search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poisonous Gas"

    வி‌ஷவாயு தாக்குதலில் உயிரிழப்பை தடுக்க மனிதர்களுக்கு பதிலாக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய அதிநவீன ‘ரோபோ’வை சென்னை ஐஐடி உருவாக்கி உள்ளது. #PoisonousGas #ToxicGas
    சென்னை:

    இந்தியாவில் லட்சக்கணக்கான கழிவுநீர் தொட்டிகள் அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளன. அவற்றை சுத்தம் செய்ய அதனுள் இறங்கும் தொழிலாளர்கள் வி‌ஷவாயு தாக்கி இறந்து விடுகின்றனர்.

    இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் ஆதரவின்றி தவிக்கின்றன. அவர்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகின்றனர்.

    வி‌ஷவாயு தாக்குதலில் உயிரிழப்பை தடுக்க சென்னை ‘ஐ.ஐ.டி.’ அதி நவீன ‘ரோபோ’வை (எந்திர மனிதனை) உருவாக்கி உள்ளது.

    இந்த ‘ரோபோ’க்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறக்கி விடப்பட்டு அது சுழலும் விசிறிகள் மூலம் அலசி சுத்தம் செய்யும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருப்பது போன்று சுழலும் மின்விசிறி பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    அதில் சுழலும் விசிறியில் உள்ள பிளேடுகள் கழிவு நீருக்குள் புகுந்துதொட்டியை அலசுவதில் சிரமம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. எனவே, விசிறியில் 6 துடுப்புகள் போன்ற பிளேடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சுழலும் விசிறிகளை மாணவர் ஸ்ரீகாந்த் உருவாக்கினார்.

    இதே முறையில் ஆயில் மற்றும் கியாஸ் துறைகளிலும் தொட்டிகளை சுத்தம் செய்யும் முயற்சியிலும் சென்னை ‘ஐ.ஐ.டி.’ பேராசிரியர்களும், மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் ‘ரோபோ’வின் செயல்பாடு குறித்த ஆய்வக பரிசோதனையை வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்டில் கழிவுநீர் தொட்டியில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மிகவும் உள்ளடங்கிய பகுதிகளில் ஏராளமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அங்கெல்லாம் மிக குறுகிய தெருக்களில் வாகனங்களையும், பம்புகளையும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் ‘ரோபோ’வை எளிதாக எடுத்து சென்று கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய முடியும். #PoisonousGas #ToxicGas
    ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் தந்தை, மகன்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PoisonousGas #ToxicGas
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் செல்வ பெருமாள் நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவருக்கு 2 மகன்கள் இருந்தனர்.

    இன்று காலை அவர் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த லாரியை வரவழைத்து இருந்தார். தொழிலாளிகள் பாதி அளவு கழிவுகளை எடுத்துக் கொண்டு லாரியை எடுத்துச் சென்றனர்.

    எவ்வளவு கழிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பார்ப்பதற்காக கிருஷ்ண மூர்த்தி தொட்டியை எட்டிப் பார்த்தார். அப்போது அவர் மீது வி‌ஷவாயு தாக்கியது. மயக்கம் அடைந்த அவர் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தார். இதனை கண்ட அவரது 2 மகன்களும் காப்பாற்ற முயன்றனர். அவர்களும் வி‌ஷவாயு தாக்கி தொட்டிக்குள் விழுந்தனர்.

    அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டில் வசித்த 3 ஆண்கள் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி கிருஷ்ண மூர்த்தியையும், அவரது 2 மகன்களையும் மீட்க முயன்றனர். அவர்களும் வி‌ஷவாயு தாக்கி பலியானார்கள்.

    அடுத்தடுத்து 6 பேர் வி‌ஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #PoisonousGas #ToxicGas
    மும்பையில் கிணற்றை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி தொழிலாளர் மற்றும் அவரை காப்பாற்றச் சென்ற 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #PoisonousGas
    மும்பை:

    மும்பை புறநகரான கல்யாண் பகுதியில் உள்ள கோவில் கிணற்றில் இன்று சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. ஒரு தொழிலாளி கிணற்றுக்குள் இறங்கி சுத்தம் செய்யத் தொடங்கினார். உள்ளே சென்றவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. வெகுநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால், கோவில் ஊழியர் ஒருவர் கிணற்றுக்குள் இறங்கினார். அவரும் வரவில்லை. எனவே, அவரை மீட்பதற்காக அவரது தந்தை இறங்கினார். அவரும் மேலே வரவில்லை.

    இதையடுத்து தீயணைப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக உள்ளே இறங்கிய 2 தீயணைப்பு படை வீரர்களும் மூர்ச்சையாகிவிட்டனர். 

    கிணற்றுக்குள் இறங்கிய 5 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரின் உடல்களும் வலை மூலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிணற்றுக்குள் பரவியிருந்த விஷ வாயுவை சுவாசித்ததால் 5 பேரும் இறந்திருக்கலாம் என தெரிகிறது. 

    ‘கிணற்றில் உள்ள நீர் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிணற்றை பல நாட்களாக மூடி வைத்திருப்பதால் விஷத்தன்மை கொண்ட வாயு உருவாகியிருக்கலாம்’ என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். #PoisonousGas
    தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் மிதவை கப்பலில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளது. #TuticorinHarbour
    தூத்துக்குடி:

    மாலத்தீவில் இருந்து சிங்கப்பூரை சேர்ந்த ஒரு மிதவை கப்பல் (பார்ஜ்) நேற்று முன்தினம் தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு வந்தது. இந்த மிதவை கப்பல் மூலம் தூத்துக்குடியில் இருந்து கருங்கல் ஏற்றி செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    மிதவை கப்பல், மிதப்பதற்கு வசதியாக கப்பலின் அடிப்பகுதியில் 5 மீட்டர் உயரமும், 72 அடி நீளமும், 22 அடி அகலமும் கொண்ட அறை அமைந்து உள்ளது. இந்த கப்பலை, கப்பல் நிறுவன அதிகாரிகள் வருகிற 3-ந்தேதி ஆய்வு செய்ய வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் கப்பலை சுத்தம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று அந்த கப்பலில் வேலை பார்த்து வந்த, தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்த சக்திவேல் (வயது 27), நெல்லை மாவட்டம் கீழ சடையமான்குளம் கீழத் தெருவை சேர்ந்த ஜாம்டேவிட் ராஜா (23) ஆகியோர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, மிதவை கப்பலின் அடியில் அறையை சுத்தம் செய்வதற்காக சக்திவேல் இறங்கினார். அவர் இறங்கிய சிறிது நேரத்தில் திடீரென மயங்கி அறைக்குள் விழுந்து விட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜாம் டேவிட்ராஜா, சக்திவேலை மீட்பதற்காக அந்த அறைக்குள் இறங்கினார்.

    ஆனால் அவரும் மயங்கி விழுந்தார். உடனடியாக கப்பல் என்ஜினீயர் திருச்சி அய்யப்பநகர் குமுதம் தெருவை சேர்ந்த திருப்பதி மகன் கோபிநாத் (30) என்பவர் அறைக்குள் இறங்க முயன்றார். ஆனால் அவருக்கும் மயக்கம் வருவது போல் தெரிந்ததால் உடனடியாக வெளியே வந்து விட்டார்.

    இதுகுறித்து உடனடியாக துறைமுக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் மிதவை கப்பலில் அறையில் மயங்கி கிடந்த சக்திவேல், ஜாம்டேவிட்ராஜா ஆகிய 2 பேரையும் மீட்டனர்.

    பின்னர் அவர்களை தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். கோபிநாத்துக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. மிதவை கப்பலின் அடிப்பகுதியில் உள்ள அறையை சுமார் 7 மாதங்களுக்கு பிறகு நேற்றுதான் சுத்தம் செய்ய முயன்றுள்ளனர்.

    7 மாதமாக அந்த அறை பூட்டியே கிடந்ததால் அதில் வி‌ஷவாயு உருவாகியிருந்தது. இதை சுத்தம் செய்ய சென்ற ஊழியர்கள் அறியவில்லை. வழக்கம்போல் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக அறைக்குள் சென்றதும் மயங்கி விழுந்துள்ளனர்.

    இதையறிந்த கோபிநாத் உடனடியாக அறையில் இருந்து வெளியேறியதால் உயிர்தப்பினார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பலியான சக்திவேல் தேனி மாவட்டம் வீரபாண்டி தாலுகா வாயில்பட்டியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #TuticorinHarbour
    ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இயங்கி வரும் இரும்பு ஆலை ஒன்றில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் இரும்பு ஆலையில் விஷ வாயு தாக்கியதாக தகவல் வெளியானது. இதையடுத்து மீட்புக்குழு அப்பகுதிக்கு விரைந்து விஷவாயுவால் பாதிக்கப்பட்டிருந்த ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இரும்பு ஆலையில் விஷவாயு தாக்கியதில் இதுவரை 6 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், மேலும், 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கறிக்காக செத்து மிதந்த ஆட்டு உடலை மீட்க கிணற்றில் இறங்கிய வாலிபர் விஷவாயு தாக்கி பலியானார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா பல்லசேனையை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கண்ணன் (வயது 42). இவர் இன்று காலை அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க புறப்பட்டார்.

    வரும்வழியில் ஒரு பாதுகாப்பற்ற கிணறு இருந்தது. அதை எட்டிப் பார்த்தபோது கிணற்றில் ஒரு ஆடு செத்து மிதந்தது. கிணற்றில் இறங்கி ஆட்டை மீட்டால் கறி கிடைக்கும் என்று நினைத்த கண்ணன் இது குறித்து தனது நண்பருக்கு தெரிவித்தார். அவரது நண்பரும் வந்தார்.

    கிணற்று மேட்டில் நண்பர் நின்று கொண்டு ஆட்டின் உடலை கயிறு மூலம் இழுக்க தயாரானார். 30 அடி அழமுள்ள கிணற்றில் 5 அடி அழத்திற்கு தண்ணீர் இருந்தது.

    இந்நிலையில் கண்ணன் கிணற்றில் கயிறு மூலம் இறங்க தொடங்கினார். 20 அடி அழத்திற்கு சென்றதும் கண்ணனை வி‌ஷவாயு தாக்கியது. இதில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. என்னால் முடியவில்லை என்று கிணற்றில் இருந்து அபாய குரல் எழுப்பினர். முடியவில்லை என்றால் வந்து விடு என்று நண்பர் கூறினார்.

    ஆனால் திடீரென கண்ணன் கிணற்றுக்குள் விழுந்தார். அதிர்ச்சியடைந்த நண்பர் இது குறித்து சித்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி கண்ணனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×