என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவெக மாநாடு"

    • கொடிக்கம்பம் சாய்ந்து கார் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது.
    • கார் வாங்கி தரவில்லை என தினேஷ் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

    மதுரையில் கடந்த மாதம் 21-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டு திடலில் த.வெ.கவின் 100 அடி கொடிக்கம்பம் நட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. அப்போது கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்ற போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    ஆனால் கொடிக்கம்பம் சாய்ந்து கார் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இதையடுத்து காரின் உரிமையாளருக்கு புதிதாக கார் ஒன்று வழங்கப்படும் என த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இச்சம்பவம் நடந்து முடிந்து கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் ஆகியும் கார் வாங்கி தரவில்லை என தினேஷ் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

    இந்த நிலையில், கட்சி மேலிடத்தில் பேசி, என் காரை என் விருப்பப்படி தயார் செய்திருக்கிறார்கள். விஜய் கையால் வண்டியை வாங்க வேண்டும் என்று குடும்பத்தோடு காத்திருக்கிறேன். இழந்த காரை விட நல்லகார்தான் எனக்கு கிடைக்கிறது. நான் வேதனையடைந்திருப்பதாக செய்திகள் பரப்புகின்றனர். அது உண்மையில்லை என தினேஷ் கூறியுள்ளார். 

    • நாங்கள் புலிகள், அதனால் அணில்கள் குறுக்கே ஓடவேண்டாம் என்று சீமான் விமர்சித்திருந்தார்.
    • அணில் ஏன் அங்கிள், அங்கிள் என கத்துகிறது. ஜங்கிள், ஜங்கிள் என்று தானே கத்த வேண்டும்.

    ஒருகாலத்தில் விஜயை புகழந்து பேசி வந்த சீமான் தற்போது த. வெ.க. கட்சியை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இது அக்கட்சி தொண்டர்களை கோபமடைய செய்துள்ளது.

    அதுவும் அண்மையில், நாங்கள் புலிகள், அதனால் அணில்கள் குறுக்கே ஓடவேண்டாம் என்று த. வெ.க. தொண்டர்களை சீமான் விமர்சித்திருந்தார்.

    சீமானின் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் த. வெ.க.வின் மதுரை மாநாட்டில் அக்கட்சி தொண்டர்கள் சீமான் ஒழிக என கோஷம் எழுப்பினர்.

    இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், "அணில் ஏன் அங்கிள், அங்கிள் என கத்துகிறது. ஜங்கிள், ஜங்கிள் என்று தானே கத்த வேண்டும். கடந்த மாநாட்டில் சி.எம். சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக எப்படி மாறினார்" என்று விஜயை விமர்சித்தார்.

    இந்நிலையில், இன்று நாம் தமிழர் கட்சி கட்சி சார்பில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் பேசிய சீமான், "இந்தக் காட்டிற்குள் புலிகள் நுழைந்ததும் ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை. அணில்களுக்கும் சேர்த்துதான் நாம் காடு வளர்க்க பாடு படுகிறோம்" என்று தெரிவித்தார்.

    விஜயை தொடர்ந்து அணில் என்று சீமான் கிண்டலடித்து வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
    • விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயண விவரம் குறித்த பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் தமிழக அரசியல் களத்தில் தி.மு.க, அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி உறுதியாகியுள்ளது. பிரதான கட்சிகளாக உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களது தலைமையில் கூட்டணி அமைத்துள்ளது.

    நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. விஜய் தலைமையிலான த.வெ.க.வும் கிட்டத்தட்ட தனித்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் எந்த அணியில் இணைவது என்று முடிவு செய்யவில்லை. ஜனவரிக்கு பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்வதாக தே.மு.தி.க. ஏற்கனவே அறிவித்துவிட்டது.

    இந்த சூழ்நிலையில் மதுரையில் 2-வது மாநாட்டை நிறைவு செய்துள்ள த.வெ.க. தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி நகர தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். த.வெ.க.வின் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி, ஈரோட்டில் இருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதற்காக மாவட்ட செயலாளர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்ந்து விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் டெல்டாவையொட்டியுள்ள மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். தொடர்ந்து மற்ற மாவட்ட செயலாளர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

    அதன்பிறகு விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயண விவரம் குறித்த பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • த.வெ.க. தலைவர் விஜய், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
    • விஜயின் பேச்சுக்கு தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

    மதுரையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி உள்ளது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

    மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்று கூறியதுடன், தமிழ்நாட்டில் பெண்கள் யாருக்கும் பாதுகாப்பில்லை, சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

    அத்துடன் அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடம் சரிதானே என்று கேள்வி எழுப்பிய விஜய், அந்த சத்தம் கேட்கிறதா? என்றும் அதிர வைத்தார். அவரது பேச்சுக்கு தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

    இதுகுறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில்," நான் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு நிறைய முறை சென்று இருக்கிறேன். நானே வணக்கம் அங்கிள்.. வணக்கம் ஆண்ட்டி.. எப்படி இருக்கீங்க என்று தான் சொல்வேன்.

    அங்கிள் என்பது தவறான வார்த்தை கிடையாது. விஜய் பேசியது எனக்கு தவறாக படவில்லை" என்றார்.

    • சுற்றுலா தலம் மட்டுமின்றி கொடைக்கானல் ஆன்மீக நகராகவும் விளங்கி வருகிறது.
    • சொத்து வரி, கடை வரி உள்ளிட்ட வணிக வரியை அதிகப்படுத்தியுள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் இந்து மக்கள் கட்சி சார்பில் அமைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையை வழிபட்டு அங்கு நடந்த சதுர்த்தி விழாவில் அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சுற்றுலா தலம் மட்டுமின்றி கொடைக்கானல் ஆன்மீக நகராகவும் விளங்கி வருகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இது போன்ற நகரில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தி பொதுமக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி வருகின்றனர்.

    எனவே இங்குள்ள ஓட்டல் உரிமையாளர்கள், வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை ஒருங்கிணைத்து இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய மேல்முறையீடு செய்ய வேண்டும். நட்சத்திர ஏரியில் ரூ.33 கோடியில் நடைபாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அது முறையாக நடக்காததால் நடை பயிற்சி செல்பவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    மேலும் சொத்து வரி, கடை வரி உள்ளிட்ட வணிக வரியை அதிகப்படுத்தியுள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கொடைக்கானலில் போதை பொருட்களை ஒழிக்க தீவிரம் காட்டி வந்தபோதிலும் கஞ்சா காளான் விற்பனை அவ்வப்போது நடந்து வருகிறது.

    கொடைக்கானல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக உள்ளது. தேச விரோதிகளின் புகழிடமாகவும் உள்ளது.

    தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற விநாயகரை வழிபட்டு பிரார்த்தனை செய்தோம். விண்வெளியில் ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷன் அமைத்து இஸ்ரோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அது போல அயன் டோம் அமைத்து ராணுவத்தினர் எதிரிகள் வீசிய ஏவுகணைகளை தகர்த்தனர். இந்திய ராணுவம் சர்வதேச அரங்கில் தலைசிறந்த ராணுவமாக மாறியுள்ளது.

    தமிழகத்தில் வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். தி.மு.க.வை வீழ்த்த ஒருமித்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணையும். த.வெ.க. ஒரு அரசியல் கட்சி இல்லை. அது தி.மு.க.வின் ஏ டீமாக செயல்பட்டு வருகிறது. தற்போது தி.மு.க.வை எதிர்த்து பேசுகிறார்கள். அந்த கட்சியின் கொள்கையைதான் பின்பற்றுகிறார்கள். அவர்கள் நடத்தியது அரசியல் மாநாடு அல்ல. ரசிகர்கள் மாநாடு. ஆனால் மாநாட்டில் கலந்து கொண்ட ரசிகர்கள்தான் பாவம். விஜய்யை பார்க்க வந்த ரசிகர்களை பவுன்சர்கள் மூலம் தூக்கி வீசுவதுதான் அரசியல் நாகரீகமா? அவர்களுக்கு ரசிகர்கள் மீது அக்கறையும் இல்லை. கருணையும் இல்லை. எப்படி மாநாடு நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணமாக விஜய்யின் மாநாடு இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உண்மையில் அந்த தொண்டர் சரத்குமார் கிடையாது.
    • பாதுகாப்பிற்காக பவுன்சர்கள் தள்ளிதான் விட்டார்கள், தூக்கி வீசவில்லை.

    பெரம்பலூர்:

    மதுரையில் கடந்த 21-ந்தேதி நடந்த த.வெ.க. மாநில மாநாட்டில் கட்சி தொண்டர் சரத்குமார் என்பவரை தலைவர் விஜய் முன்னாலே பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் குன்னம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    இந்த நிலையில் மதுரையில் நடந்த மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டது சரத்குமார் இல்லை என த.வெ.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார் . இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மதுரை மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி போட்டது சரத்குமாரே இல்லை. புகார் கொடுத்துள்ள சரத்குமார் அந்த இடத்திற்கு வரவே இல்லை. சரத்குமாரின் அம்மா பேட்டியை பார்த்து விட்டு அவரிடம் அது பற்றி கேட்ட போது, அது நான் இல்லை, அங்கு நான் செல்லவில்லை என தெரிவித்தார்.

    மேலும் எனது சட்டையை பார்த்து விட்டு யாரோ சொன்னதைக் கேட்டு எனது அம்மா அவ்வாறு பேட்டி கொடுத்துள்ளார் என்று என்னிடம் போனில் தெரிவித்தார். நான் அவரிடம் உனக்கு ஏதேனும் உடல் ரீதியாக பிரச்சனை இருக்கிறதா என்று கேட்ட பொழுது அப்படி எதுவும் இல்லை என சரத்குமார் தெரிவித்தார்.

    நாங்கள் 100 சதவீதம் சொல்கிறோம் பவுன்சர்கள் தூக்கி போட்டது இந்த பையன் இல்லை. இது ஒரு தவறான தகவல். யாருடைய தூண்டுதலின் பேரிலே இப்படி புகார் கொடுக்கப்பட்டு, எங்கள் கட்சித் தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பிற்காக பவுன்சர்கள் தள்ளிதான் விட்டார்கள், தூக்கி வீசவில்லை. பாதுகாப்பு வளையத்திற்குள் வருவது தவறு. எந்த தலைவராக இருந்தாலும் பாதுகாப்பு என்பது முக்கியம். ரசிகர் என்ற முறையில் அதை தாண்டி அவர்கள் வந்து விட்டார்கள். அவர்களை பவுன்சர்கள் தடுக்கிறார்கள். யாரையும் தூக்கி போடவில்லை.

    தள்ளி விடும்போது அவர் கம்பியை பிடித்து இறங்கி வருகிறார். உண்மையில் அந்த தொண்டர் சரத்குமார் கிடையாது. கீழே விழுந்தவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அஜய் என்பவர் தான். அவரும் பேட்டி கொடுத்துள்ளார். நான் தவறுதலாக அந்த இடத்திற்கு சென்று விட்டேன், நான் சென்றது தவறுதான், நான் போய் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

    மாநாட்டுக்கு சரத்குமார் 2-வது நாள் தான் சென்றதாக கூறினார். முதல் நாள் சென்றவர்கள் மட்டுமே நடைமேடை அருகே செல்ல முடியும், காரணம் கூட்டம் அதிகமாக இருந்தது. இவர் தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார். கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் இதுபோன்று செய்கிறார்கள்.

    இதன் பின்னணியில் இருப்பவர்கள் தலைவர் விஜய்யின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள், தற்போது உள்ள ஆளுங்கட்சி தான், அவர்களாகவும் இருக்கவும் வாய்ப்புள்ளது. புகார் கொடுத்த சரத்குமார் போட்டிருந்த சட்டையை வைத்து முடிவுக்கு வர முடியாது. அதுமட்டுமின்றி கீழே விழுந்தவருக்கும், புகார் கொடுத்தவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

    எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய்யான வழக்கு. அதனை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். கட்சி தலைமையின் ஒப்புதலை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தலைவரை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் நான் ஏறினேன்.
    • த.வெ.க. தலைவர் விஜயின் குண்டர்களால் தூக்கி வீசப்பட்டு மார்பக நெஞ்சுவலியால் தவித்து வருகிறேன்.

    பெரம்பலூர்:

    தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த 20-ந் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரை வந்தனர்.

    இந்த மாநாட்டின்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் 'ரேம்ப் வாக்' சென்றார். அப்போது விஜய்யின் பாதுகாப்பு கருதி, 'ரேம்ப் வாக்' மேடை அருகில் இருந்த தடுப்புகளில் கிரீஸ் தடவப்பட்டு இருந்தது.

    அதையும் மீறி தொண்டர்கள் சிலர் 'ரேம்ப் வாக்' மேடையின் மீது ஏறியதால் விஜயின் பவுன்சர்கள் தொண்டர்களை அப்புறப்படுத்தினர். அந்த வகையில் தொண்டர்களை விஜயின் பவுன்சர்கள் மேடையில் இருந்து தூக்கி வீசும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த மாநாட்டில் நடிகர் விஜயை அருகில் சென்று பார்க்க முயன்ற அக்கட்சியின் தொண்டர் பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி கீழே வீசினர்.

    இந்த நிலையில் த.வெ.க. தொண்டர் சரத்குமார் மற்றும் அவரது தாயார் சந்தோசம் ஆகிய இருவரும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் எஸ்.பி. பாலமுருகனிடம் புகார் அளித்தனர்.

    குன்னம் போலீஸ் நிலையத்திலும் அவர்கள் புகார் செய்தனர். அதில், தலைவரை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் நான் ஏறினேன்.

    அப்போது என்னை நோக்கி தாக்கும் நோக்கத்தில் சுமார் 10 பவுன்சர்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடி ஓடி வந்தார்கள். அதில் ஒருவர் என்னை கீழே இறங்குமாரு அசிங்கமான வார்த்தையால் திட்டியும் மற்றொரு பவுன்சர் இடித்து தள்ளியும் தாக்கி கீழே வீசினார்.

    தூக்கி கீழே வீசியதில் எனக்கு நெஞ்சு பகுதி மற்றும் உடலில் உள்காயம் ஏற்பட்டது. உடலில் எனக்கு இன்னும் வலி அதிகமாக உள்ளது. த.வெ.க பொறுப்பாளர்கள் என்னிடம் சமரசம் பேசினார்கள். ஆனால் முதல் உதவி சிகிச்சைக்கு கூட உதவி செய்ய யாரும் வரவில்லை. இது போன்று வேறு யாருக்கும் நடைபெற கூடாது என்பதால் குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறேன்.

    த.வெ.க. தலைவர் விஜயின் குண்டர்களால் தூக்கி வீசப்பட்டு மார்பக நெஞ்சுவலியால் தவித்து வருகிறேன். எனவே தலைவர் விஜய் மீதும் அவர் பாதுகாப்பு பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டிருந்தனர்.

    இதையடுத்து குன்னம் போலீசார் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 346/25 யு.எஸ். 189(2),296(b),115(2) பி.என்.எஸ். பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • பிரதமரை Mr என்றும், முதல்வரை அங்கிள் என்றும் விஜய் கூறுகிறார்.
    • சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வருமாம், பின்னர் தூங்கி விடுமாம்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் நடைபெற்றது.

    மாநாட்டில் பேசிய விஜய், "மாண்புமிகு பிரதமர் நரேந்திரடி மோடி ஜி அவர்களே, மக்களுக்கு உங்களிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கிறது. மீனவர்களை பாதுகாப்பதற்காக கட்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்குக்கொடுங்கள். அதுபோதும்.

    மொரட்டு பிடிவாதத்தால் நீட் தேர்வு. நீட் தேர்வால் இங்கே நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. அதனால் நீட் தேர்வே தேவையில்லை என அறிவித்து விடுங்கள் அது போதும். செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜி அவர்களே?

    தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க?" என்று பேசினார்.

    இந்நிலையில், மாநாட்டில் பாஜகவை விமர்சித்து விஜய் பேசியதற்கு பாஜக உறுப்பினர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தனது பிறந்தநாளை முன்னிட்டு சரத்குமார் கள்ளக்குறிச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழை வளர்த்துக் கொண்டிருப்பவர் மோடி; உலகின் மாபெரும் தலைவர் மோடி. 12 ஆண்டு மோடி ஆட்சியில் ஒரு மீனவர் கூட இறக்கவில்லை. கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக

    பிரதமரை Mr என்றும், முதல்வரை அங்கிள் என்றும் விஜய் கூறுகிறார். கத்துக்குட்டியான ஒருவர்.. கோடநாட்டில் தெருவில் நின்ற போது மிஸ்.ஜெயலலிதா என்று சொல்லியிருப்பீர்களா?

    சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வருமாம், பின்னர் தூங்கி விடுமாம். அந்த மாதிரி சிங்கமாக இருக்க கூடாது.

    NEET ஏன் வேண்டாம்..? NEET-ஐ கொண்டுவந்தது யார்..? தகுதி இருப்பவர்கள் பதவிக்கு வரவேண்டும், தகுதி உள்ளவர்கள் அந்த பணிக்கு செல்ல வேண்டும்

    கூட்டத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் கூட்டப்பட்டு, அதை தொலைக்காட்சியில் காட்டும் கூட்டம் அல்ல இது" என்று தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. நிலைப்பாடு பற்றியும், அக்கட்சி தொண்டர்கள் தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
    • மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை பாரபத்தியில் த.வெ.க.வின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21-ந்தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. சுமார் 5 லட்சத்திற்கும் மேல் திரண்ட தொண்டர்கள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். மோடி தலைமையிலான மத்திய அரசையும், 'அங்கிள்' என்று கூறி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

    அதேபோல் அ.தி.மு.க. நிலைப்பாடு பற்றியும், அக்கட்சி தொண்டர்கள் தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அவரது இந்த பேச்சுக்கு தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். த.வெ.க. மாநாட்டில் விஜய்யின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

    விஜய்க்கு எதிராக பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இன்று மதுரை நகர் பகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    அதில் ஆங்கிலத்தில் வாட் புரோ, ஓவர் புரோ, அடக்கி வாசிங்க புரோ என்ற வசனங்கள் உள்ளவாறு மதுரை முழுவதும் காணப்படுகிறது.

    விஜய் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் தி.மு.க.வினர் தொடர்ச்சியாக ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • மாநாட்டில் விஜய் பாடிய 'உங்க விஜய் உங்க விஜய் உயிரென வரேன் நா' என்ற பாடல் வெளியிடப்பட்டது.
    • மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் உடன் விஜய் செல்பி வீடியோ எடுத்தார்.

    த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த மாநாட்டில் விஜய் பாடிய 'உங்க விஜய் உங்க விஜய் உயிரென வரேன் நா' என்ற பாடல் வெளியிடப்பட்டது. மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் உடன் விஜய் செல்பி வீடியோ எடுத்தார்.

    இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், விஜய் வெளியிட்ட செல்பி வீடியோ இன்ஸ்டாவில் 100 மில்லியன் பார்வைகளையும் 10 மில்லியன் லைக்குகளையும் கடந்து சாதனை படைத்துள்ளது. இதுவரை விஜய் வெளியிட்ட பதிவுகளிலேயே இந்த வீடியோ அதிக பார்வைகளையும் லைக்குகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கடவுளுக்கும் மக்களுக்கும் என் மனத்தின் ஆழத்திலிருந்து கோடானு கோடி நன்றி.
    • செயல்மொழிதான் நம் அரசியலுக்கான தாய்மொழி' என்பதை மீண்டும் இங்கு நினைவுபடுத்துகிறேன்.

    த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்நிலையில். த.வெ.க. தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். மகோன்னதம் கொண்டு மனம் நிரம்பித் ததும்பி வழியும் மறக்க முடியாத் தருணங்கள் தந்த மதுரை மாநாட்டு வெற்றிக்கான நன்றிக் கடிதம் இது.

    விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா' என்னை நெகிழ வைத்தது. ஆனால், மதுரையில் நிறைவுற்றிருக்கும் இரண்டாவது மாநில மாநாடான 'வாகைசூடும் வரலாறு திரும்புகிறது: வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்னைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இந்த அளவு பேரன்பு காட்டும் உங்களை என் உறவுகளாகப் பெற என்ன தவம் செய்தேனோ? கடவுளுக்கும் மக்களுக்கும் என் மனத்தின் ஆழத்திலிருந்து கோடானு கோடி நன்றி.

    சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில், சத்திய நீதி காத்த மதுரையில், உரிமை காக்கும். உறவு காக்கும் மதுரையில் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் வெற்றி என்பது, உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பிலும் பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது.

    மதுரையில் கடல் வந்து புகுந்தது போல இருந்தது. நம் மாநாட்டுக் காட்சி, கபட நாடக மற்றும் பிளவுவாத சக்திகளை அரசியல் மற்றும் கொள்கை அளவில் நின்று உறுதியாக நாம் எதிர்த்ததைக் கடல்கள் சேர்ந்து கை தட்டியதைப் போல மக்கள் மனப்பூர்வமாக வரவேற்றது. கல்வெட்டாக மனத்தில் பதிந்தது. இது நம் அரசியல் மற்றும் கொள்கை வழிப் பயணத்தை இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் அடர்த்தியாகவும் ஆக்கி உள்ளது. அதை இனி நாம் சற்றும் சமரசமின்றிச் செய்வோம். அதனை உறுதிப்படுத்த 'செயல்மொழிதான் நம் அரசியலுக்கான தாய்மொழி' என்பதை மீண்டும் இங்கு நினைவுபடுத்துகிறேன்.

    எத்தனை மறைமுகத் தடைகள் உருவாக்கப்பட்டாலும், நமக்காக நம் மக்கள் கூடும் திடல்கள் எப்போதும் கடல்களாகத்தான் மாறும் என்பதை உணர்ந்து, ஜன நெருக்கடி சிறிதும் இல்லாத வகையில் நிலம் தேர்வு செய்வதில் இருந்து மாநாடு முடியும்வரை தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து அனைத்துப் பணிகளையும் சிறப்புடன் மேற்கொண்ட கழகப் பொதுச் செயலாளர்,அவருக்கு உறுதுணையாக இருந்து மாநாட்டுப் பணிகளை மேற்கொண்ட கூடுதல் பொதுச் செயலாளர்கள். பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர், கழகத் தலைமை நிலையச் செயலக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள். மாவட்டக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக அனைத்து நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட அனைத்துக் குழுவினர், நகர. ஒன்றிய, பேரூர். கிளை, வார்டு கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மாநாடு வெற்றி பெறுவதற்காக உழைத்த நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாவட்டக் கழகச் செயலாளர்களான நம் சகோதரர்கள் திரு A.விஜய் அன்பன் கல்லானை அவர்கள். திரு S.R.தங்கப்பாண்டி அவர்கள் மற்றும் மாவட்டக் கழகங்களின் அனைத்து நிர்வாகிகள். மாநாட்டுத் திடல் மற்றும் அரங்க அமைப்புப் பணிகளை மேற்கொண்ட திரு. M.அறிவு ( Global Even) அவர்கள். ஈடு இணையற்றப் பணிகளை அர்ப்பணிப்புடன் செய்த டாக்டர் திரு. T.K.பிரபு அவர்கள் தலைமையிலான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மாநாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பில் பணியாற்றிய தமிழ்நாடு காவல் துறை, அனைத்து அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், தனியார் பாதுகாப்புக் குழுவினர். அனைத்து ஊடகத் துறை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பு நன்றி.

    மாநாட்டு வெற்றிக்காக ஒத்துழைப்பு நல்கிய நம் கழகத் தோழர்களுக்கும். நம்மோடு இணைந்து நிற்கும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நிரந்தர மலர்கள் கொண்டு தூவி, நெஞ்சார்ந்த நன்றியறிதலை மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நம் மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லவற்றை மட்டும் நமதாக்கி உரமேற்றுவோம். அல்லவை அனைத்தையும் புறந்தள்ளிப் புன்னகைப்போம்.

    மக்களோடு மக்களாக இணைந்து நிற்கும் மக்களரசியல் மட்டுமே. நமது நிரந்தர அரசியல் நிலைப்பாடு, மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு. மக்களுடன் தோளோடு தோள் சேர்ந்து தொடர்ந்து பயணிப்போம். தூய அரசியல் அதிகார இலக்கை வெல்வோம்.

    1967, 1977 தேர்தல் அரசியல் வெற்றி விளைவுகளை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நம் தமிழ் மக்கள் நமக்காக நிகழ்த்திக் காட்டப் போவது நிச்சயம். நல்லதே நடக்கும். நம்பிக்கையோடு பயணிப்போம். வெற்றி நிச்சயம்" என்று தெரிவித்துள்ளார்.

    • த.வெ.க. மாநாட்டிற்கு சென்ற 3 தொண்டர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • உயிரிழந்த 3 தொண்டர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    த.வெ.க. மாநாட்டிற்கு சென்ற 3 தொண்டர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்த 3 தொண்டர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "நம் மீது தீராப் பற்று கொண்ட கழகத் தோழர்கள் செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதிக் கழக நிர்வாகி திரு. R.பிரபாகரன், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கேம்ப் லைன் திரு. K.ரித்திக் ரோஷன், விருதுநகர் மாவட்டம், இனாம் கரிசல்குளம் கிளைக் கழக நிர்வாகி திரு. K. காளிராஜ் ஆகியோர் மதுரையில் நடைபெற்ற மாநாட்டிற்கு முன்பும் பின்பும் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

    நம் கழகத்திற்கான இவர்களது பற்றுறுதியும் பங்களிப்பும் என்றென்றும் நம் நினைவில் நிற்கும். அவர்கள் விரும்பிய இலட்சிய சமுதாயத்தை நாம் படைத்துக் காட்டுவோம். கழகத் தோழர்களைப் பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காலமான கழகத் தோழர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். அவர்களின் குடும்பங்களுக்கு நம் கழகம் உறுதுணையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    ×