search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனிதர்களுக்கு பதிலாக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய ரோபோ - சென்னை ஐஐடி சாதனை
    X

    மனிதர்களுக்கு பதிலாக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய ரோபோ - சென்னை ஐஐடி சாதனை

    வி‌ஷவாயு தாக்குதலில் உயிரிழப்பை தடுக்க மனிதர்களுக்கு பதிலாக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய அதிநவீன ‘ரோபோ’வை சென்னை ஐஐடி உருவாக்கி உள்ளது. #PoisonousGas #ToxicGas
    சென்னை:

    இந்தியாவில் லட்சக்கணக்கான கழிவுநீர் தொட்டிகள் அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளன. அவற்றை சுத்தம் செய்ய அதனுள் இறங்கும் தொழிலாளர்கள் வி‌ஷவாயு தாக்கி இறந்து விடுகின்றனர்.

    இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் ஆதரவின்றி தவிக்கின்றன. அவர்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகின்றனர்.

    வி‌ஷவாயு தாக்குதலில் உயிரிழப்பை தடுக்க சென்னை ‘ஐ.ஐ.டி.’ அதி நவீன ‘ரோபோ’வை (எந்திர மனிதனை) உருவாக்கி உள்ளது.

    இந்த ‘ரோபோ’க்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறக்கி விடப்பட்டு அது சுழலும் விசிறிகள் மூலம் அலசி சுத்தம் செய்யும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருப்பது போன்று சுழலும் மின்விசிறி பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    அதில் சுழலும் விசிறியில் உள்ள பிளேடுகள் கழிவு நீருக்குள் புகுந்துதொட்டியை அலசுவதில் சிரமம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. எனவே, விசிறியில் 6 துடுப்புகள் போன்ற பிளேடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சுழலும் விசிறிகளை மாணவர் ஸ்ரீகாந்த் உருவாக்கினார்.

    இதே முறையில் ஆயில் மற்றும் கியாஸ் துறைகளிலும் தொட்டிகளை சுத்தம் செய்யும் முயற்சியிலும் சென்னை ‘ஐ.ஐ.டி.’ பேராசிரியர்களும், மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் ‘ரோபோ’வின் செயல்பாடு குறித்த ஆய்வக பரிசோதனையை வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்டில் கழிவுநீர் தொட்டியில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மிகவும் உள்ளடங்கிய பகுதிகளில் ஏராளமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அங்கெல்லாம் மிக குறுகிய தெருக்களில் வாகனங்களையும், பம்புகளையும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் ‘ரோபோ’வை எளிதாக எடுத்து சென்று கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய முடியும். #PoisonousGas #ToxicGas
    Next Story
    ×