என் மலர்
நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்குதல்"
- மின் மோட்டாரை நிறுத்திய போது அவரை மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்துள்ளார்.
- மின்சாரம் தாக்கி வாலிபர்கள் 2 பேர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தியாகதுருகம்:
கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் அரவிந்தன் (27) கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று இரவு தியாகதுருகம் பல்லகச்சேரி சாலையில் உள்ள தனது கார் உரிமையாளருக்கு சொந்தமான வாட்டர் சர்வீசில் காரை கழுவ சென்றார். அப்போது இவர் மின் மோட்டாரை நிறுத்திய போது அவரை மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாட்டர் சர்வீசில் வேலை பார்த்து வந்த தியாகதுருகம் கரிம்ஷா தக்கா பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அகமது மகன் ஷாகில் (18) அரவிந்தனை காப்பாற்ற முயன்றார்.
அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் இவர்கள் 2 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அரவிந்தன் மற்றும் ஷாகில் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வாட்டர் சர்வீஸ் உரிமையாளரான அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சையத் கலிபுல்லா மகன் ஷாஜன் (30) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி வாலிபர்கள் 2 பேர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- யானை, அகழியின் பகுதியிலேயே கால்களை மடக்கியவாறு இருந்தது.
- வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த காட்டு யானையை நேரில் ஆய்வு செய்தனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை காப்புக்காட்டு வனப்பகுதியையொட்டி திருமலைராஜ் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.
நிலத்தையொட்டி, வனத்துறை சார்பில் யானைகள் நுழையாமல் இருக்க அகழி வெட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வனத்தை விட்டு வெளியேறிய 20 வயது ஆண் காட்டு யானை ஒன்று இந்த அகழியை கடக்க முயன்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக யானை அகழியின் இடுக்கி சிக்கி, அதன் கால்கள் அகழிக்குள் சிக்கி கொண்டது. இதனால் யானையால் வெளியே மீண்டு வரமுடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து யானை, அகழியின் பகுதியிலேயே கால்களை மடக்கியவாறு இருந்தது. அப்போது தோட்டத்திற்காக போடப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளது. யானையின் வாயில் சிக்கிய மின்கம்பிகளுடன் யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது.
இதை பார்த்த திருமலை ராஜ் மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த காட்டு யானையை நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சம்பவத்திற்கு வனத்துறை உயர் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு யானையின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி அதன் பின் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- மின்கம்பியை சாய்த்தபோது அந்த மின்சார கம்பம் யானையின் மீது விழுந்துள்ளது.
- பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொண்டாமுத்தூர்:
கோவை மாட்டம் தொண்டாமுத்தூர் அருகே உணவு, குடிநீர் தேடி வந்த 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
வயலில் அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பியை சாய்த்தபோது அந்த மின்சார கம்பம் யானையின் மீது விழுந்துள்ளது. அப்போது மின்சாரம் தாக்கி அந்த யானை உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
- வரலட்சுமி குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளரான வரலட்சுமி, இன்று அதிகாலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து உயிரிழந்த வரலட்சுமி குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை கீழ் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் மின்சார கேபிள்கள் அபாயகரமாக பல இடங்களில் உள்ளது என்று புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
இதற்கிடையே, மின்சாரம் தாக்கி உயிரிழந்த வரலட்சுமிக்கு 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் வரலட்சுமி தான். தாயை இழந்த குழந்தைகள் 'எங்க அம்மா விட்டுட்டு போய்ட்டாங்க...' என்று சொல்லி கதறுவது கண்போரை கண்கலங்க செய்துள்ளது.
- பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில், கண்ணகி நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த தூய்மை பணியாளர் வரலட்சுமி (30) என்பவர் பலியாகி உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காலையில் வேலைக்கு சென்ற வரலட்சுமி சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
- மேடை முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார்.
மதுரை:
த.வெ.க. 2-வது மாநில மாநாடு நாளை மதுரை பாரபத்தியில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்குகிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை தஞ்சை, மதுரையை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் நடத்த இருக்கின்றனர். 2 மணி நேரம் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு பிறகு 4 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் விழா மேடைக்கு வருகிறார். தொடர்ந்து மேடை முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார்.
நாளை நடைபெற உள்ள மாநாட்டில் த.வெ.க. விஜய் என்ன பேசப்போகிறார் என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே த.வெ.க. மாநாட்டுக்காக பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இனாம்கரிசல்குளத்தில் பேனர் வைக்க கம்பி எடுத்துச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் காளீஸ்வரன் (19) உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திடீரென லிப்ட் சரிந்து அருகில் சென்று கொண்டு இருந்த மின்வயரில் மோதி நின்றது.
- நாமக்கல் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்தவர்கள் சிவக்குமார் (46), ஜோதி (45). பெயிண்டிங் தொழிலாளர்கள். இவர்கள் 2 பேரும் இன்று காலை நாமக்கல்-திருச்சி ரோடு நாகராஜபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
இதற்காக இவர்கள் 2 பேரும் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த லிப்ட் மீது நின்று பணியாற்றி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அந்த லிப்ட் சரிந்து அருகில் சென்று கொண்டு இருந்த மின்வயரில் மோதி நின்றது. இதில் லிப்டில் நின்று வேலைசெய்து கொண்டு இருந்த சிவக்குமார், ஜோதி ஆகிய 2 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
அவர்களின் சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்து மின்துறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும் நாமக்கல் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மின் கசிவை சரி செய்வதில் அரசு காட்டிய அலட்சியத்தின் விளைவாகவே ஒரு அப்பாவி சிறுவன் பலியாகியுள்ளான்.
- “நாடு போற்றும் நல்லாட்சி” என திமுக-வினர் விளம்பரப்படுத்திக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை திருவொற்றியூர் பகுதியில் தேங்கிக் கிடந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 17 வயது பள்ளி மாணவன் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்த அம்மாணவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பகுதியில் ஏற்கனவே இரண்டு பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளதாகக் கூறும் நிலையில், மின் கசிவை சரி செய்வதில் அரசு காட்டிய அலட்சியத்தின் விளைவாகவே ஒரு அப்பாவி சிறுவன் பலியாகியுள்ளான். ஒருநாள் மழைக்கே நீர் தேங்குமளவிற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும், பல நாள் புகாரளித்தும் ஒரு சிறு மின்கசிவைக் கூட சீர்படுத்த முடியாத நிர்வாகத்தையும் வைத்துக்கொண்டு "நாடு போற்றும் நல்லாட்சி" என திமுக-வினர் விளம்பரப்படுத்திக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.
எனவே, மாணவனின் மரணத்திற்கு ஆளும் அரசு முழுப் பொறுப்பேற்றுக் கொண்டு, அம்மாணவனின் குடும்பத்தாருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டு தொகையாக அறிவிப்பதுடன், சென்னை மாநகரில் முறையான மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மின் வாரியத்தை கண்டித்து 2 மணி நேரம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 12-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டியூஷன் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது பூமிக்கு அடியில் சென்ற மின் கேபிளில் கசிவு ஏற்பட்டு தேங்கிய மழை நீரில் பாய்ந்ததால் மாணவன் நஃபில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, முறைகேடாக மின் கேபிள் பொருத்தியதே உயிர் இழப்பிற்கு காரணம் என மின் வாரியத்தை கண்டித்து 2 மணி நேரம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே இதே பகுதியில் 2 பேர் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த நிலையில், மூன்றாவதாக பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 2 பேரும் தடுப்பணையில் நூதன முறையில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.
- இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரும்பாவூர்:
பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் தினேஷ் (வயது 28). தொண்டமாந்துறை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் அவரது மகன் ரஞ்சித் (25).
இவர்கள் 2 பேரும் நேற்று நள்ளிரவு அங்குள்ள பேச்சாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் தெருவிளக்கு மின் வயரில் இருந்து இணைப்பு எடுத்து அங்குள்ள தடுப்பணையில் நூதன முறையில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.
நெற்றியில் விளக்கு பொருத்தி அந்த வெளிச்சத்தில் மீன்களைப் பார்த்து மின்சாரத்தை பாய்ச்சும்போது அந்த மீன்கள் கொத்தாக மயக்க நிலைக்கு வந்து பிடிபடும் என கூறப்படுகிறது.
இவ்வாறு கையில் மின் வயரை வைத்துக்கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் தினேஷ் மற்றும் ரஞ்சித் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடம் வரைந்து வந்தனர் பின்னர் தடுப்பணை நீரில் பிணமாக மிதந்த அவர்கள் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த பெரம்பலூர் துணை போலி சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் சம்பவ இடம் விரைந்து சென்றார் மேலும் அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கயல்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நூதன முறையில் தண்ணீரில் மின்சாரத்தை பாய்ச்சி மீன்பிடித்த 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அரும்பாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அனிதா வீட்டில் ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.
- மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எர்ணாவூரில் முகுந்தன் என்பவரின் மகள் அனிதா (14) வீட்டில் ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.
இதையடுத்து அனிதாவை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலாயுதத்தின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நபர்கள் அவரை மீட்க முயற்சித்தனர்.
- காயமடைந்த மாரியப்பனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் தனது வீட்டின் முன் பகுதியில் கழிவறை புனரமைப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். கழிவறை சுவற்றின் அருகே மின்சாதன மீட்டர் பெட்டி இருந்துள்ளது.
இந்த நிலையில் புனரமைப்பு பணிக்காக அந்த மீட்டரின் கீழ் பகுதியில் உள்ள பொருட்களை கஜேந்திரன் மகன் வேலாயுதம்(வயது 30) என்பவர் எடுக்க சென்றுள்ளார். அப்போது திடீரென மீட்டரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு வேலாயுதம் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் வேலாயுதம் அலறி துடித்தார்.
வேலாயுதத்தின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நபர்கள் அவரை மீட்க முயற்சித்தனர். அப்போது மாரியப்பன் என்ற தொழிலாளியை மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதைக்கண்ட கஜேந்திரன் வீட்டில் கால்நடை பராமரிப்பாளராக வேலை பார்க்கும் ரவி என்பவர் அங்கு ஓடி வந்து வேலாயுதத்தை காப்பாற்ற முயற்சித்த போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் மின் வயர்களை அறுத்து விட்டனர். தொடர்ந்து, மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த வேலாயுதம் மற்றும் ரவியை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி இருவரும் உயிர் இழந்தனர்.
காயமடைந்த மாரியப்பனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த வேலாயுதம் ஆக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலைக்கு சேரும் முயற்சியில் சென்னையில் தங்கி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
உயிரிழந்த மற்றொரு நபரான ரவிக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். ரவியின் கடைசி மகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுவதற்கு இன்று பள்ளி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






