்து சேலத்தை சேர்ந்த 3 நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக, அனுமதியின்றி விளம்பர பலகை அமைக்க முயன்ற நிலத்தின் உரிமையாளர் மீதும், சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனம் மீதும் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தின் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    உடுமலை அருகே தனியார் கம்பெனி பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 3 தொழிலாளர்கள் பலியானார்கள். #accident

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குறிச்சிகோட்டை, அமராவதி சக்தி நகர், ராமேகவுண்டன் புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ரவிக்குமார் (30), எஸ். குமரேசன் (32), பெரியசாமி (32), ஏ. குமரேசன்(29), சின்னமாரன் (50) ஆகியோர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் உடுமலைக்கு வேலைக்கு வந்தனர்.3 மோட்டார் சைக்கிளில் அவர்கள் வந்தனர்.

    இன்று காலை 8.30 மணியளவில் அவர்கள் போடிப்பட்டி அண்ணா நகரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தனியார் கம்பெனி பஸ் வந்தது.

    இந்த பஸ்சில் அமராவதி, குறிச்சிகோட்டை, பல்லப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் இருந்தனர்.

    திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தொழிலாளர்கள் சென்ற மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

    இதில் ரவிக்குமார் சம்பவ இடத்திலே இறந்தார். எஸ். குமரேசன் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    சின்னமாரன் பலத்த காயம் அடைந்தார். அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வரும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.ஏ. குமரேசன், பெரியசாமி ஆகியோர் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விபத்து குறித்து உடுமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    இது தொடர்பாக உடுமலை சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் வழக்கு பதிவு செய்து தனியார் கம்பெனி பஸ் டிரைவர் அமராவதி சக்தி நகரை சேர்ந்த சின்னசாமியை கைது செய்தார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான 3 பேரின் உறவினர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். #accident

    ×