என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிவகங்கை அருகே கரும்பு ஆலை திரவ தொட்டியில் தவறி விழுந்து 2 தொழிலாளர்கள் பலி
    X

    சிவகங்கை அருகே கரும்பு ஆலை திரவ தொட்டியில் தவறி விழுந்து 2 தொழிலாளர்கள் பலி

    • கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும்போது உபரியாக கிடைக்கும் மொலாசஸ் திரவம் இங்கு பிரமாண்ட தொட்டியில் சேமித்து மதுபான ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
    • நேற்று இரவு பணியில் இருந்தபோது 2 பேரும் எதிர்பாராத விதமாக தவறி சேமிப்பு தொட்டியில் விழுந்து மூழ்கினர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் பகுதியில் தனியார் கரும்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 21-ந் தேதி கரும்பு அரைக்கும் பணி தொடங்கிய நிலையில், கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும்போது உபரியாக கிடைக்கும் மொலாசஸ் திரவம் இங்கு பிரமாண்ட தொட்டியில் சேமித்து மதுபான ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    மொலாசஸ் திரவம் சேமிப்பு தொட்டியின் பராமரிப்பு பணியில் சிவகங்கை அருகே உள்ள கரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த மோகனசுந்தரம் (வயது 35) மற்றும் சிவகங்கை, மதுரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பொன்னழகு (59) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

    நேற்று இரவு பணியில் இருந்தபோது 2 பேரும் எதிர்பாராத விதமாக தவறி சேமிப்பு தொட்டியில் விழுந்து மூழ்கினர். சிறிது நேரத்தில் அவர்கள் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தொட்டியில் சிக்கியிருந்த இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக ஆலையில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா? பராமரிப்பு பணியின்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா? என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே, தொழிலாளர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டும் பொதுமக்கள், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×