என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. மாநாடு: பேனர் வைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
- நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
- மேடை முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார்.
மதுரை:
த.வெ.க. 2-வது மாநில மாநாடு நாளை மதுரை பாரபத்தியில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்குகிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை தஞ்சை, மதுரையை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் நடத்த இருக்கின்றனர். 2 மணி நேரம் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு பிறகு 4 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் விழா மேடைக்கு வருகிறார். தொடர்ந்து மேடை முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார்.
நாளை நடைபெற உள்ள மாநாட்டில் த.வெ.க. விஜய் என்ன பேசப்போகிறார் என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே த.வெ.க. மாநாட்டுக்காக பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இனாம்கரிசல்குளத்தில் பேனர் வைக்க கம்பி எடுத்துச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் காளீஸ்வரன் (19) உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






