என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electric shock"

    • மின் மோட்டாரை நிறுத்திய போது அவரை மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்துள்ளார்.
    • மின்சாரம் தாக்கி வாலிபர்கள் 2 பேர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தியாகதுருகம்:

    கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் அரவிந்தன் (27) கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று இரவு தியாகதுருகம் பல்லகச்சேரி சாலையில் உள்ள தனது கார் உரிமையாளருக்கு சொந்தமான வாட்டர் சர்வீசில் காரை கழுவ சென்றார். அப்போது இவர் மின் மோட்டாரை நிறுத்திய போது அவரை மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்துள்ளார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாட்டர் சர்வீசில் வேலை பார்த்து வந்த தியாகதுருகம் கரிம்ஷா தக்கா பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அகமது மகன் ஷாகில் (18) அரவிந்தனை காப்பாற்ற முயன்றார்.

    அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் இவர்கள் 2 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அரவிந்தன் மற்றும் ஷாகில் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வாட்டர் சர்வீஸ் உரிமையாளரான அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சையத் கலிபுல்லா மகன் ஷாஜன் (30) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி வாலிபர்கள் 2 பேர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மின் கசிவை சரி செய்வதில் அரசு காட்டிய அலட்சியத்தின் விளைவாகவே ஒரு அப்பாவி சிறுவன் பலியாகியுள்ளான்.
    • “நாடு போற்றும் நல்லாட்சி” என திமுக-வினர் விளம்பரப்படுத்திக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சென்னை திருவொற்றியூர் பகுதியில் தேங்கிக் கிடந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 17 வயது பள்ளி மாணவன் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்த அம்மாணவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தப் பகுதியில் ஏற்கனவே இரண்டு பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளதாகக் கூறும் நிலையில், மின் கசிவை சரி செய்வதில் அரசு காட்டிய அலட்சியத்தின் விளைவாகவே ஒரு அப்பாவி சிறுவன் பலியாகியுள்ளான். ஒருநாள் மழைக்கே நீர் தேங்குமளவிற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும், பல நாள் புகாரளித்தும் ஒரு சிறு மின்கசிவைக் கூட சீர்படுத்த முடியாத நிர்வாகத்தையும் வைத்துக்கொண்டு "நாடு போற்றும் நல்லாட்சி" என திமுக-வினர் விளம்பரப்படுத்திக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.

    எனவே, மாணவனின் மரணத்திற்கு ஆளும் அரசு முழுப் பொறுப்பேற்றுக் கொண்டு, அம்மாணவனின் குடும்பத்தாருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டு தொகையாக அறிவிப்பதுடன், சென்னை மாநகரில் முறையான மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின் வாரியத்தை கண்டித்து 2 மணி நேரம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 12-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    டியூஷன் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது பூமிக்கு அடியில் சென்ற மின் கேபிளில் கசிவு ஏற்பட்டு தேங்கிய மழை நீரில் பாய்ந்ததால் மாணவன் நஃபில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து, முறைகேடாக மின் கேபிள் பொருத்தியதே உயிர் இழப்பிற்கு காரணம் என மின் வாரியத்தை கண்டித்து 2 மணி நேரம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஏற்கனவே இதே பகுதியில் 2 பேர் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த நிலையில், மூன்றாவதாக பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தினேஷ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • தகவல் அறிந்து சென்ற ராமாபுரம் போலீசார் தினேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போரூர்:

    சென்னை ராமாபுரம் பூத்தப்பேடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (30). அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு மது போதையில் வீடு திரும்பிய தினேஷ் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று படுத்து தூங்கினார். பின்னர் நள்ளிரவில் கண் விழித்து எழுந்த தினேஷ் தனது கையை மேலே தூக்கியதாக தெரிகிறது. அப்போது தலைக்கு மேலே சென்ற உயர் மின் அழுத்த கம்பியின் மீது எதிர்பாராத விதமாக அவரது கை பட்டது.

    இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தினேஷ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற ராமாபுரம் போலீசார் தினேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூர்த்தி குளித்துவிட்டு துணிகளை காய போடுவதற்காக வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக ஈரத்துணி அருகில் சென்று கொண்டிருந்த மின் வயரில் உரசியது.

    நெல்லை:

    பாளை சமாதானபுரம் மீன்கார காம்பவுண்டில் வசித்து வருபவர் நடராஜன். இவர் பாளை மண்டல அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பாலமூர்த்தி (வயது 21). இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    இன்று காலை பால மூர்த்தி குளித்துவிட்டு துணிகளை காய போடுவதற்காக வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஈரத்துணி அருகில் சென்று கொண்டிருந்த மின் வயரில் உரசியது. இதில் பாலமூர்த்தி உடலில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாலமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கம்பியை அப்புறப்படுத்தியபோது மின்சாரம் பாய்ந்தது
    • மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

    சோளிங்கர்:

    சோளிங்கர் அருகே கீழாண்டமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத், கூலிதொழிலாளி. இவரது இரண்டா வது மகள் நிவேதா (வயது 15) அரசு மகளிர் மேல்நி லைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நிவேதா நேற்று மாலை வீட்டின் மாடியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சென்று போடும் போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மின் வயர் மீதுபட்டது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த நிவே தாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சோளிங்கர் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோழியை சுத்தம் செய்யும் எந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப் பாக்கம் சக்தி நகரை சேர்ந்தவர் சதாம்உசேன் (வயது 27). இவர் பனப்பாக்கம் பஸ் நிலையம் அருகில் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை கடையை திறந்துள்ளார். அப்போது கோழியை சுத்தம் செய்யும் எந்திரத்தை பயன்படுத்தினார்.

    அதில் மின் கசிவு ஏற்பட்டது தெரியாமல் சதாம் உசேன் மீது எதிர்பாராத விதமாக மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பனப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்த னர்.

    அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அவர் பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சதாம் உசேன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமண நிகழ்ச்சிக்காக அலங்கார மின் விளக்குகள் கட்டப்பட்டிருந்தன.
    • அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பிரம்ம குண்டம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ்காந்தி அவரது மகன் தர்ஷன் (வயது 7). சஞ்சீவ்காந்தியின் வீட்டின் அருகே நடந்த திருமண நிகழ்ச்சிக்காக அலங்கார மின் விளக்குகள் கட்டப்பட்டிருந்தன. அங்கு தர்ஷன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவன் பரிதாபமாக இறந்தான். இதை அறிந்து ஓடி வந்த அவனது பெற்றோர் மற்றும் உறவி னர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து வடபொ ன்பரப்பி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மின்வாரிய ஊழியரிடம் தன்னுடைய மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்தி விட்டேன். ஆகையால் மின் இணைப்பு கொடுங்கள் என கேட்டுள்ளார்.
    • அப்பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் தற்பொழுது தான் விடுமுறையில் இருப்பதால் உடனடியாக வர முடியாது ஒரு வாரம் வரை ஆகும் என்றார்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் கோணங்கிஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 35). பட்டதாரியான இவர் தன்னுடைய இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்து வந்தார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் முனுசாமி தன்னுடைய விவசாய நிலத்திற்கு விவசாயத்திற்கான பூந்தோட்ட மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி மாதா மாதம் மின்கட்டணம் செலுத்தி வந்துள்ளார்.

    இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக கடந்த மூன்று மாத காலமாக மின் மோட்டாரை அதிகளவில் பயன்படுத்தாமல் பூந்தோட்ட மின் இணைப்பிற்கு மின் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளார்.

    அதனால் மின்வாரிய ஊழியர்கள் முனுசாமியின் தோட்டத்தில் இருந்த மின் இணைப்பினை கடந்த 20 நாட்களுக்கு முன் துண்டித்துள்ளனர். பின்னர் தன்னுடைய மின் இணைப்பிற்கான கட்டணம் மற்றும் அபராத தொகை உள்ளிட்ட அனைத்தையும் செலுத்தியுள்ளார்.

    மின்வாரிய ஊழியரிடம் தன்னுடைய மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்தி விட்டேன். ஆகையால் மின் இணைப்பு கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு அப்பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் தற்பொழுது தான் விடுமுறையில் இருப்பதால் உடனடியாக வர முடியாது ஒரு வாரம் வரை ஆகும் என்றார்.

    இதனால் விவசாயி முனுசாமி மின்சார டிரான்ஸ்பார்மர் இயக்கத்தை நிறுத்திவிட்டு தன்னுடைய விவசாய நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பினை கொடுக்க முயற்சித்துள்ளார்.

    அப்போது அந்த மின் இணைப்புக்கு மேலே உள்ள எச்.டி. இணைப்பை கவனிக்காததால் முனுசாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மின் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்து அவர் காயம் அடைந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துணி காய வைத்த கம்பியில் இருந்து கலையரசி மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கலையரசி அலறி துடித்து பரிதாபமாக இறந்தார்.
    • அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த அவரது கணவர் மற்றும் மகன் கிரீஸ்வரன் அங்கு ஓடிவந்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த சடையனோடை பகுதியை சேர்ந்தவர் உத்தராசு. இவர் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் சிறப்பு பேராசிரியராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி கலையரசி (வயது 45). இவரும் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் கணினி பேராசிரியையாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த கலையரசி துணிகளை துவைத்து வீட்டிலிருந்த கம்பியில் காய வைத்தார். நேற்று மாலை காய வைத்த துணிகளை எடுக்க முயன்றார்.

    அப்போது துணி காய வைத்த கம்பியில் இருந்து கலையரசி மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கலையரசி அலறி துடித்து பரிதாபமாக இறந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த அவரது கணவர் மற்றும் மகன் கிரீஸ்வரன் அங்கு ஓடிவந்தனர்.

    அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கியது. அவர்களது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உடனடியாக மின்சாரத்தை துண்டித்து படுகாயம் அடைந்த உத்தராசு அவரது மகனை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மங்களம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலையரசி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • ரங்கநாதன், தனது மனைவியை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
    • தூக்கி வீசப்பட்டதில் கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள மிட்டப்பள்ளி வன்னியர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது52).

    இவர் இன்றுகாலை வீட்டில் துணிகளை துவைத்தார். பின்னர் அந்த துணிகளை காய வைப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்றார்.

    அங்கு கட்டப்பட்டு இருந்த கம்பியின் மீது துணிகளை காய போட்டார். அப்போது வீட்டின் அருகில் சென்று கொண்டிருந்த மின்சார கம்பி மீது ஈரத்துணிபட்டதாக தெரிகிறது. இதனால் மின்சாரம் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணவேணி மீது பாய்ந்தது.

    இதனை அறிந்த ரங்கநாதன், தனது மனைவியை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிங்காரபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்த கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடுகந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே மார்க்கபந்து டிஜிட்டல் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டார்.
    • அந்த வழியாக செல்லும் மின் கம்பியில் பேனரின் பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த இரும்புச்சட்டம் உரசியது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள வடுகந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மார்க்கப்பந்து (வயது 54). இவர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். தற்போது தி.மு.க. ஊராட்சி செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருடைய மனைவி மாலா ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.

    நேற்று அந்தப் பகுதியில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.

    இதற்காக அமைச்சர் துரைமுருகனை வரவேற்று கொடி தோரணங்கள் கட்டினர்.

    நேற்று மாலை வடுகந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே மார்க்கபந்து டிஜிட்டல் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக செல்லும் மின் கம்பியில் பேனரின் பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த இரும்புச்சட்டம் உரசியது. அதில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட மார்கபந்து மயங்கி விழுந்தார். அவருக்கு உதவியாக இருந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மார்க்கபந்துவை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மார்க்கபந்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    காயமடைந்த கார்த்திகேயன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கே.வி‌.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மார்க்கபந்துவுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

    மின்சாரம் தாக்கி தி.மு.க. பிரமுகர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×