search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accident death"

    • கார் தலைகுப்புற கவிழ்ந்து சுக்குநூறாக நொறுங்கியது.
    • காரில் இருந்த 4 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஆலம்பாடி ஊராட்சியில் ஆவின் பால் கூட்டுறவு சங்க செயலாளராக பணியாற்றி வருபவர் பேபி (வயது 45). இவரது மகள் ரஞ்சனி பிரியா (25). கல்லூரி படிப்பு முடித்து விட்டு அரசு வேலை தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.

    இந்நிலையில் பேபி , மகள் ரஞ்சனி பிரியா மற்றும் உறவினர் சிவக்குமார், பால்பண்ணையில் டிரைவராக பணிபுரியும் பெரியசாமி ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேற்றிரவு திருச்செந்தூரில் இருந்து காங்கயத்திற்கு காரில் புறப்பட்டனர். காரை பெரியசாமி ஓட்டினார்.

    இன்று காலை காங்கயம் கருக்கம்பாளையம் அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் தலைகுப்புற கவிழ்ந்து சுக்குநூறாக நொறுங்கியது.

    காரில் இருந்த 4 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ரஞ்சனி பிரியா மற்றும் டிரைவர் பெரியசாமி ஆகியோர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் பேபி, சிவக்குமார் ஆகிய இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஜோஸ் தனது மோட்டார் சைக்கிளை கார் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டுள்ளார்.
    • சிறுமி ஜோபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் தாசர்புரம் பகுதியில் உள்ள சி எஸ் ஐ தேவாலயத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பாதிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோஸ் (வயது 39). இவர் தேவாலயத்திற்கு உள்ளே இருக்கக்கூடிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மனைவி மலர்விழி(35). இவர் திருநின்றவூர் அடுத்த பாக்கம் அருகே காவனூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவர்களுக்கு ஜோபி ஜெ.கிறிஸ்டில்டா (8) என்ற மகளும், ஜோவின் (2) என்ற மகனும் உண்டு. இவர்களது மூத்த மகள் ஜோபி ஜெ.கிறிஸ்டில்டா திருநின்றவூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை பாதிரியார் ஜோஸ் மோட்டார் சைக்கிளில் சென்று தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார். அப்போது திருநின்றவூர் பகுதியில் தனியார் கம்பெனி அருகே சென்ற போது, அவரது மோட்டார் சைக்கிளுக்கு முன்பாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஜோஸ் தனது மோட்டார் சைக்கிளை கார் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்பொழுது நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் இருவரும் கீழே விழுந்தனர். இதில் மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து வந்த சிறுமி ஜோபி ஜெ.கிறிஸ்டில்டா தலையின் மீது பின்னால் வந்து கொண்டிருந்த கனரக லாரியின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஜோஸ் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார். இந்த விபத்தை கண்ட லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்த சிறுமி ஜோபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். தந்தை கண்முன் 3-ம் வகுப்பு மாணவி லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • உயிர் தப்பிய பாண்டீஸ்வரன் என்பவர் தான் சமையல் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.

    சூலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குன்று என்ற இடத்தைச் சேர்ந்தவர் அழகர்ராஜா (வயது 30). இவர் கோவையில் பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் பணிக்கு செல்வதற்கு வசதியாக சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்தார். இவருடன் அவரது ஊரைச் சேர்ந்த 4 லாரி டிரைவர்களும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 2 பேரும் தங்கியிருந்தனர்.

    நேற்று நள்ளிரவில் இவர்கள் தங்கியிருந்த வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்த 7 பேரும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டு அலறினார்கள்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். தீ வீடு முழுவதும் எரிந்ததால் மற்றவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இதுபற்றி சூலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் அழகர்ராஜா, அவருடன் தங்கியிருந்த டிரைவர் முத்துக்குமார், சின்னக்கருப்பு ஆகிய 3 பேரும் உடல் கருகி பலியானார்கள்.

    பாண்டீஸ்வரன், தினேஷ்குமார், மனோஜ், வீரமணி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் தினேஷ்குமார், மனோஜ், வீரமணி ஆகிய 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அனைவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாண்டீஸ்வரனுக்கு மட்டும் குறைவான காயங்கள் இருந்துள்ளது. அவர் தான் மற்ற 3 பேரையும் மீட்டு வெளியே அழைத்து வந்துள்ளார்.

    இந்த கோர விபத்து தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    வீட்டில் தங்கியிருந்தவர்கள் டிரைவர்கள் என்பதால் லாரியின் தேவைக்காக சுமார் 10 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்தார்களாம். அந்த பெட்ரோலை மற்றொரு கேனுக்கு மாற்றியுள்ளனர். அப்போது கியாஸ் சிலிண்டரில் சமையல் வேலையும் நடந்துள்ளது. இதில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதனாலேயே 3 பேர் இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    உயிர் தப்பிய பாண்டீஸ்வரன் என்பவர் தான் சமையல் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அவரிடம் மாஜிஸ்திரேட்டு நடந்த விவரங்களை வாக்குமூலமாக பெற்றுள்ளார். அந்த வாக்குமூலத்தின் பெயரிலேயே தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடிக்கவில்லை. சிலிண்டர் வெடித்து இருந்தால் அந்த வீடு மட்டுமல்லாமல் பக்கத்து வீடுகளும் சேதம் அடைந்து உயிர்ச்சேதம் அதிகரித்து இருக்கும். தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு சிலிண்டர் வெடிப்பதற்குள் அதனை குளிர்வித்து வெளியே கொண்டு வந்தனர்.

    தீ விபத்தில் பலியான அழகர்ராஜா, ராவத்தூர் பிரிவு அருகே நேற்று காலை லாரி ஓட்டிச் சென்றார். அப்போது மொபட்டில் வந்த தனியார் பள்ளி ஆசிரியை மீது லாரி மோதியது. இந்த விபத்தில் ஆசிரியை பலியானார்.

    இந்த வழக்கு தொடர்பாக போலீசார் அழகர்ராஜாவை கைது செய்துள்ளனர். இரவில் அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு வீட்டுக்கு திரும்பிய நிலையில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் காலையில் நடந்த சாலை விபத்துக்கும், தீ விபத்துக்கும் எதேனும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • கார் மோதியதில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவிடைமருதூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). இவர் ஆண்டலாம்பேட்டை மற்றும் இளந்துறையில் பிளவர் மில் நடத்தி வந்தார். இவர் தனது மனைவி நீலாவுடன் (65) கடைவீதிக்கு சென்று காய்கறி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார்.

    திருவிடைமருதூர் தெற்கு வீதியில் வந்து கொண்டிருந்த போது எதிரில் வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபைட் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட செல்வராஜ், நீலா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார்.

    மேல் சிகிச்சைக்காக நீலாவை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நீலாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த திருவிடைமருதூர் மனவெளி தெருவை சேர்ந்த பாலாஜி (28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கார் மோதியதில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
    • விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுபவர் சுந்தரவடிவேல். இவரது கார் நேற்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்தது. காரில் போலீஸ் சூப்பிரண்டின் மனைவி மற்றும் உறவினர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. காரை தமிழ்குடிமகன் என்ற போலீஸ்காரர் ஓட்டி வந்தார்.

    கார் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் போலீஸ் சூப்பிரண்டின் கார் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை தடுத்து அணைத்தனர்.

    மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த அல்தாப் (21), அவரது நண்பர் முகமது ஜூனைத் (19) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர்கள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அல்தாப் நேற்று மரணம் அடைந்தார்.

    முகமது ஜூனைத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

    விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காரை ஓட்டி வந்த போலீஸ்காரர் தமிழ்குடிமகனிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

    பலியான அல்தாப் தனியார் காட்டேஜில் ஊழியராக பணியாற்றி வந்தார். முகமது ஜூனைத் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த அன்சார் எனபவரின் மகன் ஆவார்.

    காந்தல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரும், வாலிபரும் இறந்ததால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கி உள்ளது. அவர்களது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி இருந்தனர்.

    • சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள காட்டுவளைவு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 31), இவர் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மணி ஓமலூரில் இருந்து மேச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மணி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கருணாவூர் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவனும், அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் (வயது 18) என்பவரும் உறவினர்கள்.

    இந்நிலையில் பச்சகுளம் கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவை காண்பதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளானது பச்சகுளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரசாந்த் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி மாணவன் காயங்களுடன் சாலையில் கிடந்துள்ளார்.

    உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தேவங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவில் திருவிழாவை காண்பதற்கு சென்றவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்தாப்பூர் கிராமத்தின் அருகே வந்தபோது கார் டயர் திடீரென வெடித்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் மேடக் அருகே உள்ள நாராயண் கேட் பகுதியை சேர்ந்த 6 வாலிபர்கள் மும்பைக்கு காரில் சுற்றுலா சென்றனர். சுற்றலா முடிந்து நேற்று ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

    புனே அருகே உள்ள இந்தாப்பூர் கிராமத்தின் அருகே வந்தபோது கார் டயர் திடீரென வெடித்தது. இதனால் தறிகெட்டு ஓடிய கார் அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த அந்த பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். காயம் அடைந்தவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியானவர்கள் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொக்லைன் எந்திரம் மூலம் மண் கொட்டப்பட்ட இடத்தில் சமன்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையில் இருந்து மேலப்பாளையம், சேரன்மகாதேவி வழியாக பாபநாசம் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்காக சேரன்மகாதேவி பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பால பணிக்காக இன்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் மண் கொட்டப்பட்ட இடத்தில் சமன்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக பொக்லைன் எந்திரம் சுமார் 20 அடிக்கும் மேல் இருந்த மண் உச்சியில் இருந்து உருண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பொக்லைன் ஆபரேட்டரான நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன்குளத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் மகேந்திரன் அதன் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    உடனடியாக அங்கு பணிபுரிந்த சக தொழிலாளர்கள் சேரன்மகாதேவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து சேரன்மகாதேவி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது தலைமையிலான போலீசாரும், தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும் அங்கே விரைந்து சென்றனர்.

    தொடர்ந்து கிரேன் மூலமாக பொக்லைன் எந்திரத்தை அப்புறப்படுத்தி பலியான மகேந்திரன் உடலை மீட்டனர். அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றொரு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகரநீர்முளை பகுதியில் உள்ள டீக்கடையில் இன்று அதிகாலை 5 மணியளவில் ராஜாங்கம் (வயது 55) என்பவர் டீ குடித்துக் கொண்டிருந்தார். கடையின் அருகில் கோவிந்தராஜ் (50) என்பவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். இருவரும் விவசாயிகள்.

    அதேவேளையில், கேரளாவில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேளாங்கண்ணிக்கு சுற்றுலா கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் கார் அகரநீர்முளை பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து டீ கடையின் அருகில் இருந்த ராஜாங்கம், கோவிந்தராஜ் ஆகியோர் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    உடனடியாக இருவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பாசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தலைஞாயிறு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றொரு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • காரில் பயணித்த மற்ற 3 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
    • போதையில் காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ராஜபாளையம்:

    தென்காசி மாவட்டம் சிவகிரி இந்திரா தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெய் கணேஷ் (வயது 25). இவர் மற்றும் இவரது நண்பர்களான வனராஜ், சுப்புராஜ், மகேஷ் ஆகிய 4 பேரும் சொந்த வேலை காரணமாக சிவகிரியில் இருந்து ராஜபாளையம் வந்திருந்தனர்.

    இதையடுத்து மீண்டும் ஊருக்கு புறப்படும் முன்பாக ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ள நட்சத்திர பாரில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். தொடர்ந்து அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு சிவகிரிக்கு நள்ளிரவு சுமார் 1 மணிக்கு காரில் புறப்பட்டனர். காரில் பயணித்த 4 பேருமே மதுபோதையில் நிதானமின்றி இருந்துள்ளனர்.

    இந்தநிலையில் அவர்களது கார் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் தேவதானம் ஊருக்குள் சென்றது. வழியெங்கும் சாலையின் இருபுறமும் அலசியவாறு தாறுமாறாகவே கார் சென்றது. இதற்கிடையே சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் பெரிய கோவில் எனப்படும் பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான தேர் மீது மின்னல் வேகத்தில் சென்ற கார் பயங்கரமாக மோதியது.

    இதில் காரை ஓட்டிச் சென்ற ஜெய்கணேஷ் காருக்கு உள்ளேயே இடிபாடுகளுக்குள் சிக்கி முகம் சிதைந்து பரிதாபமாக உயரிழந்தார். மேலும் காரில் பயணித்த மற்ற 3 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு தேவதானம் பகுதியை சேர்ந்தவர்கள் தூக்கத்தில் இருந்து பதறியடித்துக்கொண்டு எழுந்து ஓடி வந்தனர்.

    மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு நிலை வீரர்கள் விரைந்து வந்து தேருக்குள் சிக்கியிருந்த காரை வெளியே எடுத்து காயம் அடைந்தவர்களை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் வனராஜ், மகேஷ் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அளவுக்கு அதிகமான போதையில் காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • தலைமை ஆசிரியை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை திருநகரில் வசித்து வருபவர் ரமேஷ், விருதுநகர் மாவட்ட வேளாண்மை விற்பனை பிரிவு இணை இயக்குனர்.

    இவரது மனைவி மனைவி ஜெனுவா இவாஞ்சலின், மதுரை அமெரிக்கன் கல்லுாரி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை. இவர் அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் தவமணி கிறிஸ்டோபரின் தங்கை ஆவர்.

    நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூருக்கு குடும்பத்துடன் சென்றனர். நேற்று ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    மதியம் 2:30 மணிக்கு திருச்சுழி அருகே கமுதி விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, காரின் முன் டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஜெனோவா இவாஞ்சலின் பலியானார்.

    இவருடன் காரில் பயணித்த கணவர் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து 3 பேரை மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான ஜெனோவா இவாஞ்சலின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது

    தலைமை ஆசிரியை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×